நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 22, 2021

மங்கல மார்கழி 7

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

-: குறளமுதம் :-

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.. (72)
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை..
திருப்பாடல் - 7


கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


கங்கையிற்புனித மாய
காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழில்  அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவன் ஈசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்
ஏழையே னேழை யேனே.. 894
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் - திருப்புன்கூர்
பஞ்ச லிங்க ஸ்தலம்


இறைவன்
ஸ்ரீ சிவலோகநாதர்
அம்பிகை
சௌந்தர்ய நாயகி

தீர்த்தம்
ரிஷப தீர்த்தம், பிள்ளையார் தீர்த்தம்
தலவிருட்சம் - புங்கை மரம்



ஸ்ரீ நந்தனார் ஸ்வாமிகளுக்காக நந்தி விலகிய திருத்தலம்..


 ஸ்ரீ நந்தனார் ஸ்வாமிகள் திருப்புன்கூரில் திருக்குளம் வெட்டுவதற்கு  விரும்பிய போது ஸ்ரீ மஹா கணபதி வேலையாளாக வந்து பணியினை நிறைவு செய்து கொடுத்தார் என்பது தலபுராணம்..

இந்த வேலைக்கு ஊதியமாக ஒருபடி நெல்லைக் கொடுத்தார் நந்தனார்.. அந்த ஊதியத்தினை அம்மையப்பனிடம் சமர்ப்பித்தார் கணபதி..  

மகிழ்ச்சியுற்ற எம்பெருமான் அந்த நெல்லைத் தனது தலையின் மேல் தாங்கிக் கொண்டார்.. அந்தத்
தானியங்கள் கங்கையின் ஸ்பரிசத்தால் முளைத்து நாற்றுகளாகி விட்டன..

அந்த நாற்றுகளைத் தான் ஈசனும் அம்பிகையும்
திரு நாட்டியத்தான்குடியில் நடவு செய்து விளைவித்தனர் என்பது சிறப்புச் செய்தி..
*
கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
கடுநரகஞ் சாராமே காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயாடியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே..(6/11)
-: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-
*
திருவாசகத் தெள்ளமுதம் :-
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் எண் - 7


அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
*
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 13 - 14


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்..

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதைக் குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. மனதை நனைய வைக்கும் நந்தனார் சரிதம்.

    பதிலளிநீக்கு
  2. நந்தனார் கதை, தலபுராணம் அறிந்தேன் அண்ணா. மனதைத் தொட்ட நிகழ்வு நந்தனார் கதை. நந்தனார் படம் கூட சிறு வயதில் பார்த்திருக்கிறேன் ஆனால் முழு படக் கதையும் நினைவில்லை. அவர் வயலில் வேலை செய்யும் காட்சி யும் பண்ணையாரிடம் அடி வாங்கும் கொடுமையான காட்சியும் மட்டும் நினைவில் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! உண்மையில் நந்தனாரை யாரும் தடுக்கவில்லை. நீங்கள் சொல்வது நந்தனார் படத்தில் மட்டுமே வந்து பிரபலம் ஆனது. கோபாலகிருஷ்ண பாரதியாரின் இந்த நந்தனார் காவியத்திற்கு மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை காப்புப் பாயிரம் எழுதிக் கொடுக்க முதலில் மறுத்துவிட்டார். பின்னர் கவிதையின் அழகில் அதன் சுந்தரத் தமிழில் மயங்கி எழுதிக் கொடுத்திருக்கார். இது பற்றியும் ஒரு பதிவு அந்தக் காலத்தில் போட்டிருக்கேன். சுட்டி எடுக்க முடியுமானு பார்க்கணும். :))))

      நீக்கு
    2. https://sivamgss.blogspot.com/2007/02/212.html
      https://sivamgss.blogspot.com/2009/07/1.html
      https://sivamgss.blogspot.com/2009/07/blog-post_8190.html

      நீக்கு
  3. பாடல் அடிகளை ரசித்தேன். திருப்புன்கூர் கோயிலுக்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்களை விக்கிப்பீடியாவில் திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் என்ற தலைப்பிலான கட்டுரையில் சேர்த்துள்ளேன். அதில் புகைப்படத்தொகுப்பில் உள்ள படங்கள் அனைத்தும் நான் எடுத்து இணைத்தவையே. ஒரு வகையான இறைப்பணியினை செய்த மன நிறைவு.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் அருமை. கோபுர தரிசனங்கள் கண்டு வணங்கி கொண்டேன். நந்தனார் கதையும், ஸ்தல வரலாற்று கதையும் படித்து அறிந்து கொண்டேன். அடியார் நந்தனாரின் சிவ பக்திக்கு ஈடு இணை ஏது? திருப்புன்கூர் சிவபெருமான், அம்பிகையையும், சிவனடியார் நந்தனாரையும் அன்புடன் தொழுது பணிகிறேன். அருமையான பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான தரிசனம் இன்று.
    பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான தரிசனம். திருப்பாவை மற்றும் பாசுரங்கள் பாடல்கள் அனைத்தும் நன்று. நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  7. நாராயணன் மூர்த்தி,
    கேசவன் திருவடிகளே சரணம் ...

    பதிலளிநீக்கு
  8. காதார் குழையாடப்பைம்பூண் கனலாட! படிக்கையிலேயே நம்மையும் அறியாமல் காட்சிகள் கண் முன்னே வரும். அதோடு அந்தத் தாண்டவத்தைப்பார்த்து மெய் சிலிர்க்கும் அனுபவமும் ஏற்பட்டு நாமும் தாளத்தோடு லேசாக ஆடுவோம்.

    பதிலளிநீக்கு
  9. திருப்புன்கூரில் நந்தி விலகியது தெரியுமே தவிர்த்து கணபதி பெற்ற கூலியோ அதை அவர் அம்மையப்பரிடம் கொடுத்ததோ அவை நாற்றுக்களாகித் திருநாட்டியத்தான் குடியில் நடப்பட்டதோ தெரியாது. முற்றிலும் புதிய தகவலுக்கும் திருநாட்டியத்தான் குடி பற்றியும் அறியக் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..