நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 04, 2016

ஸ்ரீ வீரபத்ரகாளி 1

ஸ்ரீ வீரபத்ரகாளி..
தஞ்சையிலுள்ள எட்டு காளி சந்நிதிகளுள் - 
இவளுடைய சந்நிதியும் ஒன்று..

கோபம் கொண்டு கொதித்திருந்த ஸ்ரீவீரபத்ரகாளியை
சித்தர்களும் சாதுக்களும் பூஜித்து சாந்தப்படுத்தியதாக ஐதீகம்...

தஞ்சையில் இருந்தும் அந்த அம்பிகையை தரிசனம் செய்ததில்லை...

அதற்கு நேரம் வரவேண்டும் என்பார்கள்..

நவராத்திரி சமயத்தில் ஸ்ரீவீரபத்ரகாளியம்மனையும் 
ஒருபொழுது எண்ணியிருந்தேன்...

எளியன் என்மீதும் அன்பு கொண்டனள் போலும்..-

அவளுடைய திருக்கோயிலில் 
விஜய தசமியன்று ஸ்ரீ வீரபத்ரகாளி திருவீதி எழுந்து -
வாழையில் நிறுத்தப்பெற்ற அசுரனை சங்காரம் செய்தருளிய 
கோலாகல வைபவத்தின்
காணொளி கிடைத்திருக்கின்றது..

இந்த அம்பிகையைப் பற்றி விரிவாக எழுதுதற்கான
நல்வாய்ப்பினை அவளே அருளுதல் வேண்டும்..
* * * 

இவ்வாறு - கடந்த அக்டோபர் 13 அன்று வெளியான
சக்தி தரிசனம் - எனும் பதிவில் எழுதியிருந்தேன்...

இதோ -

நான் விரும்பிய வண்ணம் எழுதுவதற்கான
நல்வாய்ப்பினை அவளே நல்கியிருக்கின்றாள்..

எளியன் என்மீதும் அன்பு கொண்டு - அம்பிகை வந்து உதித்தனள்..

அந்த மகிழ்வினைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..
***

ஸ்ரீ வீரபத்ரகாளி
சென்ற பதிவில் ஸ்ரீ வடபத்ரகாளியம்மனை தரிசனம் செய்தோம்..

இன்றும் அவ்வண்ணமே - ஸ்ரீ வீரபத்ரகாளியின் தரிசனம்..

தஞ்சை மாநகரிலுள்ள சிவாலயங்களுள்
ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று..

இத்திருக்கோயில் - வடக்கு வாசல் அகழியைக் கடந்து வடக்கு அலங்கம் பகுதியில் ராஜாகோரி மயானத்திற்குச் செல்லும் சாலைக்குக் கிழக்காக பழைய திருவையாறு சாலையில் உள்ளது..

இந்த சாலையை சிரேயஸ் சத்திரம் சாலை என்றும் சொல்வர்..

சிறப்புறும் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் பின்புறமாக செல்லும் இந்தச் சாலை வெண்ணாற்றங்கரையில் நெடுஞ்சாலையுடன் இணைந்து விடுகின்றது..

ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலில் வீற்றிருந்து
அன்பர்க்கு நலம் புரிபவள் ஸ்ரீ வீரபத்ரகாளி..

கறுப்பு நிறத்தில் விளங்குவதால் கரியகாளி என்றும் சொல்வார்கள் - என்ற தகவலுடன் பெரியவர் ஒருவர் இத் திருக்கோயிலைப் பற்றி எனக்குச் சொன்னார்..

அப்போது கரந்தையில் தமிழ்ச்சங்க வளாகத்திற்கு அருகில் தான் குடியிருப்பு..

ஆயினும், அம்பிகையைத் தரிசனம் செய்வதற்கு நேரம் கூடிவரவில்லை..

பொருளைத் தேடி குவைத் நாட்டிற்கு வந்தபின்
ஏழு ஆண்டுகள் வேகமாக கடந்து போயின..

கடந்த நவராத்திரி நாட்களின் போது
ஸ்ரீ வீரபத்ரகாளியம்மனையும் ஒருபொழுது சிந்தித்திருந்தேன்..

எளியன் என் மீதும் அன்பு கொண்டு - அம்பிகை வந்து உதித்தாள்..

விஜய தசமியன்று ஸ்ரீ வீரபத்ரகாளி திருவீதி எழுந்து -
வாழையில் நிறுத்தப்பெற்ற அசுரனை சங்காரம் செய்தருளிய
காணொளி Fb வழியாகக் கிடைத்தது..

கோலாகல வைபவத்தினைக் காணொளியில் கண்டு மேனி சிலிர்த்தது...

அடுத்த முறை தஞ்சைக்குச் செல்லும்போது
அம்பிகையைத் தேட வேண்டும்..
அவளது அருளைத் தேட வேண்டும்..
ஸ்ரீ வீரபத்ரகாளியை தரிசனம் செய்தல் வேண்டும்!..

இவ்வாறு எண்ணிக் கொண்டேன்...

விரைவில் மிக விரைவில் எனது எண்ணம் பலித்தது..

சிறு விடுப்பில் தஞ்சைக்கு வந்த நான் -
சென்ற நவம்பர் 16 அன்று மாலைப் பொழுதில்
அம்பிகையின் ஆலயத்தை நோக்கி நடந்தேன்..


சிறிய ஆலயம் தான்..

ஆனாலும், ஐந்து நிலைகளுடன் ராஜகோபுரம் கம்பீரமாக விளங்குகின்றது..

தற்போது திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன..



ராஜகோபுரத்தைக் கடந்ததும்
கொடிமரம், அதிகாரநந்தி, பலிபீடம் - என எதுவும் இல்லை..

முன்மண்டபத்தின் அலங்கார நுழைவாயில் மட்டுமே..

நுழைவாயிலின் விதானத்தில் சிவசக்தி திருக்கோலம்..

இருபுறமும் ஊர்த்துவ தாண்டவக் காட்சிகளும் பார்வதி கல்யாணக் காட்சியும் அழகிய வடிவங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன..

நுழைவாயிலின் இருபுறமும் விநாயகர், வேலவன் சந்நிதிகள்..

அர்த்த மண்டபத்தில் நந்தியம்பெருமானும் பலிபீடமும்..

கிழக்கு நோக்கிய திருச்சந்நிதியில் ஸ்ரீ கேசவதீஸ்வரர்..

சிறிய இலிங்கத் திருமேனி... ஆனாலும் வனப்பு மிக்கதாக இலங்குகின்றது..

ஐயனுடன் இணைந்து விளங்கும் சந்நிதியில்
தெற்கு நோக்கியவளாக ஸ்ரீ ஞானாம்பிகை...

அம்பிகைக்கு எதிரிலும் நந்தியம்பெருமான்.. அருகில் பலிபீடம்..

கண்ணாரக் கண்டு கைகூப்பி வணங்கி நிற்க மனம் பரவசமாகின்றது..

தெற்கு நடை வழியாக இறங்கினால் - திருச்சுற்று..

நீளவாக்கில் கிழக்கு மேற்காக -
புதியதோர் மண்டபம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்..

மாலை மயங்குகின்ற வேளையில் போதிய வெளிச்சம் இல்லை..

தெற்கு நடையில் இறங்கி மேற்காகத் திரும்பும் போது
எதிரில் - வடக்கு நோக்கிய சந்நிதி..

அன்னை ஸ்ரீ வீரபத்ரகாளியின் சந்நிதி...

பரபரப்பும் ஆவலும் மேலிட சந்நிதியை நெருங்கினேன்...

ஆகா!.. என்ன அழகு.. என்ன அழகு!.. அற்புதம்.. அற்புதம்!..

நீலப்பட்டு உடுத்தியிருந்தாள் அம்பிகை..

நீலி.. திரிசூலி.. நீங்காத பொட்டுடையாள்.. 
நெஞ்சம் எனும் தாமரையில் வீற்றிருக்கும் சுந்தரியாள்!..  

திருவடிக்கீழ் வீழ்ந்து கிடக்கும் அசுரனின் மேல் 
ஊன்றப்பட்ட நிலையில் திரிசூலம்...

எட்டுத் திருக்கரங்களுடன் வீராசனத்தில் அன்னை.. 

வா!.. மகனே.. வா!.. - என்ற பாவனையில் மாறாத புன்னகை..

கண்டேன்.. கண்டேன்..
ஸ்ரீ கரியகாளியம்மனைக் கண்டேன்..
ஸ்ரீ வீரபத்ரகாளியம்மனைக் கண்ணாரக் கண்டேன்...

சந்நிதியின் முன்மண்டபத்தில் பிரகாசமான விளக்குகள்..

ஆனால், கருவறைக்குள் தீபங்கள் மட்டுமே பிரகாசித்துக் கொண்டிருந்தன..

சாயுங்கால பூஜைகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தன..

கண.. கண.. என, மணிகள் முழங்க அம்பிகைக்கு நிவேதனமும் ஆரத்தியும் சமர்ப்பிக்கப்பட்டது..

முதல் முறையாக இப்போதுதான் இந்தக் கோயிலுக்கு வருகின்றீர்கள்!..

அர்ச்சகரின் வார்த்தைகளில் அதிர்ந்தேன்...

ஆமாம்!.. அதெப்படி சரியாகச் சொல்கின்றீர்கள்?.. -  வினவினேன்..

மெல்லிய புன்னகை அவரிடம்..

வியப்பின் எல்லையில் நின்றிருந்த நான் கருவறைக்குள் நோக்கினேன்..

அங்கே அம்பிகையும் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்..

குங்குமத்துடன் எலுமிச்சங்கனியும் பூக்களும் வழங்கப்பட்டன..

அத்துடன் விட்டாளா.. அன்னை!..

குளிரக் குளிர தயிர் சோறும் வழங்கி மகிழ்ந்தாள்...

மூலஸ்தானத்திற்குப் பின்னால்
வடபுறத்திலிருந்து மூலஸ்தானம்
எத்தனை எத்தனை காலங்கள்.. எத்தனை எத்தனை பிறவிகள்.. 
அன்னை இவள் மடியில் சிறுகுழந்தையாய் விளையாடிக் கிடந்தோமோ!..
முன்னைத் தொடர்பு இன்றேல் அவளைக் காண்பதும் கூடி வருமோ?..

மனம் நெகிழ்ந்தது.. கண்கள் கசிந்தன..

அவள் சந்நிதியில் - ஸ்லோகங்களுடன் அபிராமி அந்தாதியின்
சில பாடல்களையும் பாடினேன்..

அம்பிகையை மனதார வழிபட்டு நின்றேன்...

அம்பிகையின் சந்நிதிக்குக் கிழக்குப் பக்கமாக
மூலஸ்தானத்திற்குப் பின்னால் -
விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வடிவேலவன் மஹாலக்ஷ்மி சந்நிதிகள்..

சிறிய ராஜகோபுரத்துடன் கூடிய மேற்கு வாசல்..
திருப்பணி வேலைகளுக்காக அடைத்துக் கிடக்கின்றது..

மேற்கு வாசலின் வடக்குப் பக்கம் -  மிகப்பெரிய அளவில்..

மிகப் பெரிய அளவில்!?..

அடுத்த பதிவில் மேலும் தகவல்களுடன் சந்திப்போம்!..

***

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.. (077)

யாதுமாகி நின்றாய் காளீ!..
ஓம் சக்தி ஓம்..
***

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. எண்ணம் பலித்தவிதம் சொன்னது அருமை. சேய் நினைத்தவுடன் தாய் அழைத்துவிட்டாள். காளி தரிசனம் செய்தேன். ஞாயிறு அம்மன் வழிபாடு நல்லது என்பார்கள் இன்று தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தஞ்சையில் கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு அருகில் குடியிருந்தபோது பின்னால் உள்ள சாலையில் நடந்தால் பத்து நிமிடத்தில் காளி கோயிலுக்குப் போய் விடலாம்..

      ஆனாலும் முடியவில்லை..

      ஒரு நோக்கம்.. அது நிறைவேற வேண்டிய நேரம்..
      அதையெல்லாம் நம்மை மீறிய சக்தியே நிர்ணயிக்கின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. உங்கள் விருப்பப்படி அன்னையின் தரிசனம் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      என்னுடைய வேண்டுதல்கள் எல்லாருக்குமானவை..
      தங்கள் வருகையும் ன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இதுவரை இக்கோயிலுக்குச் சென்றதில்லை. தங்கள் பகிர்வு மூலமாக அறியும் வாய்ப்பு கிடைத்தது. விரைவில் செல்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சென்று வாருங்கள்.. தங்களுக்கு புதிய தகவல்கள் கிடைக்கக் கூடும்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. கரியகாளி....அன்பும் அழகும்...ஆஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. தாட்சாயணியின் ஏதோ உறுப்பு விழுந்த இடம் என்று கதை இருக்குமோ என்று நினைத்துப் படித்தேன் ஆலயம் சென்றதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      அப்படியான கதை ஏதும் இல்லை.. அசுரர்களை அடக்கி அழித்த சம்பவம் தான் பேசப்படுகின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. இக்கோயிலைப்பற்றி அருமையான தகவலுடன் அறிந்து கொண்டோம் ஐயா மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..