நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 25, 2022

திரு மணிக்குன்றம் 6

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த ஞாயிற்றுக் கிழமை (20/3) இரவு..

தஞ்சை ஸ்ரீ மணிக் குன்றப் பெருமாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள்.. 

மாலையில் திருமேனிகளின் பீடங்களில் சாற்றுவதற்காக அஷ்ட பந்தனம் இடிக்கப்பட்டது..

கோயிலுக்கு வந்திருந்தோர் அனைவரும் பங்கேற்றனர்..

பெரியவர்கள் நமது பாரம்பர்யத்தை நினைத்துக் கொள்ள - இன்றைய இளந் தலைமுறையினருக்கு உரலும் உலக்கையும் வேடிக்கையாக இருந்தன.. 

இருப்பினும் ஆர்வமுடன் உலக்கையைப் பற்றி மருந்து இடித்துக் கொடுத்தனர்... நாங்களும் பெருமாள் கைங்கர்யத்தில் பங்கு பெற்றோம்..

இரவு எட்டு மணியைப் போல கருவறைக்குள் அன்பர்கள் அனைவரும் வ்வித பாகுபாடும் இன்றி அனுமதிக்கப்பட்டனர்..

ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ மணிக்குன்றப்பெருமாள்- என, மூல மூர்த்திகளைக் கண்ணாரக் கண்டு  வணங்கித் தொட்டு மகிழ்ந்து அஷ்ட பந்தனம் சாற்றும் பெரும் பேறு எங்களுக்கும் கிட்டியது.. 

தேவ தேவியரின் திருமேனிகளைத் தொட்டபோது எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளை விவரிக்கவே இயலாது.. 

அப்போது என் நெஞ்சில் எழுந்த சொல்மாலை இன்றைய பதிவில்!.. 

மாமணிக் குன்றனைக் கண்டேன்..


நின்றானை இருந்தானைக் கிடந்தான் தன்னை
அன்றானை துயர் தீர்க்க வந்தான் தன்னை
சென்றானை தூதனாய் தூயோன் தன்னை
குன்றானை மாமணிக் கோயில் கண்டேன்!.. 1

கன்றான அசுரனைத் தீர்த்தான் தன்னை
குன்றான குடை கொண்டு காத்தான் தன்னை
வென்றானை வெருண்டு வந்த ஆனை தன்னை
நின்றானை மாமணிக் கோயில் கண்டேன்!.. 2

தந்தானை தங்கைக்குத் தன்கை தன்னை
தந்தானை ஏழைக்கு செல்வம் தன்னை
முன்தானை முகம்நின்று மொழிந்தான் தன்னை
குன்றானை மாமணிக் கோயில் கண்டேன்!.. 3

குழல் கொண்டு கோகுலம் கொண்டான் தன்னை
குழல் கொண்ட கோபியர் கொண்டான் தன்னை
அழல் என்று அசுரர்க்கு ஆனான் தன்னை
நிழல் என்று மாமணிக் குன்றில் கண்டேன்!.. 4

குடங்கொண்ட வெண்ணெயைக் கொண்டான் தன்னை
விடங்கொண்ட நல்லரவை வென்றான் தன்னை
இடங்கண்டு மாமணிக் குன்றந் தன்னில்
தடங்கண்டு தாள் மலரைக் கண்டேன் கண்டேன்!.. 5


படங்கொண்ட அரவணையில் பயின்றான் தன்னை
விடங்கொண்ட கொடியவனைக் குடைந்தான் தன்னை
நலங்கொண்ட  திருமகளைக் கொண்டான் தன்னை
வலங்கண்டு மாமணிக் குன்றில் கண்டேன்!.. 6

அடியார்க்கும் ஆழ்வார்க்கும் இனியான் தன்னை
படியார்க்கும் விடியார்க்கும் அரியான் தன்னை
அழுவார்க்கும் தொழுவார்க்கும் அமுதன் தன்னை
தொழுவார் தம் உடனாகிக் குன்றில் கண்டேன்!.. 7

தூணொன்றில்  தான்தோன்றி வந்தான் தன்னை
நாணொன்றில் சரந்தொட்டு வென்றான் தன்னை
மண்கொண்டு விண்ணையும் அளந்தான் தன்னை
கண்கொண்டு மாமணிக் குன்றில் கண்டேன்!.. 8

பூமகளின் துயர் தீர்க்க வந்தான் தன்னை
பொங்கி அவள் தன்னோடு கலந்தான் தன்னை
நாம நலம் ஆயிரம் தந்தான் தன்னை
தங்கி மாமணிக் குன்றில் கண்டேன் கண்டேன்!.. 9

மாமலர் மங்கையுடன் நின்றான் தன்னை
பூமகள் உடனாய புனிதன் தன்னை
கோமளன் கோகுலன் குழகன் தன்னை
மாமணிக் குன்றனைக் கண்டேன் கண்டேன்!.. 10


நாரணி நாயகன் நாரணன் போற்றி 
பூரணி புண்ணியன் பூரணன் போற்றி
தாரணி தஞ்சையின் தாயவன் போற்றி
வாரணி உமைசிவ பங்கினன் போற்றி!.. 11

ஸ்ரீதேவி பூதேவி உடனாய
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள் 
திருவடிகள் போற்றி..

ஓம் ஹரி ஓம்
***

16 கருத்துகள்:

  1. அருமையான பாமாலை.  மிக அருமை.  அழகாக எழுதி இருக்கிறீர்கள்.  இதை கோவிலிலேயே கூட தரலாம்.   தாளில் அச்சிட்டு கோவிலில் ஓரத்தில் வைத்து விட்டால் கூட இதை தினசரி பாமாலையாக நிறையபேர்கள் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      தாங்கள் சொல்வதைப் போல எனக்கும் எண்ணம் உண்டு..

      பார்க்கலாம்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ஸ்ரீராம் சொல்லியிருப்பதை டிட்டோ செய்கிறேன் துரை அண்ணா. அது போல நீங்கள் ஒவ்வொரு இறைவன், அம்பாள் பற்றியும் எழுதியுள்ளவற்றை அந்தந்தக்கோயிலிலுக்குத் தரலாம் அண்ணா

      கீதா

      நீக்கு
    3. அன்பின் கீதா...

      அப்படியே செய்து விடலாம்..
      தங்களது கருத்திற்ககு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பாமாலை வரிகள் மிகவும் அருமை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஸ்ரீ மணிக்குன்றப்பெருமாளுக்கு உங்கள் பாமலை மிகவும் பிடித்து இருக்கும். மருந்து சாற்றும் கைகரியம் கிடைத்தது மகிழ்ச்சி. உங்கள் பாமாலையை ஸ்ரீராம் சொல்வது போல அச்சடித்து கொடுக்கலாம், அல்லது கோவில் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டு பலகையில் எழுதி வைக்கலாம். கோயிலுக்கு வருபவர்கள் படிக்கலாம்.
    பாமாமலை அற்புதம், வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இது போன்ற எண்ணங்கள் ஆயிரம்.. காலம் கனியட்டும்..

      அன்பின் கருத்தும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு
  4. பாமாலையைக் கண்ணீருடன் படித்தேன். என்ன ஒரு கொஞ்சும் தமிழ்! மிக அழகாக வந்துள்ளது! எல்லாம் அவன் கருணையே அன்றி வேறில்லை. இதை ஓர் கல்லில் பொரித்துக் கோயிலிலேயே எங்கானும் எல்லோர் கண்களும் படும் இடத்தில் வைக்கச் சொல்லலாம். மணிக்குன்றப் பெருமான் புகழ் எங்கும் நிறையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அன்பின் கருத்துரை கண்டு மனம நெகிழ்ந்து விட்டது..

      தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி. நன்றியக்கா..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களும் தாங்கள் இயற்றிய பாமாலையும் மிக அருமையாக உள்ளது. இதனுடன் தொடர்ந்து வந்த பதிவுகளை படித்து ஆனந்தித்தேன்.தங்கள் குடும்பத்திற்கு இறையருள் பரிபூரணமாக கிடைத்திருப்பதற்கு மகிழ்ச்சியடைந்தேன்.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    இறைவனுக்கு மருந்து சாற்றி பிரதிஷ்டை செய்யும் உபசாரங்கள் செய்து உவந்த போது தங்களுக்குள் எழுந்த அருமையான பாமாலையின் வரிகள் எனக்குள்ளும் பக்தியினால் மெய்சிலிர்க்க வைத்தது. மிக அருமையான பாமாலையை இயற்றி இறைவனுக்கு பக்தியுடன் சாற்றியுள்ளீர்கள். ஸ்ரீமணிக்குன்றப் பெருமாள் நம் அனைவரையும் என்றும் நலமுடன் காத்தருள பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நலம் தானே...
      கோயில் விஷேசங்களில் இருக்கும் போதெல்லாம் - - இந்த நிகழ்வுகளை நம்மவர்கள் நேரில் தரிசிக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் .. என்று பதிவுகளின் நினைவினிலேயே இருப்பேன்..

      பதிவில் இந்தப் படங்களின் வழியாக நிகழ்வுகளை அறிந்து மகிழ்ந்து கருத்து எழுதும்போது மிகவும் மகிழ்ச்சியடைவேன்..

      அந்த வகையில் எல்லாருடைய நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பிரார்த்தனை செய்து கொள்வோம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. துரை அண்ணா, உங்களுக்குக் கைங்கர்யம் செய்ய பாக்கியம் கிடைத்தது மகிழ்வான விஷயம். உங்கள் பாமாலை செம. மிக மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தங்களது அன்பினுக்கெல்லாம் கட்டுப்பட்டிருக்கின்றேன்..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி.. நன்றி..

      நீக்கு
  7. எப்படிச் சொல்லி உங்களை பாராட்ட? பாமாலை மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் பாராட்டும் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி.. எல்லாம் அவன் செயல்.. நன்றி வெங்கட்..

      ஓம் ஹரி ஓம்.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..