நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 11, 2018

யாதும் சுவடு படாமல்..

இன்று ஆடி அமாவாசை...

நம் முன்னோர்களுக்கான வழிபாடுகளை இயற்றுதற்குரிய நன்னாள்..

இருப்பினும் -

திருக்கயிலாய தரிசனம் வேண்டிச் சென்ற
திருநாவுக்கரசரைத் தடுத்தாண்டு கொண்ட இறைவன்
திருஐயாற்றில் திருக்கயிலாய தரிசனம் நல்கிய நாள் இது!..
- என்றும் ஆன்றோர்கள் குறித்துள்ளனர்...

அந்த வகையில்,
இன்று திருஐயாற்றில் கோலாகலமாக
திருக்கயிலாய தரிசனத் திருவிழா நிகழ்கின்றது...

சிவசக்தி தரிசனத்தை நாடிச் சென்ற திருநாவுக்கரசர்
திருஐயாற்றில் தாம் பெற்ற திருக்காட்சிகளை
திருப்பதிகத்தில் குறித்தருள்கின்றார்...

காதல் மடப்பிடியோடு களிறு..
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
காதல்மடப் பிடியோடுங் களிறு வருவன கண்டேன்..

கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்...(4/3)

என்று, தொடங்கும் அந்தத் திருப்பதிகம் அன்பர்களுக்கு அமுத விருந்து..

அருள்தரு ஐயாற்றப்பர் - அறம்வளர்த்த நாயகி..
திரு ஐயாறு
திருநாவுக்கரசு ஸ்வாமிகள் -
தான் பெற்ற சிவதரிசனத்தை இறைவனின் திருத் தோற்றத்தைத்
திருப்பதிகங்கள் பலவற்றிலும் நம்பொருட்டு விளம்புகின்றார்...

அந்தத் திருப்பாடல்கள் எல்லாமும் நம் பொருட்டு அருளப்பெற்றவை..

மலையான் மகளோடு திகழும் மாதேவனின் திருக்காட்சியினைக்
குறிக்கும் திருப்பதிகங்கள் பற்பல...

அவற்றுள்,
பாண்டிய நாட்டின் வைகைக் கரையில் திகழும்
திருப்பூவணம் எனும் திருத்தலத்தில் அருளப்பெற்ற திருப்பதிகத்தினை
திருநாவுக்கரசு ஸ்வாமிகள் சிவதரிசனம் பெற்ற
இந்நன்னாளில் சிந்தித்திருப்போம்...

திருத்தலம் - திருப்பூவணம்

ஸ்ரீ திருப்பூவண நாதர்
ஸ்ரீ சௌந்தர்ய நாயகி
இறைவன் - திருப்பூவணநாதர்
அம்பிகை - சௌந்தர்ய நாயகி

தலவிருட்சம் - பலா
தீர்த்தம் - வைகை

ஆறாம் திருமுறை - திருப்பதிக எண் 18..


வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (01)

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட் காரமுதம் ஆகித் தோன்றும்
ஊணாகி ஊர்திரிவான் ஆகித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேல்
சேணாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்
செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (02)


கல்லாலின் நீழற் கலந்து தோன்றும்
கவின் மறையோர் நால்வர்க்கு நெறிகள் அன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலானி முன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலால் எலும்பு புணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (03)

படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும்
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையின் ஒலி தோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமும் கீளுந் தோன்றும்
மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (04)


மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல் நஞ்சுண்டு இருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (05)

பாராழி வட்டத்தார் பரவி இட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்கள் அன்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (06)தன்னடியார்க் கருள் புரிந்த தகவு தோன்றும்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (07)

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும்
திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி அறுத்தருளுந் வகையுந் தோன்றும்
மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே..(08)


அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணி வயிரக் கோவை தோன்றும்
மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றும்
செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (09)

ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி அன்று
தன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று
பலபிறவி அறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத்தமுங்
குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (10)

ஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
வாருருவப் பூண்முலை நன்மங்கை தன்னை
மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவந் தோன்றும்
நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை
நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (11)


அம்மையப்பனின் திருக்கோலத்தினை - 
அப்பர் ஸ்வாமிகள் நமக்குக் காட்டுகின்றார்..

கண் கொண்ட நாம் கண்டு கொள்வோம்
கை கொண்டு பெருமானைத் தொழுது கொள்வோம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
ஃஃஃ 

8 கருத்துகள்:

 1. ஆடி அமாவாசைக்கு நல்லதொரு பகிர்வு. கண்டேன், கண்டேன், திருக்கயிலாயக் காட்சிகள் கண்டேன்.

  பதிலளிநீக்கு
 2. ஆடி அமாவாசைப் பதிவு சிறப்பு. சிவபெருமான் கிருபை வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான பகிர்வு. இன்று வேந்தர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு
  செய்கிறார்கள்.(இரவு 9 மணிக்கு)

  எங்களுக்கு வேந்தர் தெரியவில்லை கொஞ்ச நாளாய்.உங்கள் தளம் மூலம் தரிசனம் செய்து கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. கண்டேன் அவர் திருப்பாதம். கண்டறியாதன கண்டேன். உங்களால். நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பகிர்வு. இப்போது நேரமின்மையால் விளக்கமாக பின்னூட்டமிடவில்லை. நேரம் வாய்க்கும்போது இடுவேன்.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் ஜி
  இன்றைய தரிசனம் நன்று.

  பதிலளிநீக்கு
 7. ஆடி அம்மாவாசை அன்று சிறப்பான பகிர்வு. விரிவான தகவல்களுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு