நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026

சண்டீச பதம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 ஞாயிற்றுக்கிழமை

இன்று கடந்த ஞாயிறன்று எங்கள் பிளாக் தளத்தில் வெளியான திரு நெல்லை அவர்களது கங்கை கொண்ட சோழபுரம் சுற்றுலா கட்டுரையின் ஒரு பகுதியைப் பற்றி எளியேனின் பதிவு இது...


நன்றி:  நிழற்படங்கள் திரு நெல்லை...

இளைஞன் ஒருவனுக்கு ஈசன் அநுக்கிரகம் செய்கின்றதை ராஜேந்திர 
சோழன் தனது காலத்தில் சிற்பமாக வடித்துக் கொடுக்க -  

அந்த சிற்பத்திற்கு இதுதான் அர்த்தம் என்று பல விதமாக சொல்லி மகிழ்கின்றனர்...

கொன்றைச் சரத்தினைச் சூட்டுகின்றவர் ஜடா மகுடம் கொண்டு நான்கு திருக் கரங்களுடன் விளங்குவதால் அவர் சிவபெருமான் தான் என்பது சொல்லாமலே விளங்கும்..

சிவபாத சேகரனாகிய ராஜராஜ சோழனுக்கு ஈசன் அநுக்கிரகம் செய்கின்றதை ராஜேந்திர சோழன் தனது காலத்தில் வடித்துக் கொடுத்த சிற்பம் இது என்றும் சிலர் சொல்லி மகிழ்கின்றனர்...

அப்படியும் இருக்கலாம்...

ஆனால்,
இதனை சண்டீச பதம் என்கின்றது தேவாரம்..

அதென்ன சண்டீச பதம்!...


விசாரசர்மன் என்ற சிறுவன் காவிரிக்கு வடக்கே திருச்சேய்ங்கலூரில் மண்ணியாற்றங்கரையில் மாடுகளை மேய்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்... . 

மாடுகள் கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது, ஆற்றுக்குள்
மணலால் லிங்கம் செய்து வழிபடுவார்..
மாடுகளும் அந்த சிவ லிங்கத்தின் மீது பால் சொரிந்து நிற்கும்...

இதன் பின் மாலையில் தொழுவத்திற்கு மீள்கின்ற
மாடுகள் சரியாக பால் கறப்பதில்லை என்று குறைபாடு  எழுந்தது...

குழப்பம்.. சந்தேகம்...

இதனால், 
பின் தொடர்ந்து வந்து கண்காணித்த விசார சர்மரின் தந்தை, விசார சர்மரின் செயலைக் கண்டு - 

மண்ணியாற்று மணலில் பசும்பாலை வீணாக்குவதாகப் பெரும் சினம் கொண்டார்...

அடாத செயல் எனக் கருதி ஆத்திரம் கொண்டு, தன் காலால் மணல் லிங்கத்தை எட்டி உதைத்து சிதைத்தார்.. 

தந்தையின் தகாத செயலால்
கோபம் கொண்ட விசார சர்மன், 

இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக, 
தந்தை என்றும் பாராமல் - 

அருகில் கிடந்த மூங்கில் கோலை எடுத்து எறிய,

அது மழு ஆயுதமாக மாறி - 
சிவ அபராதம் செய்த 
 தந்தையின் கால்களை வெட்டி வீழ்த்தி விட்டது..

விசாரசர்மரின் பக்தியையும்
இச்செயலையும் மெச்சும் வண்ணம் சிவபெருமான் உமையவளுடன் தோன்றி,
தான் சூடியிருந்த கொன்றை மாலையை எடுத்து,  விசார சர்மரின் முடியில் சூட்டி அருளினார். 

தன்னுடைய கோயில்கள் அனைத்திற்கும் விசார சர்மனையே சண்டீசர் எனும் அதிகாரியாக நியமித்தார்...

இந்தப் பதவியே சண்டீசப் பதம் என்று சொல்லப்படுவது..

இதனையே நாம் கங்கை கொண்ட சோழபுரத்தில் சிற்பமாகக்  காண்கின்றோம்...

இவரது தனிச் சந்நிதி திரு மூலஸ்தானத்திற்கு வடபுறமாக கோமுகத்திற்கு அருகில் அமைந்திருக்கும்...

இவரது சந்நிதியில் கை தட்டுவது அல்லது வேஷ்டியிலிருந்து நூலைப் பிய்த்துப் போடுவது என்ற வழக்கங்கள் உள்ளன..

இதெல்லாம் தகாதவை...

 " அடியேன் கோயிலுக்கு வந்துள்ளேன். கணக்கில் கொள்ளுங்கள்... " - என்ற ஒரு  விண்ணப்பம் .. இதுவே முக்கியம்...
 
சண்டீச பதம் குறித்து தேவாரத்தில் பல இடங்களில் பேசப்படுகின்றது..

இருப்பினும் திருநாவுக்கரசர் திருவாக்கினைக் கேட்போம்...

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் 
  தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் 
  கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் 
  பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் 
  குறுக்கை வீரட்ட னாரே. 4/49/3

இது குறித்து  கீதா அக்கா அவர்களது கருத்து...

முடி சூட்டுவது ஈசன் - தன் அடியார்களில் ஒருத்தருக்கு. அந்த அடியார் இங்கே ராஜராஜனாக இருக்கலாமே!.. நான் கேள்விப்பட்ட வரையில் சிவபாத சேகரன் ஆன ராஜராஜனுக்கு ஈசன் அந்தப் பதவியைக் கொடுத்தபோது சூட்டியது எனச் சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனாலும் என்ன? ..சிற்பத்தின் அழகு தானே முக்கியம்?..


சேந்தனார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு

தாதையைத் தாளற வீசிய 
  சண்டிக்(கு)இவ் வண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் 
  கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் 
  நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் 
  தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.. 10.

ஓம் நம சிவாய
***

6 கருத்துகள்:

  1. சாட்சிகளுடன் ஆதாரத்துடன் நல்லதொரு விளக்கம்.

    பதிலளிநீக்கு
  2. இது மாதிரி புனைவுகளில் எனக்கொரு எண்ணம் மனதில் எப்போதும் வரும்!  தன்னை வணங்காதவர்களை தண்டிக்கும் அளவு ஈசன் சர்வாதிகாரியா?  தன்னை வணங்காத, அவமதித்த தன் குழந்தையை இன்னொரு குழந்தை வெட்டி வீழ்த்துவதை ஈசன் பாராட்டுதல் சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்றோர்கள் தான் இதற்கு விளக்கம் தர வேண்டும்....

      நீக்கு
  3. சண்டீச பதம் நல்ல விளக்கத்துடன் தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..