நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 01, 2017

மார்கழிப் பூக்கள் 17

தமிழமுதம்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையின் மாணப் பெரிது..(124)
***
ஔவையார் அருளிய
நல்வழி



சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்..
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 17


அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ சாரநாதப் பெருமாள் - திருச்சேறை
அயல்நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி
உயநின் திருவடியே சேர்வான் நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாராயணா என்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது..(2138)

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
வீரட்டானத் திருத்தலங்கள்

ஏழாவது திருத்தலம்
திருக்குறுக்கை


இறைவன் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஞானாம்பிகை
தீர்த்தம் - சூலதீர்த்தம்
தலவிருட்சம் - கடுக்காய்

இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான்
இந்தக் கொடுமைகளைச் சகித்துக் கொண்டிருப்பது..
இனிமேல் நமக்கு விடிவு என்பதே கிடையாதா!?..

சற்றும் யோசிக்காமல் அன்றைக்கு
ஈசனைப் புறக்கணித்து
தட்க்ஷன் செய்த வேள்வியில் அவிர் பாகம்
உண்பதற்குச் சென்றீர்கள் தானே!..
அந்த குற்றத்திற்கான பலன்கள்
இப்போது ஆரம்பமாகியிருக்கின்றன..

இதற்கு முடிவு தான் என்ன!?..

தட்க்ஷனால் வளர்க்கப்பட்ட மேனியை உதறித் தள்ளிவிட்டு
பர்வத ராஜனின் மகளாக இமயமலைச் சாரலில்
அம்பிகை வளர்ந்து வருகின்றாள்..

சிவம் தவமாகி விட்டது..
சிவனே என்று ஆலமரத்தடியில் சனகாதி முனிவர்களுடன்
யோக நிஷ்டையில் அமர்ந்து விட்டார்..

ஈசனுக்கும் அம்பிகைக்கும்
திருக்கல்யாணம் நிகழ்வுற வேண்டும்..
அதுவன்றி ஆகக்கூடியது யாதொன்றும் இல்லை..

நம்மால் அது எவ்வாறு ஆகக்கூடும்...

ஆகும்.. ஈசனின் யோக நிலையைக் கலைத்தால்!..

யோக நிலையைக் கலைப்பதா?.. பெருங்குற்றமாயிற்றே!..

உலக நன்மைக்காகத் தானே செய்கின்றோம்!..

அங்ஙனமாயின் அதை முன்னின்று செய்யக்கூடியவர் யார்?..

அங்கன்!..

அங்கனா!?.. அவன் விடலைப் பொடியன் ஆயிற்றே!..
அல்லும் பகலும் அனவரதமும்
அன்னநடை ரதியுடன் கூடிக் களிப்பவனாயிற்றே!..

அவனால் தான் இயலும்.. அவனை அழைத்து வாருங்கள்!..

சற்றைக்கெல்லாம்
அங்கனாகிய மதன் - மன்மதன்
ரதி தேவியுடன் வந்து சேர்ந்தான்!..

நான்முகன் முதலான 
இந்திராதிதேவர்களை வணங்கி நின்றான்..

மிகவும் பக்குவமாக
அவன் செய்யவேண்டியதை 
அவனிடம் விவரித்தனர் -  தேவர்கள்..

ஈசனின் மீது மலர்க்கணை தொடுப்பதா!?..
அதன் பின் நாங்கள் பிழைப்பதா?..
இது அடுத்துக் கெடுப்பதா?..
இல்லை.. அழைத்துக் கெடுப்பதா?..

ரதிதேவிக்கு கோபம் பொங்கி வந்தது..

மன்மதனோ மனம் மகிழ்ந்து நின்றான்..

யாருக்கும் கிட்டாத பேறு கிட்டியுள்ளது..
ஈசனின் யோகத் தீயை அவிக்க வேண்டும்..
அவருள் மோகத் தீயை வளர்க்க வேண்டும்..
அவ்வளவு தானே!..

வேண்டாம் இந்த ஆசைத் தீ!....
உங்களை அழித்து விடும் ஐயனின் ஞானத் தீ!..

கடைக்கண்களில் இருந்து நீர் வழிய
ரதி தன் காதல் மணாளனுக்கு வரும் பொருள் உரைத்தாள்..

காதலியின் கண்ணீரைக் கண்டு அதிர்ந்தான் மன்மதன்...
அவன் மனம் நெகிழ்ந்தது..

இல்லை.. ஸ்வாமிகளே.. வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள்..
நாங்கள் வருகின்றோம்!..

மன்மதனே.. நில்!.. தேவேந்திரனின் ஆணை இது!..
மறுத்து நீ சென்றால் பின் விளைவுகள் மோசமானதாக இருக்கும்!..

ஒத்துக் கொண்டால் மட்டும் பின் விளைவுகள் நல்லனவாக இருக்குமா?..
என் அன்பே!.. விதி வலியது.. இருதலைக் கொள்ளி எறும்பானேன்..
இனியவளே!.. இவர்களை விடவும் ஈசன் இனியவன்!..
நடப்பது நடக்கட்டும்.. நீ கலங்காதிரு!..

ரதியை ஆரத் தழுவிக் கொண்டான்..

இருங்கள்.. நானும் தங்களுடன் வருகின்றேன்..
நீங்களின்றி என்னால் ஆகக்கூடியதும் உளதோ?..
வாழ்வு தாழ்வு - எதுவானாலும் இருவருக்குமாகட்டும்!..

அந்த அளவில் இந்திர சபையிலிருந்து விடைபெற்றுக் கொண்டு
திருக்கயிலாய மலையினை வந்தடைந்தார்கள்!..

அதோ.. அங்கே சிவம் தவமாக வீற்றிருக்கின்றது..

கயிலை நாதனைக் கண்ட மாத்திரத்தில்
ரதி கலக்கமுற்றாள்..

அன்பே!.. இப்போதும் கெட்டு விடவில்லை..
எம்பெருமான் மீது மலர்க் கணை தொடுப்பதை விட
அவரது கால் மலர்களைப் பிடித்துக் கொள்ளலாம்..

ரதி!.. ஆனது ஆயிற்று.. இதற்கு மேல்
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பெருமைதான்!..

மன்மதனின் மனத்துள் பெருங்கர்வம் மூண்டிருந்தது..

இதுவரையில் எனது பாணங்களுக்குத் தப்பியவர் யார்?.. 
ஆனானப்பட்ட முனிவர்களே தேவகன்னியரைக் கண்டு 
நிலை தடுமாறவில்லையா!..

இதோ.. இப்போது ஈசன்.. கண்களுக்கு எதிரில்.. 
எனது கணைகளுக்கு எதிரில்!..
சோமேஸ்வரன் இனிமேல் காமேஸ்வரன்!..

அவனது உடலெங்கும் ஆனந்த கர்வம்
அலை அலையாய்ப் பாய்ந்து கொண்டிருந்தது

தனது கரும்பு வில்லினில் 
மலர்க்கணைகளைப் பூட்டி நாணேற்றினான்..


வெண்ணிலவைக் குடைபிடித்து வீசு தென்றல் தேரேறி
மென்குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி கனகமணிப் பொற்பாவை
அன்னநடை ரதியுடனே அழகு மதன் வில்லேந்தி
தண்முல்லை தாமரை மா தனி நீலம் அசோகம் என
வண்ண மலர்க்கணை தொடுத்தான் வையமெல்லாம் வாழ்க என்றே!..


வில்லில் இருந்து மலர்க்கணை புறப்படும் முன்பே
ஈசன் எம்பெருமானின் நெற்றிக் கண் மலர்ந்தது..

ஈசனை நோக்கி மலர்க் கணை விடுபட்ட வேளையில்
நெற்றிக் கண்ணில் தோன்றிய தீப்பொறி
மன்மதன் மேல் பாய்ந்தது..

அந்த அளவில்,
வேள் எனும் விடலைப் பொடியன்
சுடலைப் பொடியாகி மண்ணில் வீழ்ந்தான்..

திடுக்கிட்ட ரதி மயக்குற்று சாய்ந்தாள்..

திருமணக்கோலம் - திருமணஞ்சேரி
அங்கன் எனும் மன்மதன் பின்னாளில்
ஈசன் அம்பிகை திருமணவேளையில்
அனங்கன் என உயிர் பெற்றாலும்
வென்றவர் யார்?..

வேள் எனும் மன்மதனா?..
விமலன் எனும் எம்பெருமானா?..

விடையில்லாத வினா!..

இந்தத் திருவிளையாடல்
நிகழ்வுற்றது திருக்கயிலையில்!..

செயற்கரிய செய்யும் வேளையில்
சிறுமதியில் செறுக்குற்று அழிந்தான் -  மன்மதன்

இதனை மானிடர்க்கு நினைவூட்டுவதே
திருக்குறுக்கை வீரட்டானத்தின் தலபுராணம்..

வீரட்டானத் தலம் காமாங்கநாசினி சபை ஆகும்..

முறையற்ற காமத்தினால் விளைந்த குற்றங்கள்
இத்தலத்தில் அகல்வதாக ஐதீகம்..  

இன்றைய நாளில் இத்தலம் கொறுக்கை எனப்படுகின்றது..
மயிலாடுதுறையில் இருந்து திருக்குறுக்கைக்கு 
நகர பேருந்துகள் இயங்குகின்றன..


இத்தலத்தை திருநாவுக்கரசர் பதிகம் பாடித் துதித்துள்ளார்..

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

தழைத்ததோர் ஆத்தியின் கீழ்தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின்பாலைக் கறந்து கொண்டாட்டக் கண்டு
பிழைத்ததன் தாதைதாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே!..(4/49)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம்



தோலும் துகிலுங் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ கனக துர்கா - விஜயவாடா..


நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே..(050) 
- அபிராமிபட்டர் -


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. அருமை இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான பகிர்வு.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பகிர்வு. தங்களின் முந்தைய பகிர்வுகளையும் வாசித்தோம் ஐயா.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..