நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 25, 2014

நல்வாழ்த்துக்கள்

வலைப்பதிவர்கள் ஆவலுடன் காத்துக் கிடந்த நாள் - 26.10.2014. 



மதுரை மாநகர் - மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேல்கரையில் அமைந்துள்ள கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தின் முன் -

சந்தோஷத் தோரணங்கள் செந்தமிழ்த்தென்றலில் ஆடிக் கொண்டிருக்கின்றன.

அவற்றின் ஊடாக - ஆதவனும் ஆவலுடன் எழுந்து வருகின்றான்.

என்ன காரணம்!..



பைந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் - வலைப் பதிவர் திருவிழா(2014)!.. 

தமிழ்த்தாயை வாழ்த்தி அவளுடைய நல்லாசிகளுடன்,

மூன்றாவது வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவின் முற்பகல் நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை ஒன்பது மணியளவில் தொடங்குகின்றன.

அன்பின் திரு சங்கரலிங்கம் (உணவு உலகம்) அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்துகின்றார். 

அன்பின் திரு சீனா ஐயா (வலைச்சரம்) அவர்கள் விழாவினுக்குத் தலைமை தாங்குகின்றார்.

அன்பின் திரு ரமணி (தீதும் நன்றும்) அவர்கள் துணைத்தலைவராக இலங்க அன்பின் திரு மதுரை சரவணன் அவர்கள் முன்னிலை வகிக்கின்றார்.



தொடக்கமாக தொழில் நுட்ப பதிவர்கள் சிறப்பிக்கப்படுகின்றனர். 

அதனைத் தொடர்ந்து  - அன்பின் வலைப் பதிவர்களின் இனிய அறிமுகம்.

முற்பகல் நிகழ்ச்சிகளின் நிறைவாக -

பேராசிரியர் தா.கு. சுப்ரமணியன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகின்றார். 

அதன்பின் இடைவேளை.

மதிய வேளையில் சுவை மிகுந்த சைவ உணவு!.. 

அந்தப் பொறுப்பினை -

அன்புக்குரிய சீனா ஐயா அவர்களுடன் திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் ன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு முன்நிற்கின்றனர்.

சுவையான மதிய உணவிற்குப் பின் சற்றே ஓய்வு!..

பிற்பகல் நிகழ்ச்சிகளின் தொடக்கமாக -

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் சிறப்புரை.

அதன்பின் - 

குடந்தை ஆர்.வி சரவணன் அவர்கள் எழுதி இயக்கிய சிலநொடி சிநேகம்
எனும் குறும்படம் வெளியிடப்படுகின்றது. 

தொடர்ந்து -

சகோதர வலைப்பதிவாளர்களின் படைப்புகள் வெளியிடப்படுகின்றன. 



அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்களின் 
கரந்தை மாமனிதர்கள்  - எனும் நூல் வெளியிடப்படுகின்றது.  

தொடரும் நிகழ்ச்சியில், 



அன்புக்குரிய வி.கிரேஸ் பிரதிபா (தேன்மதுரத் தமிழ்) அவர்களின் 
துளிர் விடும் விதைகள் - எனும் நூலும்,


அன்புக்குரிய மு.கீதா (வேலு நாச்சியார்) அவர்களின் 
ஒரு கோப்பை மனிதம் - எனும் நூலும்,

அன்புக்குரிய P.R.ஜெயராஜன் (சட்டப் பார்வை) அவர்களின் 
நல்லா எழுதுங்க.. நல்லதையே எழுதுங்க.. 
- எனும் நூலும் வெளியிடப்படுகின்றன.



நிகழ்ச்சிகளின் நிறைவாக -
அன்புக்குரிய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் நன்றியுரை.

தேசிய கீதத்துடன் விழா நிறைவுறும் வேளையில் - 
கதிரவன் கையசைத்து விடை பெற்றுக் கொள்கின்றான். 

மீண்டும் அடுத்த ஆண்டு பிறிதொரு இனிய வேளையில் சந்திப்போம்!.. - என ஆனந்த மிகுதியால் அன்புடன் கண்கள் கசிகின்றன.


வலைப் பதிவர் சந்திப்பு நிகழும் நல்ல நாளில்
எனது அன்பு மகளுக்கு சிவகாசியில் 
வளைகாப்பு வைபவம் நடக்கின்றது.


அங்கும் இங்குமாக சந்தோஷ அலைகள் கரை புரள்கின்றன. 

வலைத்தள நட்புகளுடன் இணைந்திருக்கும் மனம் -
ஆனந்தத் தென்றல் தவழும் பூஞ்சோலை ஆகின்றது.
எங்கும் நலமே விளைய வேண்டுகின்றேன்!..

வலைப் பதிவர்கள் சந்திப்பு திருவிழா 
இனிதே நிகழ நல்வாழ்த்துக்கள்!..

நட்பும் நலமும் வாழ்க!.. வளர்க!.. 
என அன்புடன் வாழ்த்துகின்றேன்!..
***