நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தேரோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேரோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 21, 2024

தேரோட்டம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 8
ஞாயிற்றுக்கிழமை


அஸ்திர தேவர்


பல்வேறு சிறப்புகள் உடைய தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருந்திருவிழா 18 நாட்கள் நடைபெறும்..

முளைப்பாரி

இதன்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா
கடந்த பங்குனி 24 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலா 
நடைபெற்றது..




சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று சித்திரை ஏழாம் நாள் (20/4) சனிக்கிழமை காலை 7 மணியளவில் ஸ்ரீ அல்லியங்கோதையுடன் தஞ்சை விடங்கப் பெருமானாகிய ஸ்ரீ தியாகராஜர் திருத்தேரில் எழுந்தருளினார்..

ஆரூரா தியாகேசா.. முழக்கத்துடன் அடியார்கள் வடம் பிடிக்க ராஜ வீதிகளில் 
திருத்தேரோட்டம் வெகு சிறப்புடன் 
நடைபெற்றது..


தேரோட்டத்தின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..
 







தேர் நிலை

காத லாகிக்
  கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை
  நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
  மெய்ப்பொருல் ஆவது
நாதன் நாமம்
  நம சிவாயவே.. 3/1/1
-: திருஞானசம்பந்தர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஏப்ரல் 17, 2019

திருத்தேர்

தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலின்
சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சமாகிய திருத்தேரோட்டம்
நேற்று காலையில் நடைபெற்றது...

கடந்த 2/4 செவ்வாய்க்கிழமையன்று திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது..
ஒவ்வொரு நாளும் அலங்கார ஆராதனைகளுடன் ஸ்ரீ பெருவுடையாரும் பிரஹந்நாயகி அம்பிகையும் திருவீதி எழுந்தருளினர்...

ஸ்ரீ தியாகராஜர் - அல்லியங்கோதை
பதினைந்தாம் திருநாளாகிய நேற்று 16/4 விடியற்காலையில்
வீதிவிடங்கப்பெருமானாகிய ஸ்ரீ தியாகராஜரும் அல்லியங்கோதையும்
யதாஸ்தானத்தில் இருந்து திருத்தேருக்கு எழுந்தருளினர்...

மங்கல முழக்கங்களுடன் வடம்பிடிக்கப்பட்ட திருத்தேர்
ராஜவீதிகளில் பவனி வந்து நிலையை அடைந்தது...

நான்கு ராஜவீதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று திருத்தேரோட்டத்தைத் தரிசித்திருக்கின்றனர்...

ராஜவீதிகளின் பல இடங்களிலும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் முதலான குளிர்பானங்களும் சித்ரான்னங்களும் வழங்கியிருக்கின்றனர் - இறையன்பர்கள்...

திருத்தேரோட்ட நிகழ்ச்சிகளை வழங்கியவர்
அன்பின் நண்பர் திரு.தஞ்சை ஞானசேகரன்..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..




ஸ்ரீ விநாயகப்பெருமான்
ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் திருமுருகன் 
எம்பெருமானும் அம்பிகையும்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நம சிவாயவே..(4/11)
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ ப்ரஹந்நாயகி அம்பிகை 
ஸ்ரீ சண்டிகேசர்
அஸ்த்ர தேவர் 









ரிஷப வாகன தரிசனம் 
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது 
நல்லக விளக்கது நம சிவாயவே..(4/11)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

தேர்த் திருப்பணி

தஞ்சை பெரிய கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்யும் திருப்பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. 


''ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!..''

என்று - திருநாவுக்கரசு சுவாமிகள் திரு ஆரூரில் பெருமானைக் கண்ட விதம் பற்றித் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார். 

திருவிழாவும் தேரோட்டமும் நமது கலாச்சாரத்துடன் இணைந்தவை. கொடியேற்றம் முதல் தெப்பம் தீர்த்தவாரி வரையிலான வைபவங்களுள் மக்கள் பேராவலுடன் எதிர் நோக்குவது தேர் இழுக்கும் வைபவத்தினையே!.. 

தேர் - பல்லுயிர்களும் அடங்கிய உலகின் பிரதி வடிவமாகக் கருதப்படுவது. தேரில் இறைவன் ஆரோகணித்து பவனி வரும் போது - அதனை இழுக்கும் மக்கள் வேறுபாடுகளையும்  கடந்தவர்களாக பேரானந்தத்தில் இன்புற்று மகிழ்கின்றனர். 

திருஆரூர் ஆழித்தேர்
தமிழகத்தின் முதன்மையான தேர் - திருஆரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமானின் திருத்தேர் ஆகும். மதுரை, ஸ்ரீரங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர், கும்பகோணம் - இங்கெல்லாம் நிகழும் தேரோட்ட வைபவங்கள் பிரசித்தமானவை. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் சோழர்களின் தலைநகரமாகத் திகழ்ந்ததும் ஆகிய, தஞ்சை மாநகரில் - மாமன்னன் ராஜராஜ சோழன், முழுதும் கருங்கற்களால்  - ஒரு பெருங்கோயிலை எழுப்பி - அதில் மாபெரும் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தான். வரலாற்றின் ஏடுகளில் என்றும் அழியாத பெரும் புகழினைப் பெற்றான். 


ராஜராஜேஸ்வரம் எனும் திருப்பெயருடன் எழுந்த இப்பெருங்கோயில் - இன்று பெரிய கோயில் என்றும் ஸ்ரீபிரகதீஸ்வரர் கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. தட்க்ஷிணமேரு எனப்படும் ஸ்ரீ விமானம் 13 நிலைகளை உடையது. விமானத்தின் உயரம் 216 அடி. மாமன்னன் ராஜராஜ சோழன் எழுப்பிய  - பெருங்கோயிலைக் கண்டு உலகமே வியக்கின்றது. 

 

அதனால் தானே மத்திய அரசின் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் இத்திருக்கோயில் -  யுனெஸ்கோவினால் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்மீகமும் அறிவியலும் கலையும் கற்பனைத் திறமும் பின்னிப் பிணைந்து காண்பவரைத் திகைக்கச் செய்யும் காலப்பெட்டகமாகத் திகழ்கின்றது. 

காண்பவர் கண்டு வணங்கி, கண் களித்து நிற்கச் செய்யும் இத்திருக்கோயில் - தமிழரின் கட்டடக் கலைக்குத் தலை சிறந்த சான்றாகத் திகழ்கின்றது. 

இத்தகைய பெருமை மிக்க பெரிய கோயிலில்  - பல்வேறு விழாக்களுடன் தேர்த் திருவிழாவும் நடைபெற்று வந்ததாக, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள  வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலும் சான்றாக, தஞ்சை மேலராஜவீதியில் - இடிபாடுகளுடன் தேரடி காணப்படுகின்றது. 

 

திருவிழாக்காலங்களில் - தஞ்சை மாநகரின் நான்கு ராஜ வீதிகளிலும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பவனி வந்ததாகவும் பெருந் தேரினை இழுக்க  27,394 ஆட்கள்  - பல்வேறு கிராமங்களில் இருந்தும் கோயில் கட்டளையாக வந்ததாகவும் ஆவணங்கள் கூறுகின்றன. 

தஞ்சையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நிகழ்ந்த திருவிழாக்கள் - அதன் பின் வீசிய அரசியல் சூறாவளிகளால் பாதிக்கப்பட்டன. திருவிழாக்கள் நின்று போக,  தேர்களும் பறிபோயின. பலகாலம் ஆயிற்று. 

தஞ்சை மக்களும் ஆசைப்பட்டனர். மீண்டும் பெரிய கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற வேண்டும் என்று!.. 

மக்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக - பெரிய கோயிலுக்குப் புதிதாக தேர் செய்யும் திருப்பணிக்கு ஐம்பது லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதன்படி  16¾ அடி உயரத்தில் புதிய தேர் செய்யும் திருப்பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் இருந்து இலுப்பை மரக் கட்டைகள் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  மேலராஜவீதியில் உள்ள ஸ்ரீ கொங்கணேஸ்வரர் ஆலய வளாகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஸ்தபதி திரு. வரதராஜன் தலைமையில் திரு.முருகேசன், திரு.சிங்காரம், திரு.கண்ணன், திரு.செங்கமலை, திரு.நல்லுசாமி, திரு.கோவிந்தராஜ் ஆகிய கலைஞர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தலைமை ஸ்தபதி திரு. வரதராஜன் அளித்த விவரங்கள். திருத்தேர் செய்ய 1150 கன அடி இலுப்பை மரக்கட்டைகளும் 25 கன அடி தேக்கு மரக்கட்டையும் டன் இரும்பும் பயன்படுத்தப்பட உள்ளன. 3 முதல் 3½ டன் எடையில் தேரின் சக்கரங்களும் அச்சும் - திருச்சி BHEL நிறுவனத்தில் வடிவமைக்கப்படுகின்றன. புதிய தேர் 52 டன் எடை கொண்டதாக விளங்கும். 

நன்றி - Facebook
தேரின் முதல் அடுக்கில் 72 சிற்பங்களும் இரண்டாவது அடுக்கில் 65 சிற்பங்களும் மூன்றாவது அடுக்கில் 64 சிற்பங்களும் இடம் பெறுகின்றன. மேலும் தேர் முழுதும் 225 போதியல் சிற்பங்களும் அமைக்கப்படுகின்றன. 

பெரிய கோயிலின் ஆகம விதிகளுக்கு உட்பட்டு சிற்பங்கள் வடிவமைக்கப் படுகின்றன. கோயிலில் விளங்கும் விநாயகர், முருகன், மஹாவிஷ்ணு, அம்பிகை, சிவபெருமான் - திருக்கோல சிற்பங்கள் 75 சதவீதம் தேரிலும் அமைக்கப்படும். 

பூமியில் இருந்து பலகை மட்டம் வரை 12¼ அடி உயரம். தேவாசனம் அடி உயரம் சிம்மாசனம் 2 அடி உயரம் என - மொத்தம் 16¾ அடி உயரத்தில் தேர் விளங்கும். 

தேரோட்டம் - திருஆனைக்கா

பங்குனியில் வெள்ளோட்டம் நிகழ்த்தி  சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

ஸ்ரீபிரகந்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் - பெருந்தேரில் எழுந்தருளி - தஞ்சை மாநகரின் ராஜவீதிகளில் பவனி வருவதைக் காண  -  மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

திருநாவுக்கரசு சுவாமிகள், சிவபெருமானை - ஆழித்தேர் வித்தகர் என்று திருப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

கோழிக் கொடியோன்தன் தாதை போலும் 
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும் 
ஊழி முதல்வரும் தாமே போலும் 
உள்குவார் உள்ளத்தினுள்ளார் போலும் 
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும் 
அடைந்தவர்க்கு அன்பராய் நின்றார் போலும் 
ஏழு பிறவிக்குந் தாமே போலும் 
இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே!.(6/89/2)

ஆழித்தேரில் எழுந்தருளும் ஈசன் 
எல்லாருக்கும் நலமும் வளமும் 
பொழிந்து காத்தருள்வாராக!..

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்!..