நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 07, 2014

திருஓணத் திருநாள்

அனைவருக்கும் திரு ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

இன்று திரு ஓணம். 

கேரளத்தின் அனைத்து திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன. 

சபரிமலை ஸ்ரீஐயப்பன் திருக்கோயிலின் திருநடை வெள்ளிக்கிழமை மாலை  திறக்கப்பட்டது. அங்கு ஒன்பதாம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நிகழ்கின்றன.


பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை கேரள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் - ஓணத்தினை அனுசரிக்க அவர்கள் தவறுவதேயில்லை.


தமிழ்நாட்டின் பொங்கல் திருநாள் போல மலையாள மக்களின்  அறுவடைத் திருநாளே ஓணம்.

மகாபலியின் யாக சாலைக்கு வந்த வாமனன் கேட்டபடி மூன்றடி தானம் கொடுத்து விட்டு, பாதாள லோகத்துக்கு அதிபதியான மகாபலிச் சக்ரவர்த்தி -

ஆண்டுக்கொருநாள் ஆவணி மாதத்தின் திருவோணத்தன்று - தனது மக்களைக் காண வேண்டும் என மஹாவிஷ்ணுவிடம் வரம் கேட்டார். அதன்படி பெருமாளும் வரம் கொடுத்தார்.

அவ்வண்ணமே - மகாபலி ஆண்டு தோறும் மக்களைக் காண வருவதாகவும் மக்கள் மன்னனை வரவேற்று  உபசரித்து அனுப்புவதாகவும் ஐதீகம்.

ஓணம் மொத்தம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில் மக்கள் வழக்கம் போல அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு சுத்தமான பொன்னிற ஆடைகளை அணிந்து சிறப்பு வழிபாடுகளைச் செய்வர்.


அந்தர் ஜனம் எனப்படும் வீட்டு பெண்கள் தொடர்ந்து பத்து நாட்களும் வீட்டின் முற்றத்தில் பூக்கோலமிட்டு  ஆடிப்பாடி  மகிழ்வர்.

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சங்களுள் ஒன்று யானைகளின் ஊர்வலம்.


தங்க கவசம் அணிவிக்கப்பட்ட யானைகள் பூமாலைகளுடன் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றன.

மகாபலி சக்ரவர்த்தி  ஆட்சி செய்த காலமே கேரளத்தின் வசந்த காலம் என்று கருதப்படுவதால், மக்கள் தங்கள் அன்புக்குரிய மன்னனை நினைவுகூறும் விதமாக ஓணத் திருநாளன்று தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தவராக - ஆடிப் பாடி மகிழ்கின்றனர்.



ஓணம் பண்டிகையில்  அத்தப் பூக்களம் எனப்படும் பூக்கோலம் பிரசித்தம்.

இல்லம் தேடி வரும் மகாபலி மன்னருக்கு வரவேற்பளிக்கும் முகமாக வாசலில் பூக்கோலம் இடம் பெறுகிறது.  பல்வேறு வகையான பூக்களால் கோலத்தை அலங்கரிப்பர்.

கிராமம் நகரம் எனும் பாகுபாடு இன்றி கேரளம் முழுதும் களைகட்டி நிற்கும் மகத்தான திருநாள்  - திருவோணம்.

மலையாள  ஆண்டின் முதல் மாதம்  சிங்கம் எனும் ஆவணி.  சிங்க மாதத்தின் ஹஸ்த நட்சத்திரத்தன்று கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.


அஸ்தம் முதற்கொண்டு திருவோணம் வரையில் பத்து நாட்களும்  - தங்கள் நாட்டை சிறப்புடன் ஆண்ட மன்னர் மகாபலியை வரவேற்கும் விதமாக உற்சாகத் விழா.  

ஹஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திர நாட்களில் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.

நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் விருந்துபசரித்தல்.
ஐந்தாம் நாள் அனுஷம். அன்றைய தினம்  பாரம்பரிய முறையில் படகுப் போட்டிகள் நடத்தப்படும்.





ஆறு, ஏழு, எட்டு, ஒன்பதாம் நாட்களான கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்களில் ஓண ஊஞ்சல் ஆடுதல், மலர்களால் கோலமிடுதல், வீட்டை அலங்கரித்தல் - என மகிழ்ந்து,

பத்தாம் நாள் திரு ஓணம். வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.


திருவோணத்தன்று மூன்று வகையான பாயசத்துடன் ஓண சத்ய எனும் விருந்து செய்து உண்டு மகிழ்ந்து அம்பலத்தில் பெருமாளை வணங்கி  வழிபடுவர்.

ஸ்ரீவாமனருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும் கோயில்களுள் - எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரையப்பன் கோயில் பிரசித்தி பெற்றது.

ஓண சத்ய எனப்படும் விருந்து கேரளத்தின் வழக்கமான உணவில் இருந்து வேறுபட்டு விளங்கும்.

அரிசிச் சோறு,  பாலடை பிரதமன், பால் பாயாசம், உப்பேறி, வரமிளகாய், பரங்கிக்காய் குழம்பு என கேரளத்துக்கே உரிய உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு நேந்திரம் பழத்துடன் கூடியிருந்து உண்டு மகிழ்வர்.

ஓண சத்யா எனும் விருந்து உபசரித்தல் சிறப்பானது.


திருவோண விருந்து  தலைவாழை இலையில் மட்டுமே பரிமாறப்படும். அறுசுவைகளும் விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியன பிரதானம். தவிர நான்கு வகையான கூட்டுக் கறிகள்.

இலையில் இடது ஓரத்தில் தொடங்கி பரிமாறுவர்.

முதலில் அப்பளம், நேந்திரம் பழம், அப்பளத்தின் வலது புறம் சிறிது உப்பு

இலையின் இடது புறத்தின் மேல்பகுதியில் நேந்திரங்காய் உப்பேரி, சர்க்கரை பிரட்டி, எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய், புளிஇஞ்சி, ஓலன், கிச்சடி, பச்சடி, எரிசேரி, துவரன், அவியல், காளன் ஆகியவையுடன் சோறு பரிமாறப்படும்.

முதலில் சோற்றுடன் பருப்பும், நெய்யும் அப்பளமும் சேர்த்து சாப்பிட்ட பின்னர், சாம்பார் பரிமாறப்படும். 

இதற்கு பிறகு  சாம்பார் பரிமாறப்படும்.  பின்னர் பாயசம்.  பாலடை பிரதமன், சிறுபருப்பு பிரதமன், பழ பிரதமன் அரிசி பாயசம்  என் பல வகைகள் உண்டு. பாயாசத்திற்கு பின்னர் ரசம் அடுத்ததாக மோர் என விருந்து நிறைவுறும்.

சங்க காலத்தில் தமிழகத்தில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதாகவும் மதுரையம்பதியில் ஓணத் திருவிழாவின் போது யானைகளுடன் மோதி விளையாடியதாகவும் கூறுகின்றனர். 

நாம் தொலைத்து விட்ட திருநாட்களுக்குள் திருவோணத் திருநாளும் ஒன்று!..

திருவிழாவின் போது அணியும் புத்தாடை ஓணக்கோடி எனப்படுவது.

ஓணக்கோடியை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம். ஓணக்கோடி விதாரணம் என ஏழை எளிய மக்களுக்கு வஸ்திர தானமும் நிகழ்கின்றது.

ஓணத்தின் அடிப்படையே - தானம்!..

வந்திருப்பவன் இறை என்று அறிந்திருந்தும், அவனால் - தன் வாழ்வு முடிய இருக்கின்றது என்பதை அறிந்திருந்தும் மாவலி மன்னன் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து தானத்தை நிறைவேற்றினான். 

யாகத்திற்கு வழிகாட்டிய குரு சுக்ராச்சார்யார் - கொடை கொடுக்காதே - எனத் தடுத்தும் மாவலி மன்னன் கேட்கவில்லை.

தன் சொல்லை மீறி - தாரை வார்க்கும் மாவலியின் தானத்தைத் தடுப்பதற்காக சுக்ராச்சார்யார் - வண்டாக மாறி கிண்டியின் நீர்த்தாரையினுள் புகுந்து நீர் வழியை அடைத்தார். 

விளைவு!?..

ஸ்ரீவாமனனின் தர்ப்பையினால் குத்தப்பட்டு ஒரு கண்ணை இழந்தார்.

பரம்பொருளுக்கே தானம் வழங்கி பாதாள லோகத்திற்கு அதிபதியானான் மாகாபலி சக்ரவர்த்தி!..

மகாபலிக்கு இந்த வாழ்வும் வரமும் சிவபெருமானால் அருளப்பட்டது.

இரவு நேரம். அருள் வடிவான சிவலிங்கத்தின் அருகில் நெய் நிறைந்த அகல் விளக்கு ப்ரகாசித்துக் கொண்டிருந்தது. அதனுள் நெய் இருக்கும் நெய்யினை சுவைப்பதற்காக - ஆவலுடன் ஓடி வந்த எலி அவசரத்தில் சுடரின் பக்கத்தில் தன் நாவினை நீட்டிவிட  - சுருக் என சுட்டு விட்டது. எலி, பதறித் துள்ளியதில் விளக்கின் திரி தூண்டப்பட்டு முன்னை விட அதிகமாக ப்ரகாசித்தது.

இது போதாதா - எம்பெருமானுக்கு!.. கருணையுடன் காட்சி தந்தார். வரமும் தந்தார் - மாவலி எனும் மன்னனாகப் பிறக்க - என்று!..

இப்புண்ணியம் வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டில் நிகழ்ந்தது. இதனை,

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் 
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட 
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம் 
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே!. (4/49/8) 

- என்று , திருநாவுக்கரசர் திருக்குறுக்கை வீரட்டானத்தைத் தரிசிக்கும் போது - திருப்பதிகத்தில் பதிவு செய்து - போற்றிப் பாடி மகிழ்கின்றார்.

அசுர வேந்தனாக - ஸ்ரீ பிரகலாதனின் பேரனாகப் பிறந்த மகாபலி - தான தர்மத்தில் தலை சிறந்து விளங்கினான்.

அசுர குருவாகிய சுக்ராச்சார்யரின் தூண்டுதலால் - தேவர்களை வெற்றி கொண்டு இந்திர லோகத்தினைக் கைப் பற்றிக் கொண்டு மகாபலிச் சக்ரவர்த்தி எனப் புகழப்பட்டான்.

அமரலோகம் தன் கையிலேயே நிலைக்க வேண்டும் என்ற ஆவலினால் மகத்தான யாகம் செய்ய முற்பட்டான்.

அவ்வேளையில் -

ஆவணி சுக்ல பட்சம், திருவோண நட்சத்திரத்தில் - உச்சிப் பொழுதில் காசியபர் - அதிதி தம்பதியர்க்கு, அருந்தவ புத்ரனாக - கோடி சூர்ய ப்ரகாசத்துடன் சங்கு சக்ரதாரியாக அவதரித்தான் பரந்தாமன்.


அதிதியின் பாலனாகத் தவழ்ந்த பெருமான் வாமனன் எனும் திருப்பெயர் கொண்டு நிகரற்ற பேரும் புகழும் பெற்று பெருமான் வளர்ந்து  வந்த வேளையில் - தேவர்கள் அடைக்கலம் கேட்டு நின்றனர்.

அமராவதி கையில் இருந்து நழுவாமல் இருக்கும்படிக்கு - நூறு அஸ்வமேத யாகங்களைச்  செய்யத் தொடங்கினான்.

மூவுலகையும் கவர்ந்து கொண்டதன்றி வேறு குற்றம் ஒன்றும் காணப்பட வில்லை.  ஆயினும்  -  வையம் உள்ளளவும் புகழுடன் இருக்கும்படி  - பலிக்கு அருள் புரியத் திரு உளங்கொண்டார் பெருமான்.

பலி அஸ்வமேத யாகம் நடத்தும் யாக சாலைக்குச் சென்றார். ஸ்வாமியின் தேஜஸைக் கண்டு பிரமித்து மயங்கினர் அங்கிருந்த அனைவரும். வாமன மூர்த்தியை வரவேற்று மரியாதை செய்த பலி, வேண்டுவது யாதெனக் கேட்க -


''..நான் உன்னிடம் விரும்புவதெல்லாம் எனது காலடியினால் மூன்றடி நிலமே!. அதற்கு மேல் எனக்கு எதுவும் தேவையில்லை!..'' - என்று திருவாய் மலர்ந்தார்.

பலி உளம் மகிழ்ந்து  - ''..ஸ்வாமி!.. தங்களின் பிஞ்சுக் காலடியால் மூன்றடியா!.. வேறு பல செல்வங்களைக் கேட்டுப் பெறலாமே!..'' - என்றான்.

பெருமானோ - ''.. தான் அளக்கும் மூன்றடி நிலமே போதும்!..''  - என்றார்.

விருப்புடன், தானம் வழங்கப்படும் வேளையில் சுக்ராச்சார்யார் -  அசுர வேந்தனிடம்- ''..வந்திருப்பவன் மாயவன். அவன் கேட்டபடி வழங்காதே!..'' - என்றார். அசுர வேந்தனோ - பண்பின் சிகரமாக,

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!..


- என்று மறுமொழி கூறி நின்றான்.

தன் யாகத்தைக் காப்பதற்காக வந்திருக்கும் ஸ்ரீ ராமபிரானுக்கு வாமன அவதாரத்தை விவரிக்கும் போது - விஸ்வாமித்ர மகரிஷி - கூறுவதாக  - கம்பர் இராமாயணத்தில் காட்டுகின்றார்.


தனது  தானத்தால் - எல்லாமே பறிபோகும் என அறிந்தும் , குரு சுக்ராச்சார்யார் தடுத்தும் கூட, அதைக் கேளாமல் , தன் வாக்கு தவறாமல் வையத்தையும் வானத்தையும் இரண்டடிகளால் அளந்த பரந்தாமனின் மூன்றாவது அடிக்குத் தன்னையே தானமாக வழங்கினான்.

தானத்தில் சிறந்த மகாபலிக்கு கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு..

யாராலும் கடக்க முடியாத மாயையைக் கடந்த பலி சக்ரவர்த்தியே அடுத்த மன்வந்த்ரத்தின் இந்திரன்!.. - என பரந்தாமன் வாழ்த்தி வரமளித்தான்.

திருமயிலையில் - திருஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவை உயிர் பெற்று எழுவதற்குத் திருப்பதிகம் பாடும் போது -

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்!..
(2/47)


- எனக் குறிப்பிடுகின்றார். 

தமிழகத்தில் ஓணப்பெருவிழா ஐப்பசியில் நடைபெற்றதை - திருஞான சம்பந்தப் பெருமான் திருவாக்கினால் அறியலாம்.

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடு முட்டச் 
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே!..

- என கந்தர் அலங்காரத்தில் முருகப்பெருமானைப் புகழும் போது - வாமன அவதார நிகழ்வினை வர்ணிக்கின்றார் - அருணகிரிநாதர்.

இந்த வாமன மூர்த்தியைத் தான் 

ஓங்கி உலகளந்த உத்தமன்!.. 
என்று - கோதை ஆண்டாள் - கொஞ்சும் தமிழில் கூறினாள்.

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே!..
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வோம்!.. 

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!..
ஓம் நமோ நாராயணாய.. 
* * *

18 கருத்துகள்:

  1. திருவோணம் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  2. ஈதலின் சிறப்பினை விளக்கிடும் நன்னாள் திருவோணத் திருநாள்

    என போற்றும் பதிவு இது.


    என் அன்பான வாழ்த்துக்கள்.


    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      மிக்க நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் ஐயா!

    ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்!

    இவ்வளவு சிறப்பினை இன்றுதான் உங்கள் பதிவினால் அறிந்தேன்.
    வாமனர் வரலாறும் அற்புதம்! காட்சிகள் பரவசப் படுத்துகின்றன!

    மிகச் சிறப்பு! பகிர்வினுக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.
      தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. என் சிறுவயதில் நான்கண்ட ஓண வழிபாடுகள் மிகவும் குறைந்து விட்டன. வீட்டின் முன் மகாபலியின் உருவமாகக் கருதி ”மாதேறு “எனறுமண்ணால் செய்து அதைப் பூக்களத்தின் நடுவே வைத்து பெண்கள்கைக்கோட்டுக் களி என்று நடனம் ஆடுவர், பாரம்பரிய வழிபாடுகள் மறைந்து ஓண சத்ய மட்டும் கடை பிடிக்கப் படுகிறது. மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. “உள்ளப்போழ் ஓணம் இல்லெங்கில் ஏகாதசி”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      கருத்துள்ள பழமொழியினை வழங்கியமைக்கு நன்றி..

      நீக்கு
  5. மகாபலிக் கதை மீண்டம் மீண்டும் படிக்கத் திகட்டாதது. பரம் பொருளுக்கே தானம் வழங்கியக் கதையல்லவா இது.
    ஓணம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் அன்பான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  6. திருவோணத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. திரு ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. திருவோணம் வாழ்த்துக்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய ஓணத் திருநாள் வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  9. திருவோணம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன் இப்பொழுதான் விபரமாக அறிந்தேன். நன்றி சகோ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..