நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016

ஸ்ரீ பரமஹம்ஸர்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரஹம்ஸரின் 
நினைவு நாள் - இன்று..


எல்லா மனிதர்களிடமும் கடவுள் இருக்கின்றார்.. 
ஆனால், கடவுளிடத்தில் தான் எல்லா மனிதர்களும் இல்லை.. 
இதுவே மனிதரின் துன்பங்களுக்குக் காரணம்..
*** 

வங்காளத்தின் காமர்புகூர் எனும் கிராமத்தில் க்ஷூதிராம் - சந்த்ரமணி தேவி தம்பதியர்க்கு 1836 பிப்ரவரி 18 அன்று - நான்காவது மகனாகத் தோன்றியவர்..

கதாதரர் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர் - பெற்றோர்..

கதாதரர் - சிறுவயதிலேயே இறை நாட்டம் மிக்கவராக இருந்தார்..

பள்ளிப் படிப்பில் கொஞ்சமும் விருப்பம் இல்லை..
அதிலும் கணக்குப் பாடம் என்றால் அடியோடு பிடிக்காது..

பஜனைப் பாடல்களைப் பாடுவதிலும் கடவுள் சித்திரங்களைத் தீட்டுவதிலும் களிமண் கொண்டு சிலைகளைச் செய்வதிலும் ஆர்வம் மிகுத்திருந்தது..

மூத்த சகோதரர் ராம்குமார் - கல்கத்தாவில் தொடங்கிய பள்ளிக்கு - கதாதரரை அழைத்துச் சென்றார்..

அப்போது அவருக்கு வயது பதினேழு..
ராம்குமார் - கல்வி போதித்த போதிலும் அங்குமிங்குமாக ஆலய பூஜைகளையும் செய்து வந்தார்..

அவரது பூஜை கைங்கர்யங்களுக்கு கதாதரர் துணையாக இருந்தார்..

1855 ஆம் ஆண்டு - கல்கத்தாவில் ராணி ராசமணி என்பவர் எழுப்பிய காளி கோயிலில் பணிபுரியும் வாய்ப்பு ராம்குமாருக்குக் கிடைத்தது..

அடுத்த சில மாதங்களுக்குள் - ராம்குமார் எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினார்..

ஆலயத்தின் பூஜை நிகழ்வுகள் முழுவதையும் கதாதரர் ஏற்கும்படியானது..


கடவுள் எப்போதுக் கொண்டிருக்கின்றார்!.. 
என்ற உணர்வு வந்துவிட்டால் 
பாவம் செய்யும் எண்ணம் மறைந்து போகும்.. 
***  

நாளடைவில் - அலங்கார ஆராதனைகளையும் மீறியதாக தேவியின் தரிசனத்திற்கு ஏங்கினார் கதாதரர்...

ஸ்ரீ பவதாரிணி எனப்பட்ட மகாகாளி தேவியிடம் மனமார்ந்த அன்பு கொண்டு சகஜமாக பேசிப் பழக ஆரம்பித்தார்..

பூஜை வேளைகளில் - நேரில் வந்து நிவேத்யங்களை ஏற்றுக்கொண்டு அருள் புரியும்படிக்கு மன்றாடினார்..

இரவுப் பொழுதில் - கோயிலுக்கு அடுத்திருந்த வனத்தினுள் நுழைந்து தவம் இயற்றலானார்..

இந்தளவில் அன்னையைப் பிரார்த்தித்தும் அருள் வழங்க முன்வராததை எண்ணி மிக்க வருத்தமுற்ற கதாதரர் -

ஒருநாள் மதிய வேளையில் - அன்னையின் திருக்கரத்திலிருந்த வாளைக் கொண்டு தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றார்..

அவ்வேளையில் அம்பிகையாகிய பவதாரணி - அவர் முன்பாக பிரசன்னமாகி
அன்ன நிவேத்யங்களை ஏற்றுக் கொண்டு அருள் பொழிந்தாள்..

அதன்பிறகு - அவரது நடை உடை பாவனைகள் மாறிப் போயின...


படகு தண்ணீரில் இருக்கலாம்.. 
ஆனால், தண்ணீர் படகினுள் இருத்தலாகாது..
அதுபோலத்தான் இன்ப துன்பங்களும்..
*** 

அன்னைக்கு அமுதூட்டி அவளுடன் பேசிக் களிப்பதே நித்ய வழக்கமாயிற்று..

இதையெல்லாம் கண்ணுற்ற - கோயில் நிர்வாகத்தினர் கதாதரரது தாயிடம் முறையிட்டனர்..

அவருக்கு பித்து பிடித்து விட்டதாகப் பேசிக் கொண்டார்கள்..

கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும்!.. - என்று பேசிக் கொண்டார்கள்..

அதன்படி அவரது தாயாரும் தன் மகனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடும்போது,

அம்பிகையின் அருளால் - காமர்புகூரை அடுத்திருந்த ஜயராம்வாடி எனும் கிராமத்தில் இருந்த ஐந்து வயது சிறுமி அடையாளம் காட்டப்பட்டாள்..

சாரதாமணி!..

அவரே - கதாதரரின் வாழ்க்கைத் துணைவியானாள்..

ஆனால், உலக இயல்பினை மீறியதாக,
கதாதரரின் - தாயாகவும் வழிபடும் தேவியாகவும் ஆனார் - சாரதா தேவியார்..


மனதைத் தூய்மையாக்கும் 
ஞானம் தான் உண்மையானது.. 
மற்றதெல்லாம் வெறும் ஆரவாரமே..    
***

சாரதா தேவியாரை - அம்பிகையாகப் பாவித்து வழிபாடு செய்வது கதாதரின் வழக்கமாயிற்று..

தொடர்ந்த இறை தேடலில் -
மகாபைரவி பிராம்மணி எனும் அம்மையாரிடம் தாந்த்ரீக வழிபாடுகளை அறிந்து கொண்டு - அருள் நிலை எய்தித் திகழ்ந்தார்..

தோத்தாபுரி எனும் சாதுவிடம் வேதாந்தங்களைக் கற்றுணர்ந்த பரமஹம்ஸர் ஆறு மாத காலம் ஆழ்நிலை தியானத்திலிருந்தார்...

ஆழ்நிலை தியானத்தின் போது கபாலம் திறந்து கொள்ள பல்வேறு தெய்வ மூர்த்தங்களைக் கண்டு தரிசித்ததாக பின்னாளில் ஸ்வாமிகள் கூறியுள்ளார்..


ஸ்ரீ ராம தரிசனத்திற்காக ஆழ்ந்தபோது ஸ்ரீ ஆஞ்சநேயராக மாறியதாகவும்

ஸ்ரீ கிருஷ்ண தரிசனத்திற்காக ஆழ்ந்தபோது ஸ்ரீ ராதையாக மாறியதாகவும்

- ஸ்ரீ பரமஹம்ஸர் குறித்தருள்கின்றார்..

ஸ்ரீ ஆஞ்சநேய பாவனையில் தமக்கு வால் முளைத்தது என்றும்
ஸ்ரீ ராதா பாவனையில் பெண்மையின் மேனியழகு கிளர்ந்தெழுந்ததாகவும்
ஸ்வாமிகள் விவரிக்கின்றார்..


பொம்மைகளை வைத்து விளையாடும் 
குழந்தைக்கு விளையாட்டு சலித்துப் போனதும் 
தான் தாயின் நினைவு வருகின்றது.. 
அதுபோலத்தான் வாழ்க்கையும்..  
***  

பரமஹம்ஸரின் ஞானநிலையை உணர்ந்த மக்கள் அவரது உபதேசங்களைக் கேட்பதற்குத் திரண்டனர்..

அப்படித் திரண்டவர்களுள் ஒருவர் தான் நரேந்திரநாத்..

இறை தேடலில் இருந்த நரேந்திரன் - பரமஹம்ஸரிடம்,

நீங்கள் கடவுளைக் கண்டிருக்கின்றீர்களா?.. - என்று வினவினார்..

கடவுளையே உனக்குக் காட்டுவேன்!.. - என்று பதிலுரைத்தார் பரமஹம்ஸர்..

அதைத் தொடர்ந்த ஆத்ம தேடலில் - நரேந்திர நாத் புதிய வடிவம் பெற்றார்...


அவ்வடிவம் தான் - விவேகானந்தர்!..

ஆன்மீக தாகங்கொண்டோர்களுக்கெல்லாம் ஞான ஊற்றாகத் திகழ்ந்தனர் -
ஸ்ரீ பரமஹம்ஸரும் ஸ்வாமி விவேகானந்தரும்!..

காலம் விரைவாக ஓடியது...

அருளமுதை வாரி வழங்கிய வள்ளலாகிய ஸ்ரீ பரமஹம்ஸர் உடல் நலங்குன்றினார்..

தொண்டையில் புண் ஏற்பட்டு - அது புற்று நோய் என்றறியப்பட்டது..

சீடர்களின் வற்புறுத்தலை ஏற்றுக் கொண்டார் ஸ்ரீ பரமஹம்ஸர்..
ஆறேழு மாதங்கள் கடந்த நிலையில் சிகிச்சை பயனின்றிப் போனது..

ஸ்ரீ பரமஹம்ஸர் 1886 ஆகஸ்ட் 16 அன்று மகா சமாதி எய்தினார்..


உள்ளத்தை முதலில் தூயதாக்கி 
அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை செய்..
வெறும் சங்க நாதத்தைக் 
கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை..    
***   

ஸ்வாமிகளின் திவ்ய வரலாற்றினை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தினர் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்..

நாற்பதாண்டுகளுக்கு முன்பே
அந்நூலை வாசித்து அதனுள் ஆழ்ந்தது - நான் பெற்ற பேறு..

ஸ்ரீ பரமஹம்ஸர் அருளிய சின்னஞ்சிறு கதைகளில் மிகுந்த விருப்பம் எனக்குண்டு...

ஸ்வாமிகளின் அருளாசியை மனதில் கொண்டு -
தியானப் பயிற்சியில் ஆழ்வதென்பது நம்மை மேல் நிலைக்கு இட்டுச் செல்லும்..

இதனை - பலமுறை அனுபவித்திருக்கின்றேன்...


உனது வழிபாடு ஒருநாளும்
பயன்படாமல் போவதில்லை..     
***   

-: ஸ்வாமிகளின் அருள் வாக்கு :-

கல்யாண விருந்தில் 
அன்ன வகைகள் குழம்பு பரிமாறும்போது,
பேச்சும் இரைச்சலுமாக இருக்கும் .. 

ஆனால், 
விருந்தில் கடைசியாக பாயாசம் பரிமாறப்படும்போது 
எல்லாவித இரைச்சலும் அடங்கி - 
பாயசம் உறிஞ்சும் ஒலி மட்டுமே கேட்கும்..

அவ்விதமே - 
ஆன்மீக சாதகத்தின் தொடக்க வேளையும்..
சாதகன் பக்குவம் அடையும் போது - 
எல்லாம் அடங்கி அமைதியாகி விடும்..
***     

அத்தகைய நிலையை 
நாம் என்றைக்கு எய்துவோமோ!..

குரு சரணம்..
குருவே சரணம்!.. 
***

7 கருத்துகள்:

 1. மற்ற பதிவுகளிலிருந்து வித்தியாசமான பதிவு. சைவ சித்தாந்தத்தை ஆழ்ந்து படிக்கும்போதும், மேம்போக்காகப் படிக்கும்போதும் வேறுபாடுகளை உணரமுடியும். அவ்வாறே பரமஹம்சரைப் பற்றி ஈடுபாட்டோடு படிக்கும்போது கிடைக்கும் வித்தியாசமான மனவுணர்வும், நிம்மதியும் எல்லையற்றது.வித்தியாசமானது. மனதிற்கு தனியொரு நிலையிலான அமைதி தந்த தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஜி
  ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வரலாறை விரிவாக அறியத்த தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. அருமையான பகிர்வு. நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 4. ராமகிருஷ்ணப் பரமஹம்ஸரின் கதையை இன்னுமொரு தரம் ரிவைஸ் செய்தேன் நன்றி

  பதிலளிநீக்கு
 5. மிக மிக அருமையான பதிவு! அதுவும் பெரிய மஹானைப் பற்றி உங்கள் தமிழில், உங்கள் நடையில் படித்தது மிக மிக வித்தியாசமான ஒரு அனுபவம் எனலாம் ஐயா. மிக்க நன்றி பகிர்விற்கு

  பதிலளிநீக்கு