நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 31, 2022

உச்சித் திலகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை மாதத்தின்
பதினெட்டாம் நாள்..

அமாவாசை தினம்..

சைவ வைணவ மரபுகளில்
பொருந்தி வாழ்வோர்கள்
தத்தமது மரபின்
முன்னோர்களுக்குத்
தர்ப்பணங்களைச் செய்யும் நாள்..

திருவள்ளுவப் பெருமான் கூறும்
தென்புலத்தார் வழிபாட்டிற்கான நாள்..

 ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பாக
இந்நாளில் தான்
திருக்கடவூர் திருத்தலத்தில்
பேரொளி ஒன்று வானில் தோன்றியது..

அந்தாதி எனும் ஒலி
கேட்டு  வந்தது அந்த ஒளி..

இன்றைய பதிவில்
அருள் திகழும்
அபிராமி அந்தாதி
எனும் அமுதக் கலசத்தில் இருந்து
சில துளிகள்..


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி  மென்கடிக்குங்கும தோயம் என்ன 
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.. 1

மனிதரும்  தேவரும்  மாயா முனிவரும்  வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.. 4

பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.. 5


சுந்தரி எந்தை துணைவி  என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 8

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. 12

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னயன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. 13


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கை சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே.. 21

மணியே மணியின் ஒளியே  ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே 
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.. 24

சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.. 28

கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.. 37


புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.. 41

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.. 43

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே.. 50


நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால் திருத் தங்கச்சியே.. 61

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.. 69

தாமம் கடம்பு படை பஞ்ச பாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே.. 73


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.. 77

உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.. 84

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க் குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே.. 85


குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.. 100

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே..


ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
***

26 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு. பொருள், சந்தம், துள்ளலோசை பொருந்திய பக்தி ரசம் கொடுக்கும் பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..
      நெடுநாட்களுக்குப் பிறகு வந்திருக்கின்றீர்கள்..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. என்ன அழகான தமிழ்...    அன்னை அபிராமி அனைவரையும் காக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்னையிடம் சரண் அடைவோம் வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      அன்னையிடம் சரணடைவோம்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. அழகான தமிழில் சந்தத்துடன் உள்ள அபிராமி அந்தாதி!!! இதை ஓதிக் கேட்கும் போது அத்தனை அருமையாக இருக்கும்.

    எல்லாம் மனப்பாடம் அல்ல என்றாலும் கலையாத கல்வியும் பாடலும், ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை இந்த இரண்டும் மனப்பாடம் என்பதால் சொல்லிவிடுவதுண்டு. (கலையாத கல்வியும் தொடர்ந்து சில - பாடல் திருமலை தென்குமரி? படத்தில் வரும் சீர்காழி அவர்களின் கணீர் குரலில் அழகான உச்சரிப்பில்)

    அருமை துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      திருமலை தென்குமரி திரைப் படத்தில் அபிராமி அந்தாதி , பதிகப் பாடல்கள் இட்ச்ம் பெற்ற பிறகுதான் பலபேருக்கு இப்படியான அழகின் விவரம் இருப்பது தெரிய வந்தது.. அந்த வகையில் திரு. A.P.நாகராஜன் அவர்களை மனதார்ப் போற்ற வேண்டும்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. எல்லாம் மனப்பாடமாகச் சொன்னவை. இப்போத் தடுமாற்றங்கள். என்றாலும் இவற்றில் கிடைக்கும் மன நிம்மதி வேறே எதில் இருக்கு! அருமையான பாடல்கள்/அபிராமி அன்னையின் தரிசனம். அவள்தான் கண் திறந்து அனைவரையும் காத்து அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது எனக்கும் கொஞ்ச்ச்ம் தடுமாற்றம் தான்..

      ஆயினும் இவற்றில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் வேறு எதிலும் கிடைப்பதில்லை..

      வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. https://httpbakthiblogspotcom.blogspot.com/2012/01/blog-post.html இங்கே சௌந்தர்ய லஹரியோடு ஒப்பிட்டு எழுத ஆரம்பிச்சேன். பின்னர் வந்த சில/பல பிரச்னைகள் தொடர விடவில்லை. இப்போதும் ஆரம்பிக்கணும்னு நினைச்சுப் பலமுறை முயன்றும் முடியவில்லை. அநேகமாக என்னோட பக்திப் பதிவுகள் 2012/13க்குப் பின்னர் குறைந்து விட்டன. இப்போது அடியோடு இல்லை. :( குருநாதர் தான் வழி காட்டணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் குருநாதர் வழிகாட்டுவார்.. நாங்களும் காத்திருக்கின்றோம்...

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  7. மிக அருமையான பகிர்வு.
    தை அமாவாசை அன்று அபிராமி அந்தாதி பாடுவோம் கோயிலில் கூட்டு வழிபாட்டில் . அன்னை அனைவருக்கும் மனநிறைவான வாழ்வை தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் அன்பின் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய பதிவு தை அமாவாசைக்கு பொருத்தமானது.அபிராமி அந்தாதி பாடல்கள் அழகாக உள்ளது. அன்னை அபிராமி அனைவரையும் காத்தருள வேண்டி அவள் பாதம் பணிந்து தொழுது வணங்குவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி. தாமத வருகைக்கு வருந்துகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையே அன்பு..

      கருத்துரையும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  10. நன்னாளில் மனதிற்கு நிறைவைத் தருகின்ற பதிவு. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அழகான தமிழ் அருவியாக குறித்தோடி வந்திருக்கும் அபிராமி அந்தாதி பதிவு. அன்னையின் அருள் அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. மனதுக்கு இனிய அபிராமி அந்தாதி.... அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. அபிராமி அந்தாதி குறித்தும், அபிராமி அன்னையைக் குறித்துமான அழகு தமிழில் மனதிற்கு இனிய பதிவு.

    அன்னையின் பெயர் தான் என் மகளுக்கும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      மனதிற்கு நலம் அளிக்கக் கூடிய திருப்பாடல்களுள் அபிராமி அந்தாதிப் பாடல்களும் சிறப்பிடம் பெறுபவை..

      பார்க்கும் இடம் எங்கும் திரிபுரையின் தோற்றங்களே.. திருப்பெயர்களே!..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..