நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

ஸ்ரீ கிருஷ்ண தரிசனம்

இன்றைக்கென்று எவரையும் காணோமே!.. பொழுது வேறு இறங்கிக் கொண்டிருக்கிறது.. இருளாகிப் போனால் யார் உதவிக்கு வருவார்கள்!..

பரிதவிப்புடன் அந்தச் சாலையின் இப்புறமும் அப்புறமும் நோக்கிக் கொண்டிருந்தாள் - கோபிகா...

நீண்டு நெளிந்திருந்த சாலையில் எவரையுமே காணவில்லை..

விழிகளை உயர்த்தி வானத்தைப் பார்த்தாள்...

கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன பறவைகளெல்லாம்!..

மேல் வானம் மெல்ல மெல்ல செந்நிறமாகிக் கொண்டிருந்தது...

இன்னும் ஒரு பொழுதுக்குள் இருள் வந்து கவிந்து விடும்..

என்ன செய்வது?..

கண்களில் நீர் ததும்பியது - தனிமையை நினைத்து..


யமுனைக் கரையில் ஸ்ரீ கோகுலத்தில் தான் அவளுடைய வீடு...

நந்தகோபனின் மாளிகையிலிருந்து மூன்றாவது இல்லம் தான் அவளுடையது..

எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா!.. - என்றழைக்கும் யசோதா தேவிக்கு ஒரு வகையில் மருமகள் முறை...

அதெல்லாம் இப்போது கதைக்கு ஆகுமா?..

மரத்தடியில் இருந்து ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கும் அப்பனுக்காவது என் நினைவு வந்திருக்க வேண்டாமா?..

எங்கே மகளைக் காணோம்?.. - என்று..

நம்பிக்கை.. எல்லாம் நம்பிக்கை..

அத்தனையும் அந்த மாயக் கண்ணன் கொடுத்த நம்பிக்கை...

கண்ணன் இருக்கும் ஊரில் கன்னியரைப் பற்றி எதற்குக் கவலை?.. அவன் பார்த்துக் கொள்ள மாட்டானா!..

- என்ற தைரியம்.. நெஞ்சழுத்தம்!...

ஆனால், இன்றைக்கென்று கண்ணன் எங்கே போய் ஒளிந்து கொண்டானோ.. தெரியவில்லை...

நெஞ்சுக்குழிக்குள் படக்.. படக்.. - என்று சத்தம் வேறு கேட்க ஆரம்பித்தது..

சரி.. கோபிகைக்கு என்னதான் பிரச்னை?..

கோபிகாவின் அருகில் பாருங்கள்...

ஒரு கூடை இருக்கின்றதல்லவா!..
அது நிறைய மாம்பழங்கள் இருக்கின்றனவா!.. அவைதான் பிரச்னை!..

கோபிகா - தங்களுடைய மாந்தோப்பை சுற்றிப் பார்ப்பதற்காக
சற்று நேரத்திற்கு முன்பாக வந்தாள்...

அணில்களும் கிளிகளும் மைனாக்களும் மற்ற பறவையினங்களும் தின்று தீர்த்தது போக, ஏராளமான பழங்கள் தோப்புக்குள் உதிர்ந்து கிடந்தன..

அவற்றை அப்படியே விட்டுச் செல்ல அவளுக்கு மனம் இல்லை..

எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றால் - இல்லாதவர் எவருக்கும் உண்ணக் கொடுக்கலாமே!.. - என்ற தயாள எண்ணம் அவளுள் எழுந்தது...

அப்படியே முடிந்த வரைக்கும் கூடையில் சேகரித்தாள்..

ஆயிற்று.. கூடையும் நிறைந்து விட்டது.. பெருஞ்சுமையாகவும் ஆகிவிட்டது..

இப்போது - தலைச் சுமையாகத் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க வேண்டியது தான்..

ஆனால் - முடியவில்லை...

கீழே குனிந்து கூடையைத் தூக்கும் போது -
கூடை சரிந்து மேலே உள்ள பழங்கள் கீழே சிதறுகின்றன...

மீண்டும் அவற்றைப் பொறுக்கிக் கூடையில் வைத்து - கூடையைத் தூக்கினால் - மீண்டும் பழைய கதை தான்.. பழங்கள் சரிகின்றன...

இடுப்பில் தூக்கிக் கூடையை வைத்துக் கொண்டு நடக்கலாம் என்றால்,
பாலும் நெய்யுமாக உண்டு வளர்ந்த உடம்பு .. ஒத்துழைக்கவில்லை..

வெண்ணெயுடன் சர்க்கரையைச் சேர்த்த நிறத்தில் சற்றே கனத்த சரீரம்..

அவள் அழுது விடக்கூடாதே!.. என்பதற்காக, அவளைப் பூங்கொடி என்பார்கள்..

அதனால், அவளும் நம்பிக் கொண்டிருந்தாள் - தான் பூங்கொடி தான் என்று!..

இங்கே ஒரு வேடிக்கை!.. என்ன அது?..

சில பழங்களை எடுத்துக் கீழே போட்டுவிட்டால் -
கூடையை எளிதாகத் தூக்கிக் கொள்ளலாம்..

ஆனால் - அவ்வாறு செய்வதற்கு கோபிகைக்கு விருப்பமில்லை....

இதுக்குத் தான் கஷ்டப்பட்டு பொறுக்கினேனா?..

தனக்குத் தானே சுமையைச் சேர்த்துக் கொண்டவள் -
தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்...

இவளைப் போலத்தானே நாமும் இருக்கின்றோம்...

ஆசை என்பது பழம் என்றால் - பழங்கள் இருக்கும் கூடையே பிரச்னை..

சில விஷயங்களைக் கைவிட்டால் பிரச்னை தீர்ந்து விடும்!..
ஆனால் - நாம் தான் விடுவதில்லையே!..

சரி.. சம்பவ இடத்திற்கு வருவோம்..

இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது - கோபிகாவின் நெஞ்சில்!..

அழைப்பவர் குரலுக்கு வருவேன்!.. - என்றானே, அந்தக் கள்வன்!..

அழைத்துத் தான் பார்ப்போமே!.. 
அன்றைக்குக் குன்றினை ஏந்திக் கோகுலத்தைக் காத்தவன் - 
கோதையின் குரல் கேட்டு வாராமல் போய்விடுவானோ!..



கிருஷ்ணா!... கிருஷ்ணா!..

ம்ஹூம்.. மாஞ்சோலையின் இலைகள் தான் அசைந்து கொண்டிருந்தனவே தவிர வேறொரு சலனமுமில்லை...

காலையில் உன் குரல் கேட்டேனே - என்
கண்ணனின் திருமுகம் பார்த்தேனே!..
சாலையில் உன் துணை வரவில்லையே - என்
சங்கடம் தீர்ந்திட வழியில்லையே!..

கோபிகாவின் கன்னங்களில் வழிந்திடக் காத்திருந்தன - கண்ணீர்த் துளிகள்..

அதோ.. கன்றுகளின் கழுத்து மணிகளின் சப்தம்..

உற்றுக் கேட்டாள் - கோபிகா..

ஆகா.. கூடவே குழலிசையும் கேட்கின்றது..

கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!..

பரவசமானாள் - கோபிகா!..

இதோ, கமலையும் செவலையுமாக - வீட்டுக்குச் செல்லும் ஆவலில் தாய்ப் பசுக்களை முந்திக் கொண்டு ஓடுகின்றன கன்றுகள்..

கண.. கண.. - என்ற மணி முழக்கத்துடன் தாய்ப் பசுக்களும் மற்ற இளங் கிடேறிகளும் அவற்றைத் தொடர்ந்திடும் வாட்டசாட்டமான காளைகளும்...

ஆநிரைகளின் ஓட்டத்தால் எழுந்த புழுதியின் ஊடாக, அதோ - புண்ணியன்..

வருகின்றான் ஸ்ரீ கிருஷ்ணன்!..

வாட்டம் போக்க வருகின்றான் - ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்...

அவன் வாயிதழ்களில் பொருந்தியதாய் - வேய்ங்குழல்!..

அதிலிருந்து பொங்கி வழியும் அமுதமாய் - வேணுகானம்

இதோ.. இதோ... அருகில் வந்து விட்டான்..

கோபிகை முகம் மலர்ந்தாள்..

கண்ணா.. இதோ இந்தச் சுமையை என் தலையில் ஏற்றி விடேன்!..

வேத வேதாந்தங்களும் காண்பதற்குக் காத்துக் கிடக்கும்
கடைவிழியால் நோக்கினான் - கண்ணன்...

அவ்வளவு தான்..
அவன் நிற்கவும் இல்லை.. நின்று, ஒரு மொழி சொல்லவும் இல்லை..

ஆநிரைகளைத் தொடர்ந்து சென்றே விட்டான்...

கிருஷ்ணா!... கிருஷ்ணா!.. - மீண்டும் கூவினாள்...

ஏதும் பயனில்லை..

கேளாச் செவியனோ.. நீ!..

கோபிகாவின் மனம் பதறியது.. துடித்தது.. துவண்டது..


அன்று நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..
மாம்பழம் வேண்டுமென்று நீ கேட்டாய்..
நான் கொடுத்தாலும் அதை நீ வாங்கவில்லை..
என் கன்னம் வேண்டும் என்று கேட்டனையே!..

பின்னும் ஒருநாள் - தூசு விழுந்து விட்டதா?..
என்று நீயாக கற்பனை செய்து கொண்டு
என் முகம் பற்றி விழிகளுக்குள் உற்று நோக்கி
உன் முகம் கண்டு களித்தனையே!..

அந்த பொழுதெல்லாம் மறந்து விட்டதா?.. 
ஏ.. கள்வனே!.. இது நியாயமா?..

கங்கையின் வெள்ளம் கண்ணீரோ - இல்லை
கன்னியர்கள் சிந்தும் கண்ணீரோ..
கண்ணனின் மனமும் கல்மனமோ.. - எந்தன்
மன்னனுக்கு இதுவும் சம்மதமோ?..


பாராமுகமாய்ச் சென்றனையே.. 
பாவை எனைப் பாவி எனக் கருதினையோ?..

ஆற்றாமையினால் கோபிகாவின் இதழ்கள் துடித்தன...

சட்டென மனம் இறுகிற்று.. ஒரு முடிவுக்கு வந்தாள்...
முயற்சி திருவினையாக்கும்!.. - என்று முனைந்தாள்...

தாவணியின் தலைப்பினை சுருளாகச் சுற்றித் தலையில் வைத்துக் கொண்டாள்..

ஒரு விநாடி மூச்சை நிறுத்தி - இரு கைகளாலும் மாம்பழக்கூடையைத் தூக்கி
சட்டெனத் தலையில் தாங்கிக் கொண்டாள்..

கன கச்சிதமாக உச்சந்தலையில் அமர்ந்தது - மாம்பழக் கூடை..

அப்படியும் இப்படியும் பார்த்தாள் - பழங்கள் ஏதும் விழுந்து விட்டனவா?.. என்று...

யாதொன்றும் விழவில்லை!..

கர்வமாக இருந்தது.. தனது சுமையைத் தானே தூக்கி விட்டோம்!.. - என்று...

சற்று முன் நடந்தவை எதுவும் - இப்போது நெஞ்சினில் இல்லை..

வீட்டை நோக்கி நடந்தாள்..

இன்னும் சற்று தூரம் தான்.. வீட்டுக்குச் சென்று விடலாம்...

கோபிகாவின் மனம் துள்ளியது.. துள்ளிக்குதித்த மனம் அடங்குவதற்குள் -

தன் வீட்டு வாசலில் யார்?.. கண்ணனா!..
அவன் தான்!.. அவன் எதற்கு வந்தான்?..

பாராமுகமாகப் பசுவின்பின் சென்றவன்
பாவை என் முகத்தைப் பார்த்திடவும் வந்தானோ?..

மனமே.. சொன்னால் கேள்.. மாயக்காரன் அவன்!..
அவன் விரிக்கும் வலைக்குள் விழுந்து விடாதே!..

ஏதொன்றும் பேசக்கூடாது... ஏன் பேச வேண்டும்?..
என்னைக் கண்டும் காணாதது போல் சென்றானே!..

என் பிரிவால் அவன் ஏங்கித் தவிக்க வேண்டும்!...
நீயின்றி நானில்லை - என்று துடிக்க வேண்டும்!..

பற்களைக் கடித்துக் கொண்டாள்.. பூவிதழ்களை இறுக மூடிக் கொண்டாள்..

தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்கின்றாளாம் - அவள்!...

ஆனால், மனமோ சிறகடித்துப் பறந்தது - கண்ணனைக் கண்டதும்!..


கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்..
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்..
கண் மயங்கி ஏங்கி நின்றேன்..
கன்னி சிலையாகி நின்றேன்!..

மனக்குயில் குக்கூ!.. என்று கூவிற்று..
அதன்பின் எல்லாம் நாடகம் போல எல்லாம் நடந்தன..

வீட்டு வாசலில் - தன் எதிரில் வந்து நின்ற கோபிகையின் -
தலையிலிருந்த கூடையை, அவனாகவே இறக்கி வைத்தான் - கண்ணன்..

கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்..
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்..
பொன்னழகு மேனி என்றான்..
பூச்சரங்கள் சூடித் தந்தான்!...

கோபிகாவின் மனம் மருகிற்று.. உருகிற்று..

நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!..

பூட்டிக்கிடந்த பூவிதழ்கள் திறந்து கொண்டன..

கண்ணனின் கோலமணி மார்பில் சாய்ந்திருந்தபடிக்கு - 
தலையை மட்டும் உயர்த்தி, அவனது முகம் நோக்கிக் கேட்டாள் கோபிகா!..


பழக்கூடையை தலையில் ஏற்றி விடும்படி சொன்னேன்.. 
அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை - நீ!..

இப்போது நான் கேளாமலேயே வந்து - 
என் தலைச்சுமையை இறக்கி வைக்கின்றாயே?..
ஏனடா.. கண்ணா!.. இந்தப் பொல்லாத் தனம்?..

அதைச் செவியுற்ற
உள்ளங்கவர் கள்வனின் உதடுகளில் 
மந்தகாசப் புன்னகை மலர்ந்தது..

மெல்லிய குரலில் சொன்னான்..

நான் சுமைகளை இறக்கி வைப்பவன்!..

கோபிகையின் உள்ளமும் உணர்வுகளும்
பூக்களாகச் சரிந்தன
புண்ணியனின் திருவடிகளில்...
***
நன்றி - கேசவ் ஜி
இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி..

அவனன்றி ஆவதொன்றும் இல்லை..
ஆதியும் அவனே.. அந்தமும் அவனே!..

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
***  

13 கருத்துகள்:

  1. சொல்லிச் சென்ற விதம் அருமை அருமை!!! ஜென்மாஷ்டமி தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையாகச் சொல்லிச் சென்றதற்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      நாலு வரிக் கதையாக அன்றொரு நாள் படித்தது..
      அதையே சற்று மெருகேற்றி வழங்கினேன்..

      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நேற்று கிருஷ்ணன் கோயில் சென்றேன். அருமையான அனுபவமாக இருந்தது. தற்போதுதான் உங்கள் பதிவினைக் காணமுடிந்தது. மனம் நிறைவானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் மனம் நிறைவான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ரசித்து வாசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா...
    அவ்வளவு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகு தமிழில் அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கண்ணன் வந்தான் கீதை சொன்னான். அருமையான சிறப்பு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..