நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 28, 2013

திருவேங்கட மாமலை

ஆனந்த நிலையம் விளங்கும் அற்புத மாமலை!..

எந்தநேரமும் பெருமானின் திருநாமம் ஒலித்துக் கொண்டிருக்கும் மாமலை!..

அலை அலையாய் திரண்டு வரும் அன்பர் கூட்டம், ஆனந்த வெள்ளத்தில் அழுந்தித் திளைக்கும் மாமலை  - திருவேங்கட மாமலை!.. 


வேங்கடம் எனில் பாவங்களைச் சுட்டெரிப்பது என்பது பொருள். இத்திருமலையினைப் பற்றி பிரம்மாண்ட புராணம், வராக புராணம், பத்ம புராணம் எனும் புராணங்கள் வழங்கும் விவரங்கள் ஏராளம். 

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனேறுஏழ் வென்றான் அடிமைத் திறமல்லால் 
கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து 
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!..

கிருதயுகத்தில் கருடாத்ரி எனவும் திரேதாயுகத்தில் வ்ருஷபாத்ரி எனவும் துவாபர யுகத்தில் அஞ்சனாத்ரி எனவும் கலியுகத்தில் வேங்கடாத்ரி எனவும் வழங்கப்படும் மாமலை. 


இத்திருமாமலையில் - வைகுந்தவாசனே விரும்பி எழுந்தருளி, கலியுகம் முடியும் வரை அன்பர்களின் குறைதீர  அருள் பாலிப்பதாக திருவாய் மலர்ந்தருளினார். அதன் பொருட்டே தேவர்களும் மகரிஷிகளும் மானுடர்களும் ஸ்ரீநிவாசப் பெருமானை எந்த நேரமும் துதித்து நிற்பதாகவும் ஆன்றோர்கள் கூறுகின்றனர். 

திருமலைக்குச் சென்று திருவேங்கடத்தானைச் சேவிப்பது  பாக்கியம்.  கேட்ட வரங்களை அள்ளித் தரும் பெருமானைச் சேவிக்க  நினைப்பதும் பெரும் பாக்கியம். 

ஒண்பவள வேலை உலவுதண் பாற்கடலுள் 
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு 
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும்  வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருஉடையேன் ஆவேனே!.. 

வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி  - எனும் ஏழு திருப்பெயர்களுடன் ஏழுமலையாக விளங்கி வரும் இத்திருத்தலத்தில் ஸ்ரீநிவாசப்பெருமான் திருக்கோயில் கொண்டுள்ளார்.  

 

ஸ்ரீநிவாசப்பெருமான் இத்திருத்தலத்தில் எழுந்தருளும் முன்பே  ஸ்ரீமந்நாராயண மூர்த்தி  - ஸ்ரீவராகப் பெருமானாக இங்கு திருக்காட்சி தந்தருளினார் என்பது ஐதீகம். எனவே இத்தலம் வராக க்ஷேத்திரம் எனவும் படும். 

தற்போதும் ஸ்வாமி புஷ்கரணிக்கு அருகில் விளங்கும் ஸ்ரீஆதிவராகப் பெருமானைச் சேவித்த பின்பே - ஸ்ரீநிவாசப்பெருமானை சேவிக்க வேண்டும் என்பது நியதி.   


கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து 
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன் 
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல் 
தம்பமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே!.. 

பெருமானின் திருக்கரங்களில் எவர் கண்களுக்கும் விளங்காமல் இருந்த சங்கு சக்கரங்களை  - அனைவரும் காணும்படி விளங்க அருள் புரிய வேண்டும் என பெருமானிடமே வேண்டிக் கொண்டவர் உடையவராகிய ஸ்ரீராமானுஜர்.  

திருவேங்கட மாமலையில் 108 தீர்த்தங்கள் விளங்குவதாகவும் அவற்றுள் பல அரூபமாக இருக்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது. குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், பாண்டு தீர்த்தம், பாபவிநாசன தீர்த்தம் என்பன பிரசித்தமானவை. 

அதிகாலையில் பெருமான் நீராடுவது ஆகாசகங்கை தீர்த்தத்தில்!.. சித்ரா பெளர்ணமி அன்று இதில் நீராடினால் சகல செல்வங்களும் சேரும் என்பது நம்பிக்கை!..

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ 
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் 
தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில் 
மீனாய்ப் பிறக்கும் விதிஉடையேன் ஆவேனே!..

எல்லாவற்றுக்கும் மேலாக பெருஞ்சிறப்புடன் விளங்குவது ஸ்வாமி புஷ்கரணி!.. 

மார்கழி வளர்பிறை துவாதசி அன்று சூர்ய உதயத்திற்கு முன்  ஆறு நாழிகையில் இருந்து பின் ஆறு நாழிகை வரை திருமலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும் இதில் கூடுவதாகவும் அப்போது புஷ்கரணியில் நீராடுவோர் பூவுலகில் சீரும் சிறப்புடனும் விளங்கி - சகல பாவங்களில் இருந்தும் நீங்கியவராக பெருமானின் திருவடியில் இன்புறும் பேறு எய்துவர் என வழங்கப்படுகின்றது.
 
திருவேங்க மாமலை  (தொண்டரடிப் பொடி ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் - ஆகியோர் தவிர்த்த) பத்து ஆழ்வார்களால் 200 திருப்பாசுரங்களுக்கு மேலாக மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.


இப்பதிவில் வழித்துணையாய் வருவன ''குலசேகர ஆழ்வார்'' அருளிய திருப்பாசுரங்கள்..

திருமலையில் பறவையாய்ப் பிறந்து -  பறந்து திரிந்து பெருமானை காண மாட்டேனா!.. திருமலையில் வண்டினங்கள் மொய்க்கும் செண்பக மரமாக நிற்க மாட்டேனா!.. 


மண்டிக் கிடக்கும் குறுஞ்செடிகளுள் ஒன்றென ஆகி பெருமானே உன்னைக் காண மாட்டேனா!.. திருமலையின் ஊடாக காட்டாறாகப் பெருகி, உருக மாட்டேனா!..  திருமலையின் சுனையில் மீனாக ஆகித் திரிந்து உன் திருவடி தரிசனம் பெற மாட்டேனா!..  

திருமலையின் படிக்கல்லாகக் கிடந்து உன் பவளவாய் அழகைக் காண மாட்டேனா!.. என்று  குலசேகர ஆழ்வார்  உருகுகின்றார்.  

இந்தத் திருப்பாசுரத்தின் வாயிலாகத் தான் - 

திருவேங்கடவனின் முன்னிருக்கும் வாயிற்படியினை ''குலசேகரன் படி'' என ஆன்றோர் வழங்கி மகிழ்கின்றனர்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் 
அடியாரும்  வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் 
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!.. 

ஓம் நமோ நாராயணாய!..

16 கருத்துகள்:

  1. அற்புத தரிசனம் கிடைத்தது ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. சனிக்கிழமை அன்று திருப்பதி போய் வந்த திருப்தியை உண்டாக்கியது உங்கள் பதிவு.
    குலசேகர ஆழ்வார் பாசுரங்கள் மனதை உருக்கும். நாமும் மீனாக , படியாக திருப்பதியில் கிடக்க மாட்டோமா என்று ஏங்க வைக்கும் பாசுரங்கள்.
    படிப்பவர்க்கு மனத் திருப்தி தரும் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. உளம் உவக்க உகந்ததொரு நாளில்
    அருமையான தரிசமும் உங்கள் பதிவும் சகோதரரே!...

    நாம் தேடித்திரியாமல் திரட்டித்தந்துள்ளீர்கள் அத்தனையையும்! அருமை!
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி!.. தங்களின் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. புரட்டாசி சனிக்கிழமைக்கு ஏற்ற நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். அன்பின் கருத்துரைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  5. படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!..

    திருவேங்கடத்தின் பெருமையை சிறப்பாக இயம்பிய
    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கி பாராட்டியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  6. பக்திப் பரவசமூட்டும் அற்புதமான படைப்பு. "மண்டிக் கிடக்கும்
    குறுஞ் செடிகளில் ஒன்றாகிப் பெருமானே உனைக் காண மாட்டென
    என்று எனது உள்ளமும் தான் தொளுகுது இங்கே இதுவரை நான்
    அறியாத மனம் நெகிழும் ஆக்கத்தைக் கண்ட பின்னால் .வாழ்த்துக்கள்
    ஐயா .மிக்க நன்றி சிறப்பான பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன!.. பெருமாளின் திருவருள் எல்லா நலங்களையும் வழங்குவதாக!..

      நீக்கு
  7. அற்புத தரிசனம் ஐயா...
    எம்பெருமான் படங்களும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி!..

      நீக்கு
  8. பல முறை திருமலைக்குச் சென்ற அனுபவம் உண்டு. 1970 -களின் முற்பகுதியில் குடும்பத்தோடு நடந்து சென்று புஷ்கரணியில் நீராடிய நினைவுகள் மலிழ்ச்சி தரும் என்றும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்புடையீர்!.. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன்!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..