நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 13, 2016

சக்தி தரிசனம்

நவராத்திரியின் கோலாகலம் நாட்டின் பலபகுதிகளில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது..

குன்றாத உற்சாகத்துடன் தமிழகத்திலும்
நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது..

ஆலயங்கள் தோறும் அம்பிகை சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன்
ஆராதிக்கப்பட்டிருக்கின்றாள்...

பல்வேறு தலங்களிலும் நிகழ்ந்த வைபவங்களின் படங்கள்
Fb வழியாகக் காணக்கிடைத்தன..

அவற்றில் சிலவற்றை இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சி..

மதுரை அரசாளும் மீனாக்ஷி
மாமதுரை மீனாள்
மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக்கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.. (004)




ஸ்ரீ ஆனந்தவல்லி
மானாமதுரை
சுந்தரி எந்தைதுணைவி என்பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலிஅழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என்கருத்தனவே.. (008)
***

அருள்திரு கற்பகவல்லி.,
திருமயிலை..

ஸ்ரீ கற்பகவல்லி



கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன்செய்த
புண்ணியம் எதுஎன் அம்மே புவியேழையும் பூத்தவளே.. (012)
***

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி.,
திரு ஆனைக்கா..

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி


பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் 
காத்தவளே பின்கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. (013)
***

அருள்தரு அறம்வளர்த்த நாயகி.,
திரு ஐயாறு..

அருள்தரு அறம் வளர்த்த நாயகி


சொல்லும் பொருளும் எனநடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியாஅரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.. (028)


ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர் - அன்னபூரணி
திருச்சோற்றுத்துறை

நாயகி நான்முகி நாராயணி கைநளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்றாய
கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. (050)
***
அருள்தரு பிரஹந்நாயகி
தஞ்சாவூர்

தஞ்சை ஸ்ரீ பிரஹன்நாயகி
ஸ்ரீ வீரபத்ரகாளி., தஞ்சை
ஸ்ரீ வீரபத்ரகாளி - உற்சவ திருமேனி..
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.. (077)

தஞ்சை வடக்கு வாசலில் ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலில் வீற்றிருந்து அன்பர்க்கு நலம் புரிபவள் ஸ்ரீ வீரபத்ரகாளி..

தஞ்சையிலுள்ள எட்டு காளி சந்நிதிகளுள் - 
இவளுடைய சந்நிதியும் ஒன்று..

கோபம் கொண்டு கொதித்திருந்த ஸ்ரீவீரபத்ரகாளியை
சித்தர்களும் சாதுக்களும் பூஜித்து சாந்தப்படுத்தியதாக ஐதீகம்...

தஞ்சையில் இருந்தும் அந்த அம்பிகையை தரிசனம் செய்ததில்லை...

அதற்கு நேரம் வரவேண்டும் என்பார்கள்..

நவராத்திரி சமயத்தில் ஸ்ரீவீரபத்ரகாளியம்மனையும் ஒருபொழுது எண்ணியிருந்தேன்...

எளியன் என்மீதும் அன்பு கொண்டனள் போலும்..-


அவளுடைய திருக்கோயிலில் 
விஜய தசமியன்று ஸ்ரீ வீரபத்ரகாளி திருவீதி எழுந்து -
வாழையில் நிறுத்தப்பெற்ற அசுரனை சங்காரம் செய்தருளிய 
கோலாகல வைபவத்தின் காணொளி கிடைத்திருக்கின்றது..


இந்த அம்பிகையைப் பற்றி விரிவாக எழுதுதற்கான
நல்வாய்ப்பினை அவளே அருளுதல் வேண்டும்..

காளி நிகழ்த்திய அசுர சங்கார வைபவத்தின் காணொளியைக் கீழே காணலாம்..


ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக் 
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே..
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி ஓம்
* * *