நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 22, 2016

மார்கழிப் பூக்கள் 07

தமிழமுதம்

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 
போற்றி ஒழுகப் படும்.. (154) 
***

ஔவையார் அருளிய
மூதுரை

அட்டாலும் பால்சுவையில் குன்றாது அளவளவாய்
நட்டாலும் நண்பரல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்..
* * *

அருளமுதம்

ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

திருப்பாடல் - 07


கீசுகீசு என்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ திருமழிசையாழ்வார் அருளிய 
திருப்பாசுரம்


ஸ்ரீ குருவாயூரப்பன்
வெய்யவாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்துசீர்க்
கையசெய்ய போதில்மாது சேருமார்ப நாதனே
ஐயிலாய வாக்கைநோய றுத்துவந்து நின்னடைந்து
உய்வதோரு பாயம்நீயெ னக்குநல்க வேண்டுமே.. (848)

ஓம் ஹரி ஓம்
* * *

சிவ தரிசனம்
பஞ்ச பூதத்திருத்தலங்கள்

இரண்டாவது திருத்தலம்
வாயு

திருக்காளத்தி


இறைவன் - திருக்காளத்தியப்பர்
அம்பிகை - ஸ்ரீ ஞானப்பூங்கோதை
தீர்த்தம் - பொன்முகலி ஆறு
தலவிருட்சம் - மகிழ மரம்

பஞ்சபூதங்களுள் வாயுவின் பகுப்பாக விளங்கும் 
இத்திருத்தலம் இன்றைய நாளில் 
காளஹஸ்தி என்று வழங்கப்படுகின்றது..


சீ எனும் சிலந்தியும் காளம் எனும் நாகமும் 
ஹஸ்தி எனும் யானையும் 
வணங்கிப் பேறுபெற்ற திருத்தலமாகும்..

இப்போதெல்லாம் 
ராகு கேது பரிகார தலம் என்றால் தான் புரிகின்றது..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..
அம்பிகையின் சக்தி பீடங்களுள் ஞானசக்தி பீடமாகத் திகழ்கின்றது..

இங்கே ஆழத்துப் பிள்ளையார் சந்நிதி சிறப்பு..

ஸ்வர்ணமுகி எனும் பொன்முகலியாற்றின் கரையில் 
முப்பதடிக்கும் மேற்பட்ட பள்ளத்தினுள் 
பிள்ளையார் வீற்றிருக்கின்றார்..


திருத்தலம் மிகப் பழைமையானது..
வேடுவராகிய திண்ணப்பர் இங்கு தான் 
கண்ணப்பர் எனும் திருப்பெயர் பெற்றார்..

நாளாறில் கண்ணிடந்து அப்பிய பெருமைக்கு உரியவர் - 
கண்ணப்ப நாயனார்..

சைவ சமய ஆச்சார்யார்கள் நால்வருமே 
கண்ணப்ப நாயனாரின் அருஞ்செயலைப் பாடிப் பரவுகின்றனர்..

- பாடிப் பரவியோர் -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர், பட்டினத்தடிகள் மற்றும் பல புண்ணியர்

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன் மாதுசொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன் தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் நானினிச் சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளாத்தி அப்பருக்கே!..
- பட்டினத்தடிகள் -
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

இத்திருப்பாடலில் வேடராகிய திண்ணப்பர்
திருக்காளத்தியப்பருக்கு அமுதூட்டிய கோலத்தை
வர்ணிக்கின்றார் - திருநாவுக்கரசர்..

காப்பதோர் வில்லும் அம்பும் கையதோர் இறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை வீரட்டனாரே!.. (4/49) 
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி

திருப்பாடல் - 07


அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளுமாறு அதுகேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *

தேவி தரிசனம்

ஸ்ரீ பகவதி
சோட்டாணிக்கரை


உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும்பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெலா, நின்னருட் புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே!..(027)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

6 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..