நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 23, 2022

ஜெய் ஹிந்த்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட
வேண்டும்..
**
இன்று
மாவீரர் நேதாஜி
சுபாஷ் சந்த்ர போஸ்
அவர்களது
நூற்றிருபத்தைந்தாவது
பிறந்த நாள்..


பாரதத் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வர்களுள் தனித் தன்மையானவர் 
" நேதாஜி " என்று சிறப்புடன் அழைக்கப்பட்ட சுபாஷ் சந்த்ர போஸ்..

அவரது வாழ்க்கை நேர்மையும் வாய்மையும் வீரமும் மிக்கதாகவே இருந்திருக்கின்றது..

அதனால் தானே சர்வாதிகாரியான ஹிட்லரை நேரில் சந்தித்தபோது உங்களது அறிவுரை இந்தியர்களுக்குத் தேவையில்லை என்று சொல்ல முடிந்திருக்கின்றது..

சத்ரபதி சிவாஜி, சர்தார் வல்லப பாய் படேல் போன்ற உத்தமர்களைப் போல தாய் மண்ணை உயிருக்கும் மேலாக மதித்த மாணிக்கம்
நேதாஜி..


1919 ஏப்ரல் ஏழாம் தேதியன்று ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக் கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்தான் ஜெனரல் மைக்கேல் ஓ டையர் என்பவன்.. அவனை 1940 மார்ச் மாதம் 19 ல் சுட்டுக் கொன்றார்
மாவீரர் உதம் சிங்..

இச்செயலை விமர்சித்து கண்டித்தார் காந்திஜி..
உதம் சிங்கைப் புகழ்ந்துரைத்த நேதாஜி -
நாடே கொண்டாடிய மகாத்மாவிடம் அவரது கொள்கை தவறு என்றும்
வெள்ளையனை விரட்டியடித்து சுதந்திரம் பெறுவதற்கு ராணுவ நடவடிக்கையே சிறந்தது என்றும் முழங்கினார்..


1938 ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பு வகித்த நேதாஜி அவர்கள்  1939 ல் மறுபடியும் போட்டியிட்டார்..


அதனை விரும்பாத காந்திஜி தனது ஆதரவாளர் பட்டாபி சீதாராம் என்பவரை எதிராக நிறுத்தினார்..

தேர்தலில் நேதாஜி வெற்றி பெற்றார்.. உடனே தனது ஆதரவாளரின் தோல்வி தன்னுடைய தோல்வி என்று சொல்லி வழக்கம் போல உண்ணாவிரதம் இருந்தார் காந்திஜி.. 

அத்துடன் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகினார்..

1940 ல் ராஜ துரோகி என்ற குற்றச்சாட்டுடன் பிரிட்டிஷ் அரசு
நேதாஜியை சிறையில் அடைத்தது.. அவர் அங்கிருந்து தப்பித்து ஆப்கானிஸ்தான், இந்துகுஷ்  கணவாய் வழியாக  ரஷ்யாவை அடைந்தார்..


1941 ல் பெர்லினில் இருந்து இந்திய தேசிய வானொலியினை இயக்கி
பாரதத்தின் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்..


ஜப்பான் நாட்டின் ஆதரவுடன் 1943 ல் சிங்கப்பூரில் இந்திய
பெண்கள் படைப் பிரிவுடன் கூடிய தேசிய ராணுவத்தை அமைத்து   இந்திய சுதந்திரத்தை அறிவித்தார்.. சுதந்திரக் கொடியினை ஏற்றினார்..

மலேஷியா, பர்மா நாடுகளின் வழியே படை நடத்தி பாரதத்தின் அஸ்ஸாம் காட்டிற்குள் புகுந்து பிரிட்டிஷ் படைகளுக்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்தவர்..

இரண்டாம் உலகப் போரில் 1945 ஆகஸ்ட்  ஆறாம் நாளன்று ஹிரோஷிமா நகரின் மீதும் அடுத்த இரண்டு நாட்களில் நாகசாகி நகரின் மீதும்  அணுகுண்டுகளை வீசியது அமெரிக்கா.. அதனை அடுத்து ஜப்பான் சரணடைந்ததுடன் அதன் ஆதரவும்  தடைப்பட்டது..

அத்துடன் வேறு காரணங்களும் சேர்ந்து கொள்ள இந்திய தேசிய ராணுவம் நிலை குலைந்தது..


ஆயினும் இந்தியாவை விட்டு ஓடி விடவேண்டும் என்று வெள்ளையர்கள் முடிவெடுக்க இந்திய தேசிய ராணுவமும் ஒரு காரணம் என்பதை எவரும் மறைக்க இயலாது..

1945 ஆகஸ்ட் 18 அன்று
தைவான் நாட்டில்
நிகழ்ந்த விமான விபத்தில்
நேதாஜி அவரகள்
சிக்கிக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும்
அவரது மறைவின் முடிச்சுகள் இன்றுவரை அவிழாமலே இருக்கின்றன..

சிங்கப்பூர் தேசிய அருங் காட்சியகத்தில் நேதாஜி அவர்களைப் பற்றிய விவரங்கள் நிறைய இருக்கின்றன..


பதிவில் உள்ள
தகவல்களை
விக்கிபீடியா வழியாகத்
திரட்டி வழங்கியுள்ளேன்..


மேற்கு வங்கத்தின் கட்டாக் நகரில் ஜானகி நாத் போஸ் பிரபாவதி தேவி தம்பதியரின்
திருமகனாக 1897  ஜனவரி 23  அன்று  பிறந்தவர் சுபாஷ் சந்த்ர போஸ் .. 

" ஜெய் ஹிந்த் " என்ற  முழக்கத்தை முன்னெடுத்து நடந்த வீரத் திருமகனை நன்றியுடன் நினைந்து கை கூப்பி வணங்குவோம்..
***
ஜெய்ஹிந்த்.. ஜெய்ஹிந்த்..
ஃஃஃ

23 கருத்துகள்:

  1. வீர வரலாறு.  என் அப்பா இவரின் தீவிர பக்தர்.  அவர் பத்திரிகையில் எழுதிய புனைப்பெயர்களுள் முதன்மையானது சுபாஷ்ச்சந்திரன்.  இந்த நாளில் பிறந்த என் அக்காவின் பேரனுக்கு சுபாஷ் என்று பெயரிட்டார்.  இன்று அவனுக்கு 25 வயது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களது வருகையும் மேலதிக செய்தியும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஜெய்ஹிந்த்..

      நீக்கு
  2. வீரத்திரு மகனுக்கு வணக்கம்.

    இன்று பலரும் இவரை தனது ஜாதி என்று சுவரொட்டி ஒட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

      தங்களது கருத்து நியாயம்.. சுவரொட்டிகளின் காலமாயிற்றே இது!.

      நன்றி.. ஜெய்ஹிந்த்..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நல்லதொரு பதிவு. தேசத்தின் வீரத்திருமகன் சுபாஷ் சந்த்ர போஸ் பற்றிய தகவல் அனைத்திற்கும் மிக்க நன்றி. அந்த வீரத்திருமகனின் பிறந்த நாளான இன்று அவருக்கு வணக்கங்களை நானும் தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஜெய்ஹிந்த்..

      நீக்கு
  4. இந்தியாவின் தவப்புதல்வர்களில் ஒருவர். எங்கள் தாத்தா காங்கிரஸ்காரர். எங்கள் வீட்டில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், காமராஜர் ஆகியோரின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பறையில் இருந்தன. பல தலைவர்களைத் தெரிந்துகொண்ட அந்த நாள்கள் இன்னும் நினைவில். இப்போது தாத்தாவின் நினைவாக எங்கள் வீட்டில், தஞ்சாவூரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், காமராஜர் ஆகியோரின் படங்கள் உள்ளன. வருங்கால தலைமுறையினருக்கு இவர்களைப் போன்றோரை நினைவுகூர்வது இப்போதைய தேவையாகிறது. சற்றொப்ப உங்களுடைய இப்பதிவில் உள்ளதைப் போன்ற போஸின் படமே கும்பகோணத்லி எங்கள் வீட்டில் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது வருகையும் மேலதிக செய்தியும் மகிழ்ச்சி..

      அந்த காலத்தில் வீடுகளிலும் சரி.. கடைகளிலும் சரி.. தேசத் தலைவர்களது படங்களைக் கண்ணாரக் காணலாம்..பள்ளிகளில் சொல்லவே வேண்டாம்..
      இலக்கிய மன்ற அமைப்பின் சார்பாக நேதாஜி, காந்திஜி, திருவள்ளுவர் - என , படங்களை தேர்வு செய்வதில் ஆரோக்கியமான போட்டியே இருக்கும்..

      நான் படித்த இடைநிலைப் பள்ளியில் பாரத மாதாவுக்கு வீர வணக்கம் செலுத்துவது போல் நேதாஜி அவர்களது பெரிய படம் இருந்தது..

      மேலதிகச் செய்திகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      ஜெய்ஹிந்த்..

      நீக்கு
  5. ஜெய்ஹிந்த்.... சிறப்பான நாளில் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      ஜெய்ஹிந்த்.

      நீக்கு
  6. அருமையான பதிவு துரை அண்ணா. இந்திய அன்னையின் வீரப்புதல்வர் பற்றிய தொகுப்பு அருமை. இன்றைய நாளுக்கு ஏற்ற சிறப்பான பதிவு. ஜெய்ஹிந்த்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..நன்றி..

      ஜெய்ஹிந்த்..

      நீக்கு
  7. இந்தக் கால இளைஞர்கள் பலரும் சுபாஷ் சந்திர போஸைப் பற்றிய அறிவு இல்லாமல் இருந்ததால் பதிவுலகுக்கு வந்த ஆரம்ப நாட்களில் அவரைக்குறித்து விரிவாக எழுதி வந்தேன். அந்த நினைவுகளைத் திரும்பக் கொண்டு வந்தேன். மிக்க நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரியான கருத்து..

      பள்ளியில் (1968) தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் கம்பீரமான நேதாஜி, மகரிஷி திருவள்ளுவர், பாரத மாதா என்றெல்லாம் திருவுருவப் படங்கள் இருக்கும்...

      பாடங்களிலும் விவரக் குறிப்புகள்.. இப்போதெல்ல்லாம் எப்படி என்று தெரியவில்லை...

      நமக்கெல்லாம் பொற்காலம்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  8. ஜெய்ஹிந்த் ! அருமையான பதிவு.
    சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  9. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக அன் அப்போஸ்டாக நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டதையும், தன்னுடைய தோல்வியையும் பொறுத்துக் கொள்ள முடியாத காந்திஜி அவருக்கு எதிராக செய்த கட்சி அரசியல்களை தாங்க முடியாமல் நேதாஜி பதவியை ராஜினாமா செய்தார், அதுதான் இந்தியாவை விட்டு வெளியேறி விட வேண்டும் என்னும் எண்ணத்தை அவருக்குள் விதைத்தது  என்பதை Great blunders in Indian hiistory என்னும் புத்தகத்தில் படித்த பொழுது காந்தி மீதிருந்த மரியாதை சரிந்தது.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி நாட்களில் சக மாணவனின் தந்தை நேதாஜி படையில் இருந்தவர்.. நேதாஜியைப் பற்றி கதை கதையாகச் சொல்வார்.. காந்திஜி செய்த காரியத்தை அப்போதே அறிந்திருக்கின்றேன்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. நம் வலை உலகில் கூட நேதாஜியின் ராணுவத்தின் பெண்கள் பிரிவின் காப்டன் ருக்மிணி சேஷசாயி என்பவர் இருந்தார். இங்கே தான் ஶ்ரீரங்கத்தில் வசித்து வந்தார். திருமணமே செய்து கொள்ளவில்லை. பின்னர் இவருக்குத் தனியாக இருக்கும் அளவுக்கு முடியாமல் வயது ஆனதால் அவரின் அண்ணன் மகளோ/தங்கை மகளோ யாரோ கூட்டிச் சென்றார்கள். நம்ம தேனம்மைக்கு இவரைப் பற்றிய கூடுதல் விபரங்கள் தெரியலாம். எழுதி இருக்கார். எனக்குத் தேனம்மை எழுதின பின்னரே இவரைப் பற்றி அறிந்து கொண்டேன். அதுவரை யாரோ ஒரு வலைப்பதிவர் என்றே நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேதாஜியின் மகளிர் ராணுவப் பிரிவின் லக்ஷ்மி சுவாமிநாதன் அவர்களைப் பற்றிய தகவல்கள் தான் காணக் கிடக்கின்றன..

      கூடுதல் செய்தியினைப் பதிவு செய்திருக்கின்றீர்கள்.

      இப்படியான தியாகிகளுக்கு என்ன கைமாறு செய்திருக்கின்றது இந்த நாடு?..

      நீக்கு
  11. https://sivamgss.blogspot.com/2007/04/blog-post_20.html 2007 ஆம் ஆண்டில் சில இளைஞர்கள் கேட்டுக்கொண்டதால் "மௌன ராகங்கள்" எனும் தலைப்பில் எழுத ஆரம்பித்து ஓர் பத்துப் பதிவுகள் வரை போட்டிருப்பேன். காந்தி எவ்வளவு துரோகம் செய்திருக்கார் என்பதை இவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அஹிம்சை என்னும் பெயரில் உண்ணாவிரதம்/மௌன விரதம் இருந்து தன் காரியங்களைச் சாதித்துக் கொண்டார். Emotional black mail. மற்றபடி இவர் அதாவது காந்தி எரவாடா சிறையில் இருந்தப்போ எல்லாம் தன் காரியதரிசி மஹாதேவ தேசாய். மனைவி கஸ்தூரிபா ஆகியோருடன் தான் சௌகரியமாக இருந்தார். தினசரி செய்தித்தாள்கள், கடிதம் எழுதப் போஸ்ட் கார்டுகள், கவர்கள், பேனா, மை ஆகியவை உண்டு. அவர் ஆட்டுப்பால் தான் அருந்துவார் என்பதற்காக சிறப்பாக ஓர் ஆடு வளர்க்கப்படும். சாத்துக்குடியைப் பழமாக உண்ணாமல் சாறாகப் பிழிந்து குடிப்பார். அதற்கு மட்டும் சுமார் ஐந்து பழங்களாவது ஆகும். இவ்வளவும் சிறைக்குள்ளே. அவர் வீட்டில் எப்படிச் சாப்பிடுவாரோ அப்படியே சமைத்துச் சிறையிலும் தருவார்கள். அவ்வப்போது மருத்துவ வசதியும் உண்டு. தலைவர்களுடன் சிறையில் இருந்த வண்ணமே பேச்சு வார்த்தையும் நடக்கும். ஆனால் மனைவி சாகக்கிடக்கும்போது அவருக்கு மருத்துவத்தை மறுத்த புண்ணியவான்.

    பதிலளிநீக்கு
  12. ஆனால் மக்களுக்காகத் தான் காந்தி கஷ்டப்பட்டுக் கிடக்கின்றார் என்றல்லவா பதிவு செய்து வைத்திருக்கின்றார்கள்.. கஸ்தூரிபாய் அவர்களை நிம்மதியாக இருக்க விட்டதில்லை என்பதை அறிந்திருக்கின்றேன்..

    கூடுதல் செய்திகளுக்கு நன்றியக்கா..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..