நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 16, 2022

கடலைக் காட்டில்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று
மாட்டுப் பொங்கல்..

தஞ்சை பெரிய கோயிலில்
ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு
மகர சங்கராந்தி 
வழிபாடு சிறப்புடன்
நடைபெற்றது..


இன்று
தை மாதத்தின்
மூன்றாம் நாள்..

இன்றைய பதிவினை
K. மாதவன் அவர்களது
ஓவியங்கள்
அலங்கரிக்கின்றன..


காணும் பொங்கல்..
அன்றைய
கிராமங்களில்
கோலாகலம் மிகுந்து
சிறப்பாக இருக்கும்..
இப்போது எப்படியோ தெரியவில்லை..

ஆயினும்,
 இன்றைய பொழுதில்
கடலைக் காட்டுக்குள்
கள்ளமில்லாத
பாட்டுச் சத்தம்..

வாருங்கள்!..
ஒரு ஓரமாக நின்று
கேட்போம்!..


கண்ணாரப் பூப் பூத்து
காணாமக் காய்த் திருக்கும்
கடலைக் காட்டுக்குள்ளே
கருங் குயில் பாட்டு அந்தப்
பாட்டு சத்தம் கேட்டதுமே
மயங்கிப் போச்சு மனசு..

மயங்குற மனசுக்குள்ளே
சிமிழப் போல நெனைப்பு அந்த
சிமிழுக்குள்ள சேர வேணும்
செந்தூரமா பொழப்பு - பொழப்பு 
பொன்னளக்கும் சாமி கையில்
இருக்கு அந்தப் பொறுப்பு..

மரக்காலைத் தலைக்கு வச்சி
தானுறங்கும் சாமி - சாமி
திருமுகம் முழிக்கச்  சொல்லி
வைக்க வேணும் பூசை - பூசை
நேரத்துல கேக்க வேணும்
தாலியும் மஞ்சளும் ஆசை...

மனசுக்குள் மனச வைச்சி மதி
மயங்கி தவிக்க வைச்சான்..
வச்ச கதை அறியாம 
வாடி நிக்குது மனசு - மனசு
வாடும் வகை தெரிஞ்சு கிட்டு
ஒடுங்கிக் கிடக்கு கொலுசு..


வானம்பாடிக் கூட்டுக்குள்ளே
வந்து இருக்கும் காத்து போல
வார்த்தைக்குள்ளே மனசு தான்
வரப்பு நெடுக உசிரு தான்..
வந்து நின்னு சேதி சொன்னா
சிலுசிலுக்கும் கொலுசு தான்..

கொஞ்சி வரும் கிளியப் போல
கொலுசுக்குள்ள மணியப் போல
கொள்ளிடத்து அலையப் போல
சல சலக்குது பேச்சு - பேச்சு
காதாரக் கேட்டுக் கேட்டு
கல கலக்குது மூச்சு..

மண்ணுக்குள்ள கடலை வச்சான்
மனசுக்குள்ளே கடலை வச்சான்
கடலுல துரும்பாகக் கண்ணு
ரெண்டும் கலங்க வச்சான்
வச்சவனும் மனசுக் குள்ளே 
மாமன் பேரை எழுதி வச்சான்..

எழுத்துக்கு எழுத்தை வச்சான்
எழுத்தப் போல மனச வச்சான்
மனசறிஞ்ச பாசம் எல்லாம்
மல்லிகப் பூவா எழுதி வச்சான்
கல்லெ ழுத்து நேசம் அது
காலம் எல்லாம் பேசும்..


குத்து விளக்கு ஏத்தி வச்சேன்
குங்கும மஞ்சள் சேத்து வச்சேன்
ஆடி வரும் பாடி வரும்
ஆனந்தமா சாமி வரும்..
கூறை வரும் மாலை வரும்
கூட குங்குமம் சேந்து வரும்..

தை மாசம் பந்தலிட்டு தலை
வாழை இலையும் இட்டு
புத்துருக்கு நெய் வாசம்
புது விருந்து ஊர் பேசும்..
ஊர் பேச்சு உறங்குனதும்
உசிரு மட்டும் கதை பேசும்..

அடமழைத் தாவாரத்துல
சிலு சிலுக்கும் காத்து - காத்து
மழை ஓடைத் தண்ணி மேல
பள பளக்கும் பாத்து..
சின்னச் சின்ன சந்தத்தோட
படிச்சிருக்கும் பாட்டு அந்த
பாட்டு சத்தம் கேட்டு கேட்டு
சிரிச்சிருக்கும் கொலுசு...
***
அனைவருக்கும்
அன்பின் இனிய
காணும் பொங்கல்
நல்வாழ்த்துகள்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. கிராமத்துச் சூழலில் கவிதை இனிமை.  படித்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கவிதை வரிகள் மிகவும் அருமை ஜி. வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள். நேற்று சனி பிரதோஷம். இன்று ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மகர சங்கராந்தி
    வழிபாடு தரிசனம் தங்கள் காணொளி மூலமாக கிடைக்கப் பெற்றது. ஈசனை தரிசித்து கொண்டேன்.

    திரு. மாதவன் ஓவியங்கள் இயல்பாக அவ்வளவு அழகாக இருக்கிறது. நேற்றைய தங்கள் பதிவிலும் அவரது ஓவியங்களை பார்த்தேன். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    அந்த ஓவியங்களுக்கு ஏற்றார்போல தாங்கள் படைத்த கவிதையும் அழகாக அமைந்துள்ளது. அந்த ஓவியப் பெண்ணே நேரில் வந்து பாடுவது போன்ற உணர்வையடைத்தேன்.

    கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் கிராமத்தின் இயற்கையையும், அந்தப் பெண்ணின் மனசின் சந்தோஷத்தையும் கொலுசு சத்தம் சொல்லிச் சென்றது. அருமை. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இந்தக் கவிதை 2020 நவம்பரில் எழுதப் பெற்றது.. பதிவில் அதைக் குறிப்பதற்கு மறந்து விட்டேன்.. அந்தக் கவிதையை சற்றே செம்மை செய்து படங்களுடன் இங்கே தந்துள்ளேன்..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சனி பிரதோஷ காட்சியை கண்டு களித்தேன்.
    மாதவன் அவர்கள் ஓவியமும் உங்கள் கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. காணொளி கண்டேன் துரை அண்ணா.

    மாதவன் அவர்களின் ஓவியமும் அதற்கு ஏற்ற உங்கள் கிராமியக் கவிதையும் வெகு சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  6. கிராமத்தின் அழகு சொல்லும் கவிதை, நந்தியம்பெருமான் சிறப்பு வழிபாடு, மாதவன் அவர்களின் ஓவியம், என அனைத்துமே சிறப்பு. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..