நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2023

சாய்க்காடு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 5
செவ்வாய்க்கிழமை

காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
ஐந்தாவது திருத்தலம்..

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திரு சாய்க்காடு


இறைவன்
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ குழலினும் இன்மொழியம்மை

தீர்த்தம்
ஐராவத தீர்த்தம் காவிரி
தல விருட்சம்
கோரைப்புல்


காஷ்யப முனிவரின் மனைவி அதிதி வழிபட்ட தலம்.. 

தனது தாய் அதிதிக்காக இத்தலத்தை பெயர்த்து தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டு தோல்வி அடைந்த இந்திரன் தன் பிழையுணர்ந்து மீண்டும் வழிபட்டு நலம் பெற்றான்..

துர்வாச முனிவரின் சாபம் பெற்ற ஐராவதமும் வழிபட்ட தலம்..

முற்பிறவியில் சிலந்தி ஒன்று  சிவ வழிபாடு செய்து திரு ஆனைக்காவில் தனக்கு எதிராய் இருந்த யானையைக் கொன்றது..

அதுவே மீண்டும் அரச குடும்பத்தில் கோச் செங்கட் சோழராகப் பிறந்தது.. கோச் செங்கட் சோழரால் 
யானை ஏற முடியாதபடி எழுப்பப் பெற்ற மாடக் கோயில் இது..


இங்கு கடலில் கிடைத்த பஞ்சலோகத் திருமேனி - வில்லேந்திய 
வேலவர்  சிறப்பு.. 

இயற்பகை நாயனாரும் அவரது மனைவியும்
இயற்பகை நாயனாரின் அவதாரத் தலம் இது..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் இரண்டும்
நாவுக்கரசர் திருப்பதிகங்கள் இரண்டும் கிடைத்துள்ளன..

சீர்காழியில் இருந்து 12 கிமீ., தொலைவில் உள்ளது. சீர்காழி மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.. 

சாய்க்காட்டில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் தான் பூம்புகார்..

இத்தலத்தைத் தரிசிக்கின்ற வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை..


நீநாளு நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவி கேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.. 2/41/3
-: திருஞானசம்பந்தர் :-

இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம்  அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவினாரே..
4/65/5
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***