நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
சில தினங்களாக ஊரெங்கும் ஒரே கேள்வி..
யார் ஹிந்து?..
அவனா.. இவனா?..
இவனா.. அவனா!..
மிளகாய்ப் பொடி, மிளகுப் பொடி, மல்லிப் பொடி மற்ற மசாலாப் பொடிகள் என்று வாரி வீசிக் கொள்வதால் எங்கும் காரம், கமறல்!..
நான் நினைத்துக் கொண்டேன்..
கல்விக் களஞ்சியமாகிய வாரியார் சுவாமிகள் இப்போது இருந்திருந்தால் சொல்லியிருப்பாரே!.. - என்று..
கூடவே, வேறொரு ஐயமும் ஆதங்கமும் எழுந்தது -
அவரையும் விட்டு வைக்காமல் புழுதி வாரித் தூற்றுவார்களே!.. இப்போதிருக்கும் மேதாவியர்கள்.. - என்று..
ஆனால்,
அப்போதே - ஹிந்துஸ்தானம் ஹிந்து -
இப்படியான வினாக்களுக்கு தெளிவு செய்திருக்கின்றார் ஸ்வாமிகள்..
நேற்று எதையோ தேடியபோது டுவிட்டர் செய்தி ஒன்று முன்னால் வந்து நின்றது..
அது இங்கே..
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மேலும் சொல்லி இருக்கின்றார்..
" ஹிந்து" என்பதன் அர்த்தம் ஹிம்சையை துய்ப்பவன்.. அடுத்தவர் (பிற உயிர்) படும் கஷ்டத்தை - ஹிம்சையை - தனதாக எண்ணி வருந்துபவனே ஹிந்து!..
இதை ரிக் வேத ஸ்ருதி வாக்கியத்தின் வாயிலாக அறியலாம்..
“ஹிம்சை ச துய்யதாம்ய - ஹிம்துனே அக்ஷகம்” “ஹிம்ஸாயா தூயதே யஷ்ச ஸதாசரண தத்பர:
இனி நம்முடைய கருத்துகள்:
அறங்கள் என்று சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் பிற உயிர்களின் துன்பங்கண்டு இரங்குவது தானே!..
மற்ற உயிரின் துன்பத்தைத் தனது துன்பம் போலக் கருதிக் காப்பாற்றா விட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?.. - என்று, டாக்டர் மு. வரதராசனார் - குறட்பா ஒன்றிற்கு உரை எழுதியிருக்கின்றாராம்!..
அந்தக் குறள் -
இன்னா செய்யாமை எனும் அதிகாரத்தில் இருக்கின்றதாம்..
அப்படியானால்,
பிறரது வேதனையை உணர்பவனே அறிவுடையவன்..
அப்படியான அறிவுடையவனே ஹிந்து..
கடல் தாண்டிச் சென்று பிற நாட்டை வெற்றி கொண்டாலும் கையில் நிராயுதபாணியாக நின்றவனை வெட்டித் தள்ளாமல் வெற்றிக் கொடியை நாட்டி விட்டு அவனிடமே நாட்டைக் கொடுத்து விட்டு வருபவன் ஹிந்து..
ஸ்ரீ விஜயத்தின் மீது படை நடத்தியபோது
அப்படிச் செய்தவர் தானே ராஜேந்திர சோழர்..
அவரது தந்தை ராஜராஜ சோழர் தனது சிற்றப்பா மதுராந்தக சோழரின் உளக் கிடக்கையை - துயரத்தை - அறிந்து மணிமுடியையும் சிம்மாசனத்தையும் விட்டுக் கொடுத்தவர் ஆயிற்றே!..
மேலும் -
இவர்களது முன்னோர்களான
சிபிச் சக்ரவர்த்தியும்
மனுநீதிச் சோழனும் -
எள்ளுறு சிறப்பின்
இமையவர் வியப்ப
புள் உறு புன்கண் தீர்த்தோன்;
என்றும்
வாயிற் கடைமணி
நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி
உகு நீர் நெஞ்சு சுட, தான் தன் அரும் பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்..
என்றும்,
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால் புகழப்பட்டிருக்கின்றார்கள்..
அவர்கள் இருவரும் சிற்றுயிர்களான புறாவின் மீதும் பசுங்கன்றின் மீதும் இரக்கம் கொண்டவர்கள் தானே!..
இன்னும் பல மன்னர்கள் மயிலுக்குப் போர்வை தந்த பேகன்,
முல்லைக்குத் தேர் கொடுத்த வேள்பாரி,
முரசுக் கட்டிலில் களைத்துத் தூங்கிய ஏழைப் புலவர் மோசி கீரனாருக்கு கவரி வீசிய சேர மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை,
தன் தம்பியின் துயருக்காகத் தன் தலையையே தானமாகத் தந்த குமணன்,
இவர்களெல்லாம் திருக்குறள் காட்டிய வேத நெறியில் நில்லாதவர்களோ!..
நமது சிற்றறிவுக்குத் தெரியவில்லை..
ஹிந்து என்பவனைப் பற்றி வேதத்தில் உள்ளதையே -
தானும் சொல்லி இருக்கின்றாரே ஐயன்!..
இப்போதைய அறிவு சால் பெருந்தகைகள் -
ஐயன் வள்ளுவர் மீது எப்படியெல்லாம் வாரித் தூற்றப் போகின்றார்களோ!..
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.. 315
வாழ்க தமிழ்
வாழ்க பாரதம்..
***


