நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 05, 2025

அஞ்செழுத்து

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை


இன்று
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த 
நம சிவாயத் திருப்பதிகம்

மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் 22

துஞ்சலும் துஞ்சல்
  இலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து
  நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்று அடி
  வாழ்த்த வந்தகூற்று
அஞ்ச உதைத்தன
  அஞ்செ ழுத்துமே.  1  

மந்திர நான்மறை
  யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர்
  தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய
  செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம்
  அஞ்செ ழுத்துமே.  2  

ஊனிலு யிர்ப்பை
  ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை
  யேற்றி நன்புலத்
தேனைவ ழிதிறந்
  தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன
  அஞ்செ ழுத்துமே.  3  

நல்லவர் தீயர்
  எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ
  முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர்
  கொண்டு போமிடத்
தல்லல்கெ டுப்பன
  அஞ்செ ழுத்துமே.  4  

கொங்கலர் வன்மதன்
  வாளி ஐந்தகத்
தங்குள பூதமும்
  அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம்
  அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல்
  அஞ்செ ழுத்துமே.  5  

தும்மல் இருமல்
  தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம்
  விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த்து
  எய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை
  அஞ்செ ழுத்துமே.  6  

வீடு பிறப்பை 
 அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன
  பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன
  மன்னு மாநடம்
ஆடி யுகப்பன
  அஞ்செ ழுத்துமே.  7 

 வண்டம ரோதி
  மடந்தை பேணின
பண்டை இராவணன்
  பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு
  துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன
  அஞ்செ ழுத்துமே.  8 

 கார்வணன் நான்முகன்
  காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி
  செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப்
  பிதற்றும் பித்தர்கட்
கார்வண மாவன
  அஞ்செ ழுத்துமே.  9  

புத்தர் சமண்கழுக்
  கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள்
  தெளிந்து தேறின
வித்தக நீறணி
  வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன
  அஞ்செ ழுத்துமே.  10 

 நற்றமிழ் ஞானசம்
  பந்தன் நான்மறை
கற்றவன் காழியர்
  மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ
  ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர்
  உம்ப ராவரே.. 3/22/11


அனைவருக்கும்
திரு ஓண நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்
ஓம் சிவாய நம 
**

செவ்வாய், செப்டம்பர் 02, 2025

வீழிமிழலை

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை

கோகுலாஷ்டமி பதிவில் அன்பின் நெல்லை அவர்கள் வழங்கியிருந்த கருத்துகள்..

1
இரண்டு படங்களும் மிக அழகு.

உங்களுக்குத் தெரியுமா? கோகுலத்தில், ஸ்ரீகிருஷ்ணன் வளர்ந்ததாக நம்பப்படும் நந்த பவனில் முக்கிய சன்னிதி சிவன் சன்னிதி. அங்குதான் பிரசாதங்களை வைத்து கண்டருளப் பண்ணுகிறார்கள்..

2
எதற்காக முந்தைய கருத்து என்றால், கிருஷ்ணனை மடியில் வைத்திருக்கும் யசோதை நெற்றியில் முழுமையாக விபூதி இருப்பதைப் பார்த்ததும் தோன்றியது..

அன்றைய பதிவில் இருந்த படங்களுள் ஒன்று தான் இங்கே..


திரு.நெல்லை அவர்களது கருத்திற்குப் பிறகே பதிவிட்டிருந்த படத்தைக் கவனித்தேன்... பரவசமானேன்...

ஸ்ரீ நாராயண மூர்த்தி சக்ராயுதத்தைப் பெறுவதற்காக (திருநீறு பூசி) சிவ வழிபாடு செய்ததாக அப்பர் ஸ்வாமிகள் குறிப்பிடுகின்றார்... 

ஸ்ரீ நாராயண மூர்த்தி  சிவ வழிபாடு செய்த தலங்கள் திருவீழிமிழலை, திருமாற்பேறு...

இத்தலங்களில் தலபுராணங்களும் ஒன்றே..

நாராயணர் திருநீறு பூசி சிவவழிபாடு செய்த புராணம் அறிந்து தான் யசோதையும் நெற்றியில் திருநீறு பூசிய வண்ணம் காட்சி தருகின்றனள் போலும்..

திருமலையில் பெருமான் சிவராத்திரி 
மூன்றாம் காலத்தின் போது நெற்றியில் விபூதிப் பட்டையுடன் உள் வீதி வலம் வருகின்றார் என்று கேள்விப்பட்டுள்ளேன்...


நீற்றினை நிறையப் பூசி 
  நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று 
  குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி 
  அவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி 
  மிழலையுள் விகிர்தனாரே. 4/64/8
-: திருநாவுக்கரசர் :-


திருநீற்றை நிறையப் பூசி  நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு மலர் குறையவே அப்பூவினுக்கு இணையாக தனது விழிகளில் ஒன்றினை தாமரை மலராகக் கொண்டு அர்ச்சித்த பக்தி உடைய திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கி -  திருமால் விண்ணிலிருந்து கொணர்ந்து திருவீழிமிழலையில்
நிறுவிய விமானத்தின் கீழ் வீற்றிருந்து  விகிர்தனார் அனைவருக்கும் அருள் செய்கிறார் ..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஈசனிடம் திருமால் சக்ராயுதம் பெற்றததை ஞானசம்பந்தப் பெருமானும்  குறித்திருக்கின்றார்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**

ஞாயிறு, ஜூன் 02, 2024

திருமுறை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 20
ஞாயிற்றுக்கிழமை


பன்னிரு திருமுறைகள் எனப்படுபவை 
அருளாளர்களால் பாடப் பெற்ற திருப்பதிகங்களின்  தொகுப்பாகும்..  

இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.

பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, 
தில்லைக் கோயில் நிலவறைக்குள் கவனிப்பாரற்றுக் கிடந்த ஓலைச் சுவடிகளை மீட்டு  (பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை)
திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்கள்  தொகுத்தளித்தார்..

இதன்பின் 
 சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டு அநபாயச் சோழரின் காலத்தில் - சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்..

அது பன்னிரண்டாம் திருமுறை எனப்பட்டது..

சிவநேசச்செல்வர்கள் தமது நாள் வழிபாட்டில் ஒவ்வொரு திருமுறையில் இருந்தும் ஒரு திருப்பாடலை ஓதி வழிபாடு செய்வர்..
 
தேவாரம், திருவாசகம், திரு இசைப்பா, திருப்பல்லாண்டு,
பெரிய் புராணம் எனும் ஐந்து நூல்களில் இருந்து ஐந்து திருப்பாடல்களை மட்டும் பாடுவது பஞ்ச புராணம் எனப்படும்..

திருமுறைகளை நாளும் ஓதுகின்ற ஓதுவார்களுக்கும்
சிவனடியார்களுக்கும் நோய்களை இறக்குகின்ற வல்லமை இருக்கின்றது என்பது தெளிவு.. 

தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில்
திருப்பதிகம் பாடுவதற்கு நாற்பத்து எட்டு ஓதுவார்களை நியமித்த விவரம் வரலாற்றில் உள்ளது..

மாமன்னர் ராஜராஜ சோழர் காலத்தில் ஆலயங்களில் தேவாரப் பாடல்களைப் பாடுவதற்கு கட்டளைகள் அமைக்கப்பட்டன.. 

இதன்படி
சிவாலயங்கள் தோறும் வழிபாட்டு நேரத்தில் திருமுறைப் பாடல்களைப் பாடுவது வழக்கத்தில் இருந்தது..

இப்போது எப்படி என்று தெரியவில்லை.. 


1984 ல் சிங்கப்பூரில் வாங்கிய பன்னிரு திருமுறை எனும் சிறு நூல் காலப் போக்கில் என்ன ஆயிற்று - என்பது தெரியவில்லை..

அதன் பின் 1987 ல் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூல் ஒன்றை பட்டுக்கோட்டை நூலகத்தில் இருந்து எடுத்து வந்து  - அத்தனை தலத்திற்கும் உரிய திருப்பாடல்கள் சிலவற்றை இரண்டு குறிப்பேடுகளில் எழுதி வைத்திருந்தேன்..  நல்ல நாட்களில் படிப்பதும் வழக்கம்..

இப்போது கைத்தல பேசியில் தருமபுர ஆதீனத்தின் பதிப்பில் அவ்வப்போது இயங்கிக் கொண்டு இருக்கின்றேன்.. 

இந்நிலையில் சென்ற ஆண்டில் மதுரைக்குச் சென்றிருந்த போது ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களைச் சந்தித்த வேளையில் அவர் வழங்கிய புத்தகங்களுள் ஒன்று - பன்னிரு திருமுறைத் திரட்டு.. இப்போது மேஜையில் உள்ளது..

வெளியில் செல்லும் போது அந்நூலை  எடுத்துச் செல்வதில் பற்பல பிரச்னைகளை உணர்கின்றேன்...

பன்னிரு திருமுறை நூலை பல்வேறு சூழ்நிலைகளையும் கடந்து - தலையில் தாங்கிச் செல்கின்றார் - அடியார் ஒருவர் எனில், அது மிகப் பெரிய விஷயம்..


நன்றி Fb Reels 

சிவனடியார் சொல்கின்ற பாடல்களுள் 
திருமந்திரத் திருப்பாடல் இது..


ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த் தோத்திரங்கள் சொல்லுமே..
சத்தி பேதம் திருமந்திரம்
-: திருமூலர் :-

மேற்கண்ட திருப்பாடல்  அறிவேன்..


அடியார் சொல்கின்ற
திருவாசகத் திருப்பாடல் இது..

கையால் தொழுது உன் கழல் சேவடிகள் 
கழுமத் தழுவிக் கொண்டு
எய்யாது என்றன் தலை மேல் வைத்து 
எம் பெருமான் பெருமான் என்று
ஐயா என்றன் வாயால் அரற்றி அழல் 
சேர் மெழுகு ஒப்ப
ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் 
கண்டாய் அம்மானே!..
திருவாசகம் ஆசைப்பத்து
-: மாணிக்கவாசகர் :-
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***