நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

தேர்த் திருப்பணி

தஞ்சை பெரிய கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்யும் திருப்பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. 


''ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!..''

என்று - திருநாவுக்கரசு சுவாமிகள் திரு ஆரூரில் பெருமானைக் கண்ட விதம் பற்றித் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார். 

திருவிழாவும் தேரோட்டமும் நமது கலாச்சாரத்துடன் இணைந்தவை. கொடியேற்றம் முதல் தெப்பம் தீர்த்தவாரி வரையிலான வைபவங்களுள் மக்கள் பேராவலுடன் எதிர் நோக்குவது தேர் இழுக்கும் வைபவத்தினையே!.. 

தேர் - பல்லுயிர்களும் அடங்கிய உலகின் பிரதி வடிவமாகக் கருதப்படுவது. தேரில் இறைவன் ஆரோகணித்து பவனி வரும் போது - அதனை இழுக்கும் மக்கள் வேறுபாடுகளையும்  கடந்தவர்களாக பேரானந்தத்தில் இன்புற்று மகிழ்கின்றனர். 

திருஆரூர் ஆழித்தேர்
தமிழகத்தின் முதன்மையான தேர் - திருஆரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமானின் திருத்தேர் ஆகும். மதுரை, ஸ்ரீரங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர், கும்பகோணம் - இங்கெல்லாம் நிகழும் தேரோட்ட வைபவங்கள் பிரசித்தமானவை. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் சோழர்களின் தலைநகரமாகத் திகழ்ந்ததும் ஆகிய, தஞ்சை மாநகரில் - மாமன்னன் ராஜராஜ சோழன், முழுதும் கருங்கற்களால்  - ஒரு பெருங்கோயிலை எழுப்பி - அதில் மாபெரும் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தான். வரலாற்றின் ஏடுகளில் என்றும் அழியாத பெரும் புகழினைப் பெற்றான். 


ராஜராஜேஸ்வரம் எனும் திருப்பெயருடன் எழுந்த இப்பெருங்கோயில் - இன்று பெரிய கோயில் என்றும் ஸ்ரீபிரகதீஸ்வரர் கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. தட்க்ஷிணமேரு எனப்படும் ஸ்ரீ விமானம் 13 நிலைகளை உடையது. விமானத்தின் உயரம் 216 அடி. மாமன்னன் ராஜராஜ சோழன் எழுப்பிய  - பெருங்கோயிலைக் கண்டு உலகமே வியக்கின்றது. 

 

அதனால் தானே மத்திய அரசின் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் இத்திருக்கோயில் -  யுனெஸ்கோவினால் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்மீகமும் அறிவியலும் கலையும் கற்பனைத் திறமும் பின்னிப் பிணைந்து காண்பவரைத் திகைக்கச் செய்யும் காலப்பெட்டகமாகத் திகழ்கின்றது. 

காண்பவர் கண்டு வணங்கி, கண் களித்து நிற்கச் செய்யும் இத்திருக்கோயில் - தமிழரின் கட்டடக் கலைக்குத் தலை சிறந்த சான்றாகத் திகழ்கின்றது. 

இத்தகைய பெருமை மிக்க பெரிய கோயிலில்  - பல்வேறு விழாக்களுடன் தேர்த் திருவிழாவும் நடைபெற்று வந்ததாக, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள  வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலும் சான்றாக, தஞ்சை மேலராஜவீதியில் - இடிபாடுகளுடன் தேரடி காணப்படுகின்றது. 

 

திருவிழாக்காலங்களில் - தஞ்சை மாநகரின் நான்கு ராஜ வீதிகளிலும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பவனி வந்ததாகவும் பெருந் தேரினை இழுக்க  27,394 ஆட்கள்  - பல்வேறு கிராமங்களில் இருந்தும் கோயில் கட்டளையாக வந்ததாகவும் ஆவணங்கள் கூறுகின்றன. 

தஞ்சையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நிகழ்ந்த திருவிழாக்கள் - அதன் பின் வீசிய அரசியல் சூறாவளிகளால் பாதிக்கப்பட்டன. திருவிழாக்கள் நின்று போக,  தேர்களும் பறிபோயின. பலகாலம் ஆயிற்று. 

தஞ்சை மக்களும் ஆசைப்பட்டனர். மீண்டும் பெரிய கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற வேண்டும் என்று!.. 

மக்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக - பெரிய கோயிலுக்குப் புதிதாக தேர் செய்யும் திருப்பணிக்கு ஐம்பது லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதன்படி  16¾ அடி உயரத்தில் புதிய தேர் செய்யும் திருப்பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் இருந்து இலுப்பை மரக் கட்டைகள் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  மேலராஜவீதியில் உள்ள ஸ்ரீ கொங்கணேஸ்வரர் ஆலய வளாகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஸ்தபதி திரு. வரதராஜன் தலைமையில் திரு.முருகேசன், திரு.சிங்காரம், திரு.கண்ணன், திரு.செங்கமலை, திரு.நல்லுசாமி, திரு.கோவிந்தராஜ் ஆகிய கலைஞர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தலைமை ஸ்தபதி திரு. வரதராஜன் அளித்த விவரங்கள். திருத்தேர் செய்ய 1150 கன அடி இலுப்பை மரக்கட்டைகளும் 25 கன அடி தேக்கு மரக்கட்டையும் டன் இரும்பும் பயன்படுத்தப்பட உள்ளன. 3 முதல் 3½ டன் எடையில் தேரின் சக்கரங்களும் அச்சும் - திருச்சி BHEL நிறுவனத்தில் வடிவமைக்கப்படுகின்றன. புதிய தேர் 52 டன் எடை கொண்டதாக விளங்கும். 

நன்றி - Facebook
தேரின் முதல் அடுக்கில் 72 சிற்பங்களும் இரண்டாவது அடுக்கில் 65 சிற்பங்களும் மூன்றாவது அடுக்கில் 64 சிற்பங்களும் இடம் பெறுகின்றன. மேலும் தேர் முழுதும் 225 போதியல் சிற்பங்களும் அமைக்கப்படுகின்றன. 

பெரிய கோயிலின் ஆகம விதிகளுக்கு உட்பட்டு சிற்பங்கள் வடிவமைக்கப் படுகின்றன. கோயிலில் விளங்கும் விநாயகர், முருகன், மஹாவிஷ்ணு, அம்பிகை, சிவபெருமான் - திருக்கோல சிற்பங்கள் 75 சதவீதம் தேரிலும் அமைக்கப்படும். 

பூமியில் இருந்து பலகை மட்டம் வரை 12¼ அடி உயரம். தேவாசனம் அடி உயரம் சிம்மாசனம் 2 அடி உயரம் என - மொத்தம் 16¾ அடி உயரத்தில் தேர் விளங்கும். 

தேரோட்டம் - திருஆனைக்கா

பங்குனியில் வெள்ளோட்டம் நிகழ்த்தி  சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

ஸ்ரீபிரகந்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் - பெருந்தேரில் எழுந்தருளி - தஞ்சை மாநகரின் ராஜவீதிகளில் பவனி வருவதைக் காண  -  மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

திருநாவுக்கரசு சுவாமிகள், சிவபெருமானை - ஆழித்தேர் வித்தகர் என்று திருப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

கோழிக் கொடியோன்தன் தாதை போலும் 
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும் 
ஊழி முதல்வரும் தாமே போலும் 
உள்குவார் உள்ளத்தினுள்ளார் போலும் 
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும் 
அடைந்தவர்க்கு அன்பராய் நின்றார் போலும் 
ஏழு பிறவிக்குந் தாமே போலும் 
இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே!.(6/89/2)

ஆழித்தேரில் எழுந்தருளும் ஈசன் 
எல்லாருக்கும் நலமும் வளமும் 
பொழிந்து காத்தருள்வாராக!..

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்!..

16 கருத்துகள்:

 1. படங்களும் பகிர்வும் வெகு அருமை.

  ஐந்தாவது காட்டியுள்ள லிங்கம் அற்புதம்.

  மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு
 3. மிகவும் சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 4. சிறப்பான பகிர்வு...
  படங்கள் அழகு....
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு. குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 5. ஸ்ரீபிரகந்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் - பெருந்தேரில் எழுந்தருளி - தஞ்சை மாநகரின் ராஜவீதிகளில் பவனி வருவதைக் காண - மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  ஆவலைத்தூண்டி மகிழ்ச்சியடைய வைக்கும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்.. எல்லாருக்கும் பெருமான் நல்லருள் புரிவாராக!..

   நீக்கு
 6. செய்தி தரும் மகிழ்வுக்கு எல்லையே இல்லை.

  நன்றி.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடயீர்!..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு

 7. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் சென்றிருந்தோம். பல்வாறு கேள்விப்பட்ட , பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி BHEL நிறுவன உதவியுடன் புதுப்பிக்கப் பட்ட தேர் காண விழைந்தோம். அங்கு நாங்கள் கண்டது எல்லாம் பிரிக்கப் பட்ட தேர். அது சரியாகி தேர் ஓடுகிறதா என்று என் பதிவு ஒன்றில் கேட்டிருந்தேன். மீண்டும் இப்போது அதே கேள்வி
  தஞ்சையில் தேர் கட்டப் பட்டு வீதிகளில் பவனி வருவதை காண முடியுமோ தெரிய வில்லை. ஆனால் அந்தச் செய்தி மகிழ்வளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்.. சில ஆண்டுகளுக்கு முன் திருஆரூர் தேர் பிரிக்கப்பட்டு வெட்டவெளியில் கிடந்ததை நாங்களும் கண்டோம். தங்கள் சொல்வது போல மீண்டும் தேர் ஓடுகின்றதா.. தெரியவில்லை!.. ஆயினும் தஞ்சாவூர் தேர் திருப்பணி விரைந்து நடப்பதாக அறிய முடிகின்றது!.. நிச்சயம் தேரோட்டம் காண்போம்!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 8. தகவலுக்கு நன்றி. தேர் செய்யப்பட்டு ஓடத் தொடங்கி விட்டதாகச் செய்தி எதுவும் படிக்கவில்லை. எப்போது தேர் ஓடும்? அருமையான தகவல்களை அளித்தமைக்கு நன்றி.விரைவில் தஞ்சை தேர் ஓட்டத்தை எதிர்பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வரவு நல்வரவாகுக!...
   தங்கள்து வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 9. தேர் ஏற்கெனவே ஓடி இருந்தால் படங்கள் வெளியிட்டிருந்தால் சுட்டியைத் தேடிப் படிக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தஞ்சை பெரிய கோயில் தேர் திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் முற்றுப் பெறவில்லை. எதிர் வரும் பங்குனி மாதத்தில் வெள்ளோட்டம் நிகழ்த்த இருக்கின்றார்கள்.. தங்களுடைய ஆர்வம் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..