நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 25, 2017

சத்தியமே லட்சியமாய்..
அறவழியில் நிகழ்ந்த போராட்டம் அடிதடியால் நிலைகுலைந்து போனது..

பாரம்பர்யத்தைக் காப்பதற்கு முனைந்து நின்ற போராட்டத்தை
முடித்து வைத்தனர் - மிகக் கொடூரமாக!..

காவல் பணியில் இருக்கின்றவர்களே -
ஆட்டோவுக்கும் குடிசை வீட்டுக்கும் தீவைக்கின்றனர்..

வீட்டு வாசலில் அஞ்சி நடுங்கியபடி ஒதுங்கியிருக்கும் பெண்ணை
கைத் தடி கொண்டு விளாசுகின்றனர்..

ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை உடைக்கின்றனர்..  புரட்டிப் போட்டு மூர்க்கத்தைக் காட்டுகின்றனர்...

அடிதடியால் நிலைகுலைந்து கிடக்கும் பெண்ணைச் 
சுற்றியிருப்பவர்களை முரட்டுத்தனமாக வெளுத்து வாங்குகின்றனர்..  

காவல் பணியில் இருந்தவர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டு இன்னமும் மனம் ஆறவில்லை....

சிறியவர் பெரியவர் எனத் திரண்டிருந்த கூட்டத்தினுள் நிகழ்ந்தப்பட்ட
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்களும் மற்றவர்களும் நலமடைவதற்கு வேண்டுவோம்...


இந்த சூழ்நிலையில் -

நீலமலைத் திருடன் (1957) எனும் திரைப் படத்திற்காக 
கவிஞர் திரு. மருதகாசி அவர்கள் எழுதிய பாடல் நினைவுக்கு வருகின்றது..

காலத்தை வென்று நிற்கும் இந்தப் பாடல் 
பற்பல விஷயங்களை உள்ளடக்கியிருப்பதை உணரலாம்!..

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடற வைத்துத் தள்ளப்பார்க்கும் குழியிலே!..
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா.. - நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா!..

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..

குள்ள நரிக்கூட்டம் வந்து குறுக்கிடும்..
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா..
அவற்றை எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா!..

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..

திரையிசைத் திலகம் K.V.  மகாதேவன் அவர்கள் இசையில் 
T.M. சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் இதோ பாடல் ஒலிக்கின்றது..


ஏறு போல் பீடு நடை!..
தமிழ் கூறும் சொல் வழக்கு..

பீடு கொண்டு நடந்த பெரும் போராட்டத்தில்
கலந்து கொண்டு பங்களித்தவர்களை விட
இதில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே!.. 
- என, வருத்தப்படுவோர் ஆயிரம்.. ஆயிரம்!..


இந்த மண்
எத்தனை எத்தனையோ 
மாற்றங்களைக் கண்டிருக்கின்றது!..

ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 
ஆர்வங்கொண்டு
பாரம்பர்யம் காப்பதற்கென - பண்பாடு தவறாமல்
கடற்கரை மணலோடு மணலாகக் கிடந்தார்கள்!..

அவர்களைக் கண்கொண்டு நோக்காமல்
அடித்து நொறுக்கியது காவல் துறை!..

அழுத கண்ணீரும் சிந்திய செந்நீரும் 
பயனற்றுப் போனதாக சரித்திரமே இல்லை..

நிகழ்ந்த வேதனைகளை மறக்க முயற்சிப்போம்... 

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.. (987)

வாழ்க தமிழினம்..
வளர்க தமிழினம்!.. 
***

12 கருத்துகள்:

 1. நல்லதொரு பாடலுடன் பிரார்த்தனை. வருங்காலத்திலாவது அதிகார வர்க்கத்தின் அராஜகங்கள் ஒழிந்து நீதியும், நேர்மையும் நிலைபெற வேண்டும். காலம் மாறும்.

  பதிலளிநீக்கு
 2. பொருத்தமான நேரத்தில், மிகப்பொருத்தமான, அர்த்தமுள்ள பாடலுடன் கூடிய அருமையான பகிர்வு.

  பாராட்டுகள். வாழ்த்துகள். நல்லதே நடக்கட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஜி பொருத்தமான மருதகாசியாரின் பாடலுடன் பகிர்வை தந்தமைக்கு நன்றி
  நிச்சயம் ஒருநாள் வெல்லும் இது மக்களுக்கு ஒரு பாடமே...

  பதிலளிநீக்கு
 4. மிகப் பொருத்தமான பாடல். மாணவர்கள் வாங்கிய ஒவ்வோர் அடிக்கும் அரசு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. மனதைக் கனக்க வைத்த பதிவு.

  பதிலளிநீக்கு
 5. சத்தியமே இலட்சியமாய் கொண்ட
  மாணவர்களால்
  இன்று
  தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறதய்யா

  பதிலளிநீக்கு
 6. திரைப் பாடலும் குறளும் மிகவும் என்னை கவர்ந்தன ஐயா...

  (இவைகளையும் அடியேன் பதிவில் இணைக்க நினைத்திருந்தேன்...)

  பதிலளிநீக்கு
 7. பொருத்தமான பாடல். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 8. வீரமிகு பாடல் ஐயா ..கேள்விப்படும் ..காணொளியில் கண்ட சம்பவங்கள் கலக்கமடைய வைக்கின்றன ,,பிரார்த்திப்போம் நல்லதே நடக்கட்டும் .ஏழை எளியோர் பொதுமக்கள் பத்திரமாக இருக்கணும்

  பதிலளிநீக்கு
 9. தங்கள் எண்ணமும் வேட்கையும் பொருத்தமானதே. இளைஞர்களின் எழுச்சி
  உரிய நேரத்தில் உரியமுறையில் மீண்டும் வெளிப்படும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால் ஒருமுறை சூடுபட்டுவிட்ட அரசியல் கட்சிகள், மீண்டும் ஒருமுறை சூடுபோட்டுக்கொள்ள தயாராவார்களா என்பது கேள்விக்குறியே. எச்சரிக்கையாக இளைஞர்கள் செயல்படவேண்டிய தருணம் இது. - இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
 10. மிகவும் பொருத்தமான பாடல்! நிச்சயமாக மீண்டும் எழுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. ஆனால் கட்சிகள் அதை எப்படி எதிர்கொள்வார்கள் இல்லை அதிகாரம் ஓங்குமா என்பதும் தொக்கி நிற்கும் கேள்வி. எனவே இளைஞர்கள் சிறிது அரசியல் நுணுக்கங்களை, அது செயல்படும் விதத்தை ஆராய்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 11. மனது கனத்தது. வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

  பதிலளிநீக்கு
 12. ஒரு நல்ல தலைவன் இல்லாத போராட்டம் அதிகாரத்தால் உடைக்கப்படுவது என்னென்னவோ சிந்தனைகளை எழுப்புகிறது

  பதிலளிநீக்கு