நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 09, 2015

கும்பாபிஷேக தரிசனம்

திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை சமேத வைத்யநாத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை மங்கலகரமாக நடந்தது.

நேற்று காலையில் கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலையில் -  நான்காம் கால பூஜை நடைபெற்றது.


யாக குண்டத்தில் மகாபூர்ணாஹுதியும் தீபாராதனையும் சமர்ப்பிக்கப்பட்ட பின் யாகசாலையில் இருந்து - சிவாச்சார்யர்களால் கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

தொடர்ந்து -

காசிவாசி ஸ்ரீலஸ்ரீ முத்துக் குமார ஸ்வாமி தம்பிரான் ஸ்வாமிகளின் முன்னிலையில் பரிவார மூர்த்திகளின் விமானங்கள் - ஸ்வாமி அம்பாள் திருமூலஸ்தானம் மற்றும் ராஜகோபுரம் - என அனைத்து கலசங்களிலும் புனித நீர் கொண்டு மகாகும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த மகாகும்பாபிஷேகம் இது!..

1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தத் திருக்கோயில் -  பதினோரு ஏக்கர் பரப்பளைவை உடையது!..

அப்பர் பெருமானும், ஞானசம்பந்தப் பெருமானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் பாடிப் பரவிய திருத்தலம் - திருமழபாடி!..

திருஆலம்பொழில் எனும் காவிரித் தென்கரை சிவாலயத்தில் தரிசனம் செய்து விட்டு உறங்கிய சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் கனவில் சிவபெருமான் தோன்றி,

எம்மை மறந்தனையோ!.. யாம் உறைவது மழபாடி!.. - என மொழிந்தனர்.

விழிப்புற்ற சுந்தரர் - திருமழபாடியைத் தேடிச் சென்று சிவதரிசனம் செய்தார்.

எம் அன்னையே, எந்தையே, அம்மானே, ஐயனே, என் உறவே, என்னை உடையவனே, என் தலைவனே, இறைவனே - உம்மையும் மறப்பேனோ!.. 

என் அறிவே!.. உன்னையல்லால் இனி யாரை - நான் நினைக்கக்கூடும்!.. 

- என்று பலவாறு புகழ்ந்து திருப்பதிகம் பாடி வணங்கினார் என்பது வரலாறு.

 இத்தகைய பெருமையுடைய திருக்கோயிலில் -

கருவறை, ஸ்ரீ விமானங்கள், மகா மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், அலங்கார மண்டபம், திருமுற்றம், திருக்குளம், திருமதில், திருமாளிகைப் பத்தி, கொடிமரம், ராஜகோபுரம் - என முற்றாக திருப்பணி நடைபெற்றுள்ளது.

இறையன்பர்களும் பொதுமக்களும் மனமுவந்து அளித்த பெருநிதி கொண்டு சிவாலயத் திருப்பணி இனிதே நிறைவேறியுள்ளது.

திரண்டிருந்த பக்தர்கள் மீது - ராஜகோபுரத்தின் மீதிருந்தும் விமானங்களில் இருந்தும் கலச தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டதும் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

கும்பாபிஷேகப் பெருவிழாவில் திருமழபாடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் அரியலூர், தஞ்சை, திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் மஹாஅபிஷேகமும் திருக்கல்யாண வைபவமும்
இரவு பஞ்சமூர்த்திகளின் வீதியுலாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது!..

கும்பாபிஷேகப் பெருவிழாவின் படங்களை வழங்கிய - திருஐயாறு சிவ சேவா சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!..











இரு நாட்களாக தஞ்சையம்பதி தளத்திற்கு 
வருகை தந்து - கும்பாபிஷேக நிகழ்வுகளைத் 
தரிசனம் செய்தோருக்கும் மற்றோருக்கும் 
எல்லா மங்கலங்களையும் 
ஸ்ரீ சுந்தராம்பிகா சமேத ஸ்ரீ வைத்யநாதப்பெருமான் தந்தருள்வாராக!..

மூவாப் பெரும்பனையுடன் மூலஸ்தானம்
கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!.. (7/24) 
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

அங்கையார ழலன் அழகார் சடைக்
கங்கையான் கடவுள் இட மேவிய
மங்கையான் உறையும் மழபாடியைத்
தங்கையாற் தொழுவார் தகவாளரே!.. (3/48)
திருஞானசம்பந்தர்.

நீராகி நெடுவரைகள் ஆனான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பும் ஆனான் கண்டாய்
பாராகிப் பௌவம் ஏழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க்கு அன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் தானே!.. (6/39)
அப்பர் பெருமான்.

சிவாய திருச்சிற்றம்பலம்..
* * *

20 கருத்துகள்:

  1. தகவல்களுக்கும், படங்களும் மிக அருமை ஐயா

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கும்பாபிஷாகம்...
    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்...
    நன்று ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகையளித்து தரிசனம் செய்து கருத்துரையும் தந்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கிட்டட்டும் அனைவருக்கும் பதிவுக்கு நன்றி நண்பரே,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. திருமழப்பாடி கும்பாபிஷேகம் தரிசனம் கிடைக்க வைத்தமிக்கு நன்றி துரை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து குடமுழுக்கு தரிசனம் செய்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  6. அழகான படங்கள் மூலம் கும்பாபிஷேகம் காண வைத்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      வருகை தந்து குடமுழுக்கு தரிசனம் செய்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  7. இரு முறை திருமழபாடி சென்றுள்ளேன். தங்கள் மூலமாக குடமுழுக்கினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தாங்கள் வருகை தந்து குடமுழுக்கு தரிசனம் செய்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  8. அய்யா வணக்கம்! எங்கள் ஊரான திருமழபாடி – குடமுழுக்கு சம்பந்தமான விவரங்களை அதிகப்படியான தகவல்களுடன் வெளியிட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி. இந்த பதிவினை, எனது வலைத்தளத்தில் ”திருமழபாடி குடமுழுக்கு (2015)” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டியிருக்கிறேன். இதற்கும் உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      திருமழபாடி கும்பாபிஷேக வைபவத்தினை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற தங்களுக்கு வணக்கம்..

      இயற்கையழகோடு இணைந்து திகழும் திருத்தலமாகிய திருமழபாடியில் நிகழ்ந்த கும்பாபிஷேக வைபவத்தினை அழகு ததும்பும் படங்களுடன் தங்கள் பதிவில் வெளியிட்டதுடன் -

      தஞ்சையம்பதி தளத்தையும் சுட்டிக் காட்டிய தங்களுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி..

      நீக்கு
  9. தங்கள் பக்கம் வர காலமாகிவிட்டது. குடமுழுக்கு வைபவம் காண கண் கோடி வேண்டும் என்பார்கள். அருமையான புகைப்படங்கள், மழபாடி மிக அருமையான ஊர். தங்களின் பதிவு அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      எங்கே வெகு நாட்களாகக் காணோம்!. - என நினைத்திருந்தேன்.. தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  10. படங்கள் மூலம் நாங்களும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திருப்தி... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..