நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 24, 2016

தைப் பூசத் திருநாளில்..

இன்று மகத்தான தைப் பூசத் திருநாள்..

சகல சிவாலயங்களிலும் முருகப் பெருமானின் திருக்கோயில்களிலும் ஆரவாரத்துடன் அன்பர்கள் குழுமி இறைவழிபாடு இயற்றும் நன்னாள்..

திருக்கார்த்திகை, மார்கழித் திருஆதிரை, பங்குனி உத்திரம் -

- எனும் புண்ணிய நாள்களைப் போலவே -
பல நூறு ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருவது தைப் பூசத் திருநாள்..


குறிப்பாக - தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்தும்
பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக ,
பக்தி சிரத்தையுடன் காவடிகளைச் சுமந்தபடி -

வழிநெடுக ஆடல் பாடல் என கோலாகலத்துடன்
பழனியம்பதிக்குச் சென்று நேர்த்திக் கடன் செலுத்துகின்றார்கள் எனில்,

அவர்களின் மெய்யான பக்திக்கு வேறொன்றைச் சொல்வது என்பது கடினம்..

தமிழகம் மட்டுமின்றி - இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் - என பல நாடுகளிலும் பக்திபூர்வமாக கொண்டாடப்படுவது தைப்பூசம்..


பத்துமலை - மலேஷியா
மலேஷியா, சிங்கப்பூரில் தமிழர்களோடு சீனர்களும் பக்திப் பரவசத்துடன் முருகப்பெருமானை வழிபட்டு நிற்கின்றனர்..

அங்கெல்லாம் தைப்பூசம் விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது..

தைப்பூச வைபவம் நிகழும் திருத்தலங்கள் பலவாயினும் - அவற்றுள்  முதன்மையானது - திருஇடைமருதூர்..

ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி
ஸ்ரீ பெருநலமாமுலையாள்
திருஇடைமருதூர்

இறைவன் - ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பெருநலமாமுலையாள்
தீர்த்தம்
காவிரி, ஐராவத தீர்த்தம் முதலான
32 தீர்த்தங்கள்
தலவிருட்சம் - மருத மரம்

பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்
பூச நாம்புகு தும்புன லாடவே!.. (5/14)

- என்று, தாம் திருஇடைமருதூரில் தைப் பூச நாளன்று நன்னீராடியதைத் திருப்பதிகம் வாயிலாக நமக்கு உரைக்கின்றார் - அப்பர் பெருமான்..

வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம்புகுந் தீண்டியோர் செம்மையுடைத்தாய்
பூசம்புகுந் தாடிப் பொலிந்து அழகாய
ஈசனுறை கின்ற இடைமருது ஈதோ!.. (1/32)

வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாப் புக்கீரே!.. (2/56)

- என்று, திருஞானசம்பந்த மூர்த்தியும் திருஇடைமருதூரில் நிகழ்ந்த தைப்பூச நன்னாளைக் குறித்துப் போற்றுகின்றனர்..

பூசநீர் பொழியும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாசநீர் குடைவார் இடர்தீர்க்கும் வலஞ்சுழி.. (2/2)

பலவகையான மலர்களின் நறுமணம் கமழ்ந்திடப் பெருகி வரும் பொன்னி நதியில் பூச நன்னாளன்று நீராடுவார் வினைகளைத் தீர்க்கும் திருவலஞ்சுழி!..

- என திருவலஞ்சுழி தலத்தையும் பொன்னி நதி தீர்த்தத்தையும் ஒருங்கே புகழ்ந்துரைக்கும் திருஞானசம்பந்தர் -

திருமயிலையில் சிவநேசஞ் செட்டியாரின் திருமகளான பூம்பாவையை அஸ்திக் கலசத்திலிருந்து எழுப்புதற்குப் பாடியருளிய திருப்பதிகத்தில் -

நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காண...

வருவாய் பூம்பாவாய்!.. - என அழைத்தருள்கின்றார்..

சிவாலயங்கள் பலவற்றிலும் சிறப்புடன் நிகழ்த்தப்படும் தைப்பூசம் -
மேலும் சிறப்புடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது திருமுருகன் உறையும் திருத்தலங்களில்..

அவற்றுள் முதன்மையான தலங்கள் - பழனி மற்றும் சுவாமிமலை..


கடந்த ஞாயிறன்று கிராம தேவதை மற்றும் பூமி பூஜைகள் நிறைவேறிய நிலையில் திங்கட்கிழமை (18/1) காலை திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது பழனியம்பதியில்..திரு. குணா அமுதன் அவர்களுக்கு நன்றி

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களுடன்
ஸ்ரீ முத்துக் குமர ஸ்வாமி - வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக் கிடா , தந்தப் பல்லக்கு, தங்கக் குதிரை, தங்க மயில் என - பல்வேறு வாகனங்களில் - திருவீதி எழுந்தருளினன் ..

நேற்று , சனிக்கிழமை மாலை திருக்கல்யாண வைபவம் நிகழ்த்தப் பெற்றது..

மாங்கல்யதாரணத்திற்குப் பின் -
ஆயிரக்கணக்கான அன்பர்கள் கண்டு களிக்கும் வண்ணம்
வெள்ளி ரதத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனையுடன் நகர்வலம் வந்தருளினன்..

இன்று மாலை பழனியம்பதியில் - தைப்பூச திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெறவுள்ளது..

எதிர்வரும் புதனன்று (27/1) தெப்பத் திருவிழா..
அதனைத் தொடர்ந்து கொடியிறக்கம்..

அத்துடன் - திருவிழா மங்கலகரமாக நிறைவடைகின்றது..


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
தாமும் வாடி மனம் வருந்தி இளைத்து
அவர்தம் வாட்டம் தனைத் தீர்ப்பதற்கு
வழிவகை தேடிய வள்ளல் பெருமானாகிய

அருட்திரு இராமலிங்க ஸ்வாமிகள் ஜோதியாகிய நாள் - தைப்பூசம்..

திருமுருகனின் திவ்ய திருக்கோலத்தினை -
நிலைக்கண்ணாடியில் தரிசித்தவர் வள்ளலார்..

ஸ்ரீ முக ஆண்டு - தை 19 (1874 ஜனவரி 30) புனர்பூசமும் பூசமும் கூடிய நிறைநிலா நாளில் ஸ்வாமிகள் ஒளி தேகத்தினை எய்தினார்கள்..

வள்ளல் பெருமான் சித்தியடைந்த வடலூரிலும் தைப்பூசப் பெருந்திருவிழா நிகழ்கின்றது..

தைப் பூசத்திற்கு மூன்றாம் நாளன்று - ஸ்வாமிகள் சித்தியடைந்த அறையினை ஜன்னல் வழியாகத் தரிசிக்கலாம்..

சக உயிர்களிடத்தே காட்டும் அன்புதான்
இறைவனிடத்தில் நம்மை இட்டுச் செல்லும்!..

 - என, நல்வழி காட்டியவர் வள்ளலார் ஸ்வாமிகள்..

வள்ளல் பெருமான் அருளிய அன்பு வழியில் நடந்து
சக உயிர்களிடத்தில் தயை கூர்ந்து
அவனியை அன்பு மயமாக்கிட விழைவோம்..


அருளார் அமுதே சரணம் சரணம் 
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணாலயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
- வள்ளலார் ஸ்வாமிகள் -


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருண அருட்பெருஞ்சோதி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *

13 கருத்துகள்:

 1. சிறப்பு பதிவு வெகு அருமை... வாழ்க நலம்...

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. தைப்பூசம் குறித்து அழகிய புகைப்படங்களும் விளக்கங்களும் அருமை ஜி

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. தைபூசப் பதிவு அருமை ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. எம்பெருமான் முருகன் குறித்த அருமையான பகிர்வு ஐயா...
  நான் 6 வருடங்கள் பழனி தைப்பூசத்துக்கு நடந்து போயிருக்கிறேன்....
  ஆஹா... அற்புதமான நடைப்பயணம் அது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் பாதயாத்திரை செல்லும் போது ஆடல் பாடல் கொண்டாட்டம்தான்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. தைப்பூசத்திற்கான சிறப்புப் பதிவு சிறப்பான பதிவு. நேற்று பல நடைப்பயணிகளை பார்க்க முடிந்தது..... அவர்களின் மனோ திடமும் பக்தியும் மெய்சிலிர்க்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   கல்லும் கரடுமான சாலையில் பாதயாத்திரை செல்வோரின் மனோதிடம் வியக்கச் செய்வது..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அருமை தைபூசம் குறித்த அழகான தொகுப்பு,, தாமதமாக படிக்க வேண்டியதாகி விட்டது. மன்னிக்க,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   பல்வேறு சூழல்களுக்கு இடையேயும் -
   தாங்கள் தளத்திற்கு வந்து வாசிப்பதே எனக்கு மகிழ்ச்சி..

   தங்கள் வருகையும் கருத்துரையும் என்றென்றும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..