நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 01, 2016

தண்ணீரும் காவிரியே..

நலம் தரும் பொன்னி
நீரளந்த மேகத்துக்கும் வாழ்த்துச் சொல்லடியோ - தங்கம்
சீரளந்த காவிரிக்கும் வாழ்த்துச் சொல்லடியோ!..

ஏரளந்த மயிலைக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ - வரப்பில்

சேறளந்த உழவனுக்கும் வாழ்த்துச் சொல்லடியோ

நாற்றளந்த காற்றுக்குந்தான் வாழ்த்துச் சொல்லடியோ - தென்னங்  

காற்றளந்த கழனிக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ!..  

நாற்றுநட்ட நங்கைக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லடியோ - வயலில்

களையெடுத்த கன்னிக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லடியோ!..


கதிர் பார்த்த கந்தனுக்கும் வாழ்த்துச் சொல்லடியோ - களத்தில்
கரை சேர்த்த ஐயனுக்கும் வாழ்த்துச் சொல்லடியோ!..  

கதிரடிச்ச தம்பிக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லடியோ - பதரை
தூத்தி விட்ட பாசத்துக்கும் வாழ்த்துச் சொல்லடியோ!..

நெல்லளந்த கருணைக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ - களத்தில்
பொன்னளந்த சாமிக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ!..

நிறைபாரம் வண்டிக்குந்தான் வாழ்த்துச் சொல்லடியோ - நிமிர்ந்து
நடைபோடும் காளைக்குந்தான் வாழ்த்துச் சொல்லடியோ!..

சீரளந்த ஊருக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ - வீட்டில்
சோறளந்த தெய்வத்துக்கும் வாழ்த்துச் சொல்லடியோ!..

கல்லணையில் பொங்கி வரும் பொன்னி
அடாடா... அருமை.. அருமை!.. அசத்திட்டீங்க.. அக்கா!..

வாம்மா.. தாமரை!.. முன்னமே வந்துட்டியா?..

நீங்க ஆனந்தமா.. உழவுப் பாட்டு பாடிக்கிட்டு இருந்தப்பவே வந்துட்டேன்.. இடையில தொந்தரவு செய்ய வேணாம்..ன்னு தான்... அக்கா... எவ்வளவு அருமையா அட்டகாசமா பாடுறீங்க... பொறாமையா இருக்கு அக்கா!...

அதெல்லாம் ஒன்னுமில்லை.. தாமரை.. நான் பாட்டுக்கு ஏதோ... தெரிஞ்சதை பாடினேன்... இதில என்ன ஆச்சர்யம் இருக்கு?...

உங்களுக்குத் தெரியாது அக்கா.. சந்தம் எல்லாம் அருமையா இருக்கு.. வயற் காட்டில நாத்து நடுற பொண்ணுங்க பாடுற மாதிரியே இருக்கு...

தாமரை... நான் படிக்கிறப்போ.. மூனு வருஷம் வயக்காட்டுல ஒத்தையடிப் பாதையிலதான் பள்ளிக் கூடம் போனேன்.. அது தான் வாழ்க்கையில மறக்க முடியாத விஷயம்.. நாங்க பத்து பொண்ணுங்க... வழி நெடுக பாடிக்கிட்டும் ஓடிக்கிட்டும்... அந்த நாளெல்லாம் இனி யாருக்கும் கிடைக்காதும்மா!..

நிஜந்தான் அக்கா!.. வயற்காட்டையெல்லாம் அழிச்சி வீட்டு மனையா ஆக்கிட்டாங்க... இனி வரப்பாவது.. களத்து மேடாவது.. எல்லாம் கனவு மாதிரி போச்சு...

தாமரை.. நாளைக்கு ஆடிப் பதினெட்டு.. ஞாபகம் இருக்கா!..

என்னக்கா.. இந்த மாதிரி கேட்டுட்டீங்க... மறக்க முடியுமா!... காலையிலயே பெரிய மார்க்கெட்டுக்குப் போய் - காதோலை.. கருகமணி.. மஞ்சள் சரடு, விளாம்பழம், பேரிக்காய், கொய்யாப்பழம், மாம்பழம், நாவற்பழம், தாம்பூலம் எல்லாம் வாங்கிட்டோம்.. காலையில காப்பரிசி செஞ்சதும் பூச்சந்தைக்குப் போய் பூ வாங்கிக்கிட்டு ஆற்றுக்குப் போய் சாமி கும்பிட்டு வர வேண்டியது தான்..

நாங்க சாயங்காலமா ஆற்றுக்குப் போகின்றோம்.. பசங்க பள்ளிக்கூடம் விட்டு வரணும் தானே...

கரந்தையில கருணாசாமி கோயில்ல இருந்து அம்பாள் புறப்பட்டு புற்று மாரியம்மன் படித்துறைக்கு வந்திருப்பா.. அப்படியே தரிசனம் செஞ்சுட்டு வரலாம்..


திருவையாற்றில் சுழித்தோடும் காவேரி
இந்த வருஷம் காவேரியில தண்ணி முன்னாலேயே திறந்து விட்டுட்டாங்க.. திருவையாற்றுல.. படித்துறைய அலசிக்கிட்டு புதுத் தண்ணி ஓடுது.. டீவி-ல பார்த்தேன்... ஜனங்களுக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம்!..

அதனல தானே - தண்ணீரும் காவிரியே!.. அப்படி..ன்னு ஔவையார் பாடினாங்க!.. காவேரியில தண்ணீர் வந்தால் தான் வாழ்க்கையே.. விவசாயம் ஆரம்பிக்க இதுதானே ஆதாரம்..

ஆடிப்பட்டம் தேடி விதை..ன்னு சொல்வாங்களே!.. வீட்டுத் தோட்டத்திலும் கொல்லைக் காட்டிலும் - அவரை, பாகல், சுரை, பீர்க்கு..ன்னு விதை போடுவாங்க.. வயக்காட்டுல விவசாய வேலைகள ஆரம்பிபாங்க..  

ஆமாம் அக்கா!.. நிலம் செழிக்க நீர் வேண்டும். நீர் செழிக்க இயற்கை வளம் வேண்டும்... காடு கரையை அழிக்காமல் இருக்கணும்..

நம்முடைய வாழ்க்கையே இயற்கையோடு  - பின்னிப் பிணைந்த வாழ்க்கை தானே!... இயற்கையை எல்லா விதத்திலும் ஒத்து உணர்ந்து வாழ்ந்தார்களே!.. அந்த பாரம்பர்ய வாழ்க்கையில ஒரு நாள் தான் ஆடிப்பெருக்கு..

ஆமாம்.. அக்கா!.. நீங்கள் சொல்வது சரிதான்!..

இப்பவும் காவிரிக் கரையில எங்கே பார்த்தாலும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பா சந்தோஷமா கொண்டாடுவாங்க...

புதுமணத் தம்பதிகள் புதுத் தண்ணியில குளிச்சி முழுகி புது வேட்டி சேலை கட்டிக்கிட்டு காதோலை கருகமணி மஞ்சள் குங்குமம் இதெல்லாம் சீதனமா ஆத்துல விடுவாங்க.. சிலபேரு வீட்டிலேயே குளிச்சிட்டு வர்றதும் உண்டு...

அக்கா.. இந்த பதினெட்டாம் பெருக்கு காவிரி ஆத்தங்கரையில மட்டுந்தான் கொண்டாடுவாங்களா?.. 

இல்லேம்மா... தஞ்சை நாகை திருவாரூர் திருச்சி.. ந்னு எல்லா மாவட்டங்கள்.. லயும் சிறப்பாகக் கொண்டாடுவாங்க ... ஸ்ரீரங்கம் காவிரியில பெருமாள் தீர்த்தமாடி காவிரிக்கு சீர் கொடுப்பார்..

ஆடிப் பதினெட்டாம் நாள் அன்று சோழ வளநாட்டில் - காவிரி மட்டுமல்லாது வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, வடவாறு, புது ஆறு இப்படி எல்லா ஆத்தங்கரையிலயும் கொண்டாட்டமா இருக்கும்..

கடைமடைப் பகுதிகள்..ல காவிரித் தண்ணி போய்ச் சேரலைன்னாலும்.. வீடுகள்..லயும் கிணற்றங்கரையிலயும் சந்தோஷமா சாமி கும்பிடுவாங்க...

அக்கா.. இந்த வருஷம் ஆடி அமாவாசையும் சேர்ந்து வருது.. இல்லையா!..

ஆமாம்.. உங்க அத்தான் காலையிலயே.. திருவையாற்றுக்குப் போய் குளிச்சிட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு ஐயாறப்பர் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு வந்து விடுவார்... சரியான நெரிசலா இருக்கும்.. 



அருள்மிகு அறம் வளர்த்த நாயகி
இப்போ திருவையாற்றுல.. ஆடிப்பூர திருவிழா நடந்துகிட்டு இருக்கு.. ஒவ்வொரு நாளும் அலங்காரமா அறம் வளர்த்த நாயகி திருவீதி எழுந்து வர்றா.. 

அதோட அப்பர் ஸ்வாமிகள் கயிலாய தரிசனம் கண்டதும் ஆடி அமாவாசை.. நாளில் அப்படி..ன்னு ஐதீகம்..

அக்கா.. நீங்க.. திருவையாற்றில் கயிலாய தரிசனம் பார்த்திருக்கீங்களா..

ஒரு தடவை பார்த்திருக்கின்றேன்... ஆயிரக்கணக்கில கூடியிருப்பாங்க.. ஜனங்க...

நாளைக்கு நாமும் திருவையாற்றுக்கு போவோமா.. அக்கா!..

போகலாமே.. இங்கே மத்தியானம் அமாவாசை விரதம் முடிச்சதும் கொஞ்ச நேரம் ஓய்வு.. சாயுங்காலமா போகலாம்.. உங்க அத்தானும் வருவார்..ன்னு நினைக்கிறேன்..

சரி அக்கா.. நான் புறப்படுகின்றேன்..


இந்தாம்மா.. தாமரை.. குங்குமம் எடுத்துக் கொள்!..

அக்கா.. குங்குமம்..ன்னதும் ஞாபகத்துக்கு வருது.. உங்க தஞ்சையம்பதியார் கோலக் குங்குமம்..ன்னு ஒரு பதிவு எழுதியிருக்காங்க.. படிச்சீங்களா?...

ம்.. படிச்சேனே...நல்லா.. எழுதியிருந்தாங்க!..

நாமளும் ஒரு நாளைக்கு குங்குமம் செய்வோம்..அக்கா!.. சரி.. நான் நாளைக்கு சாயுங்காலம் வருகின்றேன் அக்கா!...

ஆகட்டும் தாமரை!...


ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி..
வாடியம்மா எங்களுக்கு வழித் துணையாக
எம்மை வாழவைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக!..

அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்..
அனைத்து அறங்களும் பொங்கிப் பெருகட்டும்!..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!.. 
***

14 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    தாங்கள் சொல்வது போல.... வரப்பாவது, களத்து மேடாவது எல்லாம் கனவு போலவே ஆகி விட்டது இவையெல்லாம் அடுத்த சந்ததியினருக்கு நாம் புகைப்படங்களாக மட்டுமே கொடுத்து செல்லப்போகின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தாங்கள் கூறுவது சரியே.. வரப்பாவது களத்து மேடாவது என்று வாழ்வளித்த வயலைத் துறந்து வேளாண் பெருமக்களே மனமுடைந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்..

      என்ன ஆகும் எதிர்காலம்?.. கவலைப்படவேண்டிய அரசும் அரசியல்வாதிகளும் களிநடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்..

      நமக்குத் தான் மனம் ரணமாகின்றது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. முதலில் கவிதை....
    ஆஹா... என்ன அருமை.... அடிக்கடி கவிதை எழுதுங்க ஐயா...
    எப்பவும் போல் படங்கள் சிறப்பு...
    பகிர்வில் நிறையப் பேசியிருக்காங்க.... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      திட்டமிட்டு அந்தப் பாடலை எழுதவில்லை..
      பதிவின் ஊடாக இயல்பாக வெளிப்பட்டது..

      வாழ்வின் வளரிளம் பருவத்தில் வயலும் வரப்பும் பின்னிக் கிடந்ததே -
      அந்தக் காரணமாக இருக்கலாம்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சொல் சந்தத்தோடு ஒரு கவிதை. (ஏரளந்த மயில் - எனக்கு விளங்கவில்லை) அழகிய படங்களோடு அருமையான ஒரு பதிவு. நடந்தாய் வாழி காவேரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      ஏரளந்த மயிலைக்கும் தான் வாழ்த்து!.. - என்பது
      ஏர் கலப்பையுடன் நிலத்தை உழுது கொடுக்கும் மயிலைக் காளைகள்..

      பொன் மஞ்சள் நிறமான காளையை மயிலை எனக் குறிப்பிடுவர்..

      ஆட்டம் போடும் மயிலைக்காளை தோட்டம் மேயப் பார்க்குதடா!..
      என்ற - புகழ் பெற்ற பாடலை நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. எனக்கு உங்கள் எழுத்து நடை பிடிக்கும் ஆனால் எப்போதும் சாமி கடவுள் பற்றியே எழுதுவது குறை போலத் தோன்றினாலும்மனம் ஈடுபாடு உள்ளதைத்தானே எழுத முடியும் கவிதையை ரசித்தேன் வாழ்த்துகள் அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      நீங்கள் சொல்வதே சரி..
      ஆனாலும் அவ்வப்போது இயற்கை சூழல், உடல் நலம், சமூகம் பற்றிய விழிப்புணர்வு பதிவுகள் பலவும் எழுதுகின்றேன்..

      என்ன எழுதினாலும் அது - கோயில் குளம் என்று வந்து முடிகின்றது..
      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஆஹா ஆரம்ப வரிகளே அமர்களமாய்,,, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,,,

    அருமையான பகிர்வு,,, கவிவரிகள் அனைத்தும் அருமை,,,

    படங்கள் அனைத்தும் அழகோ அழகு,,

    தொடருங்கள்,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  6. அருமை. புகைப்படங்களில் மட்டுமே காவிரியை இப்படி பார்க்க முடிவது சோகம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      ஆடிப்பெருக்கிற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதே பெரிய விஷயம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  7. கவிதை அருமை ஐயா!! மிகவும் ரசித்தோம்...

    ம்ம்ம் எல்லாம் பொன்னான நினைவுகளாகிப் போனதுதான். காவிரி உட்பட. இயற்கையிலிருந்து மனிதன் விலகிச் செல்வதற்கான அறிகுறிகள்தான் ...

    கீதா: அருமையான பதிவு ஐயா..எனது பழைய நினைவுகளை ஆடிப்பெருக்கு எங்கள் கிராமத்தில் எப்படி இருக்கும் என்ற நினைவுகளை மீட்டெடுத்தது.

    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் கூறுவது உண்மைதான்.. ஆயினும்,

      மீண்டும் வசந்தம் மலரும்..
      காவிரியும் அதன் கரையும் மக்களின் வாழ்வும் நிச்சயம் மலரும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..