நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 29, 2017

மதுரைக்கு வாங்க.. 1

வாத்யாரே!...

டேய்.. பசங்களா!.. எங்கேடா உங்களை இத்தனை நாளா காணோம்?..

நாங்கள்..லாம் வேலை பார்க்கப் போயிருந்தோம்..ல!..

என்னது.. வேலைக்குப் போயிருந்தீர்களா!..

ஆமா.. வாத்யாரே!.. சும்மா ஊரைச் சுத்தி வந்தா துட்டு கெடைக்க மாட்டேங்குது.. அதால... வேலை கிடைக்கிற ஊராப் பார்த்து பொழைக்கப் போனோம்!..

பசங்களா... உங்களுக்கும் அறிவு வந்துடுத்தா?.. அது சரி..
நம்ம ஊர்ல வேலை இல்லேன்னா.. அசலூர் வேலைக்குப் போனீங்க!..

என்னா வாத்யாரே.... ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கிறீங்க!..
இங்கே தான் வயக்காடு கொல்லைக்காடு.. இங்கெல்லாம்
சீமைக் கருவையை வளர்த்து தரிசாப் போட்டுட்டு அப்புறமா மனைக்கட்டு...ன்னு வித்து காசாக்கிட்டாங்களே...

கடலைக் காய் புடுங்கக் கூட கொல்லைக்காடு இல்லாமப் போச்சு..
நாங்க செலவுக்கு என்னா பண்றதாம்!.. அப்பன் ஆத்தாக்கிட்டே கேட்டா ஒதைக்க வர்றாங்க!..

சரி.. அதுக்காக.. எந்த ஊருக்குப் போய் உழைச்சீங்க!...

அதெல்லாம் கேக்காதீங்க.. வாத்யாரே.. இப்ப எங்க கையில ஆளுக்கு ஏழாயிரம் எட்டாயிரம் ..ன்னு இருக்கு...

அடே.. பரவாயில்லையே!.. நல்லாருங்க.. நல்லாருங்க!...

இப்ப எங்கே போய்க்கிட்டு இருக்கோம் தெரியுமா?...

தெரியாதே?..

நகைக் கடைக்கு!.. ஆளாளுக்கு ஒரு மோதிரம் வாங்கப் போறோம்!..

சரி.. வாங்குங்க!.. ஆனா.. இன்னைக்கு ஏன் வாங்கணும்?..

இன்னிக்குத் தானே அச்சய திரி!..

அது அச்சய திரி இல்லை.. அக்ஷய திரிதியை!..

சரி.. ஏதோ ஒன்னு!... நாங்க சீக்கிரம் போவனும்... இப்பவே கூட்டம் அங்கே அடிச்சிக்கிட்டு நிக்குதாம்!... இன்னைக்கு தங்கம் வாங்கினா வருசம் பூரா வாங்கலாமாம்...

டேய்.. பசங்களா... நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா!..

சொல்லுங்க வாத்யாரே... உங்க பேச்சை என்னைக்காவது தட்டியிருக்கோமா?.. 

சரி.. அப்ப.. கேளுங்க... அக்ஷய திரிதியை அன்னைக்கு நகை வாங்கனும்..ன்னு எந்த சாஸ்த்ரத்திலயும் சொல்லலையாம்..

ஆனா,  விளம்பரம் எல்லாம் அப்படித் தானே சொல்றாங்க!..

அது உங்க கிட்ட இருக்கிற காசு பணத்தைக் கறக்கறதுக்கு!..

அப்புறம்?..

இந்த அக்ஷய திரிதியை அன்னிக்கு தான தர்மம் செய்றதும் கோயிலுக்குப் போறதும் இல்லாதவங்களுக்கு உதவுறதும் தான் நல்லது - அப்படின்னு பெரியவங்க சொல்றாங்க!...

அப்படி..ன்னா இன்னிக்கு நகை வாங்குறவங்க எல்லாம் முட்டாளுங்களா!..

இன்னிக்கு உங்கிட்ட இருக்கிற தங்கத்தை கொண்டு போய் நகைக் கடையில விற்க முடியுமா....ன்னு பாருங்க!..

.......? .......? ......?..

நகை வாங்குறது நல்லது...ன்னு சொல்ற கடைக்காரன் உங்கிட்ட இருந்து வாங்கிக்க மாட்டான்.. அவங்கிட்ட இருக்கிறதை விக்கிறது தான் நோக்கமே!.. இப்ப புரியுதா!...

இப்ப என்ன வாத்யாரே.. செய்யிறது?..

மனசுக்கு சந்தோஷமா சாப்பிடுங்க... கோயிலுக்குப் போங்க... யாராவது ஏழைக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்க.. இஷ்டம்..ன்னா சட்டை துணிமணி எடுத்துக்குங்க.... இதெல்லாம் கஷ்டம்..ன்னா பிள்ளையார் கோயில் தோப்புல தென்னை மரத்துக்கு ரெண்டு குடம் தண்ணி தூக்கி ஊத்துங்க!..

வாத்யாரே... நல்லது சொன்னீங்க.. சரி.. நீங்களும் வாங்க.. போய் டிபன் சாப்பிட்டு வருவோம்...

டேய்.. நான் எதுக்குடா?.. நீங்க போய்ட்டு வாங்க!..

வாத்யாரே... நீங்க சொல்றதை நாங்க கேக்குறோம்..ல... அதே மாதிரி நாங்க சொல்றதையும் நீங்க கேளுங்களேன்.. அப்ப தானே எங்களுக்கும் சந்தோஷம்!..

சரி.. உழைச்ச காசு..ல உங்க அப்பா அம்மாவுக்கு என்னடா செஞ்சீங்க!...

வீட்டுக்கு மளிகைச் சாமான் வாங்கிப் போட்டோம்... கைச் செலவுக்குக் காசு கொடுத்தோம்.. எங்க அப்பா கட்டிப் புடிச்சி ஆனந்தக் கண்ணீர் விட்டார்...

இருக்காதா பின்னே!..

சரி.. சரி.. நீங்க கிளம்புங்க!..

இருங்கடா பசங்களா.. இந்த கம்ப்யூட்டரை நிறுத்தி விட்டு வர்றேன்...

வாத்யாரே.. அதென்ன... ஏதோ திருவிழா மாதிரி... பொண்ணுங்க...ல்லாம் கோலாட்டம் ஆடுதுங்க!..


இதுவா... இது மதுரை மீனாட்சியம்மன் கோயில்ல சித்திரைத் திருவிழா... நேத்து கொடியேற்றம் ஆகியிருக்கு.... பத்து நாளைக்கு ஜகஜ்ஜோதியா இருக்கும்... மீனாட்சி கல்யாணம்... அப்புறம் தேர்... அப்புறம் அழகர் ஆற்றுல இறங்குவார்... லட்சக் கணக்குல ஜனங்க கூடுவாங்க.. தமிழ் நாட்டுல பெரிய திருவிழா அது!...

அப்படியா.. நமக்கு இதெல்லாம் தெரியாம போச்சே.. எங்கே அந்தப் போட்டோ எல்லாம் காட்டுங்க!.. பார்ப்போம்!..

ம்ம்.. பாருங்க!..

28/4 வெள்ளிக்கிழமை காலை
திருக்கொடியேற்றம்






28/4 வெள்ளிக்கிழமை
முதலாம் திருநாள்

-: இரவு :-
சுந்தரேசர் கற்பக விமானத்திலும்
அங்கயற்கண்ணி சிம்ம வாகனத்திலும்
திருவீதி எழுந்தருளினர்..









வாத்யாரே!... இந்த போட்டோ எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைச்சது?...

குணா அமுதன், ஸ்டாலின், அருண் .. அப்படி..ன்னு நமக்கு வேண்டியவங்க!.. அழகா படம் எடுத்து அனுப்புனாங்களே.. அதுக்கு நன்றி சொல்லணும்...

வாத்யாரே!... இந்த சாமி படத்தில ரெண்டு கொடுங்களேன்!..

ஓ.. தாராளமா... உங்களுக்கு இல்லாததா!..

மீனாட்சியம்மா கண்ணுக்குள்ள நிக்கிறா.. வாத்யாரே!...


அவள் தான்.. இந்த உலகத்துக்கே தாய்..
அவள் தான்.. மக்களப் பெத்த மகராசி!.. 
அவள் தான்.. உண்மையிலயே தங்கம்..
அவள் தான்.. படியளக்கிற பரமேஸ்வரி!..

நம்மைத் தேடி வரும் தங்கம் அவள் தானடா!..
இந்தத் தங்கம் இருக்கிறப்ப வேற தங்கம் எதுக்குடா!..
***

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ 
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ 
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ 
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!..(6/95)
- திருநாவுக்கரசர் - 

மீனாக்ஷி சுந்தரேசர் திருவடிகள் போற்றி..
ஓம் நம் சிவாய சிவாய நம ஓம்!.. 
***

7 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய உரையாடலின் வழியே ரசிக்ககூடிய பதிவு அருமை
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. நகைக்கடைல நகை நம்ம கிட்ட வாங்க மாட்டான்! இது நல்ல தகவல். வியாபாரிகள் ஏதேதோ ஏமாற்றி வியாபாரம் பார்க்கிறார்கள். மக்களும் கவலையில்லாமல், யோசிக்காமல் ஜோதியில் கலக்கிறார்கள்!

    மதுரையில் இருந்தவன் நான். சித்திரைத் திருவிழா கோலாகலங்களை கண்டு ரசித்தவன். பணியின் காரணமாக இப்போதெல்லாம் அங்கு போகமுடியவில்லையே என்று கஷ்டமாகத்தான் இருக்கிறது. மதுரைத் திருவிழாவை மிஸ் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கருத்துரைகள் நண்பரே!.. மதுரைத் திருவிழாக்கள் பார்க்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  4. சித்திரை மாதத்தில் ஓராண்டு மதுரையில் பயணத்தில் இருந்தோம் அதே டூரில் ஒரு திருமணம் தென்காசியில் இருந்தது நீரில்லா குற்றாலமும் கண்டோம் பதிவு நினைவுகளைக் கிளறுகிறது நன்றி

    பதிலளிநீக்கு
  5. மதுரை சித்திரை திருவிழா படங்களும் தகவல்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  6. மதுரைத் திருவிழா பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது. படங்களும் தகவல்களும் வெகு சிறப்பு..தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..