நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 27, 2016

மார்கழிப் பூக்கள் 12

தமிழமுதம்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவற்றுள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து..(125)
***

ஔவையார் அருளிய
மூதுரை

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு..
***

அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 12


கனைத்து கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஸ்ரீ அமிர்தநாராயணப் பெருமாள் - திருக்கடவூர்
இறையும் நிலனும் இருவிழும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயுமாவான் பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரன் காத்தளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி..(2110)
***

சிவதரிசனம்
வீரட்டத் திருத்தலங்கள்

இரண்டாவது திருத்தலம்
திருக்கடவூர்இறைவன் - ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ அபிராமவல்லி
தீர்த்தம் - அமிர்த புஷ்கரணி
தலவிருட்சம் - பிஞ்சிலம் எனும் முல்லை

அடைக்கலமாகிய மார்க்கண்டேயனின் பொருட்டு
யமனைத் திருவடியினால் உதைத்தருளிய திருத்தலம்..

காலசம்ஹார மூர்த்தியாக 
ஐயன் தெற்கு நோக்கித் திகழ்கின்றனன்.. 
பாலாம்பிகையாக அன்னை அருகிருக்கின்றனள்..
அம்பிகையின் இருபுறமும் இருகன்னியர் விளங்குகின்றனர்..

இடது திருவடியின் கீழ் ஆதிசேஷன்..

அருகில் என்றும் பதினாறு - என 
வரம் பெற்றுக்கொண்ட மார்க்கண்டேயர்

கீழே தகாதன செய்த காலன் வீழ்ந்து கிடக்கின்றான்..

வீழ்ந்துபட்ட காலன் மீண்டும் உயிர் பெற்றதும்
இத்தலத்தில் தான்..

உயிர் பெற்ற காலன்
திருச்சுற்றின் தென்புறமாக
காலசம்ஹார சந்நிதிக்கு நேர் எதிரே
ஈசனை வணங்கியவனாக
தனி சந்நிதியில் விளங்குகின்றான்..
பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர் உண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குருதிப் புனல் ஆறொழுக
உதைத்தெழு சேவடியான் கடவூருறை உத்தமனே!..(4/107)
- அப்பர் ஸ்வாமிகள் -

குங்கிலியக் கலய நாயனார்
வாழ்ந்து சிறப்புற்றது திருக்கடவூரில் தான்..

குங்கிலியக் கலய நாயனாரின் திருமடத்தில் 
திருநாவுக்கரசரும் ஞானசம்பந்த மூர்த்தியும் 
திருவமுது செய்திருக்கின்றனர்..திருக்கோயிலில் பணி செய்து வாழ்ந்த
சுப்ரமணிய குருக்கள்
அபிராமவல்லியின் மீது கொண்டிருந்த 
மாசற்ற அன்பினால்
இருண்டிருந்த வானில் ஒளி திகழ்ந்ததோடு
உலகிற்கு அருமருந்தென அந்தாதியும் தோன்றியது. 

மேற்கு நோக்கி விளங்கும் திருக்கோயில்..
எத்தனையோ அற்புதங்களைத் 
தன்னகத்தே கொண்டிருக்கின்றது..

இன்றைய நாளில் திருக்கடையூர் 
எனச் சொல்கின்றனர் - 
அது பிழையெனத் தெரியாமல்!.. 

- திருப்பதிகம் பாடியோர் - 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்..
***

ஸ்ரீ சுந்தரர் அருளிய
திருப்பாட்டு

பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார் துணை நீயலதே!.. (7/28) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
கோயில் திருப்பதிகம்


ஸ்ரீ சிவமூர்த்தி - திருஎறும்பூர்
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை என்னிரக்கேனே.. 
***

தேவி தரிசனம்

ஸ்ரீ மூகாம்பிகை
கொல்லூர்
புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கேவந்து தம்மடியார்கள் நடுவிருக்கப் பண்ணிநம்
சென்னியின்மேல் பத்ம பாதம் பதித்திடவே.. (041)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம
* * *

6 கருத்துகள்:

 1. சிறப்பான பகிர்வு. உங்கள் பதிவு மூலம் மீண்டுமொரு முறை திருக்கடவூர் சென்று வந்த உணர்வு. நன்றி.

  தொடருங்கள். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. திருக்கடவூர் அமிர்த நாராயணப் பெருமாள் தரிசனம் கிடைத்தது.
  பதிவு அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. வற்றாத பக்தி மனம் மாதம்பூராவும் தொடரத் தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. திருக்கடையூர், கொல்லூர், திருஎறும்பியூர் ஆகிய மூன்று கோயில்களுக்கும் சென்றுள்ளேன். இன்று தங்கள் பதிவு மூலமாக மறுபடியும் சென்றேன். நான் அதிகம் விரும்பி உணரும் பாடல்களில் ஒன்று பொன்னார் மேனியனே....

  பதிலளிநீக்கு