நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 10, 2016

மார்கழித் தென்றல் - 25

குறளமுதம்


அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.. (0181)  
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 25திவ்ய தேசம் - திரு விண்நகர்
ஒப்பிலியப்பன் கோயில்

எம்பெருமான் - ஸ்ரீ ஸ்ரீநிவாசன் 
தாயார் - ஸ்ரீ பூமாதேவி 
கல்யாணத் திருக்கோலம் கொண்டு
பெருமாளுடனேயே உறைகின்றாள்..
(தனி சந்நிதி இல்லை)

உற்சவர் - ஒப்பிலியப்பன்
ஸ்ரீ சுத்தானந்த விமானம்

நின்றருளும் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்

ஸ்ரீ பூமாதேவி - பெருமாளிடம்
வேண்டிக் கொண்டு
இத்தலத்தில் மார்க்கண்டேய மகரிஷிக்குத்
திருமகளாகத் தோன்றினாள்..

தக்க வேளையில்
வயதான துறவியாகத் தோன்றி
மார்க்கண்டேய மகரிஷியிடம் 
வழக்காடினான் பெருமான்..

உமது மகள் உப்பின்றி சமைத்தாலும்
உவந்து ஏற்றுக் கொள்வேன் - என்று கூறி
மண் மகளைத் தன் மலர் மார்பில்
தாங்கிக் கொண்டதாக தலபுராணம்..


அது முதற்கொண்டு
ஒப்பிலியப்பன்
உப்பில்லாத நிவேதனத்தைத் தான்
அனுதினமும் ஏற்றுக் கொள்கின்றான்..தேவியும் பெருமாளும் இத்திருத்தலத்தில்
இணைபிரியாதிருப்பதாக
ஐதீகம்..
***

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார், பேயாழ்வார்,
நம்மாழ்வார்..
***


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
திருத்தலம் - திருநாகேஸ்வரம்


இறைவன் - ஸ்ரீ நாகேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ கிரிகுஜாம்பிகை
தீர்த்தம் - சூரிய தீர்த்தம்
தலவிருட்சம் - சண்பகம்


அன்னை ஸ்ரீ கிரிகுஜாம்பிகையுடன்
வலப்புறம் ஸ்ரீ சரஸ்வதியும்
இடப்புறம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியும்
ஒரே சந்நிதியில் அருள்பாலிப்பது சிறப்பு


ஈசன் எம்பெருமானின் ஜடாமகுடத்தில் இருப்பதனால் 
கர்வம் கொண்ட நாகராஜன் பாதாளத்தில் வீழ்ந்தான்..

அதனால் அவனது தலை நூறு பிளவுகளாயிற்று..
தன் பிழை தீர்வதற்காக 
சிவராத்தியன்று நான்கு காலங்களிலும் 
நான்கு திருத்தலங்களில்
தனது கூட்டத்தாருடன் சிவபூஜை செய்தான்..

அந்த அளவில்
இரண்டாவது காலத்தில் வழிபட்ட தலம்
திருநாகேஸ்வரம்..


ஸ்ரீ நாகவல்லி ஸ்ரீ நாககன்னி உடனாகிய ஸ்ரீ நாகராஜன்
சிவாலயமாகிய திருநாகேஸ்வரம்
சமீபகாலமாக ராகு ஸ்தலம் என, 
மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

சாயாக் கிரகங்களான ராகுவிற்கும் கேதுவிற்கும்
ராசி மண்டலத்தில் சொந்த வீடு எனக் கிடையாது..
இதைப் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன..

ஆயினும், இறையடியார்கட்கு
திருநாவுக்கரசர் தம் வாக்கு திருவாக்கு..

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்தலை அரவின் பணிகொண் டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே!.. (5/52) 
(திருநாவுக்கரசர்)

சந்திரன் சூரியன் ஆகியோருடைய வழிபாட்டுடன் 
ஐந்தலை அரவாகிய நாகராஜனின் பணியையும் 
ஏற்றுக் கொண்டு இறைவன் திருவருள் புரிவதாக
திருநாவுக்கரசர் தமது திருப்பதிகத்தில் விவரிக்கின்றார்..

அர்த்தத்தை அனர்த்தம் செய்து கொள்வதில்
வல்லவர்களாயிற்றே - நம்மவர்கள்!..

திருக்கோயிலின் 
வெளித் திருச்சுற்றில் நிருதி மூலையில்
ஸ்ரீ நாககன்னி ஸ்ரீ நாகவல்லி - என இரு தேவியருடன்
எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நாகராஜனை
ராகு எனக் குறிப்பிட்டு வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்..

சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த ராகு பெயர்ச்சியின் போது
திருநாகேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி
நாகராஜனை - ராகுவாகக் கொண்டு
வழிபாடு செய்துள்ளனர்..
***

திருப்பதிகம் அருளியோர்
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்..  
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு


கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சர நகருள்
தலைவா எனவல் வினைதான் அறுமே!.. (2/24)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த 
தேவாரம்


பிறையுறு சடையர் போலும் 
பெண்ணுரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும் 
மால்மறை யவன் தனோடு
முறைமுறை அமரர் கூடி
முடிகளால்வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும்
நாக ஈச்சர வனாரே!.. (4/66) 

ஸ்ரீ சுந்தரர் அருளிச்செய்த 
திருப்பாட்டு

பாலன தாருயிர் மேற்பரியாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத்தாக்கிய தென்னைகொலாம்
கோல மலர்க்குவளைக் கழுநீர்வயல் சூழ்கிடங்கில்
சேலொடு வாளைகள்பாய் திருநாகேச் சரத்தானே!.. (7/99)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பொன்னூசல்
ஐந்தாம் திருப்பாடல்
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சுதனை
ஊனாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

12 கருத்துகள்:

 1. குறளமுதம் படைத்து அதனோடு ஆண்டாளின் திருப்பாவை திருவமுதமும் கண்டருள செய்தமைக்கு நன்றி அய்யா! நன்று!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 25 ஆம் நாள் பகிர்வு நன்று தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. எனக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும். ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்து,,,

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   கோதை அருளிய திருப்பாசுரங்கள் ஒவ்வொன்றும் தித்திக்கும் கற்கண்டு அல்லவா..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. சிறப்பான பாடல்களுடன் நல்ல தகவல்களும் படங்களும். ப்கிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. மார்கழித் திங்களில் அழகான படங்களுடன் நல்ல தகவல்களையும் பகிர்கிறீர்கள் ஐயா...
  அதற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 7. அன்பின் குமார்..
  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு