வழக்கம் போலவே சற்று தாமதம்..
ஆனால்,
அமீரகத்தின் தலைநகராகிய அபுதாபி விமான நிலையத்தில் -
சொல்லிய வண்ணம் அன்பின் கில்லர் ஜி அவர்கள் காத்திருந்தார்..
அவருடன் - அவரது அன்பு மகன் -
திரு. தமிழ்வாணன் அவர்களும் மனசு - திரு. குமார் அவர்களும்..
அவர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன்..
மனம் இல்லை.. ஆயினும்,
Chick In - செல்வதற்கான நேரம் அது..
எனது மருமகன், மகள், பேத்தியிடமும்
திரு. கில்லர் ஜி அவர்களிடமும் அவரது மகனிடமும் திரு. குமார் அவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டேன்..
கையில் இருந்த பெட்டியை விட மனம் கனத்தது..
முகப்பிலேயே - நம் நாட்டின் பயணிகளுக்காக மூன்று மொழிகளில் அறிவிப்பு இருந்தது..
அந்த மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இலங்கியது..
அதைக் கண்டு மகிழ்ந்தாலும் - தமிழ் முதலிடத்தில் குறிக்கப்படாதது கண்டு சற்றே வருந்தியது - மனம்..
முதற்கட்டமாக - பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பின், பெட்டிகள் எடையிடப்பட்டு - உள்ளே நகர்ந்தன..
வழக்கம் போலவே - வெளியே கண்டு மகிழும் வண்ணம் ஜன்னல் ஒரத்தில் இருக்கை கிடைத்தது..
அடுத்ததாகக் குடியேற்றம் கண்காணிக்கப்பட்டது..
சில விநாடிகளில், புன்னகையுடன் சென்று வருக!.. - என்றது அமீரகம்..
விசாலமான விமான நிலையம்..
மிகவும் சுத்தமாக விளங்கியதுடன் - மெல்லிய நறுமணம் எங்கும் கமந்து கொண்டிருந்தது..
சீருடைப் பணியாளர்கள் - சிரித்த முகத்துடன் வழி காட்டுகின்றனர்..
செல்லும் வழி அறிந்திருந்தாலும் - அங்குமிங்குமாக சுற்றித் திரிந்தேன்..
சிறுபொழுதில் - சென்னை செல்லும் பயணிகள் அழைக்கப்பட்டனர்..
மீண்டும் ஒரு பாதுகாப்பு சோதனை..
கீழ்தளத்தில் நின்றிருந்த பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்று விமானத்தின் அருகில் நிறுத்தியது..
இருக்கை கண்டு அமர்ந்தாயிற்று.. ஜன்னல் வழி நோக்கிக் கொண்டிருந்தேன்..
ஓடுதளத்தில் விரைந்தோடிப் புறப்படுவதும் இறங்குவதுமாக - விமானங்கள்..
விமானத்தினுள் - அரபு மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புகள்..
சற்றைக்கெல்லாம் - மெல்ல நகர்த்தப்பட்ட விமானம்,
ஓடுதளத்தில் இயங்கி, இரைச்சலுடன் விரைந்தோடி - மேலெழும்பியது..
அப்போது நேரம் - 2.20.. மதியப் பொழுது..
சற்று நேரத்தில் - உணவு வழங்கப்பட்டது..
நான் சைவ உணவை எடுத்துக் கொண்டேன்..
![]() |
| ஓமன் நாட்டின் பாலை நில - மணல் மலைககள் |
![]() |
| பாரசீக வளைகுடா |
![]() |
| மாலை மயங்கிய வேளை |
முன்னிரவுப் பொழுதில் -
அரபிக் கடலைக் கடந்த விமானம் - தென் கிழக்காக பாரதத்தின் மீது பறந்தது..
சென்னையை நெருங்கும் முன்பாக மெல்லிய மழைத் தூறல்..
மீண்டும் - அறிவிப்பு..
சடசட - என விமானம் கீழிறங்கியது..
அதுவரையிலும் ஒளிப் புள்ளிகளாக மின்னிய தெருக்கள் - தெளிவாகின..
இதோ.. இதோ..
தாழ்வாகப் பறந்த விமானம், சென்னை விமான நிலையத்தின் தென்புறமாக - இறங்கியது..
அந்த அலுமினியப் பறவை -
தாயகத்தின் தரையைத் தொட்டு ஓடிய போது - மனம் சிலிர்த்தது..
அப்போது, நேரம் இரவு - 7.20..
சற்றைக்கெல்லாம் - வருகைப் பதிவு முடிந்தது..
சுங்கச் சோதனை ஏதும் இல்லை..
வெளியில் வந்தபோது -
அதோ.. மனைவி மற்றும் மகனின் அன்பு முகங்கள்..
இரவு உணவை முடித்த பின் -
உழவன் விரைவு ரயிலில் - முன்னதாகவே பதிவு செய்த இருக்கைகளில் -
தஞ்சை நோக்கிப் பயணித்தது - மனம்..
அன்பின் உறவுகளையும் நட்புகளையும் நாம் தொடர,
அவ்வண்ணமே -
அன்பின் உறவுகளும் நட்புகளும் நம்மைத் தொடர -
அதற்குமேல் - வேறென்ன வேண்டும்!..
வாழ்க நலம்!..
* * *















