நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 28, 2016

மார்கழிப் பூக்கள் 13

தமிழமுதம்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு..(396)
***
ஔவையார் அருளிய
மூதுரை

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்..
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 13


புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்த்துக் கலந்தேலோர் எம்பாவாய்!..

உதயத்திற்கு முன்பு பிரகாசமாக விடிவெள்ளி
விடிவெள்ளி எனப்படும் வெள்ளி (Venus) விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே வானில் தோன்றிவிடும்..
இவ்வேளையில் சூரியனுக்கு நேர் எதிரே வியாழன் (Jupiter) மறையும்..

இந்நிகழ்வு மார்கழியில் சமச்சீராக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்..

இதையே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
திருப்பாடலில் குறித்தருள்கின்றனள்.. 
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ பார்த்தசாரதி - திருஅல்லிக்கேணி
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்நெஞ்சே என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு..(2122)

ஓம் ஹரி ஓம் 
***

சொல்லின் செல்வனாகிய
அஞ்சனை மைந்தன்
ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் 
திருஅவதாரத் திருநாள் - இன்று..



புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்

அஞ்சனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ரம்மசாரினம்
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்தம் உபாஸ்மஹே

ஸ்ரீ ராமதூத மஹாதீர ருத்ர வீர்ய ஸமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்ர நமோஸ்துதே

அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர்க் குலத்துதித்த சிலையணி ராமதூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பருக்கென்றும்
அஞ்சல் என்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே!..

ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்!..
***

சிவ தரிசனம்
வீரட்டானத் திருத்தலங்கள்

மூன்றாவது திருத்தலம்
திருஅதிகை


இறைவன் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரர், திரிபுராந்தகர்
அம்பிகை - ஸ்ரீ பெரியநாயகி, திரிபுரசுந்தரி 
தீர்த்தம் - சூலகங்கை, கெடில நதி.
தலவிருட்சம் - சரக்கொன்றை

ஆணவத்தால் அசுரர்கள் அழிந்த மற்றுமொரு சம்பவம்
திருஅதிகைப் பதியில் நிகழ்ந்தது..

வித்யுந்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் எனும் மூவரும்
இறைவனை நோக்கித் தவமிருந்து
பொன்,வெள்ளி மற்றும் இரும்பு எனும் அரண்களைப் பெற்றனர்..

நினைத்த இடத்திற்கு அந்த அரண்களுடன் பறந்து 
செல்வதற்கு அவர்களால் இயலும்..

தகுதிக்கு மீறிய வரம் அவர்களுக்குக் கிடைத்ததால்
அவர்களால் ஓரிடத்தில் சும்மா இருக்க முடியவில்லை..

பல பகுதிகளுக்கும் பறந்து சென்று 
பற்பல அழிவுகளை உண்டாக்கினர்..

இவர்களை அழிக்க வேண்டி நின்றனர் தேவர்கள்..

அதற்கு இசைந்த ஈசன் - தேவதச்சனை நோக்கி
மகாரதம் ஒன்றினை உருவாக்குமாறு
ஆக்ஞையிட்டார்..

அதன்படி உருவாக்கப்பெற்ற தேரின் 
சகல பாகங்களிலும் தேவர்கள் கலந்து நின்றனர்..

இறைவன் அத்தேரில் எழுந்தருளும் போது
தேரின் பாகங்களாக இணைந்திருந்த தேவர்கள் 
ஒவ்வொருவரின் மனங்களிலும்
நம்மால் தான் இக்காரியம் நிகழயிருக்கின்றது!..
எனும் ஆணவம் தோன்றியது..

அதனை உணர்ந்த எம்பெருமானின் திருமுகத்தில் 
புன்னகை மலர்ந்தது...

அந்த அளவில் மகாரதம் இற்று வீழ்ந்து 
பொடியாகிப் போனது..

ஈசனின் இளநகையில் தோன்றிய தீப்பொறியினால்
மூன்று அசுரர்களும் அவர்களுடைய அரண்களோடு 
சாம்பலாகிப் போயினர்...


அவ்வேளையில் 
ஸ்ரீஹரிபரந்தாமன் நந்தியம்பெருமானாக 
உருமாறி ஈசனைத் தாங்கி நின்றார்..

ஹரிபரந்தாமனின் இத்திருக்கோலமே
மால்விடை எனப் புகழப்படுவது...

ஐயனுக்காக அமைந்த மகாரதம் 
இற்றுப் பொடியாக வீழ்ந்ததற்குக் காரணம்
விநாயகப் பெருமான்!.. என்றொரு வழக்குண்டு..

அதனை வலியுறுத்துபவர் அருணகிரிநாதர்...

அசுரர்களை ஈசன் அழிக்கவில்லை.. 
அவர்களுக்கு அருளே புரிந்தனன்!.. -
என்பதாக உரைப்பவர் ஞானசம்பந்தப் பெருமான்..

ஆணவம் அழிந்த நிலையில் அசுரர்கள் மூவரும்
திருக்கயிலையில் காவற்பணியில் இருக்கின்றனர்!..
என்று மொழிபவர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்..

இந்நிலையில் திருமூலர்
கூறியருள்வது - இவ்வாறு..

அப்பணி செஞ்சடை ஆதிபுராணன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே!..
- திருமந்திரம் -



திருவாமூர் எனும் திருவூரில் புகழனார் மாதினியார் தம்பதியர்க்குத் தோன்றிய மக்களே திலகவதி மற்றும் மருள்நீக்கியார்..

விதிவலியால் திலகவதிக்கு
நிச்சயிக்கப்பட்ட மணமகன் வீரசுவர்க்கம் அடைந்தார்..
அதிர்ச்சியில் தாய் தந்தையர் விண்ணுலகம் புகுந்தனர்..

தாய் தந்தையரை இழந்து நின்ற திலகவதியார்
மாறாச் சோகத்தினால் தம்பியையும் பிரிந்தார்...

திலகவதியார் நோன்புக் கோலம் நோற்று
சிவப்பணி செய்த திருத்தலம்
திருவதிகை..

சமணம் சென்றடைந்த மருள்நீக்கியார்
மனம் திருந்தி சைவத்தைச் சரணடைந்தது
இங்குதான்..

அவருக்குள் விளைந்திருந்த சூலை நோய் தீர்ந்தது
திருவதிகையில் தான்!..

மருள் நீக்கியார் மனம் உவந்து ஈசன் எம்பெருமானை வேண்டி
முதல் பாடல் பாடியது திருவதிகையில் தான்!..

கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே!.. (4/1)

மருள்நீக்கியாரின் பாடலைக் கேட்டு 
மனமகிழ்ந்த ஈசன் அவருக்கு
திருநாவுக்கரசர்!.. 
- எனத் திருப்பெயர் சூட்டியது இங்குதான்!..

சைவ சமயாச்சார்யர்கள் முதல் மூவருள் மூத்தவராகிய
திருநாவுக்கரசரின் திருப்பாடல்களே தேவாரம் என்பன..

- திருப்பதிகம் அருளியோர் - 
திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், 
சுந்தரர்..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய 
தேவாரம்


எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி
கற்றார் இடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி!.. (6/5)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
குயிற்பத்து


நீல உருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகிற் றிகழும் கொடிமங்கை உள்ளுறைக் கோயில்
சீலம் பெரிதும் இனியதிரு உத்தர கோசமங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வரக்கூவுவாய்!..
***

தேவி தரிசனம்

ஸ்ரீ திரிபுர சுந்தரி


பரிபுரச் சீரடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே..(043)
- அபிராமிபட்டர் -

மார்கழிப் பதிவுகளுக்கான திருத்தலங்களையும்
திருப்பாடல்களையும் முன்பே குறித்து வைத்திருக்கின்றேன்..

ஆனால், இதற்கு இது என்று இணைத்து வைக்கவில்லை..
  
இன்றைய திருத்தலமான திருவதிகையைக் குறித்து
தகவல்களைப் பதிவு செய்து கொண்டிருந்த பொழுதில்

மேற்குறித்த திருப்பாடலை
அம்பிகை அவளே இணைத்தாள்..

இத்திருப்பாடலில் திரிபுர சம்ஹாரத்தின் போது
ஈசனுடன் அம்பிகையும் உடனிருந்ததை
அபிராமிபட்டர் சொல்கின்றார்..

அம்பிகை அவளருள் ஏதென்று சொல்லுவதே!.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. திருவதிகை, திருவாய்மூர் சென்றுள்ளேன். மார்கழிப்பாடல்களைப் படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஏற்கனவே படித்த வரிகள் எனினும், மீண்டும் இங்கே ஆழ்ந்த புலமையுடன்,, அழகிய படங்கள்,, தொடர்கிறேன்,,,

    பதிலளிநீக்கு
  3. படங்கள், தகவல்கள் என அனைத்துமே அருமை.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..