நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 12, 2014

மார்கழிப் பனியில் - 28

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 28.



கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் 
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் 
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் 
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு 
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது 
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை 
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே 
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!..

 ஓம் ஹரி ஓம்

ஆலயதரிசனம்

கரந்தை - தஞ்சாவூர்


இறைவன் - ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீபிரஹந்நாயகி
தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம் - சந்திர தீர்த்தம் - வசிஷ்ட தீர்த்தம்.

பிரம ஞானிகளுள் தலை சிறந்தவரான - வசிஷ்டமகரிஷி, உலவாப் பதியாகிய தென்குடித் திட்டையில் சிவபூஜை செய்த புண்ணியத்தின் நற்பயனாக - தான் செய்து வரும் நித்யாக்னிஹோத்ரம் முதலான ஆசார அனுஷ்டானங்களுக்கு உதவும் வகையில் தெய்வப் பசுவாகிய காமதேனுவைப் பெற்றார். 

வசிஷ்ட மகரிஷி - அருந்ததி தம்பதியருடன்  இருந்து, அவர்களுடைய தவ நெறிகளில் காமதேனுவும் தன் மக்களாகிய நந்தினி, கமலினியுடன் பங்கெடுத்துக் கொண்டது. 

அதன் பயனாக - 

தெய்வப் பசுக்களாகிய -  நந்தினியும் , கமலினியும் தங்கள் தாயாகிய காமதேனுவைப் போலவே எவ்வுலகத்துக்கும் செல்லும் ஆற்றலையும், தீய அரக்கர்களை எதிர்க்கும் சக்தியையும் பெற்றன.

இத்தகைய சூழலில் - வசிஷ்ட மகரிஷிக்கு - கால மாற்றங்களினால் - தோல் நோய் ஏற்பட்டது. 

இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் மகோன்னதமான குணம் படைத்தவராகிய வசிஷ்ட மகரிஷி - இதன் காரணத்தினை அறிய விரும்பி  - இறைவனிடம் வேண்டி நின்றார்.

''..உலகோர் உய்வடையும் பொருட்டு - இத்திருத்தலத்தின் தென்மேற்கு மூலையிலுள்ள கரந்தை வனத்தில் எம்மை பிரதிஷ்டை செய்வீராக!. அங்கே உமக்கு நலமும் பலமும் கிடைக்கும்!..''  - என ஈசன் மறுமொழி அளித்தனன்.   

அந்த அளவில் பின் வரும் ஒரு நன்மையின் பொருட்டு வசிஷ்டர் அருந்ததி அம்மையுடன் தென்மேற்காகப் பயணித்து ஈசன் குறிப்பிட்ட கரந்தை வனத்தை அடைந்தார். அங்கே வசிஷ்ட மகரிஷி தனது - நித்ய வழிபாட்டுக்கு என ஒரு குளத்தை உருவாக்கினார். 

அக்குளத்தை சந்திரன் தனது அமுத கலைகளால் நிரப்பினான். அக்குளத்தில் நீராடி - ஈசன் அருளியபடி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் வசிஷ்டர். 

அவருடன் அந்த வனத்திலிருந்த ஏனைய முனிவர்களும் யாக வேள்வி பூஜைகளில் கலந்து கொண்டனர்.

இதை அறிந்த யமதர்மராஜன்  - 

கரந்தை வனத்திற்கு வந்து வசிஷ்டரையும் அவர் ஸ்தாபித்த சிவலிங்கத்தையும் பணிந்து வணங்கி நின்றான். 

சாயாதேவியின் சாபம் யமதர்மனை விட்டு விலகியது.  

சாப விமோசனம் பெற்று தென் திசைக்குத் தலைவன் ஆனான். 

வசிஷ்ட மகரிஷியை வந்து வணங்கிய ஆதிசேஷன் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரரின் அனுக்ரகத்தால் - தளர்ச்சியின்றி  பூவுலகைத் தாங்கும் திறன் பெற்றான். 

அத்துடன் தன் இனத்தவரால்  - எட்டுத் திக்கிலும் ஒரு குரோசம் (இரண்டரை மைல் = 4 கி.மீ) தொலைவுக்கு விஷ பயம் கிடையாது என வாக்கு கொடுத்தான்.

கரந்தை என்பது எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் - திருநீற்றுப் பச்சை எனும்  மூலிகைச் செடி என்று கொள்வர்.

இது துளசி இனத்தை (OCIMUM BASILICUM.) சேர்ந்தது. 


திருநீற்றுப் பச்சிலையின் சாற்றில் வசம்பைக் குழைத்துத் தடவினால் முகப் பருக்கள் குணமாகும்.   

திருநீற்றுப் பச்சிலையின் சாற்றை  நோய் கண்ட இடத்தில் பூசி வர - படை முதலிய சரும நோய்கள்  எளிதில் மறையும். 

திருநீற்றுப் பச்சையின் இலை, வேர், விதை - என அனைத்தும் பலவிதமான மருத்துவ குணங்களை உடையன. அவற்றைத் தகுதியான சித்த மருத்துவர் வழிகாட்டுதலின் பேரிலேயே பயன்படுத்த வேண்டும். 

அது அனைவருக்கும் எளிதானது அல்ல என்பதினால் தான் ஈசன் வசிஷ்ட மகரிஷியின் மூலமாக ஒரு திருவிளையாடலை இத்தலத்தில் நடத்தினான்.

இப்போது கூட - திருநீற்றுப் பச்சையின் அருங்குணங்களைத் தேடிப் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக அருட்குரு கோரக்க சித்தர் எதிரில் வந்து அருள் பாலித்தார்.

ஒருகணம்  - அதிர்ச்சி, ஆச்சர்யம், ஆனந்தம்!..

அருட்குரு கோரக்க சித்தர் 
திருவடிகள் போற்றி!.. போற்றி!..

இகபர செளபாக்யங்களை அருள்வதற்கு அவதாரம் செய்த ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு குருவாக விளங்கியவர்  - ஸ்ரீவசிஷ்ட மகரிஷி.

அவர் இங்கே வந்து சிவபிரதிஷ்டை செய்து தவமிருக்கின்றார் என்பதை அறிந்த  - அருட்குரு கோரக்க சித்தர் - ஸ்ரீவசிஷ்ட மகரிஷியை வந்து வணங்கி இன்புற்றிருக்கின்றார்.  அது என்றோ நடந்த விஷயம் இல்லை. 

இன்றும் - அருட்குரு கோரக்க சித்தர் ஒவ்வொரு  வியாழன் அன்றும் இரவு குரு ஹோரையில் - கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து ஸ்வாமியையும் ஸ்ரீவசிஷ்ட மகரிஷியையும் வணங்கி மகிழ்கின்றார் என்பது நிதர்சனம்.

அதனை முன்னிட்டு - 

கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள  அருட்குரு கோரக்க சித்தர் பீடத்தில் - வியாழக்கிழமை மற்றும் பெளர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள்,   அவர்தம் அடியார்களால் சிறப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. 

அருட்குரு கோரக்க சித்தர் - தம் அடியார்களுடன் எளியேனும் ஒருவன். எனவே,  அடியார்களுடன் உடன் வரும் அருள் வள்ளலான என் குரு - என்னை வழிநடத்த  எதிரில் வந்தார்.

தனது சந்திரரேகை எனும் ஞான நூலில் திருநீற்றுப் பச்சிலை (144 -145) - சாபமற்ற மூலிகை - குரு மூலிகை - வில்வம், துளசி ஆகியனவற்றுக்கு இணையானது என்று அருளுகின்றார். 
 
திருக்கோயிலுக்கு எதிரில் உள்ள வசிஷ்ட தீர்த்தத்தில் நீராடி கரிகால் சோழன் தோல் நோய் நீங்கப் பெற்றதாக ஐதீகம்.

வசிஷ்ட தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாள்கள் மூழ்கி, வசிஷ்டேஸ்வரரை வழிபட்டால் சரும நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஆனால் , இன்று திருக்குளத்தின் நிலை பரிதாபமாக உள்ளது.

இரண்டாம் திருச்சுற்றில் - கோயிலின்  நான்கு மூலைகளிலும் நான்கு விநாயகர் சந்நிதிகள் உள்ளன.

வசிஷ்டர்  லிங்க பிரதிஷ்டை செய்ததால் - இறைவன் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர். 

ஆலயத்தின் கிழக்கு வாசலில் திருக்குளமானதால் - கிழக்கு முகமாக கோயிலினுள் நுழைய முடியாது. கிழக்கு ராஜகோபுரம் கிடையாது.  தெற்கு கோபுர வாசல் தான் பிரதானம்.  மூன்று நிலை கோபுரம்.

அம்பிகை தனி சந்நிதியில் திகழ்கின்றனள். தெற்கு நோக்கிய அம்பிகைக்கு தனியே ஒரு கொடிமரம். தெற்கு வாசலில் அம்பிகையை நோக்கியவாறு பிரத்யேக நந்தி மண்டபம் விளங்குகின்றது.

இறைவன் கருவறை கோஷ்டத்தில் உள்ள சிற்பங்கள் மிகுந்த கலை துணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

தெற்கு கோஷ்டத்தில் விரித்த சடையுடன் முயலகன் மீது காலை ஊன்றி நடமாடும்  நடராஜப் பெருமானின் இருபுறமும் அப்பரும் திருஞானசம்பந்தரும் திகழ்கின்றனர். 

கோஷ்டத்தில் தட்க்ஷிணாமூர்த்தியை அடுத்து வசிஷ்டருக்கும் அருந்ததி அம்மையாருக்கும் விக்ரகங்கள் உள்ளன. 

கோஷ்டத்தில்  விநாயகர், பிட்க்ஷாடனர், கங்காதரர், கங்காளர்,லிங்கோத்பவர், வலம் இடம் மாறி விளங்கும் அர்த்தநாரீஸ்வரர், காலாந்தகர், துர்கை - என வெகு சிறப்புடைய திருமேனிகள் விளங்குகின்றன. 

அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில் - உமை வலப் புறமும், ஈசன் இடப்புறமும் மாறித் திகழ்கின்றனர்.

மன்னன் கரிகால் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில். 

பின்னர் முதலாம் பராந்தக சோழரால்  கருங்கல் கோயிலாக சிற்பச் செறிவுடன் திகழ்கின்றது. கருவறைச் சுவரில் நிறைய கல்வெட்டுக்கள்  உள்ளன.

பெருந்திருவிழாக்கள்  - தேரோட்டத்துடன் நிகழ்ந்த தலம்.  ஆனால், இப்போது தேர் போய்ச் சேர்ந்த இடம் தெரிய வில்லை. 

பிரதோஷம், சோமவாரம், பெளர்ணமி, திருக்கார்த்திகை முதலான விசேஷங்கள் சிறப்புடன் நிகழ்கின்றன. 

தைப்பூச நன்னாளில் இறைவனுக்கும் அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம். அதே நேரத்தில் - வசிஷ்டர் - அருந்ததி தம்பதியருக்கும் திருக்கல்யாணம் வெகு சிறப்புடன் நிகழும்.

தீண்டுவீராகில் எமைத் திருநீலகண்டம்  - என்று மனையாள் சூளுரைத்ததால் - இளமையைத் துறந்த திருநீலகண்ட நாயனாருக்கு வாழ்வும் வளமும் நல்கிய வைபவம் ஆண்டுதோறும் நிகழ்கின்றது. 

ஆண்டு தோறும் மாசி மாதம் உதயத்தின் போது கதிர்கள் கருவறையில் படர்ந்து இறைவனின் திருப்பாதம் பணிய சூரிய பூஜை நிகழும் திருத்தலம். 

திருநாவுக்கரசர் - தன் திருவாக்கினால் - இத்தலத்தை க்ஷேத்ர கோவையில் குறிப்பிட்டுள்ளார். 

இன்று திருக்கோயில் கருணாசுவாமி கோயில் எனவும் திருத்தலம் கரந்தை எனவும் கரந்தட்டாங்குடி எனவும் வழங்கப்படுகின்றது.

தஞ்சை மாநகரில் வடவாற்றின் -  வட கரையில்  விளங்கும் கரந்தையில் தான், 


1919ஆம் ஆண்டிலேயே - தமிழைச் செம்மொழி என அறிந்தேற்க வேண்டும் எனவும் தமிழுக்குப் பல்கலைக் கழகம் அமைக்கவேண்டும் எனவும் முழங்கிய  பெருந்தகை -

தமிழவேள் த. வே. உமாமகேசுவரனார் அவர்களின் பெருமுயற்சியினால் உருவான கரந்தைத் தமிழ்ச் சங்கம் உள்ளது. 

கரந்தைத் தமிழ்ச்சங்கம் பற்றி மேலும் நயமுடன் கூறுகின்றார் அன்பின் திரு. - கரந்தை ஜெயக்குமார்   அவர்கள்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு, திருக்காட்டுப் பள்ளி, பாபநாசம் செல்லும் பேருந்துகள் கரந்தை வழியாகவே செல்கின்றன.

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி
கருந்திட்டைக்குடி கடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே!..(6/71)
திருநாவுக்கரசர். 

சிவாய திருச்சிற்றம்பலம்.

14 கருத்துகள்:

  1. கரந்தை - தஞ்சாவூர் தகவல்கள் + விளக்கங்கள் அனைத்தும் மிகவும் அருமை... ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ..
      தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. ஐயா, கரந்தை பற்றிய பதிவினில் என்னையும் குறிப்பிட்ட தங்களின் அன்பு
    என்னை நெகிழ வைத்துவிட்டது ஐயா.
    என்றும் வேண்டும் இந்த அன்பு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...
      பசுமையான நினைவுகள் என்றும் மாறுவதில்லை.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. இன்றும் - அருட்குரு கோரக்க சித்தர் ஒவ்வொரு வியாழன் அன்றும் இரவு குரு ஹோரையில் - கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து ஸ்வாமியையும் ஸ்ரீவசிஷ்ட மகரிஷியையும் வணங்கி மகிழ்கின்றார் என்பது நிதர்சனம்.

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் அன்பான கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. கரந்தைத் தகவல்கள் அருமை. உங்களுக்கு சித்தர் தரிசனம் கிடைத்தது நீங்கள் செய்த புண்ணியமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா.
    அறிய முடியாத பல தகவல்கள் தங்களி பதிவு மூலம் அறியக்கிடைத்துள்ளது... பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா

    comment பகுதியில் .wordpress.com.ஆல் கருத்துப்போட முடியாது.. மாற்றினால் நான்று.google மட்டுந்தான் முடியும் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. ரூபன்..
      தங்களின் வருகையும்
      இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.
      நீங்கள் சொல்லியபடி மாற்றி விட்டேன்.
      நினைவூட்டியமைக்கு நன்றி..

      நீக்கு
  6. மிகவும் சிறப்பான பகிர்வு ஐயா...
    அறியாத தகவல்களை அறியத் தந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. குமார்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  7. சிறப்பான தகவல்கள்.

    தஞ்சை, கரந்தை என தொடர்ந்து அரிய கோவில்கள் பற்றிய தகவல்கள் தந்து எங்களையும் அங்கே அழைத்துச் செல்லும் பதிவுகள்...... மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..