நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 03, 2016

வாங்கி வந்த வரம்

பூம்புனல் நாடு.


இப்படியொரு வளநாடு அந்தக் காலத்தில்!..

அதன் மன்னன் - வீர வர்மன்..


நல்லவன்.. வல்லவன்.. கல்வி கேள்விகளில் சிறந்தவன்..

மன்னனின் அசாத்தியமான வீரத்தால் அந்த நாட்டுக்கு பகை நாடுகள் என்பதே கிடையாது..

நாட்டின் பெயருக்கு ஏற்ப நீர் வளம் மிகுந்திருந்ததால் - நிலவளமும் அமோகமாக இருந்தது...

ஆற்றை அழித்தலும் ஆற்று நீரை மடை மாற்றலும் எந்தக் காலத்திலும் நடந்ததேயில்லை...

பொன் கொழிக்கும் பூமியில் நடுகல் நட்டு அவற்றை - மனைப் பிரிவுகளாக மாற்றி நாட்டின் வளத்தை ஒழிக்கும் அமைப்புகள் ஏதும் அப்போது கிடையாது..

எனவே - நஞ்சையும் புஞ்சையும் தென்றலுடன் கொஞ்சி விளையாடியது..

இவ்வாறாக - தானிய உற்பத்தியில் தன்னிறைவாகி மிகவும் செழிப்பாக விளங்கியது - பூம்புனல் நாடு..

நெடுஞ்சாலை போடுகின்றேன்!.. - என்ற பேரில் நெடுமரங்களை வெட்டி வீழ்த்தாததால் - சிற்றுயிர்களான பறவைகளும் மகிழ்ச்சியாக இருந்தன...

துறவு என்ற பேரில் - காட்டுக்குள் போனவர்கள் அங்கே ஓலை கொண்டு ஆஸ்ரமம் அமைத்தனரே அன்றி -

காட்டை அழித்து ஒய்யார மாளிகைகள் அமைத்து கன்னியருடன் காலம் கழிக்கவில்லை...

எனவே - வனவளமும் மனவளமும் பாழ்படாது இருந்தது..

கானகத்தின் இயற்கைச் சூழல் கெடாததால் - அங்கிருந்து காட்டுப் பூனை கூட வெளியேறி நாட்டுக்குள் வருவதில்லை..

காட்டுப் பூனையே வெளியே வராத போது காட்டு யானைகள் எப்படி வரும்?..

கடலுக்குச் சென்ற மீனவர்கள் பெருவலையுடன் சந்தோஷமாகத் திரும்பி வந்தனர்...

அரசு அலுவல்கள் அனைத்தும் மிகச் சரியாக நடந்தன...
அவரவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கடமையைச் செய்தனர்..

அதற்கும் இதற்கும் என்று ஆர்ப்பாட்டங்களோ போராட்டங்களோ கிடையாது..

இப்படியாக அமைதியான சூழ்நிலையில் மக்களும் ஆனந்தமாக வாழ்ந்தனர்..

இளஞ்சிறார்களுக்கு நீதி நெறிமுறையுடன் நல்ல கல்வி கற்பிக்கப்பட்டது..

அதே சமயம் இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் முதியோருக்கும் மனவளக்கலை மன்றங்கள் மூலம் நன்னெறி பயிற்றுவிக்கப்பட்டது...

பகலில் நாளங்காடிகள் சிறப்புடன் இயங்கினால்
இரவில் அல்லங்காடிகள் வெகு சிறப்புடன் இயங்கின..

பெண்களைத் தொந்தரவு செய்வதான எண்ணங்கள் -
விடலைகளுக்கோ வாலிபர்களுக்கோ -
ஏன் - கடுங்கிழவர்களுக்கோ ஏற்பட்டதேயில்லை...

காரணம் - உடனடி நீதி விசாரணை - கடுஞ்சிறை.. கொடுந்தண்டனை!..

ஆனாலும் கன்னியரும் காளையரும் அன்புடன் பழகினார்கள்...

மனம் நாடினால் அரசாணி கொண்டு மலர் மாலை சூடி மண நாள் கண்டு மகிழ்ந்தனர்..

மாறாக - கொலைவாளுடன் குருதிக்கறை கொண்டு பிண நாள் கண்டாரில்லை...

ஆக - ஒருவருக்கொருவர் கண்ணாக கண்ணுக்கு இமையாகத் திகழ்ந்தனர்..

அந்த நாட்டில் எந்தவொரு பிரச்னையும் இல்லை..

அந்த வண்ணமாக - பூம்புனல் நாட்டின் மன்னன் வீர வர்மன் செம்மையாக செங்கோல் செலுத்தினான்..

மக்கள் அனைவரும் மகிழ்ந்திருக்க -
மன்னவன் மனம் நிம்மதியாக இறை வழிபாட்டில் ஈடுபட்டது...

அறவழியில் நின்று ஆன்மீகம் தேடியபடியால் -
விரைவிலேயே தவநெறி கூடிவந்ததது..

ஒரு நாள் மாலைப் பொழுதில் - மன்னனின் பூஜை மண்டபத்தில் - தெய்வ தரிசனம் கிட்டியது..


அகமகிழ்ந்த மன்னன் - ஈசன் திருமுன்பாக வீழ்ந்து வணங்கினான்..

மன்னனே!..மனம் விரும்புவன கேள்!..

- என்று, ஈசன் எம்பெருமானும் அருளினான்..

பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்..

தாங்கள் எனக்கு தரிசனம் தந்த வண்ணமாகவே எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அரச குடும்பத்தினருக்கும் அமைச்சர் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நீங்கள் காட்சியருளல் வேண்டும்!..

தான் பெற்ற இன்பத்தை இந்த நாடும் பெறட்டும் - என்ற நல்லெண்ணம்..

மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் இறைவனும் அதற்கு சம்மதித்தான்..

இன்றிலிருந்து மூன்றாம் நாள்.. நாட்டின் எல்லையில் இருக்கும் மலை உச்சிக்கு அனைவரையும் அழைத்துக்கொண்டு வா.. நீ விரும்பிய வண்ணம் காட்சி தருகின்றேன்!...

இறைவனின் அருளாணையைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் -
உடனே நாடெங்கும் முரசரைந்து அறிவித்தான்...

மூன்றாம் நாள் காலை...

நாட்டு மக்கள் அனைவரும் மலையடிவாரத்தில் ஒன்று கூடினர்..

தங்களுக்கு இறை தரிசனம் கிடைக்கப் போகும் மகிழ்ச்சி..
மன்னனை வாயார வாழ்த்தி மகிழ்ந்தனர்..

கூடி வந்த நல்ல வேளையில் அரசன் முன்னே அடியெடுத்து வைத்தான்..

அரசியும் அமைச்சர்களும் மக்களும் பின் தொடர்ந்தனர்...

சற்று நேரத்தில் மிக வளமான பழக்காடு.. அரிதிலும் அரிதான பழங்கள்..

அவற்றின் சுவையிலும் நறுமணத்திலும் மயங்கிய சிலர் -இதை விட்டுவிட்டுப் போவதோ?... உண்ணக் கிடைத்த இடமே சொர்க்கம்.. ஒருவேளை இறைவன் தரிசனம் கிடைக்காவிட்டால்?.. வாருங்கள்.. இந்தப் பழங்கள் பல நாட்களுக்கு ஆகும்!..

- என்று கூறியபடி பழங்களைத் தின்று கொண்டு அங்கேயே நின்று விட்டனர்..

மற்றவர்களின் பயணம் தொடர்ந்தது..
கடவுளைக் காணும் ஆவலில் மலையேறினர்..

அடுத்த சிறு பொழுதில் செம்பு பாறைகள் தென்பட்டன..

அதைக் கண்ட மக்களில் நிறைய பேர் -


இதை விட்டுவிட்டுப் போவதோ?... செம்பு கிடைத்த இடமே சொர்க்கம்.. ஒருவேளை இறைவன் தரிசனம் கிடைக்காவிட்டால்?.. வாருங்கள்.. இந்த
செம்புப் படிமங்கள் பல வாரங்களுக்கு ஆகும்!..

- என்று சொல்லிய வண்ணம் செம்புப் பாறைகளை உடைத்து சேகரித்துக் கொண்டனர்..

மன்னன் இதைக் கண்டான்.. ஒன்றும் சொல்லவில்லை..

மற்றவர்களின் பயணம் தொடர்ந்தது..
கடவுளைக் காணும் ஆவலில் மலையேறினர்.. 

அடுத்த சிறு பொழுதில் வெள்ளிப் பாறைகள் தென்பட்டன..

அதைக் கண்ட மக்களில் நிறைய பேர் -

இதை விட்டுவிட்டுப் போவதோ?... வெள்ளி கிடைத்த இடமே சொர்க்கம்.. ஒருவேளை இறைவன் தரிசனம் கிடைக்காவிட்டால்?.. வாருங்கள்.. இந்த
வெள்ளிப் பாறைகள் பல மாதங்களுக்கு ஆகும்!..

- என்று சொல்லிய வண்ணம் வெள்ளிப் பாறைகளை உடைத்துத் தலையில் வைத்துக் கொண்டனர்..

மன்னன் இதையும் கண்டான்.. ஒன்றும் சொல்லவில்லை..

இப்போது எஞ்சியிருந்தவர்கள் அமைச்சர்கள் அரச குடும்பத்தினர் மட்டுமே!..
அவர்களின் பயணம் தொடர்ந்தது..

கடவுளைக் காணும் ஆவலில் மலையேறினர்.. 


அடுத்த சிறு பொழுதில் தங்கப் பாறைகள் தென்பட்டன...

மன்னன் சொன்னான் - 

இறை தரிசனம் கிடைக்க போகின்றது..  அதற்கு முன்னால் இவையெல்லாம் ஒன்றுமே இல்லை.. அனைவரும் வாருங்கள்!.. 

அதைக் கேட்ட அமைச்சர்களும் அரசவைப் பிரமுகர்களும் -

அரசே!.. இதையும் விட்டுவிட்டுப் போவதோ?... தங்கத்தைக் கண்ட இடமே தெய்வத்தைக் கண்ட இடம்.. ஒருவேளை இறைவன் தரிசனம் கிடைக்கா விட்டால்?.. வாருங்கள்.. இந்தத் தங்கப் பாறைகள் பல வருடங்களுக்கு ஆகும்!..

- என்று சொல்லிய வண்ணம் தங்கப் பாறைகளை உடைத்துத் தலையிலும் மடியிலும் கட்டிக் கொண்டனர்..

இப்போது எஞ்சியிருந்தவர்கள் அரச குடும்பத்தினர் மட்டுமே!..

அவர்களின் பயணம் தொடர்ந்தது..
கடவுளைக் காணும் ஆவலில் மலையேறினர்.. 

அடுத்த சிறு பொழுதில் வைரப் பாறைகள் தென்பட்டன..
அத்துடன் முத்து ரத்தின மரகத வைடூரியங்களும் கொட்டிக் கிடந்தன..

அதைக் கண்ட அரசிக்கும் இளவரசிகளுக்கும் இளவரசனுக்கும் மகிழ்ச்சி..

அரசே!.. தாங்கள் எதுவும் கூற வேண்டாம்.. இதையும் கடந்து போவதோ?.. .. நவரத்தினங்களைக் கண்ட இடமே இறைவனைக் கண்ட இடம்.. ஒருவேளை இறைவன் தரிசனம் கிடைக்காவிட்டால்?.. வாருங்கள்.. இந்த ரத்தினங்கள் பல தலைமுறைகளுக்கு ஆகும்!..

என்று சொல்லிய வண்ணம் நவரத்தினங்களச் சேகரிக்கத் தலைப்பட்டனர்..

சீக்கிரம் அரண்மனைக்குச் சென்று இவற்றை அங்கே வைத்து விட்டு மீண்டும் வந்து நிறைய சேகரிக்க வேண்டும்!..

அரசியின் ஆசை இப்படியாக இருந்தது..

மன்னன் தனியாளாக நின்றான்..

அவனுடன் வருவதற்கு அவனைச் சேர்ந்த யாருக்கும் விருப்பம் இல்லை..

மனம் தளராத மன்னன் - தனி ஆளாக தொடர்ந்து நடந்தான்!..

இதோ உச்சி மலைக்கு வந்தாயிற்று..

கீழே நோக்கினான்... 
அவரவர் நிலையில் அடித்துப் பிடித்துக் கொண்டு இருந்தனர் மக்கள்..

ஏதொன்றும் நினைப்பதற்கு அவனால் இயலவில்லை..

தோளில் கிடந்த அங்க வஸ்திரத்தை விரித்துப் போட்டு
அதில் அமர்ந்து ஈசனைத் தியானித்தான்..

அடுத்த சில நொடிகளில் - அவன் முன்னிலையில் ஒளிமயமாக இறைவன் தோன்றியருளினான்...


இறைவனின் திருக்கோலத்தைக் கண்ட மாத்திரத்தில்
அரசனின் கண்கள் ஆறாகப் பெருகி வழிந்தன..

இறைவா.. என்னை மன்னித்தருளுங்கள்!..எல்லோருக்கும் ஆகட்டும் என்று தானே முயன்றேன்.. நான் தோற்று விட்டேனே!..

மகனே!.. உன் முயற்சியில் நீ வென்று விட்டாய்.. தோற்றவர்கள் அவர்களே!..

..... ..... ..... ..... .....!..

உன் நாட்டு மக்கள் நல்லவர்கள்!.. ஆனாலும் மாயையால் சூழப்பட்டவர்களே!..
ஆதியில் அவரவர்க்கு - என என்ன வரங்களை வாங்கிக் கொண்டு வந்தனரோ அதையே அனுபவிக்கின்றனர்.. நீ இதைக் குறித்துக் கவலை கொள்ளலாகாது!..


..... ..... ..... ..... .....!..

எவ்வண்ணம் என்னைக் கருதிக் கொண்டிருக்கின்றனரோ - 
அவ்வண்ணமாகவே நான் காட்சி அருள்கின்றேன்!.. 
எனவே மனம் கலங்காமல் நாட்டை நன்முறையில் நடத்துவாயாக!..
வாழிய நீ பல்லாண்டு!..

- என்று மன்னனை வாழ்த்திய இறைவன் தன்னுரு கரந்தான்..

ஞானம் பெற்ற மன்னன் அமைதியாக -
அரண்மனையை நோக்கி நடந்தான்..
***

எழுதியவாறே காண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை...
-: ஔவையார் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

12 கருத்துகள்:

 1. நல்லதொரு பகிர்வு.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. மன உறுதியும் இறைப்பற்றும் என்றும் நல்ல துணைகளே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் ஜி..
   காத்திருத்திருக்கின்றேன்.. மகிழ்ச்சி..

   நீக்கு
 5. வாங்கிக் கொண்டு வந்த வரங்கள் இறைவனை தரிசிக்க அல்ல. அவரவர் விருப்பப்படி உலகில் அவர்கள் நினைத்த இன்பத்தைச் சுவைக்க, அரசனின் ஆட்சியை தற்கால நிலைகளுடன் ஒப்பிட்டு எழுதியது மனதைக் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   கதையின் உட்பொருளை மையப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 6. அன்பின் ஜி தங்களது நடையில் இறைவனைக் காணும் நல்வழிகள் சொன்னவிதம் அழகு நம்பிக்கையே வாழ்க்கை மட்டுமல்ல இறைவனும்கூட ஒருவன் என்னவாக நினைக்கின்றானோ அதுவாகவே ஆகின்றான் இதுவே உண்மை.
  வாழ்க நலம்
  கீ போர்டு பிரச்சினை ஆகவே கருத்துரை எழுத தாமதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   எல்லாம் பெரியவர்கள் சொல்லி வைத்த தத்துவங்கள்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு