நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

பொங்கி வந்த பொன்னி

நான் காவிரி!..

..... ..... .....!?

பொன்னி என்றும் அழைப்பார்கள் என்னை!..

உறங்கிக் கிடந்த நான் - கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டேன்...

என்னை நினைவில்லையா!... நடந்தாய் வாழி!.. - என்று, இளங்கோவடிகள் புகழ்ந்துரைத்தாரே...

திக்கென்றிருந்தது....


தாயே!.. நீங்களா... நாடெங்கும் ஓடி நல்லதெல்லாம் வளர்த்த தாங்களா!...

மெல்லப் புன்னகைத்தாள் - காவேரி!..

என்னையும் நாடி வந்த நற்பொருளே.. வருக.. வருக.. இவ்விடத்தில் அமர்க.. தாயே!..

தூக்கக் கலக்கத்திலும் கரங்கூப்பி வணங்கினேன்..

நன்றி.. மிக்க நன்றி!..

நானல்லவோ தங்களுக்கு நன்றி கூற வேண்டும்.. நாளெல்லாம் நானிலம் நயந்து நிற்பது தங்களை அல்லவோ!.. நீரின்றி அமையாது உலகு.. என்ற வள்ளுவப் பெருமானின் வாக்கு தங்களுக்கே உரியதன்றோ!..

மீண்டும் புன்னகைத்தாள் பொன்னி!..

அதெல்லாம் அந்தக் காலம்.. இன்று நானே - தங்களை நயந்து நிற்க வேண்டிய சூழ்நிலையாயிற்று!..

மாமரத்தின் கீழே கிடந்திருந்த கல்லில் அமர்ந்திருந்தாள் அன்னை..

ஆடி மாதத்தின் பௌர்ணமி கழிந்து இரண்டு நாட்களாகின்றன..

சற்றே உச்சியில் இருந்தது - கிருஷ்ண பட்சம் எனும் தேய்பிறை நிலவு..

மாமரக்கிளையின் ஊடாக சந்திரனின் பொன்னிறக் கதிர்கள் திட்டு திட்டாக தரையில் படிந்திருந்தன..

காற்றில் அசையும் இலைகளின் சலனத்தால் சந்திரக் கதிர்கள் பொன்னியின் மேனியில் சதிராடிக் கொண்டிருந்தன..

வியந்து நோக்குவது என்ன?..

தாங்கள் எங்களைக் காத்தளிக்கும் தாய்!.. ஆனாலும் நித்ய கன்னி!.. எனினும் அன்பினொடு ஒருமையில் பொன்னி என்று அழைப்பதில் தவறொன்றும் இல்லையே!..

வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி!..

என்றல்லவா சிலம்பு என்னை வாழ்த்தியது.. ஒருமையில் என்னை அழைத்த போதும் கடுமை கொள்ளேன் யான்!..

ஒரு ராஜகுமாரியைப் போல சர்வ அலங்கார பூஷிதையாகத் தான் - தம்மை இதுவரைக்கும் காட்சிப்படுத்தி இருக்கின்றார்கள்.. அகத்தியர் திரைப்படத்தில் கூட நாங்கள் - அப்படித்தான் அழகின் உருவமாகக் கண்டிருக்கின்றோம்!. ஆனால் - இன்றைக்கு திருமேனி பொலிவிழந்து நிற்பதுவும் ஏனம்மா!?..

அகத்தியர் திரைப்படத்திலா!.. அது என்ன விஷயம்?..

ஆமாம்.. நாற்பது வருஷத்துக்கு முன்னால் வந்த திரைப்படம் அது.. அகத்தியர் வரலாறு கூறும் போது தங்களையும் தங்கள் துடுக்குத் தனத்தையும் கூறியிருப்பார்கள்..

மீண்டும் பொன்னியிடம் மெலிதான புன்னகை...

அதெப்படி.. உங்களால் தமிழ் முனிவரான அகத்தியரை எதிர்த்து வாதாட முடிந்தது?. அதெல்லாம் நிஜம் தானா!...

தலைக்காவிரி
அது.. குடகு மலையில் பிறந்ததனால் விளைந்த குறும்புத்தனம்.. அதற்காகத் தான் - அகத்தியரின் கமண்டலத்துக்குள் சிறைப்பட்டுக் கிடந்தேனே!..

..... ..... .....

விநாயகர் காக்கை வடிவாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து விட - அவருடைய திருவடி தீட்சையினால் அல்லவோ - வாழ்வு கிடைத்தது!..

ஆனாலும் எங்கும் பரந்தோடி இல்லம் செழிக்க வைக்கும் பொன்னியை அடைத்து வைத்தது தவறு தானே!..

தவறு தான்!. ஆனாலும் அது தானே இன்றும் செய்யப்படுகின்றது.. சிறைப் படுத்துவதும் என்னைக் கறைப்படுத்துவதும் காலகாலமாகத் தொடர்கின்றது தானே!..

என்ன கஷ்டம் இது!..

அவர்கள் என்னை சிறைப்படுத்தினால் - நீங்கள் அதற்குச் சற்றும் குறையாமல் என்னைக் கறைப்படுத்துகின்றீர்கள்.. அதனால் அல்லவோ பொலிவிழந்தேன்!..

தவறுதான்.. ஆயினும் நான் ஒரு பிழையும் அறியேன்.. அம்மா!..

அதை நான் அறிவேன்.. ஆயினும் அதுதானே நிகழ்கின்றது இன்றைக்கும்!.. பல்லுயிர்த் திரளைப் பரிபாலிக்கும் என்னைப் பணி செய்ய விடாமல் தடுத்தார்களே.. அணை என்னும் பெயரால் அடைத்தார்களே!..

..... ..... .....

மீறியும் ஓடிவந்தேன் நான் தஞ்சமென தமிழகத்திற்கு.. ஆனால் - வஞ்சகர் தம் செயலால் வனப்பிழந்தவள் ஆனேன்.. தமிழகம் எனக்குத் தந்த வெகுமதியால் -   இன்றைக்கு அள்ளி அருந்தவும் அருகதையற்றுப் போனேன்..

..... ..... .....

காவிரியில் கலக்கும் கழிவு 
சாயப்பட்டறைகள் என்னும் மாயப்பட்டறைகள் செய்த கொடுஞ்செயலால் - என் மக்களைக் காக்கவும் இயலாதவள் ஆனேன்.. போதாக்குறைக்கு நாளெல்லாம் தோண்டித் தோண்டி மண்ணை அள்ளியதால் அழகு கெட்டுப் போனேன்.. ஆக்கம் அற்றுப் போனேன்.. 

..... ..... .....

பள்ளம் படுகுழிகளால் பரிதவித்துப் போனேன்.. உள்ளம் குமுறக் குமுற ஒரு மொழி பேசவும் வகையற்றுப் போனேன்.. 

..... ..... .....

ஆட்சியை - அரசைக் காப்பவள் நான்!.. என்று அன்றைக்குப் புகழ்ந்தார்கள்.. இன்றைக்கு இங்கு ஆளும் அரசே என்னைக் கைவிட்ட நிலையாயிற்று... ஊற்றுப் பெருக்கால் உலகூட்டுபவள்.. என்று எனக்குப் பெயர்.. இன்றைக்கு இருக்கும் பிள்ளைகளுக்கு ஊற்று என்றால் என்னவென்றே தெரியாது..

..... ..... .....

ஏரி குளம் என்று எல்லாவற்றையும் கெடுத்து அழித்து விட்டு - ஆற்றையும் அழிக்க முனைந்து விட்டீர்கள்... என்றைக்காவது ஒருநாள் திருந்துவீர்கள் என்று தான் நானும் இருந்தேன்.. ஆனாலும்...

..... ..... .....


சாக்கடைகளைத் திறந்து விட்டு குப்பைக் கூளங்களைக் கொட்டி - குருவி குடிக்கவும் வகையற்றதாகச் செய்து விட்டீர்கள்.. நாகரிகம் என்று உங்களுக்கு நீங்களே குழி வெட்டிக் கொண்டீர்கள்...

வான் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரி - கலங்கினாள்...

அவளுடைய நிலை கண்டு என்மனமும் நடுங்கியது...

பொன்னென நெல் குவித்ததால் மட்டும் என் பேர் பொன்னியல்ல!.. அள்ளிக் குடித்தவர்களும் நீரில் ஆடிக் களித்தவர்களும் - காவிரியாள் கொண்டிருந்த மகத்துவத்தினால் பொன்னென மேனி அழகு கொண்டாடினர்.. ஆனால் -

..... ..... .....

காவிரியின் நீரைக் கையில் அள்ளிக் குடித்தாலும் கடும் நோய்கள் வந்துறும்!.. என மருத்துவர்களும் ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றார்கள்.. எனக்கு ஏன் இந்த இழிநிலை!.. எண்ணிப் பார்த்ததுண்டா நீங்கள்?..

..... ..... ..... 

எதற்காக நதிகளை எல்லாம் பெண்களாகக் கூறினார்கள்.. சிந்தித்ததுண்டா?.. பெண்ணால் தான் ஆவதுவும்.. அழிவதுவும்.. போற்றி வணங்கப்படவேண்டிய ஒன்று உண்டென்றால் அது பெண்மை தானே!.. பெண் இன்றி பூமிக்கு ஏது சிறப்பு!.. பூமியே பெண் வடிவம் தானே!..

உண்மை.. உண்மை!.. 

பெண் என்றால் பேயும் இரங்கும் என்றனர்.. ஆனால் நீங்கள் இரங்க வில்லையே!.. என்னையும் என் அழகையும் அலங்கோலம் செய்தீர்களே!..

என் கண்களில் நீர் திரண்டு வழிந்தது...

எனக்கு மட்டும் தான் இந்த நிலை என்றில்லை.. வைகை, பாலை, பெண்ணை, பொருணை, நொய்யல், பவானி - என, ஏனைய தோழியருக்கும் இதே கதி தானே!.. உங்களுக்கு என்ன கெடுதல் செய்தோம் நாங்கள்?.. 

..... ..... .....

முன்னோர்க்கும் முன்னோர் தொட்டு உங்கள் பிள்ளைகள் வரைக்கும் உணவூட்டினோம்.. ஆனால் - நாளை வரும் சந்ததியர்க்கு நாங்கள் ஏதும் நலம் செய்யமுடியாதபடிக்கு எங்களை சீரழித்து விட்டீர்களே?.. 

அடியார்களும் ஆழ்வார்களும் பாடிப் பரவிய பெருமையை சற்றே எண்ணி இருந்தாலும் - நதி மங்கையை பாசுபடுத்த மனம் வந்திருக்காது உங்களுக்கு!..

பொன்னி!.. கலங்கி நிற்கும் உன்னை ஏது சொல்லித் தேற்றுவேன் நான்!.. இப்போது கையறு நிலையில் இருக்கின்றனர் - நல்லவர்கள்.. நிலைமையை உணர்ந்த இளையோர்களும் விழிப்புணர்வு கொண்டு செயல்படுகின்றனர்.. நிச்சயம் ஆறு குளங்கள் சீரமைக்கப்படும்,.. பசுமை மீண்டும் மலரும்!..

அதற்காகத் தானே நானும் காத்திருக்கின்றேன்!.. எனக்கென ஒரு பிடி நீங்கள் அளித்தால் நான் உங்களுக்கென ஒரு படி அளிப்பேன்!.. 

இரத்த நாளங்களை அறுத்தெறிந்து விட்டு இன்புற்று வாழ்தலும் கூடுமோ!.. ஆறு குளங்களை அழித்து விட்டு அடுத்தொரு நல்வாழ்வினை நாடுதலும் ஆகுமோ?. பிழைகளை உணர்ந்தோம். எங்களை மன்னிக்க வேண்டும் தாயே!.

தலை வணங்கி நின்றேன்..

கல்லணை
இன்னும் சிறு பொழுதில் விடிந்து விடும்.. மங்கலகரமான ஆடிப் பெருக்கு!.. 
காவிரிக் கரையின் மக்களுக்கெல்லாம் தேனாகத் தித்திக்கும் நன்னாள்.

இறையறம் ,  மனையறம் - இவ்விரண்டிலும் ஆனந்தம் பொங்கிப் பெருக  நீர் வளமே அடிப்படை. 

உலகோர் தம் கையைச் சோற்றில் வைக்க வேண்டி,  
உழவோர் தம் கால்களைச் சேற்றில் வைக்கும் மாதம்!.

உழவர்கள் தங்கள் பணிகளைத் துவக்கும் - ஆடி மாதம்!..


வயற்காடு மட்டுமின்றி - வீட்டுத் தோட்டத்திலும் கொல்லைக் காட்டிலும் - அவரை, பாகல், சுரை, பீர்க்கு என தோட்டப் பயிர்களுக்கு விதையிடுவர். மகிழ்ச்சியுடன் விவசாய வேலைகளைத் தொடங்கும் மாதம்.. 


உண்மை.. உண்மை.. 
நிலம் செழிக்க நீர் வேண்டும்.
நீர் செழிக்க குன்றாத இயற்கை வளம் வேண்டும். 

இயற்கையை வாழும் வாழ்க்கையோடு  - பின்னிப் பிணைத்தனர் நம் முன்னோர். 

அத்துடன் நிற்காமல் - இயற்கையைப் பலவிதங்களில் போற்றி மகிழ்ந்தனர். 

அந்தப் பண்பாட்டின் அடையாளம் தான் ஆடிப் பெருக்கு!..

சோழ வளநாட்டில் எல்லா ஆறுகளும் விழாக்கோலம் கொள்ளும் நாள் ஆடிப் பதினெட்டு..

கரைபுரண்டு வரும் காவிரியின் கரைகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா - ஆடிப்பெருக்கு.


இல்லறம் ஏற்ற தம்பதிகள் பொங்கி வரும் காவிரியில் நீராடி, மங்கலப் பொருட்களைச் சமர்ப்பித்து வணங்குவர்.

நதியின் படித்துறைகளை சுத்தம் செய்து, அதிகாலையிலேயே நீராடி - தலை வாழையிலையில்  மஞ்சள் பிள்ளையாருடன் விளக்கேற்றி வைத்து -

காப்பரிசி, தாம்பூலம், மஞ்சள் குங்குமம், சந்தனம், மங்களச் சரடு, காதோலை கருகமணி, விளாம்பழம், நாவற்பழம், பேரிக்காய், வாழைப்பழம், எலுமிச்சங் கனி, நறுமலர்கள் - என எல்லா மங்கலப் பொருட்களையும் சமர்ப்பித்து தூப தீப கற்பூர ஆரத்தியுடன் உன்னை வணங்கி  மகிழ்கின்றோம்.

ஓடும் நீரில் மலர்களைத் தூவி தீபங்களை மிதக்க விட்டு -  

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி!.. 
வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக - எம்மை 
வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக!.. 

- என மனதார வேண்டிக் கொள்கின்றோம்.


மணமான இளம்பெண்கள் தாலிச்சரடை மாற்றி புதிதாக அணிந்து கொள்வதும்  
தம்பதிகள் - மணமாலைகளை ஓடும் நதியில் இட்டு, மங்கல வாழ்க்கைக்கு துணையிருக்க வேண்டிக் கொள்வதும்,

பெண்கள் - மூத்த சுமங்கலியர் தம் கைகளால் ஆராதிக்கப்பட்ட மஞ்சள் சரடினை அணிந்து கொள்வதும் அவர்கள் கையால் மஞ்சள் குங்குமம் பெற்றுக் கொள்வதும் ஆனந்த மயமான காட்சிகள்..  

ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கி, அன்பின் உறவுகளுடன் கூடிக் குதுகலித்து உள்ளம் பூரித்து மகிழ்வுறும் நன்னாள்.


இந்த சந்தோஷ தருணங்களே என்னை சங்கடங்களில் இருந்து மீட்டெடுக்கின்றன..

இந்த நல்ல நாளில் நீர்நிலைகளைப் பாதுகாப்போம் - என உறுதி கொள்ளுங்கள் மக்களே!..

காவிரி புன்னகைத்தாள்..


தங்கள் சொல்லைத் தலைமேற்கொள்கின்றேன் தாயே!..

தொண்டரடிப் பொடியாழ்வார் - அரங்கனைத் துதிக்கும் போது -

 '' கங்கையிற் புனிதமாய காவிரி!..''

- என தங்களைப் புகழ்ந்து பாடுகின்றார். 

இறைவனிடம் - வேண்டிக்கொள்வது, அருளும் பொருளும்  நிறைந்த ஆனந்த வாழ்வினையே!..

அத்தகைய ஆனந்த வாழ்வினுக்கு ஆதாரம் - நீர்வளம்!..

அதனால் தான்  - ''..தண்ணீரும் காவிரியே!..'' - என்கின்றார் ஒளவையார்.

அப்பரும் ஞானசம்பந்தரும் சுந்தரரும் சோழநாட்டின் திருத்தலங்களைப் பாடும் போது தங்களையும் சேர்த்தே சிறப்பித்துப் பாடினர்..   

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 
கண்டதோர் வைகை பொருணை நதி - என 
மேவிய ஆறுகள் பல ஓட 
திருமேனி செழித்த தமிழ் நாடு!..

- என்று முழங்கினார் மகாகவி பாரதியார்..


கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு!.. - என்பார் கவியரசர்..

கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்!.. - என்றார் கவிஞர் வாலி..

இன்னும் எத்தனை எத்தனையோ புலவர்களும் கவிஞர்களும் தங்களைப் புகழ்ந்தே பாடியிருக்கின்றனர்..

ஆக - தமிழையும் காவிரியையும் பிரித்து அறிதல் என்பதே கிடையாது.. இன்றைக்கு இப்படியிருந்தாலும் நாளை நல்ல பொழுதாக மலரும்..

எங்களுடைய குற்றங்களை எல்லாம் மன்னித்து அருளவேண்டும்.. தாயே!..

புது ஆற்றில் புதுவெள்ளம் பொங்கிவர வேண்டும் 
புது நாற்றும் பூங்காற்றில் அசைந்தாட வேண்டும்!.. 
இளம் பயிரின் முகம் பார்த்து வான் பொழிய வேண்டும் 
களம் நிறையும் கதிர்மணியால் ஊர் வாழ வேண்டும்!.. 

- என்றபடி, நானும் கவி உரைத்து வேண்டினேன்..

பொன்னியை வலம் வந்து திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன்..

அவளிடம் அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டேன்..

வாழ்க நலம்!.. - என்று புன்னகையுடன் வாழ்த்தினாள் பொன்னி..

அந்த அளவில் - ஒரு நீர்ச்சுழியாக மாறி எங்கும் கலந்து நின்றாள் - காவிரி!..

நான் விழித்துக் கொண்டேன்!..
* * *


அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்!..

ஈசன் அருள் பெற அறஞ்செய்ய வேண்டும்.
மனிதன் செய்ய வேண்டிய அறங்களுள் 
எல்லாம் மிகப் பெரியது - சிறந்தது 
இயற்கையைப் பாதுகாத்தல்!.. 

இயற்கையை நாம் பாதுகாத்தால் - 
இயற்கை நம்மையும்  நம் குலத்தையும் பாதுகாக்கும்!..
* * * 

22 கருத்துகள்:

  1. கனவில் வந்த பொன்னியிடம் அனைவருக்காக வேண்டுகோள், அருமை. நாங்களும் உங்களுடன் சேர்ந்து பொன்னியை வேண்டிக் கொள்கிறோம்.
    படங்கள் எல்லாம் அருமை.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. அருமையான கட்டுரை ஐயா
    இந்த நல்ல நாளில்நீர் நிலைகளைப் பாதுகாப்போம் என்று
    உறுதி ஏற்போம்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பொன்னி பொங்கி எழுவாள், காத்திருப்போம். தங்களது எழுத்து கும்பகோணத்தில் பள்ளி நாள்களில் நாங்கள் சப்பரம் கட்டிக்கொண்டு காவிரியாற்றுக்குச் சென்ற நாள்களை நினைவுபடுத்திவிட்டது. போட்டி போட்டுக்கொண்டு சப்பரத்தை வெவ்வேறு வண்ணங்களில் தயாரித்து, யார் முந்திக்கொண்டு போவது என்று தெருவை அடைத்துக்கொண்டு ஓடி காவிரிப்படித்துறையில் நின்ற நாள்கள் மனதை விட்டு அகலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையின் மலரும் நினைவுகளில் மகிழ்ச்சி வெள்ளம்.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. உரையாடல் ரசிக்கவும், மிகவும் வருத்தப்படவும் வைத்தது ஐயா... நீர்நிலைகளை பாதுகாப்பது நமது முக்கிய கடமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஒரு விழிப்புணர்வுப் பகிர்வு. சுமார் 48 வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு ஆடிப் பெருக்கு அன்று குதிரை வண்டியில் சென்றது நினைவுக்கு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      அன்றைய நகரங்களில் ஓடிய குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் - ஈடு இணையில்லாத சந்தோஷம் தான்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. பணப்பேய் பிடித்து அலையும் மனிதன்....................பசித்தால் பணத்தைத் தின்ன முடியாது எனபதை இன்னும் உணரவில்லை.............. உணரும்போது காலம் கடந்திருக்கும் என நினைக்கிறேன்..............நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை...............திட்டமிட்டு சந்ததிக்கு விட்டுச் சென்றவை ஏராளம்................நாம் புதிதாய் ஒன்றியும் கண்டுபிடிக்க வேண்டாம்............அவர்கள் விட்டுச் சென்றதைக் காபாற்றினாலே போதும்...............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கு நல்வரவு..

      முன்னோர்கள் விட்டுச் சென்றவைகளைக் காப்பாற்றினாலே போதும்..
      சிறப்பான கருத்து.. சிந்தனைக்குரியவை..

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  7. வணக்கம்,
    அருமையான கவித்துவமான உரையாடல், ஆனால் உண்மை,
    இரத்த நாளங்களை அறுத்தெரிந்துவிட்டு,,,,,,,,,
    உண்மையான வார்த்தை,,,,,,,,,
    மாறும் என நினைப்போம், நீர் நிலைகளில் கொட்டும் குப்பைகுளங்கள் மனம் வருந்துவது உண்டு,,,,,,,,,,,
    கடைசியில் உள்ள புகைப்படம் மனதைக் கொள்ளை கொண்ட அழகு படம்,
    அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  8. தலைக்காவேரியில் சென்று காவிரித்தேவியை வணங்கி வந்திருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் ஓடிவரும் அவளைக் கைதொட்டுப் பார்க்கவும் அச்சமாக இருக்கிறது. ஈரோடும் பவானியும் திருப்பூரும் அவளை என்னமாய்ப் படுத்துகிறார்கள்! தங்களிடம் காவிரி அன்னை பேசியதை அனைவருக்கும் தெரியும்படி வெளியிட்டமைக்கு நன்றி! (அடுத்தமுறை காவிரி உங்களிடம் பேசினால் தயவு செய்து ஒலி/ஒளிப பதிவு செய்து யூடியூபில் போடத் தவறாதீர்கள்!) - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பவானியில் நேரே கண்டிருக்கின்றேன்.. இருந்தாலும் வழியெங்கும் அவலம் தான்.. அடுத்த தடவை பொன்னியம்மா வரட்டும்.. யூடியூபில் போட்டு விடுவோம்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. வணக்கம் ஜி
    பதிவு பிரமிப்பாக இருந்தாலும் வேதனையும் அளித்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      எல்லாம் நாகரிகம் முற்றிப் போனதன் விளைவு..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. சிறுவயதில் ஆற்றுக்குச் சென்று ஆடிப்பெருக்கு கொண்டாடியதை நினைவூட்டியது உங்கள் பதிவு. நீர்நிலைகளின் மாசைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பதிவு. கடைமடைப்பகுதிகள் காவிரித் தண்ணீர் வராமல் தண்ணீர்க் குழாய்க்குப் படைக்கத் துவங்கிவிட்டார்கள். நல்லதொரு சிந்திக்க வைக்கும் நெகிழ்ச்சியான பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் கூறுவது உண்மையே.
      மிக வேதனையுடன் தான் இந்தப் பதிவினை எழுதினேன்..
      காவிரியில் புதுப்புனலின் வாசமும் காப்பரிசியின் மணமும் இன்னமும் நாசிகளில் இருக்கின்றன..

      அந்தக் காலங்கள் மீண்டும் வராதா என்றிருக்கின்றது..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. நல்லதொரு விழிப்புணர்வு ஐயா! ஆனால் தெய்வமாகப் போற்ற வேண்டிய ஆற்றை நாம் எவ்வளவு கேவலப்படுத்தி உள்ளோம். அதனால் தான் நாம் தண்ணீருக்கு அல்லாடுகின்றோம். தமிழ் நாட்டில். இப்படியா ஐயா ஆறுகளை நாசம் படுத்துவது! நம் அரசு இவற்றிற்கெல்லாம் ஏன் தடை விதிக்காமல் இருக்கின்றது? ஈரோட்டில் ஆறு படும் பாடு சொல்லி மாளாது ஐயா...பவானி ஆறும் அப்படித்தான்...திருப்பூரிலும் இந்தச் சாயப்பட்டறை...பதிவு அழகாக உள்ளது ஆனால் வேதனை....

    பதிலளிநீக்கு
  12. அன்புடையீர்..
    ஈரோடு, பவானி -இங்கெல்லாம் காவிரியின் நிலையைக் கண்கூடாகக் கண்டிருக்கின்றேன். திருப்பூர் சென்றதில்லை..

    தங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..