நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மார்கழி 2016 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்கழி 2016 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 13, 2017

மார்கழிப் பூக்கள் 29

தமிழமுதம்

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை..(411)
***
சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- தாளாண்மை - 
ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின் கீழ்ப்பட்டது உலகு..(196)  
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 29


சிற்றம்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேள்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!..

திருப்பாடல் - 30

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன 
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ வீர நரசிங்கப் பெருமாள் - தஞ்சை
பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடி மேலன்பாய் துணிந்தேன்
புரிந்தேத்தி உன்னைப் புகலிடம் பார்த்தாங்கே
இருந்தேத்தி வாழும் இது..(2246)


சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் வாழி!.. 

திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தருளி தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..

ஆண்டாள் திருவடிகள் போற்றி..
ஆழ்வார் தம் திருவடிகள் போற்றி!..

ஆருயிர்க் குழாமும் போற்றி..
அரங்கன் தன் திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
சிற்றுயிர்கள் வழிபட்ட திருத்தலங்கள்

குயில் வழிபட்ட
திருத்தலம்

திருக்கோழம்பம்


இறைவன் - ஸ்ரீ கோகிலேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்


அமரலோகத்தின் உப்பரிகையில் நின்றபடி
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த
மேகங்களை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தான் தேவேந்திரன்..

அன்றைய பொழுது நல்லபடியாகச்
செல்வதாகவே தோன்றியது - அவனுக்கு...

அந்த வேளையில் மேகக் கூட்டங்களின்
ஊடாக வித்யாதரன் ஒருவன் தென்பட்டான்..

உண்மையில் அவனுக்குத் தான்
நேரம் சரியாக இல்லை..

தன்னைக் கண்டதும் வித்யாதரன்
வணங்கி வந்து நிற்பான் -  என்று இறுமாந்திருந்த
இந்திரன் அதிர்ந்து போனான்...

வித்யாதரன் இந்திரனைக் கண்டுகொள்ளவேயில்லை..

நீ யாராக இருந்தால் எனக்கென்ன?.. என்ற மனோபாவம்
அவனுக்கு!.. -  என்று எண்ணிய இந்திரன்
வித்யாதரனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தான்...

என்னை நீ கண்டும் காணாமல் சென்றது எதற்கு?..
இந்திரனிடமிருந்து ஆத்திரத்துடன் வினா பிறந்தது..

நீ என்னைக் கண்டீர் அல்லவா!..
அது போதாதா!..
வித்யாதரனிடமிருந்து பதில் வந்தது...

நெஞ்சழுத்தம் உனக்கு!...

தேவேந்திரனாகிய தாங்கள்
மேகக்கூட்டத்தின் ஊடாக தேவகன்னியருடன்
விளையாடுவதாக நினைத்து விட்டேன்!..

மேகத்துடன் நின்றதல்லால்
மோகத்துடன் நிற்கவில்லை!..

மனதில் தோன்றியதைச் சொன்னேன்!..
தங்களின் இயல்பு அவ்வாறாயிற்றே!..

நல்ல பொழுதென்று நினைத்திருந்தேன்..
அவ்வாறு அல்ல என்று நிரூபித்து விட்டது உன் பேச்சு!..
விபரீதத்தை விளைத்து விட்டாய் வித்யாதரா!..

அதன் விளைவு என்னவென்று தெரியுமா?..
பொறுப்பற்ற உனது பேச்சினால்
வெறுப்புற்றது என் மனம்!..

எல்லாருக்கும் விருப்புற்றது குயில்..
ஆனால், அதுவோ பொறுப்பற்றது..
நீ அதுவாகக் கடவாய்!..
அங்குமிங்கும் அலைந்து திரிவாய்!..

அதிர்ந்து நின்றான் வித்யாதரன்..

அச்சமயத்தில் அவ்வழியாக வந்த தவ முனிவர்கள்
வித்யாதரனை ஆறுதல்படுத்தினர்..

அஞ்ச வேண்டாம்.. காவிரிக்குத் தென்கரையில்
அம்பாள் பசு வடிவங்கொண்டு வழிபட்ட திருத்தலம் ஒன்றுண்டு..
அங்கே சென்று சிவ வழிபாடு செய்வாக..
அனைத்தும் நலமாகும்!..

வித்யாதரன் மனம் கலங்கினான்..
ஆருயிர் காதலிக்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியவில்லை..

சிவனே என்று சென்று கொண்டிருந்த என்னை
வம்புக்கிழுத்து சாபங்கொடுத்தனை.. 
மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி..

ஆனால், தேவேந்திரா!.. 
நான் சிவபூஜை செய்த தலத்திற்கு நீயும் வந்து
கும்பிட்டு எழுந்து குறையிரந்து நிற்பாயாக!..
நினைவில் வைத்துக்கொள்!..

வித்யாதரன் குயிலாகிப் பறந்து விட்டான்..
***

மையான கண்டனை மான்மறி ஏந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
செய்யானைத் தேனெய் பாலுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே!..(2/13)
- ஞானசம்பந்தர் -
***
குயிலாக மாறிய வித்யாதரனின் வழிபாட்டினால்
குயிலேஸ்வரர் என்றும் கோகிலேஸ்வரர் என்றும்
எம்பெருமானுக்குத் திருப்பெயர் வழங்கலாயிற்று....

அம்பாள் பசுவாகி வழிபட்ட திருத்தலங்களுள்
திருக்கோழம்பமும் ஒன்று..

சிவலிங்கத்தின் மேல்
பசுவின் குளம்பு தெரிவதாகச் சொல்வர்...

பின்னாளில்,
அகலிகையின் பாவத்தைக் கொட்டிக் கொண்ட இந்திரன்
கௌதமரின் சாபத்தினால் காணச் சகிக்காத கோலத்துடன்
இத்தலத்திற்கு வந்து கண்ணீர் விட்டுக் கதறியதாக தலபுராணம்..



செம்பியன் மாதேவியார் எடுப்பித்த திருக்கோயில்..
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
எத்தனை எத்தனை கோலாகலமாக
இருந்திருக்கும் - இந்தக் கோயில்!..

ஆனால் - இன்றைக்கு இங்கே
ஒரு கால பூஜை மட்டுமே நிகழ்வதாகத்
தெரிகின்றது..

கோழம்பம் எனும் இத்தலம் - இன்றைய நாளில்
குழம்பியம் என்று குழம்பிப் போயிற்று..

கொளம்பியம் என்றே சொல்கின்றார்கள்..


திருக்கோழம்பம் கோயில் குறித்த படங்களை 
வழங்கியவர் திரு. சிவமதி..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

கும்பகோணம் காரைக்கால் வழித்தடத்தில் S. புதூர் எனும் 
ஊரிலிருந்து வடக்காக 2 கி.மீ., தொலைவிலுள்ளது..

- திருப்பதிகம் அருளியோர் - 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்..

ஸ்ரீ திருநாவுக்கரசர் 
அருளிய தேவாரம் 

சமர சூரபன் மாவைத் தடிந்த வேற்
குமரன் தாதைநற் கோழம்ப மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே!..(5/64)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை

ஸ்ரீ வீதி விடங்கர் - அல்லியங்கோதை
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவ பெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே!..
***

தேவி தரிசனம்
- தஞ்சாவூர் -

ஸ்ரீ மகமாயி - தஞ்சை
ஸ்ரீ வராஹி - தஞ்சை
ஸ்ரீ பிரஹந்நாயகி - தஞ்சை
குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கை வல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!..(100)

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே!..
- அபிராமிபட்டர் -


மங்கலகரமான மார்கழிப் பூக்களைத் தொடர்ந்து
அனைவருக்கும்
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!.. 

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்!..
- சேக்கிழார் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், ஜனவரி 12, 2017

மார்கழிப் பூக்கள் 28

தமிழமுதம்

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு..(994) 
***

சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- ஈயாமை -

துய்த்துக் கழியான் துறவோர்க்கு ஒன்றீகலான்
வைத்துக் கழியும் மடவோனை வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்..(273)  
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 28


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத 
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


நின்றதோர் பாதம் நிலம் புடைப்ப நீண்டதோள்
சென்றளந்த தென்பர் திசையெல்லாம் அன்று
கருமாணியாய் இரந்த கள்வனே உன்னைப்
பிரமாணித் தார்பெற்ற பேறு..(2242) 

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

சிற்றுயிர்கள் வழிபட்ட 
திருத்தலங்கள்

சக்ரவாகப் பறவை வழிபட்ட திருத்தலம்

திருசக்கரப்பள்ளி
(சக்கராப்பள்ளி)



இறைவன் - ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர்
அம்பிகை - அருள்தரு தேவநாயகி
தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - வில்வம்

ஸ்ரீ தேவநாயகி
பழங்குறிப்புகளில் மட்டுமே காணப்படும் 
உயிரினங்களுள் சக்கரவாகமும் ஒன்று..

பூமிக்கு வராமல்
வானவெளியிலேயே சஞ்சரித்து வாழ்ந்து முடியும்
அபூர்வ பறவை சக்கரவாகம்..

சக்கரவாகப் பறவை சகோரம் எனவும்
குறிக்கப்படுகின்றது..

அபூர்வ பறவையாகிய சக்கரவாகம்
பூமிக்கு வந்து சிவவழிபாடு செய்த
அபூர்வ திருத்தலம் தான் சக்கராப்பள்ளி..

 சக்ராயுதம் வேண்டி ஸ்ரீ ஹரிபரந்தாமன்
இத்தலத்தில் வழிபட்டிருக்கின்றனர்..

சப்த கன்னியருள்
பிராம்மி இங்கே வழிபட்டிருக்கின்றனள்..



சிறப்புமிக்க
இத்திருக்கோயிலின் இன்றைய நிலை?..

சொல்லுதற்கொணாதது...

திருக்கோயிலைச் சுற்றி வீடுகளே இல்லாமல்
வயல்வெளியாக இருக்கும் தலம் - திருந்துதேவன் குடி..


திருக்கோயிலைச் சுற்றி 
வீடுகள் இருந்தும் அவற்றுள்
சைவ - வைணவ இல்லம் ஏதொன்றும் 
இல்லாதிருக்கும் தலம் - சக்கராப்பள்ளி..

அது மட்டுமில்லாமல்
திருக்கோயிலுக்கு அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும்
இறைச்சிக் கடைகளைக் காணலாம்..

இந்த ஊருக்கான பேருந்து நிறுத்தம் கூட
மில்லத் நகர் என்று தான் இருக்கின்றது..

சக்ரவாகேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் 
வழியைக் காட்டி பெருந்தூண் வளைவு
ஒன்று அமைக்கப்பட்டுள்ளது..

திருவையாற்றில் நிகழும் சப்தஸ்தானத்தைப் போல
சக்கராப்பள்ளியிலும் ஒருகாலத்தில் சீரும் சிறப்புமாக
நடந்திருக்கின்றது...

திரண்டிருந்த சொத்துக்கள் பலவகையிலும் 
கொள்ளையடிக்கப்பட்டு
கோயில் இருளடைந்த நிலையில் 
ஒரு கால பூஜைக்கே சிரமப்பட்ட காலகட்டத்தில் 
நல்ல உள்ளங்கொண்டோர் பலரும் கூடி முயன்று
கோயிலைப் புனரமைத்திருக்கின்றார்கள்..

இப்போது
சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி 
திருக்கோயிலின் உபகோயிலாக நிர்வகிக்கப்படுகின்றது..

அன்பர்களின் பெருமுயற்சியால்
கடந்த பத்தாண்டுகளாக
மீண்டும் சப்தஸ்தானப் பெருவிழா நடத்தப்படுகின்றது..

இருந்தாலும் திருவிழாவினை 
நடத்துவதற்கான கெடுபிடிகள் கடுமையானவை...

கெடுபிடிகளின் கடுமையினால்
சப்தஸ்தான பல்லக்கை நெடுஞ்சாலையிலேயே
இறக்கி வைத்து விட்டு செல்லும்படியாக
ஆகியிருக்கின்றது...

தஞ்சை - குடந்தை நெடுஞ்சாலையின்
போக்குவரத்தைக் காரணம் காட்டி
பல்லக்குகளை நிற்க விடமாட்டார்கள்..

திருவிழாவினை பக்தர்கள் 
நிம்மதியாக மகிழ்ச்சியாக தரிசிக்கவும் இயலாது...

ஆயினும், கடந்த சிலவருடங்களாக
மாற்று வழியாக
திருவையாறு கபிஸ்தலம் சாலையில்
போக்குவரத்து சிலமணி நேரங்களுக்குத்
திருப்பிவிடப்படுகின்றது..




செம்பியன் மாதேவியாரின் திருப்பணி
தஞ்சை பெரிய கோயிலுக்கு முற்பட்டது..

தஞ்சை நகர பேருந்து நிலயத்திலிருந்து 
அதிகமான பேருந்துகள் இயங்குகின்றன..

ஐயம்பேட்டை ராஜகிரி எனும்
ஊர்களுக்குள் ஊராக
நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே உள்ளது..

சக்கராப்பள்ளி நிறுத்தத்தில் இறங்கி எதிர்புறம்
சற்று தூரம் நடந்தால் திருக்கோயிலை அடையலாம்..


பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
தாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே!..(3/27) 
- ஞானசம்பந்தப் பெருமான் -

காலையில் 7 மணி முதல் 9 மணிவரை
மாலையில் 4.30 முதல் 7 மணி வரையிலுமே
கோயில் திறக்கப்பட்டிருக்கும்..

அப்பர் பெருமானின் திருவாக்கில் 
இடம் பெற்றிருக்கின்றது - இத்தலம்...

ஞானசம்பந்தப் பெருமான் 
சக்கரப் பள்ளியைத் தரிசித்து
திருப்பதிகம் அருளியுள்ளார்..

ஸ்ரீ திருஞானசம்பந்தர்
அருளிய திருக்கடைக்காப்பு

பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றைத்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே!..(3/27) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை - திருப்பொன்னூசல்

ஸ்ரீ கும்பேஸ்வரர்
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியாநாண் மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாளிணைப் பாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ!..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ மங்களாம்பிகை - திருக்குடந்தை

ஸ்ரீ மங்களாம்பிகை
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீதுஅன்னமாம்
கயிலாயருக்கு அன்றுஇமவான் அளித்த கனங்குழையே!..(99)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

புதன், ஜனவரி 11, 2017

மார்கழிப் பூக்கள் 27

தமிழமுதம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி..(226) 
***

சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- நன்றியில் செல்வம் - 

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக் 
கல்லார்க்கு ஒன்றாகிய காரணம் தொல்லை
வினைப்பயன் அல்லாது வேனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன்று இல்..(265)  
***
அருளமுதம்


இன்று 
திவ்ய தேசங்களில் 
கூடாரவல்லி வைபவமும்
சிவாலயங்களில்
திருஆதிரைத் திருநாளும்
சிறப்பாக நடைபெறுகின்றன..
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 27




கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தனைப் 
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடைஉடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்
ஈருருவன் என்பர் என்பர் இருநிலத்தோர் ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்
நீதியால் மண்காப்பார் நின்று..(2241)

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
சிற்றுயிர்கள் வணங்கிய
திருத்தலங்கள்

திருத்தலம்
திரு எறும்பூர்


இறைவன் - ஸ்ரீ எறும்பீஸ்வரர்
அம்பிகை - நறுங்குழல் நாயகி
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்

கந்தர்வன் ஒருவன்
துர்வாச முனிவரைப் பரிகசித்த பாவத்தினால்
நண்டு என உருமாறிப் போனான் ..

சாப விமோசனம் தேடியலைந்தது நண்டு..

சிவபூஜை செய்தால் பாவம் அகலும் என்றறிந்த நண்டு
தேவேந்திரன் சேகரித்து வைத்திருந்த தாமரை
மலரை எடுத்துத் தானும் 
தன்போக்கில் சிவவழிபாடு செய்தது..

அதைக் கண்டு சினங்கொண்ட தேவேந்திரன்
சிற்றுயிராகிய நண்டின் மீது இரக்கம் கொள்ளாமல்
கொலை வெறித் தாக்குதல் நடத்தினான்..

சிவலிங்கத் திருமேனியில் காயங்கள் ஏற்பட்டன..

அப்போதும் உணர்ந்து கொள்ள இயலாதவனாகி
மூர்க்கத்துடன் தாக்குதலைத் தொடர்ந்த போது
சிவலிங்கத்தின் உச்சியில் துளை ஒன்று ஏற்பட்டது..

இந்திரனின் தாக்குதலுக்கு அஞ்சிய நண்டு
அந்தத் துளையினுள் நுழைந்து கொள்ள
இறைவனுடன் ஐக்கியமானது..

இறைவன் வெளிப்பட்டு நண்டு செய்த 
தொண்டினைப் புகழ்ந்துரைத்தார்..

இந்திரன் இதைக் கேட்டு வெட்கித்
தலைகுனிந்து நின்றான்..

தான் செய்த வழிபாடு அரைகுறையாகிப் போனது..
இந்த நேரத்தில் தனக்கு வரம் வேண்டும்!.. - எனக் கேட்டால்
ஏடாகூடமாகிவிடும் என்று உணர்ந்து கொண்டான்..

எம்பெருமானே!.. பிழைபொறுத்தருள்வதுடன்
தம்மை மீண்டும் வழிபட அனுமதிக்க வேண்டும்!.. 
என, வேண்டிக் கொண்டான்..

அதைக் கேட்ட எம்பெருமான் -
காவிரியின் தென்கரையிலுள்ள
மதுவனத்தில் வழிபாட்டினைத் தொடர்க!..
என்றுரைத்தார்..

அந்த மதுவனத்தைத் தேடியலைந்து 
கண்டு கொண்ட தேவேந்திரன்
தான் மட்டுமல்லாமல்
தன் கூட்டத்தாரையும் சேர்த்துக் கொண்டு
வழிபாட்டினைத் தொடர்ந்தான்..

ஆனாலும்
அசுரர்களின் தொல்லை தாளமுடியவில்லை..

அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு
எறும்பு என உருமாறினான்..

தன்னுடனிருந்த தேவர்களையும் 
எறும்புகளாக உருமாற்றினான்...

நண்டிற்குத் தொல்லை கொடுத்த பாவத்தை 
அதனினும் கீழாகிய
எறும்பின் வடிவாகி தீர்த்துக் கொண்டான்..

தேவேந்திரனுக்கும் அவனது கூட்டத்தாருக்கும்
அடைக்கலம் அருளிய ஐயன்
தானே புற்று வடிவமானார்..

லிங்க வடிவமான புற்றின் மீது
ஊர்ந்ததனால்
தன் ஊழ்வினை நீங்கப் பெற்றான்..

அந்த நிலையில்
மதுவனம் என்ற தலம்
எறும்பீச்சரம், எறும்பூர்
என்றானது..

சிவலிங்கம் புற்றுருவாகியதால் 
எண்ணெய்க் காப்பு மட்டுமே செய்யப்படுகின்றது..

இன்றைய பதிவில் வைகாசிப் பெருந்திருவிழாவின் காட்சிகள்..

படங்களை வழங்கிய
முரளி S. வேல் அவர்களுக்கு 
நெஞ்சார்ந்த நன்றி..










இந்நாளில் இத்தலத்தை
திருவெறும்பூர் என்றும் திருவரம்பூர்
என்றும் பிழைபட அழைக்கின்றனர்

புகழுறும் திருத்தலமாகிய
திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே
தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது..


இத்திருக்கோயில் சிறு குன்றின் மீது

விளங்குகின்றது..


நிறைந்த பேருந்து வசதியினை உடையது,,
பிரதான சாலையிலிருந்து 
உட்புறமாக சற்று வடக்கு நோக்கி நடந்தால்
திருக்கோயிலை அடையலாம்.. 

இத்தலத்தினை அப்பர் பெருமான் 
தரிசித்து திருப்பதிகம் அருளியுள்ளார்..


ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிய தேவாரம்

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே!..(5/74) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
19 - 20

ஸ்ரீ ஆடல்வல்லான் - தஞ்சை
உங்கையிற் பிள்ளை அடைக்கலமென்
றங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால் 
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லாதார் தோள்சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறெமக்கேலோர் எம்பாவாய்.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்!..

திருவெம்பாவை திருப்பாடல்கள்
இந்த அளவில் நிறைவுறுகின்றன.. 
***

தேவி தரிசனம்
ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி - தஞ்சை
(ஸ்ரீ பங்காரு காமாக்ஷி)


பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என்அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்குங்கும முலையும் முலைமேல் முத்தாரமுமே!..(85)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***