நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 21, 2016

மார்கழிப் பூக்கள் 06

தமிழமுதம்

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.. (105)
* * *

ஔவையார் அருளிய
மூதுரை

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்..
* * *

அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

திருப்பாடல் - 06புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..
* * *


ஸ்ரீ திருமழிசையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்  

ஸ்ரீ கோதண்டராமர் - திருப்புல்லாணி
ஊனின்மேய ஆவிநீ உறக்கமோடு ணர்ச்சிநீ
ஆனில்மேய ஐந்தும்நீ அவற்றுள்நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ வளங்கடற் பயனும்நீ
யானும்நீ அதன்றிஎம் பிரானும் நீயிராமனே..(845)

ஓம் ஹரி ஓம்
* * *

சிவதரிசனம்

பஞ்சபூதத் திருத்தலங்கள்

முதலாவது திருத்தலம்
தில்லைத் திருச்சிற்றம்பலம்

ஆகாயம் - பரவெளிஇறைவன் - திருமூலநாதர், ஸ்ரீ நடராஜர்
அம்பிகை - உமையாம்பிகை, ஸ்ரீ சிவகாமவல்லி
தீர்த்தம் - சிவகங்கை
தலவிருட்சம் - தில்லை

பஞ்ச சபைகளுள் முதலாவதாகத் திகழும் தில்லையம்பலம்..

பஞ்சபூதத் திருத்தலங்களுள் ஆகாயம் எனத் திகழ்கின்றது..

சிதம்பர ரகசியம் என்பது பெரிதும் பேசப்படுவது..
ரகசியம் என்றால் ஏதாவது திரைமறைவு என்றுதான் கொள்வர்..

ஆனால் - இங்கே ரகசியம் என்றால் ஏதுமில்லை என்பதாகும்..

நடராஜப் பெருமானின் வலப்புறம் உள்ள திரை தான் சிதம்பர ரகசியம்..
திரையை விலக்கினால் - வில்வமாலை மட்டுமே..

ஈசன் எம்பெருமானின் தன்மை அதுவே என்று உணர்த்துவது..

இத்திருத்தலத்தை மார்கழிப் பதிவின் முதலிலேயே சுட்டியிருந்தாலும்
மீண்டும் சொல்வதில் மகிழ்ச்சி..

பாடிப்பரவியோர் 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்,
மாணிக்கவாசகர் மற்றும் எண்ணிறந்த புண்ணியர்..
* * *அருட்சோதி தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட்சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்
இருட்சாரும் வழியில்ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்!..
- ஸ்ரீ வள்ளலார் ஸ்வாமிகள் -
* * *

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

அரியானை அந்தணர் தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனை பாலை திகழ்
ஒளியை தேவர்கள் தங்கோனை மற்றைக்
கரியானை நான்முகனை கனலை காற்றை
கனைகடலை குலவரையை கலந்து நின்ற
பெரியானை பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாள் எல்லாம் பிறவாநாளே!.. (6/1)
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 06பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தணை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *

தேவி தரிசனம்

ஸ்ரீ தாமிரபரணி
திருநெல்வேலி

நதிக்கன்னிகையாகிய ஸ்ரீ தாமிரபரணி
மணியே மணியின் ஒளியே ஒளிரும்மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்பெரு மருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.. (024)
- அபிராமி பட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
* * *

5 கருத்துகள்:

  1. வெளி என்பதை காட்டுவதற்கு வில்வ இலை தொங்குகிறது. வெளிதான் கடவுள், அதுதான் ரகசியம். சிதம்பரம்,திருப்புல்லாணி, நதிகன்னி தாமிர பரணியை தரிசனம் செய்தேன். விஸ்வரூபதரிசனம் அருமை.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு