நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 08, 2017

எங்கே மனிதம்?..

யானையின் பலம் எதிலே - தும்பிக்கையிலே..
மனிதனோட பலம் எதிலே -  நம்பிக்கையிலே!..

- கவியரசர் கண்ணதாசனின் பாடல்..

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் நூறாவது படமான இதயம் பார்க்கின்றது என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் அது..

நம்பிக்கையைப் பலமாகக் கொண்ட மனிதன் நடத்தை -
நன்னடத்தையாக இருக்க வேண்டும்...

சக உயிர்களையும் சக மனிதர்களயும் அரவணைத்துக் காப்பதாக இருப்பதே நன்னடத்தை...

இந்தப் பூமிப் பந்தினுக்கு இயன்றவரை
நல்லனவற்றைச் செய்வதே நல்லொழுக்கம்...

முன்னேற்றம் நவீன தொழில் நுட்பம் என்ற பெயர்களால்
இயற்கையை  அழித்தொழிக்கும் வேலைகளைச் செய்வதே
இன்றைய மனிதர்களுள் பலருக்கும் லட்சியமாயிற்று...


இயற்கை அன்னையின் செல்வங்களுள்
தற்காலத்தில் நாம் காணக்கூடியதாக இருக்கும் பெரிய விலங்கு - யானை..

ஆசிய நாடுகளுள் பாரதத்தில் அதன் பெருமை சொல்லி முடியாதது...

பெரும் சிறப்புகளை உடைய யானைக்கு இழைக்கப்படும் அநீதியும் சொல்லில் அடங்காதவை...

இந்த சம்பவம் எப்போது நடந்ததென்று தெரியவில்லை..

மூணாறில் நடந்துள்ளதாக Fb ல் செய்தி..

அது தங்களுக்காக..


யானைகள் நடமாடும் வனப்பகுதியின்
மலை உச்சியில் சிலுவையை நட்டு வைத்திருக்கின்றார்கள்..

ஏதோ ஒரு யானையால் அந்தச் சிலுவை பிடுங்கப்பட்டு விட்டது...

ஏனெனில் - அது யானையின் வழித்தடம்..

இதை உணர்ந்து கொள்ள இயலாத மனிதர்களால்
யானையின் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..

எங்களிடமா உன் வேலையைக் காட்டுகின்றாய்?.. -
என, யானைகளுக்கு எதிராக சதி வேலை ஒன்றினைச்செய்தனர்...

மீண்டும் சிலுவையை நட்டு வைத்தனர்...

தனது வழித்தடத்தில் மீண்டும், இடையூறா!?..
-  எனக் கருதிய யானை மீண்டும் சிலுவையைப் பிடுங்கியது..

அந்தோ.. பரிதாபம்..
அந்த நொடியில் யானையின் துதிக்கை கிழிந்து போனது...

காரணம் - கூரிய முட்களுடன் கூடிய தகடுகளுடன்
அந்தச் சிலுவை பிணைக்கப்பட்டிருந்தது...

தேவகுமாரனின் குருதியால் சிலுவை நனைந்தது - அக்காலம்..

ஐந்தறிவு விலங்கின் குருதியால் சிலுவை நனைவது - இக்காலம்..

இது நவீன யுகமல்லவா!..

இங்கெல்லாம் எப்படிப்பட்டவர்கள் இருந்தார்கள்?..

ஆனையைக் கொண்டு ஆன்மீகத்தை வளர்த்தவர்கள்...

கருங்கல்லிலே யானையைக் கடைந்தெடுத்து கலையை வளர்த்தவர்கள்...

ஆனால் இன்றைக்கு -

அந்த ஆனையின் வழித்தடம் வாழ்விடம் இவையெல்லாம்
அதே ஆன்மீகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு 
அழித்து ஒழிக்கப்படுகின்றன!..

உணவுக்கும் நீருக்கும் ஏங்கித் தவிக்கின்றது - யானைக் கூட்டம்..

தட்டுத் தடுமாறி அலைகின்ற வாழ்வாகிப் போனது அவற்றில் வாழ்க்கை.. -

துஷ்ட மனிதர்களோடு இணைந்து
மின்கம்பிகளும் இரயில்களும் இதர வாகனங்களும்
யானைகளின் உயிரைப் பறிப்பதில் போட்டி போடுகின்றன...



மேற்கண்ட இரு படங்களும்
நம்நாட்டில் யானைகளுக்கான நிலையைக் காட்டுவன..

ஆனால் -
ஆதரவற்ற யானைக் குட்டிகளுக்கு பாலூட்டப்படுகின்றது - ஆப்பிரிக்காவில்..

இதோ அந்தக் காணொளி அதனைக் கூறும்..


ஜப்பான் நாட்டில் பியூஜி மலையடிவாரத்தில் ஷிஜூகா (Shizuoka) எனும் நகரம்.. 

அங்கே உள்ளது - Fuji Safari Park.. 

அந்தப் பூங்காவில் யானைகளும் பராமரிக்கப்படுகின்றன.. 


அந்த யானைகளுக்காக 65 மீட்டர் நீளமுடைய நீச்சல் குளம் அங்கே இருப்பது சிறப்பு...

நீச்சல் குளத்தில் யானையின் மகிழ்வைக் காட்டும் காணொளி..


துவண்டு திரியும் யானைகளுக்குத் தொண்டு ஏதும் செய்யாவிட்டாலும்
தும்பிக்கை கிழிபடுவதைப் போன்ற வேதனைகளைக் கொடுக்க வேண்டாம்...

ஏனெனில்,
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் 
வாடி இளைத்த வள்ளல் பெருமக்கள் வாழ்ந்த
பெருமையை உடையது இந்த மண்...

இந்த மண்ணும் -
தனக்கொரு பிடி சோற்றினைக் குறைத்துக் கொண்டு -
தம்மை அண்டி நிற்கும் சிற்றுயிர்களைக் காக்கும் மக்களை உடையது..

இந்த மண்ணிற்கு சீரும் சிறப்பும் உண்டாகட்டும்..

எல்லாம் வல்ல எம்பெருமான்
எல்லா உயிர்களையும் காத்தருளட்டும்..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!... 
***

11 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. யானைகளுக்கு எதிரான இத்தகைய கொடுமைகள் கேரளத்தில் ஏராளம். ஆனால் கம்யூனிஸ்டுகள் இவற்றை எதிர்த்துப் போராட மாட்டார்கள். அவர்களுக்கு கிறித்தவ ஓட்டுக்கள் முக்கியம். PETA அமைப்பு கேரளத்தில் உண்டா?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  3. சிலுவையிலுள்ள முள்கள் யானைக்குத் தரும் வேதனையை நினைக்கும்போது வேறு வழியில்லையா என எண்ணத்தோன்றியது.

    பதிலளிநீக்கு
  4. நானும் இந்தச் செய்தியை முகநூலில் பார்த்ததும் திகைத்தேன்.... என்ன கொடுமை..... பாவம் யானைகள் - எந்த விதத்தில் கொடுமைப்படுத்தப்பட்டாலும் - அது கோவிலாக இருந்தாலும் சரி இங்கே சொல்லப்பட்டிருக்கும் தேவாலயமாக இருந்தாலும் சரி, தடுக்கப்படவேண்டியது.

    பதிலளிநீக்கு
  5. மனதை கலங்க வைக்கும் சம்பவம்... மிகவும் கொடூரம்...

    பதிலளிநீக்கு
  6. மனம் பதைத்துப்போனது :(எல்லா உயிரும் இவ்வுலகில் வாழ தகுதியுள்ளவை அனால் மனிதன் மட்டுமே சுயநலமா உலகை தன்னிருப்பிடமாக்க நினைக்கிறான் ...பாவம் யானை ..இனியாவது அரசு கொஞ்சம் கடும் நடவடிக்கைஎடுக்கணும் ..அழிந்த உடலுக்கு முள் சிலுவை பாதுகாப்பா :( வேதனையா இருக்கு .அப்படி சிலுவை வைத்தே ஆகணும்னு கட்டாயமில்லை சிலுவை படத்தை கல்லறை மீதே அச்சாக செய்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  7. சுயநலம் பெருத்துவிட்ட நாடு ஐயா நமது நாடு
    இங்கே ஏது மனிதம்

    பதிலளிநீக்கு
  8. ஏட்டிக்குப் போட்டிதான் அது விலங்காயிருக்கட்டும் மனிதனாய் இருக்கட்டும் யானைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  9. என்ன கொடுமை இது! புத்தி கெட்ட மனிதர்கள். எல்லா உயிர்களும் இவ்வுலகில் வாழ உரிமை பெற்றவையே. பாவம் அந்த யானை...அதற்கு என்ன மருத்துவம் கிடைத்ததோ தெரியவில்லை..பாவம்...எங்குமே கொடுமைப்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். பூரம் என்று சொல்லி யானைக்ளை, காதைப் பிளக்கும் கொட்டு, வெடிச்சத்தத்திற்கிடையில் நிறுத்தி வைப்பது எல்லாமே தடைசெய்யபப்ட வேண்டும்...மனம் வேதனையுற்றது...

    பதிலளிநீக்கு
  10. பாலூட்டும் காணொளி அருமை ரசித்தோம் ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..