நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருவைகாவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவைகாவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 17, 2015

சிவாலய தரிசனம்

''..இரவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் வயிற்றுப் பாட்டுக்கு ஏதும் கிடைக்கவில்லை. பசி காதுகளை அடைக்கின்றது. குயிலியும் பசியோடு காத்திருப்பாள்!. என்ன செய்யலாம்?.. இன்னும் சிறிது நேரம் முயற்சிப்போம்!.. அதன் பிறகு சாமி விட்ட வழி!..''

- என்று சிந்தித்தபடியே விழிகளைக் கூர்மையாக்கினான் அவன்.

அவன் பிறந்து தவழ்ந்து நடந்து ஓடி விளையாடியதெல்லாம் இந்த காட்டில் தான்.. இந்தக் காடு தான் அவனுடைய வீடு.. நாடு எல்லாம்!..

காட்டுக்கு வெளியில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதே அவனுக்குத் தெரியாது.

அவனுக்குத் தேவை - அன்றைய பொழுதுக்கு ஏதாவது சிறு பிராணிகள்!..


அவன் - வேடன். பெயர் கடுக்கன்!..

அவன் பிறந்து பல வருடம் வரைக்கும் அவனுக்குப் பெயரே வைக்கவில்லை.

காட்டுக்குள் ஓடித் திரிந்த விடலைப் பருவத்தில், ஒரு நாள் -

ராத்திரியில் நடந்த குருதி பூசையில் இறைச்சியைக் கடித்திருக்கின்றான்.

அதிலிருந்து கடுக் என்று பெரும் சத்தம் வரவே - கடுக்கன் எனப்பட்டான்.

பொழுது விடிந்ததும் - குயிலியோடு கல்யாணமும் நடந்து விட்டது..

என்ன இது என்று பார்த்தால் - குயிலியின் அப்பா தான் இவனுடைய பலத்தை பரிட்சை செய்து பார்த்தாராம்!..  

உணவுக்கு மட்டுமே வேட்டையாடும் பழக்கமுடையவன் - கடுக்கன்.

தனக்கும் தன் மனையாள் குயிலிக்கும் அன்றைய பொழுதுக்கு என்ன தேவையோ - அதை மட்டும் கொடுத்தால் போதும்!..

- என்று குடிலை விட்டுக் கிளம்பும் முன் சூரியன் உதிக்கும் பக்கமாக நின்று கேட்டுக் கொள்வான்..

அது - அவனுடைய அப்பா சொல்லிக் கொடுத்தது.

நம்ம தாத்தாவோட தாத்தாவோட தாத்தா ஒருத்தரு -  சதைக் கறியா எலும்புக் கறியா..ன்னு தின்னு பார்த்துட்டு சாமிக்குக் கொடுத்தாராம்!.. கறிய மட்டுமா கொடுத்தாரு.. கண்ணையே பிடுங்கிக் கொடுத்தாராம் அவரு!.. அதனால அவரு பேரே கண்ணப்பருன்னு ஆகிடுச்சு!.. 

அப்பேர்ப்பட்ட வம்சத்தில வந்தவன்டா நீ!.. நாலு பேரு நல்லாருக்கணும்.. அப்படின்னு யாராவது வந்தா உன்னையே கொடுத்துடு!..

இதுவும் கடுக்கனுடைய அப்பா சொல்லிக் கொடுத்தது தான்!..

தானும் உண்டு தன்னைச் சேர்ந்தவர்களையும் உண்ணச் செய்து - அதன் பிறகு, தான் உண்டு - துணை உண்டு - தூக்கம் உண்டு என்று இருப்பவன். 

அதற்குத் தான் வந்தது இன்று சோதனை.. காலையில் இருந்து - தோளில் தொங்கிய தூளியின் அம்புக்கு வேலையே இல்லை... திடீரென சலசலப்பு...

மானோ!.. - என்று ஆசையுடன் - அம்பு தொடுக்க முயன்றவன் மருண்டான்.

வாயைப் பிளந்து கொண்டு வரிப்புலி ஒன்று!.. எதிரில். 

அஞ்சினான் வேடன்.

வரிப்புலியின் வாய் கிழித்து அதன் பற்களைப் பிடுங்கும் தீரன் தான் அவன்!.

ஆனாலும் மிகவும் தளர்ந்திருந்தான்.. பொழுதும் சாய்ந்து விட்டது.

அதனுடன் போராட சக்தியும் இல்லை. சாத்தியமும் இல்லை.

மின்னலெனப் பாய்ந்து அருகிருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டான்.

ஆனாலும், அந்தப் புலியும் அவனைப் போலவே பசித்திருந்தது.


'' எப்படியும் நீ கீழே வருவாய் தானே!..'' - என்று ஓர் ஓரமாக புலியும் படுத்துக் கொண்டது.

வேடன் வெலவெலத்துப் போனான். எப்படித் திரும்பிச் செல்வது?..

இந்தப் புலிக்கும் பசி அதிகமானது. மேலேயே பார்த்துக் கொண்டிருக்கிறது!..


முற்றாக இருட்டி விட்டது. இனிமேல் புலி போய் விட்டாலும் வீட்டுக்குப் போவதென்பது இயலாது.

தன் வாழ்வு ஒளிமயமாக ஆகப்போவதை அறியாத அவன் -
விடியும் வரை மரக்கிளை தான் மாளிகை என முடிவு செய்து கொண்டான்.

வசதியாக சாய்ந்து கொண்டான். உறக்கம் வராதிருக்க வேண்டி, கைகளுக்கு எட்டிய இலைகளைப் பறித்து கீழே போட்டான். 

தண்ணீர் தாகம் அவனுக்கு. இருட்டுக்குள் எங்கே செல்வது?.. இருப்பினும் கீழே பார்த்தால் இரண்டு ஒளிப் புள்ளிகளாய் புலியின் கண்கள்!..

வந்த வேகத்தில் போனது தாகம்!..

மேலே நோக்கினான்.

நட்சத்திர மண்டலம் நகர்ந்து இருந்தது.. விரல் கொண்டு கணக்கிட்டான்..

மூன்றாவது ஜாமம் ஆகியிருந்தது.

இலைகளைப் பறித்துக் கீழே போடுவதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை.

ஆயிற்று இன்னும் கொஞ்சநேரம் தான். தொல்லைகள்  எல்லாம் தீர்ந்து விடும் என எண்ணிக் கொண்டான்!..

விடியலின் கீற்றாக - கீழ் வானில் செவ்வண்ணக் கோலங்கள்.

மெல்லியதாக ஒளி பரவத் தொடங்கிய வேளை..

கீழே புலியைக் காணவில்லை. மிக்க மகிழ்ச்சி..

மரத்திலிருந்து இறங்கினான். எதிரில் - 

கன்னங்கரேல் என்று எருமைக்கடா மீது - யார் அது?.. பார்த்ததேயில்லை!..

பாவம்!..

தன் விதி அந்த நொடியில் முடிந்து விட்டது - கடுக்கனுக்குத் தெரியாது.

அதே நொடியில் - அவனைத் தேடிக் கொண்டு குயிலி ஓடி வந்தாள்..

மச்சான்.. என்னை விட்டுட்டு எங்கே போயிருந்தே!.. 

நான் எங்கேயும் போகலை.. குயிலி!.. இங்கே தான் இருக்கேன்!..

விசும்பலுடன் ஓடி வந்த குயிலி - கடுக்கனை இறுகக் கட்டிக் கொண்டாள்..

இவங்கள்ளாம் யாரு மச்சான்!..

எனக்குந் தெரியல புள்ளே!.. எங்க அப்பாரு அடிக்கடி சொல்லுவாரே - அந்த சாமியா இருக்குமோ!..

யமன் பாசக் கயிற்றினை மின்னலென வீசுவதற்குள்  - அதை விட வேகமாக ஹுங்காரம் என சுழித்து வந்த சூறாவளியில் செயலற்று சுருண்டு விழுந்தான்.

எருமை மாடு எந்தப் பக்கம் ஓடியதோ தெரியவில்லை.

கண் கொண்டு நோக்க - எதிரில் - காணற்கரிய காட்சி!..

பேரொளிப் பிழம்பாக ஸ்ரீபரமேஸ்வரனும் பரமேஸ்வரியும்!..

அருகில் கைகட்டிச் சேவகமாக நந்தியம்பெருமான்.

''.. பெருமானே!.. என்னை மறுபடியும் மன்னித்து விடுங்கள்!.. இரவெல்லாம் உண்ணாமல் விழித்திருந்து இலைகளைப் பறித்துக் கீழே போட்ட வேடனின் செயல் - யாவருக்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை - என்றபடிக்கு, சிவபூஜையாகி விட்ட பெருமையை அறியாத அந்தகனாகி விட்டேன்!.. பிழை பொறுத்தருள வேண்டும் ஸ்வாமி!..''

- எனக் கதறி கண்ணீர் வடித்தான் யம தர்மராஜன்.

மனங்கனிந்த  பரமேஸ்வரன் - வழக்கம் போலவே யமனின் மீது இரக்கங் கொண்டு,  நந்தியம்பெருமானை நோக்கினார் .

''..உத்தரவு!..''

-  தன் மூச்சுக் காற்றால் கட்டப்பட்டு செயலற்று  இருந்த யமனை விடுவித்தார் நந்தியம்பெருமான்.

யமதர்மராஜனின் கண் முன்னே -
கடுக்கனும் குயிலியும் - ஜோதியாக சிவகதி அடைந்தனர். 

ஈசன் திருவாய் மலர்ந்தருளினார். 

''... நந்தி!.. இனி இந்தத் திருத்தலத்தில் எம்மை அடைந்தவர் எவர்க்கும் யமபயம் இல்லை. நீ கிழக்கு நோக்கி இருந்து கால பாசத்திலிருந்து ஆன்மாக்களைக் காப்பாற்றுவாயாக!...'' 

''... தங்கள் சித்தம் - என் பாக்கியம்!..." - நந்தியம் பெருமான் தலை வணங்கினார்.

யமனும்  திருத்தலத்தின் எதிரே தீர்த்தத்தினை உண்டாக்கி - அதில் நீராடி, தன் பிழைதனைப் பொறுத்த இறைவனைப் பணிந்து வணங்கினான்.

இறைவன் ஆலமர் செல்வனாக திருக்கரத்தினில் பிரம்புடன் அமர்ந்தார்.

பிரம்பு - அது அடியவர்களுக்கு அல்ல!..
தகாததைச் செய்யுங் கொடியவர்களுக்கு!..


அதிசயம் கேட்டு வந்த மஹாவிஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத வகையில் சன்னதியின் இருபுறமும் எழுந்தருளினர். 

 ''...யமனுக்கே வேலையில்லாத் திருத்தலத்தில் நமக்கென்ன வேலை...'' என்று நவக்கிரகங்களும் வெகு தொலைவுக்கு ஓடிப் போயினர்.

அன்று வேதம் அறிந்த மார்க்கண்டேயருக்காக ஈசன் எழுந்த தலம் 
திருக்கடவூர். 

இன்று ஏதும் அறியாத வேடனுக்காக ஈசன் எழுந்த தலம் 
திருவைகாவூர்.  


இறைவன் - ஸ்ரீவில்வவனேஸ்வரர்  
அம்பிகை - சர்வஜன ரட்சகி - வளைக்கைநாயகி
தீர்த்தம் - யம தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்.
  

அம்பிகை கிழக்கு முகமாக ஐயனின் இடப்புறம் திகழ்கின்றாள்.

அம்மையப்பனைத் தரிசிக்க வரும் அன்பர்களை வரவேற்பார் போல  - நந்தியம்பெருமான் கிழக்கு முகமாக வீற்றிருக்கின்றார்.

கோபுர வாசல், சந்நிதி வாசல் - எங்குமே துவார பாலகர்கள் கிடையாது.

சந்நிதி வாசலின் இருமருங்கும் பிரம்மனும் மஹாவிஷ்ணுவும் திகழ்கின்றனர்
    
யம தீர்த்தம் திருக்கோயிலின் எதிரில் உள்ளது.
தல விருட்சம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிக்கு எதிரில் உள்ளது.
இதனடியில் சப்த கன்னியர் எழுந்தருளியுள்ளனர்.


திருச்சுற்றில் ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் விளங்கும் ஸ்ரீ ஷண்முகநாதனின் திருக்கோலம் அற்புதமானது.

திருமுருகனைத் தாங்கியிருக்கும் மயில் வடக்கு முகமாக விளங்குகின்றது.

இத்திருக்கோயிலில் நவக்கிரங்கள் கிடையாது.

இத்தலத்தில் அகத்திய மகரிஷி - ஈசனின் திருமணக் காட்சியை தரிசித்தார். 

அருணகிரிநாதர் வழிபட்ட திருத்தலங்களுள் திருவைகாவூரும் ஒன்று.  

திருஞானசம்பந்தப்பெருமானின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.

திருக்காளத்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் - போல மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம் - திருவைகாவூர்.

மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகளுடன் திருவிழா .



விடியற்காலையில் கோபுரத்தின் கீழ் வேடனையும் அவனது மனைவியையும் நிறுத்தி, மூலஸ்தானத்தில் சிவபெருமானுக்கும்,

அதன்பின் சிவகதி அடைந்த வேடுவ தம்பதியருக்கும் தீபாராதனை நிகழும்.

மதியம் உச்சிப் பொழுதில் அம்மையப்பனுடன் பிரம்மனும் மஹாவிஷ்ணுவும் பஞ்சமூர்த்திகளாக எழுந்தருளி யம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழும்.

இரவில் ஸ்வாமியும் அம்பிகையும் ஓலைச் சப்பரத்தில் திருவீதி உலா.


திருவைகாவூர் எனும் இத்திருத்தலம் - சுவாமிமலைக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது.  கும்பகோணத்திலிருந்து நகர பேருந்துகள் அதிகம்.

பாபநாசத்திலிருந்து திருவைகாவூருக்கு சிற்றுந்துகள் (Mini Bus) செல்கின்றன.

சிவராத்திரியன்று விடிய விடிய பேருந்துகள் இயங்குகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் - சிவராத்திரி முழுப் பொழுதும் இத்திருக்கோயிலில் குடும்பத்துடன் இருந்து தரிசனம் செய்துள்ளேன்.

சுவாமிமலையில் இருந்து திருவைகாவூர் செல்லும் வழியில் தான் நாககுடி!..

இங்குதான், எனை ஆட்கொண்ட அன்னை வீரமாகாளி உறைகின்றனள்..

கொல்வாரேனுங் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமசிவாயவே!.. (3/49)

- என்று ஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருவாக்கிற்கு இணங்க - வேடன் முக்தி எய்திய திருத்தலம் திருவைகாவூர்..

நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை ஆளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடை யிடைப்புனல் கரந்தசிவ லோகன்அமர் கின்றஇடமாம்
அஞ்சுடரொ டாறுபதம் ஏழின்இசை எண்ணரிய வண்ணமுளதாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே!.. (3/71)  
திருஞானசம்பந்தர். 

நமசிவாய வாழ்க!.. நாதன் தாள் வாழ்க!..
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!..

''திருச்சிற்றம்பலம்''
* * *

ஞாயிறு, மார்ச் 10, 2013

திருவைகாவூர்

யமன் தண்டிக்கப்பட்ட திருத்தலம். 

அதனால் திருத்தலத்தின் எதிரே தீர்த்தத்தினை உண்டாக்கி - அதில் நீராடி, தன் பிழைதனைப் பொறுத்த இறைவனைப் பணிந்து வணங்கினான்.

இறைவன் ஆலமர் செல்வனாக திருக்கரத்தினில் பிரம்புடன் அமர்ந்தார்.

பிரம்பு - அது அடியவர்களுக்கு அல்ல!...
தகாததைச் செய்யுங் கொடியவர்களுக்கு!...

திருக்காளத்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் - போல மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம் - திருவைகாவூர்.


இறைவன் - ஸ்ரீவில்வவனேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீவளைக்கைநாயகி
தீர்த்தம் - யமதீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்

கிழக்கு முகமாக ஐயனின் இடப்புறம் அம்பிகையின் சந்நிதி.

இதனை மணக்கோலம் என - அகத்திய மாமுனிவர் தரிசனம் கண்டார்.

அருணகிரி நாதரும் வழிபட்டிருக்கின்றனர்.

மஹாவிஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத வகையில் சந்நிதியின் இருபுறமும் எழுந்தருளியுள்ள திருத்தலம்.

யமபயம் தீர்க்கும் தலம். எனவே - 

''...யமனுக்கே வேலையில்லாத் திருத்தலத்தில் நமக்கென்ன வேலை...'' என்று நவக்கிரகங்களும் வெகு தொலைவுக்கு ஓடிப் போயினர்.

திருவைகாவூர் திருக்கோயிலில் நவக்கிரகங்கள் இடங் கொள்ளவில்லை.

ஐயனையும் அம்பிகையையும் தரிசிக்க வரும் அன்பர்களை வரவேற்பார் போல  - நந்தியம்பெருமான் கிழக்கு முகமாக வீற்றிருக்கின்றார்.

திருக்கோயிலின் எதிரில் யம தீர்த்தம்.

திருஞானசம்பந்தப்பெருமானின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.



மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகளுடன் திருவிழா .

விடியற்காலையில் கோபுரத்தின் கீழ் வேடனை நிறுத்தி, மூலஸ்தானத்தில் சிவபெருமானுக்கும்,

அதன்பின் சிவகதி அடைந்ததை நினைவுபடுத்தும் வகையில்  - வேடனுக்கும் தீபாராதனை நிகழும். 

சிவராத்திரியன்று - கும்பகோணத்திலிருந்து திருவைகாவூருக்கு விடிய விடிய பேருந்துகள் இயங்குகின்றன.

திருவைகாவூர் - சுவாமிமலைக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

கும்பகோணத்திலிருந்து நகர பேருந்து வசதிகள் அதிகம்.

ஐயம்பேட்டை, பாபநாசத்திலிருந்து சிற்றுந்துகள் இயங்குகின்றன.

கொல்வாரேனுங் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமசிவாயவே!..
திருஞானசம்பந்தர் (3/49)
                                               
''திருச்சிற்றம்பலம்''
* * *