நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 06, 2016

மார்கழித் தென்றல் - 21

குறளமுதம்

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.. (0037) 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 21


திவ்ய தேசம் - கோழிகுத்தி
ஸ்ரீ வானமுட்டி பெருமாள்

எம்பெருமான் - ஸ்ரீநிவாச பெருமாள்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி - பெருமாளின்
திருமார்பில் குடிகொண்டிருக்கின்றாள்..
ஸ்ரீ பூமாதேவி ஸ்வாமியின் அருகிலேயே
பொலிகின்றாள்..
தாயாருக்கு தனி சந்நிதி இல்லை..
உற்சவர் - யோக நரசிம்மர்

ஸ்ரீ சத்ர விமானம்
சதுர் புஜங்கள் பொலியும் 15 அடி உயர திருமேனி..
சங்கு சக்ர கதையுடன் அபய ஹஸ்தம்..

நின்றருளும் திருக்கோலம்..
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்


வணங்கித் தொழுத அடியவர்க்கு
வானளாவிய விஸ்வரூபத் திருக்காட்சி நல்கியதால்
வானமுட்டிப் பெருமாள்..

பெருமாளைத் தரிசித்தால் கோடி ஹத்தி (குற்றங்கள்)
தொலையும் என்பதாக ஐதீகம்..

கோடி ஹத்தி என்பதே கோழிகுத்தி என்றாகியது
என்று சில ஊடகங்கள் கூறுகின்றன..

பிப்பிலர் என்ற முனிவருடைய தோல் நோயை நீக்கி
அவருக்கு திருக்காட்சி வழங்கியதாக தலபுராணம்..

பின்னும்,
தஞ்சை சரபோஜி மன்னர்
பெருமாளின் தரிசனம் பெற்று
தோஷங்கள் நீங்கப் பெற்றார்
என்று குறிக்கப்படுகின்றது..


மூலவராகிய ஸ்ரீநிவாசப் பெருமாள்
அத்தி மரத்தில் வடிக்கப்பெற்றவர்..
தஞ்சை சரபோஜி மன்னருக்குக் 
காட்டியருளிய திருக்கோலம்..

திருமேனி அத்தி மரம் என்பதால் 
 மூலவருக்குத் தைலக்காப்பு மட்டுமே..


பலநூறு வருடங்களுக்கு முந்தைய க்ஷேத்திரம்..
எனினும்,
வெகுவாக சிதிலமடைந்திருந்த திருக்கோயில்
பத்தாண்டுகளுக்கு முன்பு தான்
கவனத்தில் கொள்ளப்பட்டது..

அதன்பின், அடியார்களால்
திருப்பணிகள் மேற்கொள்ளப்பெற்று
2007 ஜூலையில் திருமுழுக்கு
நடத்தப்பெற்றது..

நர்த்தன கிருஷ்ணர், வரதராஜப்பெருமாள்,
சக்ரத்தாழ்வார், ஆஞ்சநேயர்
திருமேனிகளும் விளங்குகின்றன..

லக்ஷ்மிபதே கமலநாப சுரேஷ விஷ்ணு
வைகுந்த க்ருஷ்ண மதுசூதன ஸ்ரீஸ்ரீநிவாஸ
ப்ரமண்ய கேசவ ஜனார்த்தன சக்ரபாணே
விஸ்வரூப விபோ மமதேஹி கராவலம்பம்..
(பெருமாள் தியான ஸ்லோகம்)

ஆழ்வார்களின்
மங்களாசாசனம்
கிடைக்கப்பெறவில்லை..

மயிலாடுதுறை கும்பகோணம் சாலையிலுள்ள
மூவலூர் எனும் ஊருக்கு வடக்கே
இரண்டு கி.மீ., தொலைவிலுள்ளது.. 
***


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
***

சிவதரிசனம்
திருத்தலம் - திருவெண்காடு


இறைவன்
ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ அகோர மூர்த்தி, 
ஸ்ரீ நடராஜர்

அம்பிகை
ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை, ஸ்ரீ துர்க்கை,
ஸ்ரீ காளி

தீர்த்தம்
அக்னி, சந்திர , சூரிய தீர்த்தங்கள்..

தலவிருட்சம்
 ஆல், கொன்றை, வில்வம்..


பிரம்மனுக்கு
வேத உபதேசம் செய்ததால்
அம்பிகையின் திருப்பெயர்
ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை..


ஸ்ரீ அகோர மூர்த்தி
சலந்திரனின் மகன் வரங்கள் பல பெற்றபின்
அடாதன செய்ததால்
ஈசன் - அகோரமூர்த்தியாக வெளிப்பட்டு
அவனை வதம் செய்தருளிய தலம்..இத்திருத்தலத்தில் 
மூர்த்தி தலம் தீர்த்தம் - என 
அனைத்தும் மூன்றாகப் பொலிகின்றன..


ஸ்ரீ புதன்
நவக்கிரகங்களுள்
புதன் 
இத்திருத்தலத்தில்
ஈசனையும் அம்பிகையையும் 
வலம் வந்து வணங்கி உய்வடைந்தான்..

இந்த உண்மையை மறைத்து
புதன் கோயில் என்றும் புதன் ஸ்தலம் என்றும் 
பல்வேறு வகையான ஊடகங்களும்
ஜோதிடர்களும் மக்களை வழி நடத்துகின்றனர்..

திருவெண்காடு
சிவஸ்தலமே அன்றி
புதன் ஸ்தலம் அல்ல!..

இங்கிருப்பதும் 
சிவாலயம் அன்றி
புதன் கோயில் அல்ல!.. 


திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்.
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக்காப்பு

மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே!.. (3/15)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருப்பொன்னூசல்
முதலாம் திருப்பாடல்


சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூச லாடாமோ..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

 1. கோழி குத்தி - இதுவரை கேள்விப்படாத ஊர்......

  தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 21 ஆம் நாள் பகிர்வு நன்று புகைப்படங்கள் அருமை தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோவில் எங்கள் ஊர் பக்கம் 6 கி.மீ தான். அடிக்கடி போவோம். கும்பாபிஷேகம் முன்பும், பின்பும் பெருமாளை போட்டோ போட்டு இருக்கிறீர்கள், அருமை. பழையதில் அம்மன் அழகாய் தெரியும் இப்போது உற்சவரை முன்னால் வைத்தவுடன் அம்மன் அவ்வளவாக தெரியாது. பெருமாள் பாதத்தையும் பூ. துளசி போட்டு மறைத்து விடுகிறார்கள்.

  திருவெண்காடு திருமணம்ஆனவுடன் நான் வந்த ஊர். 7 வருடங்கள் அங்குதான் வாழ்க்கை. ஞாயிறு தோறும் கோவிலுக்கு போய் விடுவோம். அகோரமூர்த்திக்கு பூஜை விஷேசம். கார்த்திகை சோமவாரம், ஆவணி ஞாயிறு எல்லாம் சிறப்பாய் பூஜைகள் நடக்கும். இப்போதும் அகோரமூர்த்தி நினைவாய் ஞாயிறு விரதம் இருக்கிறோம் இருவரும். திருவெண்காடு ஊரின் மலரும் நினைவுகள் வந்தது. இப்போதும் முடிந்த போது போய் வருகிறோம்.
  மார்கழி தென்றல் அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் மேலதிக செய்திகளும் கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. புதிய தகவல் தெரிந்துக்கொண்டேன். திருவெண்காட்டுப் பதிகம் படித்துள்ளேன்.
  பகிர்வு அருமை, புகைப்படங்களும். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. கோழிகுத்தி புதுசா இருக்கு அறிந்து கொண்டேன்...
  அருமை ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு