நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 15, 2015

வரலாறு முக்கியம்

ஐக்கிய அரபு அமீரகம்..

United Arab Emirates - UAE.,

சீர்மிகும் அரபியில் - தவ்லத் அல் - இமாரத் அல் - அராபியா..


ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் - அபுதாபி..

ஐக்கிய அரபு அமீரகம் என்பது - ஏழு நாடுகளின் கூட்டமைப்பு..

கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடுகள் -

துபாய்
ஷார்ஜா
அஜ்மான்
புஜைரா
உம் அல் குவைன்
ராஸ் அல் கைமா -

- என்பன..

இவற்றின் அடிப்படை வளம் - பேரீச்சை.. அது மட்டுமே!..

பின்னாளில் கண்டறியப்பட்டதே - பெட்ரோலியம் மற்றும் எரிவாயு!..

இவற்றைக் கொண்டு - தன்னை வளப்படுத்திக் கொண்டதோடு -
பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வையும் வளப்படுத்திய பெருமை
அனைத்து அரபு நாடுகளுக்கும் உரியது..

அரபு தேசத்தின் வளத்தால் -
எத்தனை எத்தனையோ - உள்ளங்களும் இல்லங்களும்
ஒளி பெற்றிருக்கின்றன - என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது!..

பொதுவாக அரபு நாடுகளில் அங்கும் இங்கும் அறியக்கூடியதாக -
தவறுகள்.. இன்னல்கள்.. இடையூறுகள்..

ஆயினும்,

வேலை தேடுவோரின் நெஞ்சங்களில் விளக்காகத் தென்படுபவை -

வளைகுடாவின் பாலைவனச் சோலைகளே!..

அந்த வகையில் - இந்த மண்ணுக்கு அன்பின் வணக்கங்கள்!..

அபுதாபியில் தான் என் மருமகன் பணிபுரிகின்றார்..

செல்லத்தின் செல்லத்தைக் காண வேண்டும்..
அவர்கள் இல்லத்தில் சில நாட்கள் தங்கவேண்டும். அதற்காகவே விடுமுறை..


கடந்த சனிக்கிழமை (10 அக்டோபர்) நள்ளிரவு குவைத்திலிருந்து - அபுதாபிக்கு வந்து சேர்ந்தபின்,

நேற்றைய மாலைப் பொழுது அழகாக இருந்தது..

அபுதாபிக்கு வந்த இரவுப் பொழுதில் -
மிகக் கடுமையான - ருத்துபா எனும் புழுக்கம் நிலவியது.. செல்லும் வழி புலப்படவில்லை.. அந்த அளவுக்கு அடர்த்தியான நீராவி போன்ற காற்று..

ஆனால் - நேற்று புழுதிக்காற்று வீசவில்லை..

வெப்பத்துடன் கூடிய புழுக்கமும் காணப்படவில்லை..

வழிநெடுக -  சிலு சிலு.. என்று, இளங்காற்று!..

காரணம் -

இனியதொரு சந்திப்பு நிகழ இருந்தது - அபுதாபியில்!..

முன்னதாகவே சொல்லியிருந்தபடி - எங்கள் பயணம்..

மதீனா ஸையத் எனும் (Madinat Zayed Shopping Mall) அங்காடி வளாகத்தினைச் சென்றடைந்தோம்..


25 நிமிட தாமதம்..

ஆனாலும் - மாறாத புன்னகையுடன் அவர்கள் வரவேற்றனர்..

அவர்கள் என்றால் -

அன்புக்குரிய கில்லர் ஜி மற்றும் அன்புக்குரிய சே. குமார் ..

அவர்களைக் கண்டதுமே - என் கண்கள் பனித்தன..

ஏதோ ஆயிரம் காலம் பழகியதைப் போன்றதொரு உணர்வு..

அன்பின் மிகுதியால் வார்த்தைகள் தடுமாறின..

ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்தோம்..

அப்படிச் சொல்வதை விட -

நாந்தேன்.. பேசிக் கொண்டிருந்தேன்!.. - என்று சொல்வதே பொருந்தும்..

சற்றே இடைவெளி..
அங்கிருந்த - சரவண பவன் உணவகத்தில் சிற்றுண்டி.. எளிமையாக!..

நாங்கள் பேசிக் கொண்ட விஷயங்களை நூறு பதிவுகளாகத் தரலாம்..

ஆயினும், இப்போதைக்கு - இதோ, சில காட்சிகள்!..






அன்பின் கில்லர் ஜி அவர்களும் குமார் அவர்களும் பரிசுகளுடன் என்னை மகிழ்வித்தது - எதிர்பாராத சிறப்பு..

அவர்களுடைய அன்பு எனும் வலைதனில் சிக்கிக் கொண்டேன்..

எங்கள் சந்திப்பினை எதிர்நோக்கியே - அந்த வளாகம் முழுதும்,
மின் விளக்குகளால் ஜொலித்தது என்பதனைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்!..

(ஏ.... சாமீய்.... சதாசிவோம்!?....)

இரவுப் பொழுதும் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் -

பிரிவதற்கு மனமில்லாமல் விடை பெற்றுக் கொண்டோம்..


நவராத்திரி வைபவம் அனுசரிக்கப்படும் வேளையில் அனைவரும் அம்பிகையிடம் ஆயிரமாயிரம் வரங்களைக் கேட்டுக் கொண்டிருப்பர்..

அது நியாயமும் கூட!..

ஆனால், நாம் வேண்டுவதெல்லாம் -

ஆன்றோர்கள் குறித்தபடி - நல்ல நட்பினையே.. நல்ல உறவுகளையே!..

அந்த வரங்களையே - அம்பிகை நமக்கும் அருளியிருக்கின்றனள்!..

இந்த இனிய சந்திப்பு - 
அன்பின் இனிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை!..

வாழ்க நலம்!..
* * *

வியாழன், அக்டோபர் 08, 2015

முதல் தாம்பூலம்

இதோ,
அன்பின் அழைப்பிதழ்!..


அனைவரும் ஏற்றுக் கொண்டு -
எதிர்வரும் அக்டோபர் 11 ஞாயிறன்று - நிகழ இருக்கும் -
வலைப்பதிவர் சந்திப்பு விழாவினை சிறப்பிக்க விழைகின்றோம்..







விழாவினை முன்நடத்திச் செல்லும்
கவிஞர் திருமிகு நா. முத்துநிலவன் அவர்களுக்கும் 

வலைநுட்ப வல்லுநர் - வலைச்சித்தர்,
திருமிகு. திண்டுக்கல் பொன். தனபாலன் அவர்களுக்கும் 
மற்றும்

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தினர் அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்!..

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 
மங்காத சங்கே முழங்கு!..

வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்!..
* * *  

ஞாயிறு, அக்டோபர் 04, 2015

போட்டிக்குள் போட்டி

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!..
நற்றமிழ் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு!..
வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவில் போட்டிக்குள் போட்டி!.. 
மேலும், பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது!..

வழி விடு!.. வழி விடு!.. என்ன போட்டி அது?..

நல்ல பதிவை தேர்ந்தெடுக்கும் போட்டி!..

பரிசுத் தொகை எவ்வளவு!?..

பத்தாயிரம் ரூபாய்!..

பத்தாயிரம் ரூபாயா.. ஆஆ.. ஆ!..
இதப்பத்தி தண்டோராவுக்கு ஏதாவது விவரம் தெரியுமா!?..

அதெல்லாம் செய்யத் தெரிஞ்சா - 
நான் ஏன் - இங்கே தண்டோரா போட்டுக்கிட்டு இருக்கேன்!..
கீழே இணைப்பு எல்லாம் இருக்கு.. அங்கே போய்ப் பார்த்து - பதிவுகளைப் படித்து விட்டு - தேர்ந்தெடுக்கணும்!.. இதுதான் சாக்கு.. ந்னு மண்டபத்துக்குப் போய் யாருக்கிட்டயாவது சொல்லி எழுதி வாங்கிக்கிட்டு வரக்கூடாது.. முன்கூட்டியே விவரம் சொல்லிட்டாங்க!..

சொக்கா!..
இந்த நேரம் பார்த்து பதிவு எழுத வரலே..
படிச்சு பார்த்து தேர்ந்தெடுக்கவும் வரலே!..

(உள்ளம் ஓட்டம் பிடிக்கின்றது - மண்டபத்தை நோக்கி!..)
* * *


கரும்பு தின்னக் கூலி!..

வலைப்பதிவர் சந்திப்பு விழாவில் -
மறுபடியும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன..

வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா - புதுக்கோட்டை 2015

- எனும், தளத்திலிருக்கும் போட்டிக்கு வந்த படைப்புகளைப் படித்து விட்டு,

இந்தப் போட்டியில் இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்!.. -  என,

ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் பதினைந்து பேரைத் தேர்வு செய்ய வேண்டும்..

முதல் பரிசு இவருக்கு
இரண்டாவது பரிசு இவருக்கு
மூன்றாவது பரிசு இவருக்கு

- என்று, ஐந்து போட்டிகளுக்கும் கருத்து தெரிவித்தால் போதும்..


அந்தக் கருத்து, ஏற்கனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் -

தேர்வு செய்து சொன்னவர்களுக்கும் பரிசு உண்டு..

விமர்சனம் எழுதவேண்டியதில்லை.. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்..

எல்லாப் படைப்புகளையும் பற்றி விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப் பின் அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு..

எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம்..
பின்னால் உதவும்!..


சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு,

அதே முடிவை எடுத்து கருத்து சொன்னவருக்கே முதல் பரிசு ரூ. 5,000/-

அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர்களுக்கு முறையே,

இரண்டாம் பரிசாக ரூ. 3,000/-

மூன்றாம் பரிசாக ரூ. 2,000/-

- என, மொத்தப் பரிசுத் தொகை ரூ. 10,000/- விழாவில் வழங்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால்,
பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்!..

இந்தச் செய்தி - இன்றைய தினமணி நாளிதழின் திருச்சி பதிப்பில் புதுக்கோட்டை மாவட்ட செய்திகளின் பிரிவிலும் வெளியாகியுள்ளது..


தினமணி நாளிதழுக்கு நன்றி..
* * *

போட்டிக்கு வந்துள்ள மொத்த படைப்புகளின் எண்ணிக்கை - 260..
அவற்றின் பட்டியலை - கீழே உள்ள இணைப்பில் காண்க.. 



வலைநுட்ப வல்லுநர் திருமிகு திண்டுக்கல் பொன் தனபாலன் அவர்கள் தனது தளத்தில், போட்டியின் விதிமுறைகளை விவரித்திருக்கின்றார்..

மேலும், படிவம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்கள்..


அதில் விவரங்களத் தேர்ந்தெடுத்து நிரப்பிய பின் - அனைத்து விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்த பின்னர் கீழே உள்ள Submit-ஐ- அழுத்தவும்..

அதன் பின்,

தகவல் ஒன்று படிவத்தின் மேற்பகுதியில் தோன்றும்..

அதைக் கொண்டு - விவரங்கள் சேர்ந்ததை -  உறுதி செய்து கொள்ளலாம்..

அன்பின் கவனத்திற்கு - தங்கள் தெரிவுகளை -

வரும் 9ஆம் தேதி இரவு (இந்திய நேரம்) 11.59 வரை மட்டுமே அனுப்பலாம்.


கீழ்க்கண்ட இணைப்பில் -

போட்டிக்கான விதிமுறைகளும் படிவமும்

கீழ்க்கண்ட இணைப்பில்,

போட்டிக்கு வந்துள்ள பதிவுகளும் படிவமும்

* * *

விழா அரங்கில் தவிர வேறெங்கும் தன்பெயரை வெளிப்படுத்தக் கூடாது!.. 

- எனக் கேட்டுக் கொண்டு, இப்போட்டிக்கான பரிசுத் தொகையையும்,
விழாவிற்கு நன்கொடையையும் வழங்கியுள்ள நல்ல உள்ளம் என்றும் வாழ்க..

நல்ல பதிவுகளைத் தேர்ந்தெடுத்துப் 
பரிசுத் தொகையை வெல்வதற்கு 
நல்வாழ்த்துகள்..

வாழ்க நலம்!.. 
* * * 

சனி, அக்டோபர் 03, 2015

வருக.. வருக..

அனைவருக்குமாக அன்பின் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு விட்டன..

புதுக்கோட்டை பெருமை கொள்ளும் நாள் - இதோ அருகில்!..

அன்புக்குரிய திருமிகு நா. முத்துநிலவன் அவர்களின் ஒருங்கிணைப்பில்,
வலைநுட்ப வல்லுநர் திருமிகு திண்டுக்கல் பொன். தனபாலன் அவர்களும்
விழாக்குழு உறுப்பினர்களும் நம்மை வரவேற்க அன்புடன் காத்திருக்கின்றனர்..

அவர்களுடன் தோளுக்குத் தோளாக நின்று -
விழாவின் நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொள்ள இயலாமற் போனது..

ஆயினும்,

வரவேற்புக் குழுவில் இணைந்து -

அனைவரையும் வருக.. வருக.. என்று வரவேற்பதில் பெருமகிழ்ச்சி!..




நான்காவது வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா -
எதிர்வரும் அக்டோபர் 11 ஞாயிறு அன்று நிகழ இருக்கின்றது..

கவிதை - ஓவியக் கண்காட்சி, பதிவர் புத்தகக் காட்சி & விற்பனை,
தமிழிசைப் பாடல்கள், பதிவர் அறிமுகம்,
நூல் வெளியீடுகள், போட்டிகள் - பரிசு வழங்குதல்,
வலைப்பதிவர் கையேடு வெளியிடுதல், விருது வழங்குதல் - 

- என விழா நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன..


மேலும் -

பல்வேறு அம்சங்களுடன் நிகழ இருக்கும் -
விழாவின் ஏனைய சிறப்புகளை - இங்கே காணலாம்..


இதுவரையிலும் -

விழாவில் கலந்து கொள்வதற்கென 232 நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்..

தகவல் கையேட்டிற்கென 97 நண்பர்கள் விவரங்களைத் தந்திருக்கின்றார்கள்..

விழாவினை சிறப்பித்து 65 தளங்களில் 137 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன..

இருப்பினும் இந்த பதிவுகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்..

அத்துடன், வலைப்பதிவர் சந்திப்பு விழாவில் -

தமிழ் இணையக் கல்விக்கழகம் மின் இலக்கியப் போட்டிகளை நடத்துகின்றது.


வகை 01 - கணினித் தமிழ்ப்பயன்பாடு - 27 கட்டுரைகள்  
வகை 02 - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - 51 கட்டுரைகள் 
வகை 03 - பெண் முன்னேற்றம் - 39 கட்டுரைகள் 
வகை 04 - புதுக் கவிதை - 92 கவிதைகள்  
வகை 05 - மரபுக் கவிதை - 51 கவிதைகள்

- என, போட்டிக்கு வந்துள்ள -

ஆக்கங்களின் எண்ணிக்கை - 260..

போட்டிகளில் வெற்றி பெற்ற படைப்புகளைப் பற்றிய விவரங்கள் -
எதிர்வரும் 06.10.2015 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

மேலும், கூடுதல் மகிழ்ச்சியாக -

நடுவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தொடர்ந்து தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..

அவை தகுதியாக இருக்குமெனில் -
பரிசுகளுக்கு அப்பாற்பட்டு - மின்னூல் தயாரிக்கப்படும் வேளையில் -
அதில் சேர்க்கப்படும் - என அறிவிக்கப்பட்டுள்ளது..

அதற்கும், அப்புறமாக -

அங்கே சிறிய யோசனை ஒன்றும் பளிச்சிட்டுள்ளது.. அது -

நடுவர்களின் அனைத்து முடிவுகளோடும் ஒத்துப் போகின்ற முடிவுகளை சரியாக எடுத்துச் சொல்லும் வாசக விமரிசனத்திற்கு யாரேனும் பரிசு தர முன்வந்தால் - அதையும் விழாவிலேயே தந்து பாராட்டலாம்..

ஆக, சிறந்த விமரிசனத்திற்கும் பரிசு!..

- என, நள்ளிரவுக்குப் பின் (குவைத் நேரம் - 1.15) கிடைத்த செய்திகள் கூறுகின்றன..

மேலும் விவரங்களை -

போட்டிகள் முடிந்தன.. அடுத்து ஒரு போட்டி?!..   - எனும் இணைப்பில் காணவும்..





வெற்றி பெறும் நண்பர்களுக்கு 
முன்னதாகவே
அன்பின் நல்வாழ்த்துகள்!.. 


மீண்டும் மனதார அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு 

வலைப் பதிவர்கள் அனைவரையும் சந்திப்பு விழாவிற்கு 
அன்புடன் அழைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்..

வாழ்க நலம் 
* * *

திங்கள், செப்டம்பர் 21, 2015

அன்பின் அழைப்பு

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்!..

அவற்றோடு, ஆண்டுதோறும் -

வலைப்பதிவர் சந்திப்பு தினத்தையும் -

இனிவரும் காலம் - தன் கவனத்தில் கொள்ளும்!..

நாட்காட்டிகளில் குறித்து விடலாம் - வலைப்பதிவர் நாள்!..- என்று..


அந்த அளவிற்கு - இந்த ஆண்டின் வலைப்பதிவர் சந்திப்பு நாள் முன்னெடுத்துச் செல்லப்பட்டு விட்டது.

இத்துணை புகழும் பெருமையும்

திருமிகு நா. முத்து நிலவன் அவர்களையும்

திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்களையும்

இவர்களுடன் தோளுக்குத் தோள் நின்று களப்பணி ஆற்றும் -

சீர்மிகு புதுக்கோட்டை மாவட்ட வலைப்பதிவாளர்களையும்

அத்துடன் - புரவலர்களையும் சான்றோர்களையும் மற்றும் ஆர்வத்துடன் பலவகையிலும் பங்களிப்பவர்களையும் சாரும் எனில் மிகையாகாது..

முழுதாக மூன்று வாரங்கள் கூட இல்லை!..

விழா நாளின் விடியலை நோக்கிக் கொண்டிருக்கின்றன கண்கள் -

நம்மால் ஏதும் செய்யமுடியவில்லையே!.. -  என்ற ஏக்கத்துடன்!..

பார்வையாளனாக - பலநூறு மைல்களுக்கு அப்பால் இருப்பவர்க்கே -

இத்தனை பரபரப்பு!.. என்றால்,

விநாடிகள் சிறுகச் சிறுக மணித் துளிகளாகி - நாட்களாகி - விரைந்தோடிச் சென்று,

அக்டோபர் பதினொன்றாம் நாளை -

நம்மவர்களின் கண்ணருகே - கையருகே - இழுத்துக் கொண்டு வரும்போது,

அவர்களுக்கு எப்படியிருக்கும்!?..

இவர்களின் உழைப்பினை சற்றே சிந்திக்கும் போது -

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்..

- எனும் நீதிநெறிவிளக்கத்தின் திருப்பாடலே முன் நிற்கின்றது..

நிகழ இருக்கும் வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவினை -
செம்மையாக நடத்துதற்குச் சித்தங்கொண்டு - சிறு பொழுதும் தளர்வு இன்றி
உழைப்பவர்களுள்,

திருமிகு நா. முத்து நிலவன் அண்ணா அவர்கள் ஒருவரைத் தான் நானறிவேன்!..

மற்றவர்கள் யார் யாரோ!.. எத்தன்மையரோ!..
அவரவர்க்கும் எத்தனை எத்தனை பணிகளோ!..

அவற்றையெல்லாம் கடந்து அல்லும் பகலும் அயராது உழைக்கின்றனரே!..

அவர் தமக்கு ஊக்கமும் ஆக்கமும் எங்கிருந்து கிடைக்கின்றன?..

அவர் தம் சிந்தை எல்லாம் எங்கே குவிந்திருக்கின்றதோ -

அங்கேயிருந்தே கிடைக்கின்றன!..

ஆம்!..

தளர்வறியா ஊக்கத்தையும் தடையறியா ஆக்கத்தையும் வழங்குவது -

தமிழ்!..

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் - உயிருக்கு நேர்!..

தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின்
விளைவுக்கு நீர்!..

- என்று முழங்கினாரே - பாவேந்தர்..

அப்படியிருக்க - சோர்ந்து விடக்கூடுமோ!..

இன்னும் - இன்னும் இருக்கின்றன.. இதோ!..

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்..
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்!..

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க
உளம் உற்ற தீ!..

ஆகா!.. எப்பேர்ப்பட்ட பேறு!..

தாய்க்கு - தமிழ்த் தாய்க்கு அல்லவா - தகைமை செய்கின்றோம்!..

அவளுடைய பணியை - சிரமேற்கொண்டு செய்யும் போது,
தாங்கொணாத அசதி வந்தாலும் -

அவள் தாமாகவே முன்வந்து - அசதி தீர்வதற்குத் தேனைத் தருகின்றாளாம்!..

அந்தத் தேன் - கையில் சுடர் ஒன்றினைத் தந்ததைப் போலிருக்கின்றது..

சுடரைக் கையில் ஏந்தியபின் - சோம்பல் கொண்டு இருக்க இயலுமா?..

அத்துடன் - உள்ளத்துள் தூண்டுகை ஆகிய - தீ ஒன்றும் தோன்றுகின்றது..

அதற்கு மேல் என்ன!?..

வெற்றி தான்!..

நாம் நமக்கென விளையாடுகையில் எதிரே ஒரு வெற்றிக்கோடு தென்படும்..

விளையாட்டின் முடிவு வெற்றிக் கோட்டில் தீர்மானிக்கப்படும்..

இது அன்னைத் தமிழுக்காக ஆடும் ஆட்டம்!..

இந்தத் தொடர் ஓட்டத்திற்கென சுடர் ஏந்தியாகி விட்டது..

இதற்கு - இலக்கு என ஏதும் இல்லைதான்!..

அதனால்தான், இனிமேல் நம்மைச் சுற்றி - உலகம் சுழல இருக்கின்றது!..


வலைப் பதிவர்கள் பலரும் சீரிய முறையில் -
தத்தமது பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்..

வலைப்பதிவர் சந்திப்பு விழாவிற்கென உருவாக்கப்பட்ட -

வலைப்பதிவர் சந்திப்பு 2015 புதுக்கோட்டை

- எனும் தளத்தில் செய்திகள் பலவும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன..

அதனுள் புதிதாக ஒரு பக்கத்தில் -

விழாப் புரவலர்கள் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர்..

அவர்களை, இங்கே - காணலாம்!..

அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி..

செப்டம்பர் - 20 வரையில் -

விழாவில் கலந்து கொள்வதற்கென 160 நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்..

கையேட்டில் பதிவதற்கென 50 நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர்..

அந்த விவரங்களை - இங்கே காணலாம்!..   

மின் தமிழ் இலக்கியப்போட்டிக்கு - வலைப் பதிவர்களிடமிருந்து படைப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன..

படைப்புகளைப் பற்றிய விவரங்களை - இங்கே காணலாம்!..

கடந்த 19/9 அன்று ,  விழாக்குழுவினர் - 

சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக (TAMIL VIRTUAL ACADEMY- Formerly Tamil Virtual University) அலுவலகத்தில், 

அதன் இயக்குநர் திரு. த. உதய சந்திரன் IAS., அவர்களைச் சந்தித்து - புதுக்கோட்டை பதிவர் திருவிழாவைப் பற்றி - பேசி வந்துள்ளனர்..

இந்த சந்திப்பில் - 

சென்னைப் பதிவர்கள் திருமிகு. இராய. செல்லப்பா, தி.ந. முரளிதரன், மதுமதி, ஆதிரா ஆகியோருடன் விழாவின் ஒருங்கிணைப்பாளர் நா. முத்துநிலவன் அவர்களும் கலந்து கொண்டிருக்கின்றார்கள்..

இயக்குநர் அவர்களையும் இணை இயக்குநர் திரு. தமிழ்ப்பரிதி அவர்களையும் 
புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென  விழாக்குழுவினர் அழைத்திருக்கின்றார்கள் என்பது சிறப்பு செய்தி!..

மேலும் சிறப்பான விவரங்களை - இங்கே காணலாம்!..

பதிவர்களின் பார்வையில் - பதிவர் திருவிழா - 2015!..

இதுவரைக்கும் - பதிவர்கள் திருவிழா 70 பதிவுகளால் சிறப்பிக்கப்பட்டுள்ளது..

அந்த பதிவுகளின் இணைப்புகளை - இங்கே அறியலாம்!..

அவற்றுள் - அன்புக்குரிய நட்பு வலைகளிலிருந்து, சில!..

நன்றி - திண்டுக்கல் தனபாலன்
நன்றி - தேவகோட்டை கில்லர் ஜி
நன்றி - பாவலர் இளமதி
நன்றி - தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
நன்றி - மகேசுவரி பாலசந்திரன்

ஏதோ நானும் நானறிந்த வகையில் ஒரு காணொளியினை உருவாக்கினேன்..

அந்தக் காணொளி - இதோ!.. தங்கள் பார்வைக்கு!..

நிறை, குறை - எதுவாக இருப்பினும் கொள்க!..


ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்!..
அருந்தமிழ் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம்!..

வாழ்க தமிழ்..
வெல்க தமிழ்!..
* * *

திங்கள், செப்டம்பர் 14, 2015

சந்திப்புத் திருவிழா

திருவிழாவில் சந்திப்பு - என்பது எதிர்பாராத மகிழ்ச்சி..

சந்திப்பு தான் திருவிழா - எனும் போது -
கூடுதலான எதிர்பார்ப்பு.. கூடுதலான மகிழ்ச்சி!..

அந்த எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் - இதோ வெகு அருகில்!..


அன்னைத் தமிழுக்கு அணி செய்யும் விதமாக
சீர்மிகும் புதுக்கோட்டை மாநகரில்


வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா - 2015.,
2015 அக்டோபர் 11 - ஞாயிறன்று மலர்கின்றது..


பலவகையிலும் முத்திரை பதித்து - 
எல்லா ஏற்பாடுகளையும் சிறப்புடன் செய்து வரும் 
திருமிகு நா. முத்து நிலவன் அவர்களுக்கும் 
திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்
தோளுக்குத் தோளாக துணை நிற்கும் 
புதுக்கோட்டைப் பதிவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்..

அமைப்புக் குழு, நிகழ்வுகள், விருதுகள், நன்கொடை, நூல்வெளியீடுகள், வருகைப் பதிவு படிவம், வருகைப் பதிவு பட்டியல் மற்றும் பதிவர்களின் பார்வையில் என - அனைத்து விவரங்களும்,

வலைப்பதிவர் சந்திப்பு - 2015., புதுக்கோட்டை 

- எனும் தளத்தில் காணக் கிடைக்கின்றன

அழகுத் தமிழுக்கு அணி செய்யும் வலைப்பதிவர்கள் அனைவரையும் விழாவில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றனர்..


கவின்மிகும் விழாவில் -

கவிதை ஓவியக் கண்காட்சி
வலைப்பதிவர்களின் அறிமுகம்
தமிழிசைப் பாடல்கள்
நூல் வெளியீடு
குறும்பட வெளியீடு
பதிவர்களுக்கு விருது வழங்குதல்
தமிழ் வலைப்பதிவர் கையேடு வெளியிடுதல்
பதிவர்களுக்காக போட்டிகள் - பரிசுகள் வழங்குதல்
புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
பதிவர்களின் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை

- என, நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது..


நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வலைப்பதிவர் கையேடு வழங்கப்பட இருக்கின்றது..

அத்துடன் - குறிப்பேடு, பேனா இவற்றுடன் பயணக் கைப்பை ஒன்றையும் மனமுவந்து வழங்குகின்றனர்.

இடையில் - நொறுக்குத் தீனிகளும் தேநீரும்..

முக்கியமாக - உணவு..

நமக்கு சோறு முக்கியம்!.. சோறு தான் முக்கியம்!..

இந்த அடிப்படையில்,

புத்தம் புதுக்காலையில் -

இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை, காபி/தேநீர்!.. (போதுமா!..)

வெயில் விளையாடும் மதியத்தில் -

மணக்கும் பசு நெய் தவழும் முல்லை அரும்பு போல சோறு, கூடவே பருப்புப் பொடி, கீரைக் கூட்டு, பருப்பு உருண்டைக் குழம்பு, மோர்க்குழம்பு, வாழைப்பூ வடை, வெங்காய பகோடா, வற்றல், வடகம், அப்பளம்!..

(பாயாச வாளி இன்னும் வரலை!.. - என, நினைக்கின்றேன்!..)

மாலைப் பொழுதில் மயக்கத்தில் -

வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், புட்டு, இடியாப்பம், கொத்தமல்லி சட்னி, காபி/தேநீர்!..

வேற.. எங்கே.. புதுக்கோட்டைக்குத் தான்!..
இதுக்கும் மேல - இரவின் மடியில் -

நவதானிய தோசை, வெஜிடபுள் தோசை, புதினா தோசை, முடக்கத்தான் தோசை + தூதுவளைச் சட்னி!..

மறுபக்கம், அதே இரவில் -
பிரத்யேகமா புலால் பிரியர்களுக்கு (மட்டும் ..ன்னு சொல்றாங்க!..)

முட்டை மாஸ்!.. (சுடச்சுட வாழை இலையில கட்டித் தருவாங்களாம்.. அப்படியே.. இலையோட சேர்த்து தின்னுடலாமாம்!.. அம்புட்டு ருசியாம்!..)

சுத்து பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, முட்டை லாப்பா, ஆப்பம், இடியாப்பம், இட்லி, தோசை.. + பாயாக் குழம்பு, கெட்டிக் குழம்பு, கோழிக் குழம்பு..

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்..
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்!..

சாப்பாட்டு விஷயத்திலும் அப்படித்தான் - என்று நினைக்கின்றேன்!..

மேலும், நண்பர்கள் சிலர் - பதிவர்களுக்கும் பள்ளிகளுக்கும் - தமது நூல் பிரதிகள் பலவற்றை வழங்குவதாகவும் தெரிவித்திருக்கின்றார்களாம்..


அன்புக்குரிய வலைப்பதிவர்கள் பலரும் -
தங்கள் தளங்களில் சந்திப்புத் திருவிழாவிற்குத் தோரணம் கட்டி விட்டார்கள்..

அகிலத்திற்கும் அழைப்புகளாம் தன்னானே.. னானே..
- என்று, திருமிகு கில்லர் ஜி அவர்கள் தளத்தில் உல்லாசப் பாட்டு!..

போகுமிடம் களைகட்டுது 
- என்று, திருமிகு தேன்மதுரத்தமிழ் கிரேஸ் - தளத்தில் கவிமழை!..

கவிமழைச் சாரல் சிலுசிலுப்பு
தமிழொடு நடக்கக் கலகலப்பு!..

அழைப்பிதழ் இனிதாய் பளபளப்பு
அன்பினில் இதயம் மினுமினுப்பு!..

- என்று மகிழ்வுடன் கருத்துரை வழங்கினேன்..

புதுக்கோட்டை போய்வருவோம் தங்கமே.. தங்கம்!..
- என, திருமிகு இளைய நிலா -  தளத்தில் தங்கத் தமிழ்த் தோரணங்கள் ஆடுகின்றன..


அன்புக்குரிய சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் -
வித்தகர்கள் - எனும் தனது நூலினை விழாவில் வெளியிடுகின்றார்கள்..


வலைப்பதிவர் திருவிழா - 2015 நிகழ்விற்கென, தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது..

அதன் விவரம் -

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320

நன்கொடை அளிப்பவர்கள் - இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்..

நான் இன்று தான் - எனது பங்களிப்பினை வழங்கினேன்..

இதற்கிடையே -

வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவில்,



தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்தும்

ஐந்து வகையான கட்டுரைப் போட்டிகள். வகைக்கு மூன்று வீதம் மொத்தம் வழங்கப்பட இருக்கும் தொகையின் மதிப்பு ரூபாய். 50,000!..


ஒவ்வொரு பரிசுடனும் -
தமிழ்க் களஞ்சியம் - இணையம் வழங்கும் கேடயமும் உண்டு!..

ஆக, எல்லாவகையிலும் சிறப்புற நிகழ இருக்கின்றது - சந்திப்புத் திருவிழா!..


சென்ற ஆண்டு மதுரை - சந்திப்பிலும் கலந்து கொள்ள இயலவில்லை..

அப்போது, நினைத்துக் கொண்டேன் - அடுத்து வருடம்.. - என்று..

இந்த ஆண்டும் இயலவில்லை!..

மனம் மட்டும் - அங்கே!.. புதுக்கோட்டையில்!..

காலம் கனிந்து வரும்..
அப்போது கனவுகள் மெய்ப்படும்!..

திருமிகு நா. முத்துநிலவன் அவர்களுக்கும்
அவருடன் ஓய்வறியாது உழைக்கும்
தோழமைகளுக்கும் அன்பின் வணக்கங்கள்!..

வாழ்க நலம்!.. 
* * *