நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 22, 2015

வாழ்க சென்னை

பாரதம் எனும் புண்ணிய பூமிக்குள் -

பொருட்களை வாங்கவும் விற்கவும் என நுழைந்த மேலைத் தேசத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் - வெள்ளையர்கள்..

ஏலக்காய், மிளகு, கிராம்பு, சந்தனம், யானைத் தந்தம் - என்ற நினைப்பில் வந்தவர்கள் -

கதவுகளற்ற களஞ்சியத்தைக் கண்டு மலைத்து நின்றனர்!..


உனக்கு எனக்கு - என அவர்களுக்குள்ளேயே - அடிதடி வெட்டு குத்து!..

எல்லாம் இனிதாக நிறைவேறிய பின் -

1639ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தின் இருபத்திரண்டாம் நாள்!..

அன்று தான் கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாற்றில் ஒரு பொன்னாள்..

தென்னகத்தில் ஒரு சிறு நிலப்பகுதியை வாங்கினர்..

கொடுத்தவர் - விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த சந்திரகிரி சிற்றரசரின் ஆளுகைக்குட்பட்ட வந்தவாசி வெங்கடாத்ரி நாயக்கர் மற்றும் அவரது சகோதரர்..

பெற்றுக் கொண்டவர்கள் - கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ ஹோகன் ஆகியோர்.

நாடு பிடிப்பதற்கென்று வணிகம் எனும் போர்வையைப் போர்த்திக் கொண்டு கடல் வழியே வந்த வெள்ளையர்களுக்கு கடலை ஒட்டியிருந்த அந்த இடம் மிகவும் பிடித்துப் போனது..

தங்கள் கனவு இவ்வளவு விரைவாக நிறைவேறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை..

எனவே அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..

தங்களுக்கான இடத்தில் - தங்கள் வசதிக்கெனவும் வணிகப் பொருட்களைப் பத்திரமாக வைக்கவும் - பாதுகாப்பான அரண் ஒன்றை வடிவமைத்தனர்..

அதற்கான முதல் கல் - 1640 ஆம் ஆண்டு மார்ச் முதல் நாளில் ஊன்றப்பட்டது..

இந்த இடத்தைக் கொடுத்தவர் விதித்திருந்த நிபந்தனையின்படி - அவரது தந்தையின் பெயரே சூட்டப்பட்டது..

அது -

சென்னப்பட்டினம்..

வெங்கடாத்ரி நாயக்கரின் தந்தையின் பெயர் - சென்னப்ப நாயக்கர்..

அவர் நினைவாகவே - அந்தப் பெயர்..

சென்னப்பட்டினம் என்று புதிதாக ஒரு பகுதி உருவாக்கப்பட்டாலும் -

அதற்கு முன்னரே - திருமயிலை, திருஅல்லிக்கேணி, திருஒற்றியூர், திருவான்மியூர் - எனும் புராதான கிராமங்கள் அங்கிருந்தன..

அவையெல்லாம், பின்னாளில் - சென்னை எனும் மாநகருக்குள் சங்கமமாகி விட்டன..

ஆக -

இன்று சென்னைக்கு 376 வயது..

St. ஜார்ஜ் கோட்டை - 1753


சென்ட்ரல் - 1963
சென்னை - 1688ல் இந்தியாவின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது..

வெள்ளையர் உருவாக்கிய இந்திய ராணுவத்தின் முதல் படைப்பிரிவு சென்னையில் அமைந்தது..

சென்னைக்காக போர்ச்சுகீசியர்களும் பிரெஞ்சு நாட்டவரும் அவ்வப்போது ஆங்கிலேயருடன் மோதினர்..

அதற்கெல்லாம் - தனது சாதுரியமான நடவடிக்கைகளால் முற்றுப் புள்ளி வைத்தவன் ராபர்ட் கிளைவ்..

ராபர்ட் கிளைவின் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தளமாக விளங்கியது சென்னை.

1746ல் பிரெஞ்சுக்காரர்களின் கைகளுக்குள் சென்ற சென்னையை - 1749ல் மீண்டும் கைப்பற்றினர் ஆங்கிலேயர்..

அத்துடன் பிரெஞ்சுக்காரர்களையும் தெற்கே விரட்டி விட்டனர். 

அதன் பின் சென்னை தனித்துவமாக பெரும் வளர்ச்சியைக் கண்டது..





தென்னகத்தின் முதலாவது ரயில் நிலையம் - ராயபுரம்.

பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய நான்கு மாகாணங்களுள் சென்னையும் ஒன்று..

தென்னகத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டத்தில் சென்னையின் பங்கு மிக மிகச் சிறப்பானது..

சென்னைப்பட்டினம் என்பது சென்னை என விகாரமாகச் சுருங்கியது. 

ஊடாக - ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றே எழுதப்பட்டது..

இதைக் கொண்டே - பாரதத்தின் வடக்கு -
செந்தமிழர்களை மதராஸி என்று அடையாளம் காட்டுகின்றது..

இங்கே வளைகுடா பகுதிகளில், கேரளத்தவர் - நம் முதுகுக்குப் பின்னே - பாண்டி என்று பரிகசிப்பதைப் போலவே, 

பல் விளக்காத வடக்கத்திய பன்னாடைகள் - மதராஸி என -  தமிழர்களைக் குறிப்பிடுகின்றன.. 

இந்த அவலம் இன்னமும் தொடர்வதில் வருத்தம்தான் மேலிடுகின்றது..

இந்த மெட்ராஸ் என்பதற்கு முத்துராசா என்றொரு அடை மொழியைக் குறிப்பிடுவாரும் உண்டு..

மதராஸாக்கள் இருந்ததனால் மதராஸ் என்பாரும் உண்டு.. 

அப்படியானால் ஏனைய பகுதிகளில் மதராஸாக்கள் இருக்கவில்லையா?.. - என்ற ஒரு கேள்வியும் எழுகின்றது..

ஆகவே - அவரவர் நோக்கில் ஆனை என்பதாக ஆகிவிட்டது..


மயிலாப்பூர் 1970
திருவல்லிக்கேணி 1981
1996 முதல் சென்னை என்றே ஆங்கிலத்திலும் குறிக்க வேண்டும் என்பது அரசு உத்தரவாகியது..

வரலாற்றறிஞர் தாலமி காலத்தில் - மயிலார்ப.. எனக் குறிக்கப்பட்டது - இன்றைய மயிலாப்பூர்..

இன்றும் சென்னை சர்வதேச துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கி வருகின்றது..


உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையை உடையது சென்னை

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பர்.. அதிலும் குறிப்பாக -

இந்த காலகட்டத்தில் - சென்னை என்பதில் வியப்பு ஏதும் இல்லை..

அதன்படி - சென்னைப் பெருநகரில் - தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத், வங்கம், பஞ்சாப் - மாநிலங்களின் மக்கள் பெருவாரியாக வசிக்கின்றனர்..

சென்னைக்காக - அண்டை மாநிலமான ஆந்திரா போர்க்கொடியுடன் போராடிய நாட்களும் மறக்க இயலாதவை..





இன்றைய சென்னைப் பெருநகர் - சிறப்பான போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளுடன் - அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாக விளங்குகின்றது..

ஆனால் - இன்றும் குடிநீர் பிரச்னையாகவே உள்ளது..

ஆண்டு தோறும் - பாரதத்தின் பல பகுதிகளில் இருந்தும் - 
சென்னையைத் தேடி - திரண்டு வந்து குடியேறும் மக்களால் 
வயல் வெளிகளும் குளங்களும் ஏரிகளும் காணாமல் போயின..

சிறப்பித்துச் சொல்லக் கூடிய செய்திகள் நிறைய இருப்பதைப் போலவே -

வருத்தத்திற்குரிய செய்திகளும் நிறையவே உள்ளன..

அவைகளை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம்..

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே -

வைக்கலாலே கன்னுக்குட்டி!.. மாடு எப்ப போட்டது?..
கக்கத்தில தூக்கி வைத்தும் கத்தலையே!.. என்னது?..

- என்று வைக்கோல் கன்றினைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கவியரசர் தனது ஆதங்கத்தை திரைப்பாடலில் கொட்டியிருப்பார்..

நான் முதன்முதலில் சென்னையைக் கண்டது - 1981 ஜூலை மாதத்தில்!..




மாநிலத்தின் பிற பகுதி மக்கள் பலருக்கும் - சென்னையைப் பற்றி தனிப்பட்ட வகையில் ஏதாவதொரு குறை இருக்கும்..

பொதுவாகச் சொல்வது - ஏமாற்றி விடுவார்கள்!.. - என்று..

பலமுறை சென்னைக்கு வந்திருக்கின்றேன்..

அப்படி ஏதும் எனக்கு நேர்ந்தது இல்லை..

ஆனாலும் செய்தி ஊடகங்களில் இன்று வரை காண்பதும் கேட்பதும் அதிர்ச்சி அளிக்கக் கூடியவைகளாகத் தான் இருக்கின்றன..

சென்னையின் ஏரி குளங்களைத் திருடிச் சென்றவர்கள் யாராக இருக்கும்?..

அதற்கெல்லாம் - மறுபக்கங்கள் இருக்கின்றன.. 

விவாதித்து அறிய வேண்டாமல் வெளிப்படையாகவே விளங்குகின்றன..

புராதன தமிழகத்தின் - இன்றைய சிறப்புறு தலைநகராக விளங்குவது சென்னை!..

சென்னை - பொல்லாங்குகள் நீங்கிய புத்துருவம் பெறவேண்டும்!..

பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக சீர்பெற்றுத் திகழ வேண்டும்..
மக்களும் அதற்கான வழிதனில் நடக்க வேண்டும்!..

வாழ்க சென்னை!..
* * *

19 கருத்துகள்:

  1. என் ஐந்து ஆறுவயதில் சென்னை கண்டிருக்கிறேன்1943-44 அப்போதெல்லாம் தெருவின் ஒர் முடிவில் சேரிகள் நிறைந்து இருந்தன, தெருவில் தயிர் விற்பவர்கள் கூ என்று கூவுவார்கள். இரண்டாம் போர் சமயம் ஏஆர்பி எனப்படுபவர் இரவில் விசில் ஊதினால் விளக்குகள் அணைக்கப் படும் குண்டு வெடிப்பிலிருந்து தப்பிக்க அரண்மாதிரி இருக்கும் இடத்தில் பதுங்குவதும் மிக லேசாக நினைவிலாடுகிறது சென்னையின் வளர்ச்சி(?) அபரிமிதமாக இருப்பதை உணரமுடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      மலரும் நினைவுகளில் - அரிய செய்திகளை வழங்கியதற்கு நன்றி..
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  2. இவ்வளவு விடயங்கள் சென்னையைப் பற்றி
    இன்று உங்களால் தெரிந்துகொண்டேன் ஐயா!

    பிரமிக்க வைக்கும் அளவில் இன்றைய மாற்றமும் அசத்துகிறது.
    நல்ல பதிவு! நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. சென்னை
    தமிழகத்தின் தனிப் பெரும் அடையாளம்
    அருமையான செய்திகள்
    கண்களைக் கொள்ளை கொள்ளும் படங்கள்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. சென்னப்ப நாயக்கரின் பெயரில் தான் சென்னை என்ற பெயர் அமைந்தது என்பது இதுவரை நான் அறியாதது. சென்னையின் வியக்கத்தக்க வளர்ச்சி நமக்கெல்லாம் பெருமை அளிக்கக் கூடிய செய்தி. இன்று சென்னையின் வயது 376 என்றறிந்தேன். பழைய அரிய படங்களுடன் கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவுக்குப் பாராட்டுக்கள். தெரியாத செய்திகளைத் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. வணக்கம்,
    அன்றைய சென்னையின் தன்மை,
    இற்றைய நாளின் வளர்ச்சி அருமையாக தொகுத்து தந்தீர்,,,,,,,,
    அழகிய படங்கள்,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. ஐயா! சென்னை பல நிலைகளில் வளர்ச்சி அடைந்துளது எனலாம். இந்தியாவிலேயே இருக்கும் பெருநகர்களில் பாதுகாப்பு என்று வடக்கத்திப் பெண்கள் கூட சொல்லுவது தமிழ்நாட்டைத்தான். தில்லி தலைநகரமாகவே இருந்தாலும், தமிழ்நாட்டைத்தான், சென்னையைத்தான். பல மாநில மக்களுக்கும் வந்து இங்கு பிழைக்கவும் வழிவகுத்துள்ளது. வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லுவதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. பலரும் இங்கு வந்து குடியேறுவதால் பல குறைகள் இருக்கலாம். தண்ணீர் பற்றாக்குறை இருக்கலாம். ஆனால் இன்று மருத்துவ நகரமாக மாறி உள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து என்பது மிக மிக நல்ல வளர்ச்சி பிற மாநிலங்களில் இல்லாத ஒன்று. சென்னையில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. என்ன இல்லை? தமிழகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாமல் ஆறுகள் நாசமடையத்தான் செய்கின்றன. இருந்தாலும் அதன் நலல்தை நோக்கலாமே...அண்டை மாநிலத்தவர் தமிழ்நாட்டை சுத்தமற்ற மாநிலத்தவர் என்பர். தமிழர்கள் சுத்தமற்றவர் என்பர் ஆனால் அவர்கள் இங்குதான் வந்து கல்வி பயிலுகின்றனர். அதாவது பாண்டி என்று சொல்லி நகைப்பவர்கள். அங்கு உள்ளவர்கள் மட்டுமில்லை ஐயா இங்கு இருப்பவர்களும் நம்மைப் பாண்டி என்றுதான் சொல்லுகின்றனர். பல மாநிலத்தவரும் இங்கு வந்து நமது எல்லா வசதிகளையும் உபயோகப்படுத்திக் கொள்வர் ஆனால் எள்ளி நகையாடுவர், குறை சொல்லுவர். அண்டை மாநிலத்தின் திரைப்படக்காரர்கள் பலரும் இருப்பது இங்குதான். அவர்கள் குழந்தைகள் படிப்பதும் இங்குதான். தமிழ்னாடு தொழில்வளர்ச்சி அடைந்ததுதான் காரணம். அண்டை மானிலத்தில் தொழில் வளர்ச்சி அடையாததால் அங்கு மக்கள் தொகை குறைவு எனவே அவர்களது நிலம் பாதுகாக்கப்படலாம். நமது நிலம் அப்படி இல்லையே....தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்த்த கதைதான் எல்லோரும் தமிழ்நாட்டை வேண்டும் அளவு உபயோகப்படுத்திக் கொண்டு வாய் கிழிய குறை சொல்லுவார்கள்...நாம் யாரையும் குறை சொல்லுவதே இல்லையே...மனம் வேதனிக்கும் அந்த சமயத்தில்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுடைய சீரிய கருத்துரையில் - நாம் யாரையும் குறை சொல்லுவதே இல்லை!.. - என்ற வரிகள் மனதில் பதிகின்றன..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  7. அன்பின் ஜி
    சென்னையைப்பற்றி நிறைய விடயங்கள் தங்களால் இன்று தெரிந்து கொண்டேன் பிரமிப்பான தகவல்கள் பல் விளக்காத பன்னாடைகள் நம்மை மதராஸி என்றால் என்ன நாம் மாற்றி யோசிப்போம் அதைப்போல் முதுகுக்குப்பின்னால் பாண்டி என்று சொல்லும் பல கஞ்சிகளுக்கும் இன்று சோறு போட்டு வாழ வைப்பதே மதராஸியான சென்னையே அதை நினைத்து பெருமை கொள்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தாங்கள் கூறுவது போலத் தான் மனம் ஆறுதலடைகின்றது
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஒரு சிறிய களஞ்சியப்பதிவாக உள்ளது இப்பதிவு. சென்னையை அன்றிலிருந்து இன்று வரை கொண்டுவந்து பகிர்ந்தமைக்கு நன்றி. புகைப்படங்கள் எங்களை அந்தந்த காலகட்டத்திற்கே அழைத்துச்சென்றன. நென்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. சென்னை குறித்து அழகான... அற்புதமான படங்களுடன் பகிர்வு அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. அன்றைய சென்னையை உங்கள் பதிவின் மூலம் நன்கு தெரிந்து கொண்டேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..