நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

ஆடிப் பெருக்கு

இன்று ஆடி பதினெட்டாம் நாள். ஆடிப் பெருக்கு விழா!.. (ஆகஸ்ட்/3) 

அனைவருக்கும் ஆடி பெருக்கு நல்வாழ்த்துகள்..!

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள்  ஆடிப்பெருக்கு விழாவாக காலகாலமாக முழு உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 


காவிரியில் பொங்கிப் பெருகி வரும் புதுவெள்ளம் புத்துணர்வு  தரும். 

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை காவிரி ஆறு செழிக்க வைப்பதால் காவிரியை - தங்கள் வீட்டுப் பெண்ணாக மதித்து மக்கள் வழிபடுகிறார்கள். 

இதனால் காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆடி பெருக்கு திகழ்கின்றது.  


இந்த வருடம் எதிர்பார்த்த வகையில் விரைவாக தண்ணீர் திறந்து விடப்பட வில்லை. 

எனினும் மங்கல மரபுகளை மாற்றிக் கொள்வதற்கில்லை!..


காவிரி பொங்கிப் பெருகிப் பாய்வதற்குக் காரணம் முழுமுதற்பொருளான விநாயகப் பெருமான். எனவே காவிரி பூஜையில் அவருக்கு இஷ்டமான காப்பரிசியும் விளாங்கனியும் நாவற்பழமும் கண்டிப்பாக இருக்கும்.

காவிரி பாயும்  -  திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மாவட்டங்களில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

ஐந்து ஆறுகள் பாயும் தஞ்சையில் திருவையாறு   காவிரியின் புஷ்ய மண்டப படித்துறை மற்றும் திருஅரங்கத்தில் அம்மா மண்டபப் படித்துறை ஆகியன ஆடி பெருக்கு வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றவை. 

இங்கு புதுமண தம்பதிகள் அதிகளவில் வந்து வழிபடுகிறார்கள்.

ஆடிப்பெருக்கு அன்று வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறு குளம் நதி ஆகிய முக்கிய நீர்நிலைகளில் நீராடுவதைப் பெரும் பேறாகக் கருதுவர்.

புது மணப்பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றி புதிய மஞ்சள் கயிற்றுடன் புதியதாக மாற்றிக் கொள்வர். பெரும்பாலும் மூத்த சுமங்கலிகள் புதிய மஞ்சள் சரடு அணிவிப்பர்.

ஆடி பெருக்கு அன்று காவிரியில் குளித்து பூஜை செய்வது விசேஷமானது என்பதால் - காலையில் பெண்கள் காவிரியில் குளித்து ஆற்றங்கரையில் - படித்துறையில் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். 

அந்த இடத்தை சுத்தம் செய்து அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் பிடித்து வைத்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். 


பூஜையில் காப்பரிசி, விளாங்கனி, நாவற்பழம், எலுமிச்சங்கனி, காதோலை கருக மணி, வாசமுள்ள மலர்கள், வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து தூப தீப ஆராதனையுடன் கற்பூரம் காட்டி வழிபடுகின்றனர். 

பூஜை முடிந்ததும் காவிரியில் மஞ்சள் மற்றும் பூக்கள், காதோலை கருகமணி ஆகியவற்றை தாமரை இலையில் வைத்து அகல் விளக்குடன் மிதக்க விடுவர். 

சில இடங்களில் மாலை  நேரத்தில்  - விளக்கேற்றி பூஜை செய்து - தாமரை இலையில்  விளக்கினை வைத்து -  காவிரியில்  மிதக்க விடுவர்.

காவிரி பெருகி வரக் காரணமான விநாயகருக்கு பூஜை செய்வதும் பூஜையில் தேங்காய் பால் பொங்கல் நைவேத்யம் மற்றும் தேங்காய், புளி, தயிர் சாதங்கள் என சித்ரான்னம் படைத்து வழிபடுவதும் உண்டு.

நதிக்கரையில் கூடும் புதுமணத் தம்பதிகள் பட்டு வேட்டி  பட்டுச் சேலை அணிந்து  திருமண மாலைகளை ஆற்றில் மிதக்க விட்டு  புது வெள்ளம் போல வாழ்வில் என்றைக்கும் மகிழ்ச்சி பெருக வேண்டும் என்று வேண்டுவர். 

திருமணமாகாத கன்னிப் பெண்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும் நல்ல கணவன் அமைய வேண்டியும் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வர்.

திருவரங்கத்தில் ஆடிப் பெருக்கு அன்று நம்பெருமாள் அம்மா மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.

அங்கே - அரங்கனின் சார்பில் பட்டுப் புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பூக்கள், வெற்றிலை ஆகிய மங்கலப் பொருட்கள் அனைத்தும் யானை மீதேற்றி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, காவிரி ஆற்றின் நீரில் சீதனமாக விடப்படும்.

ஆடிப்பெருக்கு நாளன்று திருஐயாற்றில் ஸ்ரீ அறம் வளர்த்தநாயகியும் எம்பெருமான் ஐயாறப்பரும்  புஷ்ய மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வர். 

அங்கு  தீர்த்தவாரி நடக்கும்.


நீரின்றி அமையாது உலகு
ஆடிப்பெருக்கின் புது வெள்ளத்தில்  யோகிகளும், சித்த புருஷர்களும் ஒளி வடிவாக நீராடி, காவிரி அன்னையை வணங்குவதாக ஐதீகம்.

எனவே, காவிரியில் நீராடி  ஏழை எளியோர்க்கு தான தர்மங்களைச் செய்தால் அவர்களின் ஆசியைப் பெறலாம். 

ஆடிப்பெருக்கு பூஜையை காவிரிக் கரையில் செய்ய இயலாதவர்கள் வீட்டில் எளிய முறையில் செய்யலாம். 

வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் திருவிளக்கேற்றி வைக்கவும். ஒரு செம்பில்  -  அரைத்த மஞ்சளை சிறிதளவு போட்டு சுத்தமான தண்ணீரால் நிறைத்து அதனை  விளக்கின் முன் வைத்து தண்ணீரில் வாசமுள்ள பூக்களை  இடவும். 

ஏதாவது ஒரு சித்ரான்னம் செய்து நிவேதனமாக வைத்து சாம்பிராணி தூபம் நெய் தீபம் காட்டி கற்பூர ஆரத்தி செய்யவும்.  

கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, பொருணை எனும் புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபடவும். 

பின் செம்பிலுள்ள வீடு முழுதும் மாவிலை கொண்டு தெளித்து உள்ளங்கை அளவு  தீர்த்தப் பிரசாதமாக அருந்தவும். புனித நீர் மீதமிருந்தால் - செடி, கொடிகளின் வேரில் ஊற்றி விடவும். 


ஆடிப் பெருக்கு விழா காவிரியை மையமாகக் கொண்டே நடத்தப்படுகிறது. 

கல்லணையிலிருந்து - காவிரியிலும் அதன் கிளை நதிகளான புது ஆறு, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆகியவற்றில் நீர் மிகுதியாக திறந்து விடப்படும்.  

ஆனால், இந்த வருடம் அப்படியில்லை.

கடந்த பசலியில்- அறுவடையான வயல்களெல்லாம் எரு அடித்து உழப்பட்டு புதுத் தண்ணீரின் வரவுக்காகக் காத்திருக்கும்.

குறுவை சாகுபடிக்கு நாற்று நடவுப் பணிகள் தொடங்கும் நிலையில் ஆடிப் பெருக்கு திருநாள் ஆன்மிக விழாவாக காவிரியின் கரை நெடுக - களை கட்டுகிறது.


சீரும் சிறப்பும் பெற்ற காவிரி - வரும் ஆண்டுகளில் - முன்பு போல பொங்கிப் பெருகி வர வேண்டும். 

என்றும் குன்றாத செல்வச் செழிப்புடன்  மக்கள் வாழ்வதற்கு காவிரியே கதி..

நடந்தாய் வாழி காவேரி!..
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி!..
* * *

6 கருத்துகள்:

  1. அருமையான அழகான படங்களுடன் பதிவு நன்றாக இருக்கிறது.
    பல நல்லவைகளை பகிர்ந்து இருக்கிறீர்கள்.
    நீங்கள் சொல்வது சரிதான் ஆன்மீகவிழாவாக தமிழகத்தில் களைக்ட்டிக் கொண்டு இருக்கிறது.
    நதிகளை தெய்வமாக நினைத்து வழிபட்டு நலம் பெறுவோம்.

    சீரும் சிறப்பும் மிக்க ஆறு வரும் ஆண்டுகளில் பொங்கி பெருகி வர வேண்டும். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க அந்த காவேரி அன்னை அருள்புரிய வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய கருத்துரையினால் மனம் நெகிழ்கின்றது.
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. தண்ணீர் இல்லாத காவேரி ஆற்றினைப் பார்த்துப் பார்த்து மனது கஷ்டப் பட்டிருக்கிறேன். இனி வரும் நாட்களிலாவது காவேரி ஆறு தண்ணீரால் நிறைந்திருக்கட்டும்....

    ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      இனி வரும் நாட்களிலாவது காவிரியில் நீர் நிறைந்து நாடு செழிக்கட்டும்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  3. நீரின்றி அமையாது உலகு. நீராதாரத்துக்கு நன்றி செய்யும் முகமன் ஒரு நாள் கொண்டாடப் படுகிறது. அதுவும் புகழ் பெற்ற பொன்னி நதிதீரத்தில் வாழும்விவசாயக் குடிமக்கள் மகிழ்வுடன் கொண்டாடுத்தல் சிறப்பு. நகர் புறத்தே வாழும் மக்களுக்கு அன்று ஆடிப்பெருக்கு என்னும் பெயரில் பிரசாதங்கள் படைத்து உண்பதுதான் முடியும் மேட்டூரில் நீர் வரத்து அதிகமாகி வருகிறதே. .!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் கருத்து சிறப்பானது. நீர் ஆதாரத்திற்கு நன்றி செய்யும் நாள் தான் இது. மேட்டூரில் நீர்வரத்து அதிகரிப்பது மகிழ்ச்சியே..
      நல்ல மழையினாலும் நல்ல விளைச்சலினாலும் நாடு நலம் பெற வேண்டும் ஐயா..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..