நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 09, 2013

ஸ்ரீவிநாயக தரிசனம்

அனைவருக்கும் 
ஸ்ரீ விநாயகப் பெருமான் நல்லருள் புரிவாராக!.. 
நல்வாழ்த்துக்கள்!..


பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே
.
(1/123)


''..உமையம்மை பெண் யானை வடிவு கொள்ள, சிவபெருமான் - தான் ஆண் யானையின் வடிவு கொண்டு, தன் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் கடியவும் களையவும் கணபதியைத் தோற்றுவித்தருளினான்!..'' - என்பது திருஞான சம்பந்தப் பெருமானின் திருவாக்கு!..


கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை அவனாற் கொல்வித்தார் போலும் -  (6/53)

அதிலும், ''..கஜமுக அசுரனைக் கொல்வதற்காகவே துதிக்கையுடைய வேழ முகத்துப் பிள்ளையைப் பெருமான் படைத்தருளினான்!..'' - என்பது அப்பர் பெருமானின் அருள் வாக்கு!..

இப்படி, நம் பொருட்டு எழுந்தருளிய விநாயகப் பெருமானை - இந்த சதுர்த்தி நன்னாளில் போற்றி வணங்குவோம்.

விநாயகப் பெருமானைப் போற்றித் துதிக்கும் பழந்தமிழ்ப் பாடல்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய தத்துவங்களை உள்ளடக்கியவை. 

அருணகிரியார் - திருப்புகழில்,


உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே

தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே!..

- என்று வர்ணித்துப் போற்றுகின்றார். மேலும்,


பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியபன் னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கைமறவேனே!..

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடன்நெய்
எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணம் எனக்கொளொரு
விக்கினச மர்த்தனெனும் அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே!.. 

- என்று போற்றும் - இத் திருப்பாடலில் விநாயகப் பெருமானுக்கு உகந்த நிவேதனங்களைக் குறிப்பிடுவது சிறப்பு.

கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பல வகையான மாவு வகைகள், கிழங்குகள், சித்ரான்னங்கள், கடலை ஆகிய - இவைகளை பட்சணமாகக் கொள்ளும் விநாயகப்பெருமானே!.. வினைகளை நீக்க வல்லவனே!..  அருட்கடலே!.. கருணை மலையே!.. 


நதி திகழும் ஜடாமுடியுடன் பினாகம் எனும் வில்லையும் ஏந்தி உலகுக்கு அப்பனாக விளங்கும் சிவபெருமான் பெற்றருளிய புதல்வனே!.. 

மகாபாரதத்தினை மேரு மலையில் வரைவதற்காக ஒடிக்கப்பட்ட  ஒற்றைக் கொம்புடன் திகழும் பெருமாளே!..

 - என, விநாயகப் பெருமானின் தியாகத்தினை நமக்கு எடுத்துரைக்கின்றார். 

மேலும் மயில் விருத்தத்தில்,

சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்
சரண யுகள அமிர்த ப்ரபா

சந்த்ர சேகர மூஷிகாருட வெகு மோக
சத்ய ப்ரிய ஆலிங்கன

சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி
யம்பக விநாயகன் முதல்

சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்!.


முன்னொரு காலத்தில்,

திருமுருகன் ஒரு கனிக்காக - அழகான தோகை விளங்கும் மயிலில் ஆரோகணித்து, அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் சுற்றி வந்த  - அதே நேரத்தில்,

சிவபெருமானைச் சுற்றி வந்த விநாயகப் பெருமான் -

தேவலோக புஷ்பமான  சந்தான புஷ்பத்தின் நறுமணம் வீசுவதும், ஒலிக்கும் சதங்கையுடன் விளங்குவதும்  அமிர்த கலையுடன் கூடிய சந்திர ஒளியுடன் திகழ்தும் ஆகிய - திருவடிகளை உடையவர்.

பிறைச் சந்திரனை அணிந்தவர். மூஷிக வாகனர். சத்ய நெறியினைக்  கைக் கொண்டிருப்பவர். தேவலோகத்தின்  சிந்தாமணி போல் அடியார்கள்  நினைத்ததை அள்ளிக் கொடுப்பவர்.

தனது தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்து வணங்குவதற்காக - ரத்ன கலசத்தை திருக்கரத்தில் ஏந்தி இருப்பவர்.

மதநீர் பெருகும் கன்னங்களை உடையவர். முக்கண்களை  உடையவர்.

- என்று போற்றுகின்றார்.  இந்தத் திருப்பாடலில்  -


தனது தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்து வணங்குவதற்காக - ரத்ன கலசத்தை திருக்கரத்தில் ஏந்தி இருப்பவர்.

- எனும் வைர வரிகளை, நாம் நம் தலைமேற்கொண்டு, நாமும் நம் தாய் தந்தையரை வணங்கி - 

விநாயகப்பெருமானின் திருவருளைப்  
பெற்று உய்வடைவோமாக!..

ஓம் கம் கணபதயே நமஹ:

10 கருத்துகள்:

 1. பகிர்வு மிகவும் சிறப்பு...

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!.. மிக்க நன்றி.. தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு!..

   நீக்கு

 2. விநாயகச் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் அன்பான வாழ்த்துரை என்னை மகிழ்விக்கின்றது!.. எல்லாரும் பெருமானின் திருவருள் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்!..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே!

  விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!

  சுப்புத்தாத்தா வலையுலகம் மூலம் கண்டு இங்கு வந்தேன்.
  சிறப்பான அருமையான பதிவு!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. சகோதரி!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. ஸ்ரீ விநாயகப் பெருமானின் திருவருள் பெற்று நல்வாழ்வு எய்த வாழ்த்துகின்றேன்!...

   நீக்கு
 4. நன்றி ஐயா!.. தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 5. தனது தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்து வணங்குவதற்காக - ரத்ன கலசத்தை திருக்கரத்தில் ஏந்தி இருப்பவர்.

  - எனும் வைர வரிகளை, நம்
  சிந்தையில் நிறைக்கும்
  விந்தைப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 6. ஸ்ரீ விநாயகப் பெருமான் நமக்கு உணர்த்தும் வாழ்வின் நெறிமுறையே இதுதான்!.. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..