நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

கயிலாய தரிசனம் 1

செல்வி!.. தாமரை கையைப் பிடித்து அழைத்து வா.. கூட்டம் நெரிசலா இருக்கு!.. தாமரை நீயும் கவனமா வாம்மா!..

சரிங்க.. அத்தான்!..

ஏங்க.. நீங்க காலைல.. வந்தீங்களே... அப்போ இவ்வளவு கூட்டம் இருந்ததா?..

சரியாப் போச்சு!... பூசப் படித்துறையில கால் வைக்க முடியலே... அமாவாசை தர்ப்பணத்துக்கு வந்தவங்க பாதிப்பேர் இன்னேரம் வீட்டுக்குப் போயிருப்பாங்க!.. அதான் கூட்டம் கொஞ்சம் குறைவா இருக்கு..

ஏன்.. அத்தான்!... அமாவாசை தர்ப்பணம்..ன்னா திருவையாத்துல மட்டும் ஏன் இவ்வளவு கூட்டங் கூடுது?..

திருவையாறு பூசப் படித்துறை
காசிக்கு சமமான ஆறு ஸ்தலங்கள்..ல திருவையாறும் ஒன்னு... அதுவுமில்லாம.. அப்பர் ஸ்வாமிகளுக்கு கயிலாய தரிசனம் கிடைத்ததும் இங்கே தான்!.. அதனால தான் இங்கே காவிரியில முழுகி தர்ப்பணம் செய்றதை புண்ணியமா நினைக்கிறாங்க!..

என்னென்ன தலங்கள்..ன்னு சொல்லுங்களேன்!..

ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரி மாயூரம் அர்ஜூனம்
சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்ரே ஸமான ஷட்..

அப்படின்னு ஸ்லோகம்..

திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாயாவனம், ஸ்ரீ வாஞ்சியம் - ஆக, ஆறு ஸ்தலங்கள்..

அத்தான்.. நல்ல விவரமாத் தான் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க!..

எல்லாம் அங்கே இங்கேன்னு படிச்சதுதான்.. 

ஏங்க.. பூசப் படித்துறைக்குப் போய்ட்டு வரலாமா?..

கூட்டம் ஏகத்துக்கும் இருக்கே செல்வி!... தாமரையை வேற அழைச்சிக்கிட்டு கஷ்டப்படுத்தனுமா?..

அக்கா.. எனக்கொன்னும் பிரச்னை இல்லை!.. வாங்க போகலாம்!..

இதுதாம்மா பூசப் படித்துறை.. புஷ்ய மண்டபம்..ன்னும் சொல்லுவாங்க.. எல்லா திருவிழா சமயத்திலயும் ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் இந்த மண்டபத்தில எழுந்தருள்வாங்க... இந்த பக்கத்தில இருக்கிற மண்டபங்கள்...ல தான் திதி கொடுக்கிறது தர்ப்பணம் பண்றதெல்லாம் நடக்கும்..

ஓ!...

அப்படியே மெதுவா இறங்கி காவிரிய கும்பிட்டுட்டு வாங்க!... இன்னும் ஆடிப் பெருக்கு விசேஷம் நடந்துகிட்டு தான் இருக்கு.. அங்க பாரு.. அந்த பெரியம்மா மஞ்சள் குங்குமம் தர்றாங்க.. நமஸ்காரம் பண்ணிட்டு வாங்கிக்கிட்டு வாங்க!..

தீர்க்க சுமங்கலியா பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழ வேணும்!..

ஏங்க... காப்பரிசி தர்றாங்க.. உங்களுக்கும் வாங்கி வரவா?..

என்னென்ன கொடுக்கிறாங்களோ.. அதெல்லாம் வாங்கிக்கிட்டு வாங்க!..

அக்கா.. அந்த பெரியம்மா மஞ்சள் சரடு கட்டி விட்டாங்க.. எவ்வளவு சந்தோஷமா இருக்கு...

இந்த சந்தோஷந்தான் திருவிழா.. ஆனந்தப் பெருக்கு தான் ஆடிப் பெருக்கு!..

அந்த காலத்தில நாங்கள்..லாம் சப்பரம் கட்டி இழுத்துக்கிட்டு ஓடுவோம்.. இப்போ அதெல்லாம் யாரு செய்றாங்க?!...

ஏன் செய்யாம?.. அதோ பாருங்க .. சின்ன பசங்க.. கடகட..ன்னு சப்பரம் இழுத்துக்கிட்டு வர்றானுங்க.. இன்னும் கிராமத்து ஜனங்க.. மாறாமத் தான் இருக்காங்க!...

சரி... வாங்க.. கோயிலுக்கு உள்ளே சீக்கிரம் போயிடனும்... அப்பதான் சாமி பார்க்க வசதியா இருக்கும்!...

தாமரை... அக்கா கையை பிடிச்சுக்கம்மா!...

இதுதான் தெற்கு கோபுர வாசல்.. யமனை விரட்டிய ஆட்கொண்டார் சந்நிதி.. இவரை கும்பிட்டுக்கோங்க... யமபயம் இருக்காது..எதிர்பாராத அடிதடி, விபத்து இதெல்லாம் ஏற்படாது!...

இதென்ன அத்தான்.. கேணியில இருந்து புகை வருது?..

அது கேணி இல்லேம்மா.. குங்கிலியக் குண்டம்!..

அப்படின்னா?..

திருக்கடவூர்ல கலயன்.. ன்னு ஒரு சிவபக்தர் வாழ்ந்தார்.. அவருக்கு சிவாலயங்கள்..ல குங்கிலிய தூபமிடுவது இஷ்டமான ஒன்று.. அவர் ஏற்படுத்திய குண்டம் தான் இது.. 

அவர் தனது சிவப்பணியினால் சிறப்பு பெற்றவர்.. குங்கிலியக் கலய நாயனார்.. அப்படின்னு சிறப்பு.. அவர் ஏற்றி வைத்த குண்டம் காலகாலமா புகைந்து கொண்டிருக்கின்றது..

ஏங்க.. மழைக் காலங்கள்..லயும் புகையுமா?..

மேலே ஓரளவுக்கு பந்தல் போட்டு இருப்பார்கள்!.. அதனால மழையினால பாதிப்பு இருக்காது.. குங்கிலியம் போட்டுட்டு கோயிலுக்குள்ளே போவோம்!..

தாமரை.. இப்போ நாம இருப்பது நான்காம் பிரகாரம்.. இந்த கோயிலுக்கு வெளி வீதியைச் சேர்த்து ஐந்து பிரகாரம்.. இதற்குள்ளே மூன்று கோயில்கள்.. மூலஸ்தானம்.. வடகயிலாயம்.. தென் கயிலாயம்..

அதோ தெரியுதே.. அந்தக் கோயில் தான் நாவுக்கரசருக்கு தரிசனம் கிடைத்த தென் கயிலாயம்.. வடக்கு பிரகாரத்தில வட கயிலாயம்..ன்னு ஒரு கோயில்.. ராஜராஜ சோழனுடைய மனைவியான உலகமாதேவி எடுத்து கட்டியிருக்காங்க!..

தென்கயிலாயம் தரிசனம் செய்யத் தான் வரிசை கட்டியிருக்கு.. மூலஸ்தானம் எல்லாம் கூட்ட நெரிசல் குறைந்தால் தான் பார்க்க முடியும்..


திருநாவுக்கரசருக்கு கயிலாய தரிசனம் என்பது என்ன வரலாறு அத்தான்?..

காளஹஸ்தி தரிசனம் முடிந்ததும் அங்கேயிருந்து திருக்கோகர்ணத்தைத் தரிசித்தார்.. அப்படியே வடநாட்டிலுள்ள தலங்களையும் தரிசிக்க ஆவலானது.. அத்தோடு கயிலாய மாமலையையும் தரிசிக்க முடிவெடுத்தார்..

வயதான காலத்தில் உடன் வந்தவர்களை மறுத்து விட்டு ஸ்வாமிகள் தன்னந்தனியராக நடந்தார்...

..... ..... .....

கயிலாய மாமலையில் ஏறும் போது மிகவும் சிரமத்துக்கு ஆளானார்.. கால்கள் தேய்ந்து போயின.. கைகளை ஊன்றி தவழ்ந்து சென்றார்.. முழங்கால்களும் தேய்ந்து முறிந்தன.. அதன்பிறகு ஊர்ந்தபடியே மலைச் சரிவில் பயணித்தார்..

என்ன கஷ்டம்!.. என்ன கஷ்டம்!.. இருந்தாலும் வயதான பெரியவருக்கு தான் எவ்வளவு தைரியம்!..

தாமரை.. ஏம்மா.. கண்ணு கலங்குது!..

இதோ இருக்கிற தஞ்சாவூர்..ல இருந்து திருவையாறு வர்றதுக்குள்ள.. நாம நொந்து நூலாகிப் போறோம்!.. கடுமையான பனிமலையில தன்னந்தனியா வயசான காலத்தில அதுவும் ஊர்ந்தபடியே போனாங்களே... எல்லாம் நமக்காகத் தானே.. அவ்வளவு கஷ்டத்தையும் ஏத்துக்கிட்டாங்க...

தாமரை.. அப்பர் ஸ்வாமிகளுக்கு முன்னே.. காரைக்காலம்மையாரும் இப்படித் தான் கயிலாய மலையில கஷ்டப்பட்டு தலையை ஊன்றிப் போனாங்க!.

ஆமாம் அக்கா!.. அவங்க வரலாற்றைப் படிக்கிறப்பவும் கேக்கிறப்பவும் கண்ணீர் வருமே!..

அதுக்கு அப்புறம்.. அப்பர் ஸ்வாமிகள்.. மானசரோருவ ஏரிக் கரைக்கு வந்துட்டாங்க.. அதுக்கு மேலே அவரால் நகரக்கூட முடியலே.. இருந்தாலும் மனமுருகிப் பதிகம் பாடினார் - ஸ்வாமிகள்..

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி  
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி!..

அப்போ.. ஈஸ்வரன் துறவியா உருமாறி வந்தார்..

ஐயா.. உங்க உடம்பு இதுக்கு மேலே போறதுக்கு ஒத்துக்காது.. திரும்பிப் போய்டுங்க!. - அப்படின்னு ஒரு வெடிகுண்டைப் போட்டார்..

அதெல்லாம் முடியாது.. கயிலை தரிசனம் செய்யாம இங்கேருந்து போக மாட்டேன்...ன்னு விடாப்பிடியா இருந்தார்...

பக்தனோட மன உறுதி பரமனுக்கு சந்தோஷமா இருந்தது.. நீ வந்து என்ன தரிசனம் செய்றது.. நானே வந்து உனக்கு தரிசனம் தர்றேன்.. அப்படின்னு முடிவு செஞ்சார் - ஈஸ்வரன்....

ஐயா.. இதோ இந்த தடாகத்தில மூழ்குங்க.. நீங்க நினைச்ச மாதிரி சிவ தரிசனம் காணலாம்.. அப்படின்னு சொன்னார்..

அதைக் கேட்ட அப்பர் ஸ்வாமியும் அந்த ஏரியில இறங்கி தண்ணீரில் மூழ்கினார்.. அப்பர் ஸ்வாமி எழுந்தபோது காட்சி கொடுத்த இடம் தான் திருவையாறு..

சிவனும் சக்தியும் இந்த உலகத்தில உள்ள உயிர்த் திரளா ஆனந்தத் திருக்காட்சி கொடுத்தாங்க.. யானையாக, பசுவாக, மானாக, கிளியாக புறாவாக, கோழியாக, பன்றியாக - இப்படி சகல உயிர்கள்..லயும் சிவ சக்தி தரிசனம் கண்டார் அப்பர் ஸ்வாமிகள்..

அதனால தான் கண்டறியாதன கண்டேன்!.. ந்னு பாடி உருகினார்..

அந்தத் திருப்பதிகத்தில இருந்து ரெண்டு பாட்டைத் தான் பாடுங்களேன்..

காதல் மடப்பிடியோடும் களிறு
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ்சுவடு படாமல் ஐயாற டைகின்றபோது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..


பேடையொடாடிச் சேவல்
பிறையிளங் கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிள, பூங்குயிலாலும் ஐயாறடைகின்ற போது
சிறையிளம் பேடையொடாடிச் சேவல் வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..


பேடையொடாடும் நாரை
பேடை மயிலொடுங் கூடி
ஏடு மதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடிக்
காடொடு நாடுமலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்றபோது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..

ஆகா.. அற்புதம்.. அருமை!.. நேற்று அக்கா பாட்டு..   இன்றைக்கு அத்தான் பாட்டு!..

தாமரை.. அதோ.. ரிஷப வாகனம்.. சாமி புறப்பாடு ஆயிற்று!.. கயிலாய தரிசனம்.. நன்றி - உழவார திருப்பணிக்குழு
எம்பெருமானே!.. ஐயாறப்பா.. தாயே.. அறம் வளர்த்த நாயகி!.. 
எல்லாரையும் நல்லா வைக்கணும் சாமி!..

ஐயாறு அகலாத செம்பொற்சோதீ!..
ஐயாறா.. ஐயாறா.. சரணம். சரணம்!..

காவாய் கனகத் திரளே போற்றி..
கயிலை மலையானே போற்றி.. போற்றி!..


தொடர்ந்து பெரு முழக்கமாக சிவகண வாத்தியங்கள் அதிர்கின்றன..

ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியின் திருமுன்பாக அப்பர் பெருமான்!.

ஏக காலத்தில் மகா தீபாராதனை நிகழ்கின்றது... 

அடியார்கள் கண்களில் எல்லாம் ஆனந்தக் கண்ணீர்..

தாமரையும் செல்வியும் செந்தில் நாதனும் மெய்மறந்து நிற்கின்றனர்..

அப்பர் கண்ட கயிலாய தரிசனம் அடியவர்களுக்கும் ஆயிற்று..

அந்த அளவில் - அடியவர் குழாம் ஐயாறு அகலாத செம்பொற்சோதியின் திருமூலஸ்தானத்தை நோக்கி நகர்கின்றது..

பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண்ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே!.. (4/38)
-: அப்பர் ஸ்வாமிகள் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  தங்களது கயிலாய தரிசனம் அழதிய புகைப்படங்களுடன் விவரங்களும் நன்று வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அழகுப் படங்களும் விளக்கமும் அருமை ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அழகான படங்களுடன் அற்புதமான கட்டுரை ஐயா...
  ரசித்துப் படிக்க வைக்கும் எழுத்து.... அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று மாதர்பிறைக்கண்ணியானை... அப்பாடலின் வரும் அடிகள் அண்மையில் ஓவியங்களாக திருவையாறு கோயிலில் தீட்டப்பட்டுள்ளதைக் கண்டேன். படங்களும் விளக்கமும் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...

   மாதர்பிறைக் கண்ணியானை - எனும் திருப்பாடலைக் கொண்டு பல பதிவுகளை எழுதலாம்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. வணக்கம்,

  குங்கிலிய குண்டம் விஷப்பூச்சிகள் கடியில் இருந்து காப்பாற்றும் என்று சொல்வார்கள். தங்கள் விளக்கம் அருமை.

  பூசப் படித்துறை ஆம் காசிக்கு சமம் என அறியும் போது வியப்பே,,,

  கைலாய காட்சி அருமை அருமை,, நாவுக்கரசரின் இப்பாடல் வரிகள் நான் மிக விரும்பி வாசிப்பேன்.

  நாரை படம் வியந்தேன். அவை அவை அதன் இணையோடு,, காண்பவை எல்லாம் மகிழ்ச்சியாக,,,

  நல்ல பகிர்வு நன்றி நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...

   வீட்டில் குங்கிலிய தூபமிட்டாலும் கொசுக்கள் முதலான பூச்சிகளின் தொல்லை இருக்காது.. பல்லிகள் ஓடிப் போகும்..

   பற்றற்று நின்ற திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு -

   தாயும் தந்தையும் தாமே!.. - என்று உணர்த்தியதே கயிலாய தரிசனம்..

   சிவசக்தி ஐக்கியமாக - ஈசனும் அம்பிகையும் திருக்காட்சி நல்கினர் என்பது உணரத்தக்கது..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. மிகவும் சிறப்பான தகவல்கள். படங்களும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. தங்களின் அழகிய வசீகரமான தமிழ் அன்னையின் வழி கைலாய தரிசனம்! புகைப்படங்கள் அழகு. மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கு நல்வரவு..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..