நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 12, 2016

திருக்கார்த்திகை

புண்ணிய பாரதத்தில் சமயங்களைக் கடந்த மெய்க்குறியீடு - விளக்கு..

திருவிளக்கு என்று போற்றப்பட்டது அதனால் தான்!..

பொய்யாத மனதினை -

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு..(0299)

- என்று வள்ளுவப்பெருமான் புகழ்ந்துரைக்கின்றார்..


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே!..
- திருநாவுக்கரசர் - 

அப்படி மெய்மை நிறைந்த மனம் தான் ஈசன் எம்பெருமான் வீற்றிருக்கும் நல்லகம் என்பது அப்பர் ஸ்வாமிகளின் திருக்குறிப்பு..

மேலும், 

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்!..

- என்று ஈசனை நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்..

நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே!..

- என்று திருஐயாற்றில் எம்பெருமானைப் புகழ்கின்றார்..

தேவாரம் அருளிய மூவரும் திருவாசகம் உரைத்த மாணிக்க வாசகப் பெருமானும் மற்றும் ஆன்றோர்களும் சான்றோர்களும் ஈசனை ஒளி வடிவத்தினைப் போற்றித் துதிப்பதைக் காணலாம்..

இவ்வாறே வைணவத்திலும் ஆழ்வார்கள் அருளிய திருக்குறிப்புகள் ஆயிரம் ஆயிரம்...

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் -தானருளிய திருப்பாவையில், 

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே.. குலவிளக்கே!..

- என்று கோபாலனை விளிக்கின்றாள்...

அதுமட்டுமா.. 

மார்கழி நீராடி நோன்பு வைப்பதற்கு இவையெல்லாம் வேண்டும்!.. - எனக் கேட்கும் மங்கலப் பொருள்களுள் ஒன்று

கோல விளக்கு!..

கோல விளக்கின் வடிவத்தில் குல விளக்கினைக் கேட்கின்றாள்..

அவனையே அவனிடம் கேட்கின்றாள் ஆண்டாள்...

இல்லறத்தின் மங்கலச் சடங்குகளுள் விளக்கேற்றுதலே முதன்மையானது..

அதனாலேயே - 

விளக்கேற்ற வந்தவள்.. விளக்கேற்றி வைத்தவள்!.. - என்றெல்லாம் சிறப்பு..

எத்தனை எத்தனையோ விளக்கங்களைத் தன்னகத்தே கொண்டது - விளக்கு..

தமிழர் தம் மரபில் மிகத் தொன்மையான திருநாள் விளக்கீடு என்னும்  கார்த்திகைத் திருநாள்..

அதனால் தான் - 

இளமங்கையர் தங்கள் திருக்கரத்தால் ஏற்றி -
ஏந்தி வழிபடும் கார்த்திகை விளக்கீடு தனைக் காண வருக!..

- என்று, திருமயிலையில் சாம்பலாகக் குடத்துள் இருந்த பூம்பாவையை - அழைத்தருள்கின்றார் திருஞானசம்பந்தர்..ஆயிரம் ஆயிரமாக திருவிளக்கின் பெருமைகள்..

அவற்றை எல்லாம் எடுத்துரைக்க இந்த சிறுபொழுது போதாது..  

எல்லாவற்றையும் உய்த்து உணர்ந்து மகிழ்வதற்கு
எல்லாம் வல்ல எம்பெருமானே நலங்கூட்டவேண்டும்..

இத்தகைய சிறப்பு மிகும் கார்த்திகைத் திருநாள் தமிழகமெங்கும் உற்சாகத்துடன் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டாலும்

அது முதன்மையான திருவிழாவாக நிகழும் திருத்தலம் -

திருஅண்ணாமலை.. 
  


இன்னும் சிறுபொழுதில் - (இந்திய நேரப்படி மாலை 6.00 மணி)
திருஅண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட இருக்கின்றது

இவ்வேளையில் திரு அண்ணாமலையில் கடந்த பத்து நாட்களாக நடந்து வரும் திருக்கார்த்திகை திருவிழாவில் - 

எம்பெருமானின் திருக்கோலங்களை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வெய்துகின்றேன்..

இன்றைய பதிவின் படங்களை FBல் வழங்கியோர்
உழவாரம் திருப்பணிக் குழுவினர்..

அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே!.. (1/10/1)
- திருஞானசம்பந்தர் -

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமழை துறுகண்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனை சேவடி நினைவார் நிலையிலரே!..(1/10/2)
- திருஞானசம்பந்தர் -பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே!..(1/10/6) 
- திருஞானசம்பந்தர் -
உருவமும் உயிருமாகி ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்நின்ற எம்பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணாமலை யுளாயண்டர் கோவே
மருவிநின் பாதமல்லால் மற்றொரு மாடிலேனே!.. (4/63/3) 
- திருநாவுக்கரசர் - ஸ்ரீ பிட்க்ஷாடனர்
பாலுநெய் முதலாமிக்க பசுவிலைந் தாடுவானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம் அணியணா மலையுளானே
வாலுடை விடையா உன்றன் மலரடி மறப்பிலேனே!..(4/63/9) 
- திருநாவுக்கரசர் - 

இன்று அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்
மலையுச்சியில் ஏற்றப்பட இருக்கும் கொப்பரைதேடிச் சென்று திருவடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம்நமது உள்ள வினைகளே.. (5/5/5) 
- திருநாவுக்கரசர் -

அண்ணாமலை எம் அண்ணா போற்றி..
கண்ணார் அமுதக் கடலே போற்றி!..
- மாணிக்கவாசகர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***  

14 கருத்துகள்:

 1. மிகச் சிறப்பான படங்களோடு நல்ல பகிர்வு. தீப ஒளி எங்கும் பரவட்டும்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. ஒவ்வொரு படமும் சிறப்பு ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. படங்கள் பாடல்கள், காணொளி இவை எல்லாம் அருமை.
  திருக்கார்த்திகை சிறப்பு பதிவு வெகு அருமை.
  திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களுக்கும் திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. காணொளியில் பூஜை பார்த்தது நேரே கோவிலில் போய் பார்த்த மனநிறைவை தந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   காணொளியினை வழங்கிய நல்ல மனங்களுக்கு நன்றி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன் பிறப்பே ஜோதி மணி விளக்கே ஸ்ரீதேவி பொன் விளக்கே காஞ்சி விளக்கே காமாட்சி தாயாரே ..... என்றெல்லாம் என்மனைவி சொல்வது நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தாங்கள் குறித்துள்ள வாசகங்கள் திருவிளக்குப் பூஜையின் நாமாவளிகள்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களுக்கும் கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. கார்த்திகை கொண்டாடினோம். இப்போது உங்களின் பதிவு கண்டோம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு