நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2016

எலுமிச்சை மாலை

ஆடி மாதத்தின் முதலிரண்டு வெள்ளிக் கிழமைகளில்
மஞ்சளையும் குங்குமத்தையும் அன்புடன் சமர்ப்பித்தேன்..

கடந்த ஆடி வெள்ளிக்கிழமையன்று  பூர நட்சத்திரமும் சேர்ந்து பொலிந்தது..

அன்றைய தினம் வழக்கம் போல் அம்பிகைக்கு என்றாகி விளங்கும் மங்கலங்கள் சிலவற்றுள் அடுத்ததாக ஒன்றினை பதிவில் வழங்கவில்லை..

கடந்த வெள்ளியன்று முழுதாகவே அம்பிகையின் அழகுத் திருக்கோலங்கள் பதிவினில் இடம் பெற்றன..

இதோ, இன்றைய பதிவினில் -

எலுமிச்சை!..

புன்னைநல்லூர் மகமாயி
ராஜ கனி - என்ற பெருமைக்குரியது..

நல்ல சகுனங்களுள் ஒன்றாக விளங்குவது..

மங்கலம் என்றாலும் மருத்துவம் என்றாலும் முன்னிற்பது..

இத்தனைக்கும் எலுமிச்சை இனிப்பான கனியல்ல..

அதனுள் நிறைந்திருப்பவை புளிப்பு மற்றும் உப்பு ஆகிய சுவைகளே..

பெரியவர்களைச் சந்திக்க செல்லும் போது வெறுங்கையுடனா செல்வது?..

அவர் தமக்கு -
நம்முடைய அன்பின் அடையாளமாக எதைக் கொடுக்க இயலும்?..

மாலை பொன்னாடை பட்டயம் போன்ற எதனினும் மேலான மரியாதை எது?..

ஒரே ஒரு எலுமிச்சம் பழம்!..

அதைக் கொடுத்தால் அதற்கு நிகரான மரியாதை வேறதுவும் கிடையாது..


அப்போதெல்லாம் மலர் மாலையுடன் கூடியதாக பூச்செண்டு விளங்கும்

பூச்செண்டின் மத்தியில் எலுமிச்சங்கனியை வைத்து சுற்றிலும் பூக்களால் பிணைத்திருப்பார்கள்..

கல்யாண மாலைகளை மணமக்களுக்கு அணிவித்து -
கையில் பூச்செண்டினைக் கொடுக்கும் போது
இயல்பாகவே மரியாதை செய்ததாகி விடும்..

விழா மேடைகளில் பெரியோர்களுக்கு மரியாதை செய்யும் போதும் இப்படியே!..

மனையறத்தில் எலுமிச்சையின் பங்கு மகத்தானது..

பல்வேறு நிலைகளில் நமது சமையலில் இடம்பெற்று விளங்குவது..

சோறு, ரசம், ஊறுகாய் - என, அனைத்திலும் மிகச்சிறந்த சுவையூட்டி..

சைவ உணவுகள் மட்டுமின்றி - புலால் உணவுகளிலும் இடம் பிடித்துக் கொள்ளும் சிறப்புடையது - எலுமிச்சை..

எலுமிச்சையின் காய்க்கும் கனிக்கும் சுவையில் எவ்வித மாறுபாடும் கிடையாது..

காய் அழுத்தமாக அடர்ந்த பச்சை நிறத்தில் விளங்கும்..
பழம் சற்றே மிருதுவாக மஞ்சள் நிறத்துடன் கண்களைக் கவர்ந்திடும்..

எலுமிச்சையின் சாற்றில் உப்பையும் குளிர்ந்த நீரையும் கலந்து பருகாதவர் யார்?..


எலுமிச்சையின் சாற்றில் வெல்லத்தையும் ஏலப் பொடியையும் சுக்குப் பொடியையும் கலந்தால் அதுவே பானகம்...

ஆடியின் சிறப்புகளில் பானகமும் ஒன்று..

அம்மன் கோயில் வழிபாடுகளில் முக்கியத்துவம் பெறுவது - பானகம்...

வைணவ வழிபாட்டில் குறிப்பாக நரசிம்ஹ ஸ்வாமிக்குரிய நிவேதனங்களில் சிறப்பிடம் பெறுவது - பானகம்...

அதுமட்டுமல்ல!.. வேறொரு ரகசியமும் உங்களுக்காக...

வெளியூர்ப் பயணங்களின் போது - சிறந்த வழித்துணை எலுமிச்சை தான்!..

வீட்டை விட்டுப் புறப்படும் முன் பூஜை மாடத்தில் நல்லதொரு எலுமிச்சம் பழத்தை வைத்து வணங்கி விட்டு - கையோடு எடுத்துச் செல்வது நன்மை பயக்கும்..

வீட்டிலுள்ள பெரியோர்களின் கையால் ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொண்டு சென்றாலும் நல்லதே!..

துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காமலிருக்க - வீட்டில் தலைவாசலின் இருபுறமும் எலுமிச்சம் பழத்தை அறுத்து குங்குமத்தில் தோய்த்து வைப்பது வழக்கம்..

வீட்டின் தலை வாசலில் திருஷ்டி பரிகாரமாக தொங்க விடுவது எலுமிச்சம் பழங்களையே!..

தேரோட்டத்தின் போது தேரடியில் தேர்ச் சக்கரங்களுக்குக் கீழே நசுங்குவன - எலுமிச்சம் பழங்களே!..

உக்ர தெய்வங்கள் வீதியுலா எழுந்தருளும்போது திசை தேவதைகளுக்கு பலியாக வழங்கப்படுவதும் எலுமிச்சங்கனிகளே!..

தெய்வங்களுக்கு நிகழ்த்தும் அபிஷேகங்களுள் எலுமிச்சையின் சாறும் இடம் பெறும்..

நிவேத்ய ஆராதனைகளில் எலுமிச்சங்கனியும் சமர்ப்பிக்கப்படும்..

அதேசமயம் - உக்ர மூர்த்திகளுக்கு எலுமிச்சங் கனிகளால் ஆன மாலையும் சாற்றப்படும்..

அன்பர்கள் நேர்ந்து கொண்டபடிக்கு - கோயில் கொண்ட அம்பிகைக்கு நூற்றெட்டு ஆயிரத்தெட்டு என்ற எண்ணிக்கையில் தொடுக்கப்பட்ட எலுமிச்சை மாலைகளையும் சாற்றுவர்..


செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் - துர்க்கையம்மன் சந்நிதிகளில் நூற்றுக் கணக்கான எலுமிச்சை விளக்குகள் ஏற்றப்படுவதைக் காணலாம்..

ஆனால், அவ்வாறு செய்யக் கூடாது என்கின்றனர் - ஆன்றோர்கள்..

ஆனாலும் மக்கள் கேட்பதாக இல்லை..
அவர்களுக்கு ஜோதிடர்களின் வார்த்தைகளே பிரதானம்..

எலுமிச்சம் பழச்சாற்றைக் கீழே பிழிந்து விட்டு - 
அதன் தோலைக் கவிழ்த்துப் போட்டு விளக்கேற்றுவதை விட,

அதன் சாற்றில் வெல்லத்தைக் கலந்து பானகமாக செய்து நாலுபேருக்குக் கொடுத்தால் புண்ணியமாவது சேரும்..

ஸ்ரீ காளியம்மனைக் குறித்த நள்ளிரவு வழிபாடுகளில் எலுமிச்சங்கனிக்கு முக்கிய இடம் உண்டு..

இப்படியாக - சமய வழிபாட்டில் இன்னும் பல சிறப்புகளை உடையது எலுமிச்சை..


எலுமிச்சை உப்புச் சுவையுடையாதாயினும்
நமது வாழ்வை இனிமையாக்குகின்றது என்பதை மறக்க முடியாது..

வெதுவெதுப்பான நீரில் சில துளி எலுமிச்சைச் சாற்றினைச் சேர்த்து வாய் கொப்பளித்தால் - பற்களுக்கும் ஈறுகளுக்கும் மிகச் சரியான பாதுகாப்பு..

குளிர்ந்த நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து உப்பு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தினால் நாவறட்சி அடங்கும்..

அதிலேயே சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு அருந்தினால் - செரிமானக் கோளாறுகள் நீங்குகின்றன..

ஒரு லிட்டர் நீரில் ஒரு பழத்தைப் பிழிந்து முகத்தை காலையும் மாலையும் கழுவினால் பதின்ம வயதுகளில் தோன்றும் முகப்பருக்களின் தொல்லை அகலும்.. முகம் மிருதுவாகும்..

எலுமிச்சம் பழச் சாறு - இரத்தத்திலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை அகற்றி இரத்தத்தை சுத்திகரிக்கின்றது..

எலுமிச்சம் பழச்சாறு இரத்த அழுத்தத்தைச் சமன் செய்கின்றது - என்று, தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன..


உப்பிலிட்ட எலுமிச்சையும்
மிளகாய் தூளுடன் தாளிக்கப்பட்ட எலுமிச்சையும் -
ஊறுகாய் என்ற பெயரில் தமிழர் தம் தலைவாழையில் இடம் பெறுகின்றன...

அதிக உப்பு இதயத்திற்கு நல்லதல்ல -  என்று சொல்லப்பட்டாலும்
எலுமிச்சை ஊறுகாயைத் தவிர்க்க முடியாமல் தவிக்கின்றனர்..

எலுமிச்சையில் வேறுவேறு ரகங்கள் இருக்கின்றன..

எலுமிச்சை இலைகளைக் கையில் கசக்கினால் உண்டாகும் நறுமணம்
வெகுநேரத்திற்கு நம்முடன் இருக்கும்..

அப்போது பறிக்கப்பட்ட எலுமிச்சங்கனியை நுகர்ந்தால்
அதனுடைய வாசத்தினால் மனம் அமைதி பெறும்..

எலுமிச்சங்கனியின் நறுமணம் தலை சுற்றலைத் தடுத்து வாந்தியைக் கட்டுப்படுத்தும்..

நீண்ட தூர பயணங்களின் போது ஒரு சில எலுமிச்சம்பழங்கள் கைவசம் இருப்பது நல்லது..

ஆயினும் - நலமெல்லாம் தருகின்றதே!.. என்று அளவுக்கு அதிகமாக
எலுமிச்சையைப் பயன்படுத்துவதும் தகாது..

அளவுக்கு அதிகமான எலுமிச்சையின் பயன்பாடு
ஆண்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்..

புன்னை வனத்து மகமாயிக்கு பூச்சொரியல்

பலவழிகளிலும் மக்களுக்குப் பயனாகும் எலுமிச்சை
மாலையாக உருமாறி அம்பிகையை அலங்கரிக்கும்போது
மதிப்பு மிக்கதாகி விடுகின்றது..

பெரும்பாலும் எல்லா அம்மன் சந்நிதிகளிலும் இப்படித்தான்!..

எலுமிச்சம் பழத்தைக் குறித்த வேறு சில செய்திகளும் மறைபொருளாக உள்ளன.. அவற்றை வெளிப்படையாகத் தெரிவித்தல் ஆகாது..

ஊரும் உலகும் பலவிதமாகக் கிடக்கும் இன்றைய நாட்களில்
அமைதியான வாழ்விற்கு உறுதுணையாயிருப்பது - எலுமிச்சம் பழம்..

எல்லா வகையிலும் ஏற்றம் தருவது -
எலுமிச்சம் பழம் எனில் அது மிகையில்லை..


தொண்டை நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்று - திருமாகறல் ..

திருஞான சம்பந்தரால் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்..
இந்தத் திருத்தலத்தின் தலவிருட்சம் - எலுமிச்சை..

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்பு மேலாடும் - எரிகுணமாம்
தண்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்..

என்று பாம்பையும் எலுமிச்சம் பழத்தையும் ஒருமித்து கவி காளமேகம் பாடிய சிலேடைப் பாடல் குறிப்பிடத்தக்கது...

சென்ற வாரங்களில் -
மஞ்சளையும் குங்குமத்தையும் பாடல் பொருளாகக் கொண்டு
அம்பிகையை அழைத்த வண்ணம் -

இன்று எலுமிச்சங்கனியைக் கொண்டு 
அனைவருடைய நலத்திற்காகவும் 
அம்பிகையை , 
மகா மாரியம்மனை, 
மகா காளியம்மனை
அழைத்து மகிழ்கின்றேன்..

ஸ்ரீ மகமாயி - புன்னைநல்லூர்
எலுமிச்சை மாலையணிந்து எழுந்து வாடி மாரியம்மா..
ஏழைமுகம் பார்த்து விட்டால் தீரும் தொல்லை கோடியம்மா!..

அழும்பிள்ளை நாங்கள் அம்மா துன்பம் துயரம் தீருமம்மா..
ஆதரிக்க யாரும் இல்லை அம்மா நீயும் வாருமம்மா!..


ஸ்ரீ மகாகாளி
அம்பர் மாகாளம்
சண்டனை முண்டனைத் துண்டங்கள் ஆக்கிய காளிநீலி சாமுண்டி..
சதிகாரன் சங்கை அறுக்க விரைந்து வாடி சாமுண்டி!..

பண்டனை விரலால் தேய்த்த பகவதி பஞ்சமி பைரவி சாமுண்டி..
பதிலுரைக்க வேணும் அம்மா சாம்பவி சங்கரி சாமுண்டி!..சும்ப நிசும்பனைத் தூள்துகள் ஆக்கிய ஆனந்தவல்லி மாகாளி..
மகிடனின் தலையில் திருவடி சூட்டிய மரகதவல்லி மாதுர்கா!..

அம்பிகை உன்னைச் சரணம் அடைந்தோம் கற்பகவல்லி கருமாரி..
அரவணைத்துக் காக்க வேணும் அமிர்தவல்லி மகமாயி!..

ஸ்ரீ கோடியம்மன் - தஞ்சாவூர்
ரக்தபீஜன் உயிர்குடித்த திருவுடைக் காளி கோடியம்மா..
வக்ரன் ஆவி அழித்தொ ழித்த வக்ரகாளி வாடியம்மா!..

பஞ்சம் பகையை மாய்த்திட வேணும் மங்கல காளி மாரியம்மா..
தஞ்சம் என்று நாடிவந்தோம் நல்லருள் புரிவாய் நாடியம்மா!..


முண்டமாலை அணிந்தவளே சமயபுரத்து மகமாயி..
தண்டங்களின் தலைகளை அறுக்க எழுந்து வாடி மகமாயி!..

பெண்டு பிள்ளை காக்க வேணும் விரைந்து வாடி மகமாயி..
அண்டியுன்னைச் சரண் அடைந்தோம் சமயபுரத்து மகமாயி!..


வக்ர காளியே உக்ர காளியே வந்தருள் புரிவாய் மகமாயி..
பத்ர காளியே ருத்ர காளியே பார்த்தருள் புரிவாய் மகமாயி!..

எலுமிச்சை மாலைக்குள்ளே நின்றருள் புரிவாய் மகமாயி..
மடிப்பிச்சை தந்தருள்வாய் புன்னை வனத்து மகமாயி!..
***

எலுமிச்சம் பழத்தில் நின்று 
அம்பிகை அனைவருக்கும் நல்லருள் புரிவாளாக!..

ஓம் சக்தி ஓம்..
***

16 கருத்துகள்:

 1. எலுமிச்சைகனியின் மகிமைகளையும், அன்னையின் அருளைப் பற்றியும் அழகாய் சொன்னீர்கள்.
  பாடல் அருமை, படங்கள் அழகு.
  அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன் அருமையான பதிவுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்..
   தங்களது வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. எலுமிச்சை பற்றிய ஒரு சிறப்புப்பாடமே எடுத்து விட்டீர்கள் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. எலுமிச்சையின் ஆன்மீக மற்றும் அறிவியல் சக்தியை உணர்ந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அன்பின் ஜி
  எழுமிச்சையில் எவ்வளவு விடயங்கள் பிரமிப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. எலுமிச்சையின் மகத்துவம் ஆன்மீகமும், அறிவியலும் கலந்து கட்டி சுவைக்கிறது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களில் மிகப்பெரிய ஆரோக்கிய ரகசியமே இருந்திருக்கிறது. நாம் தான் அவற்றை ஓரங்கட்டி விட்டு ரசாயனங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
  எலுமிச்சையைப் பற்றிய செய்திகள் மிகவும் உப்யோகரமானவை.
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   ஒரு தலைமுறையினர் இயற்கை என்றால் என்னவென்று அறியாதவர்களாக ஆகிவிட்டனர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. எலுமிச்சம் பழத்தின் பெருமைகள் தான் எத்தனை எத்தனை... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. எலுமிச்சைப் பழத்தின் பெருமைகளை அறியத் தந்தீர்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு