நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 30, 2019

ஏழூர் தரிசனம் 3

திருச்சோற்றுத்துறைக்கு செல்லும் வழியில் -

குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ள வீரமாங்குடியின் பெருஞ்சிறப்பு
அங்குள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில்..

- என்றும்,

அன்னை மிகுந்த வரப்ரசாதி... ஆலயத்து வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிக்காமல் அனுப்பவே மாட்டாள்...

அத்தனை கருணை உடையவள்...

- என்றும், 

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்....

அன்னை வீரமாங்குடி மகாமாரியம்மனைத் தரிசித்து விட்டு மேலே பயணத்தைத் தொடர்வோம்...


வீரமாங்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில்..
சில ஆண்டுகளுக்கு முன் திருவேதிகுடி சென்றபொழுது இந்த மாரியம்மன் கோயிலுக்கும் சென்றேன்...

மதிய நேரம்... திருக்கோயில் அன்ன தானத்துக்கு அனுமதிச் சீட்டு வழங்கிக் கொண்டிந்தார்கள்..

நான் சென்ற நேரம் சீட்டு முடிந்து விட்டது.. அவ்வளவு தான்...
ஆனாலும் நான் பசித்திருந்தேன்...

சரி.. நாம் அம்மனைத் தரிசிப்போம் - என்று மூலத்தானத்தில் அம்பாளைத் தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது மிகச் சரியாக ஒருவர் அழைத்தார்..

வாங்க... வாங்க... - என்று...

என்னிடம் சீட்டு இல்லையே!.. - என்றேன்..

சீட்டு இல்லை...ன்னா என்ன?.. சாப்பாடு இருக்கிறதே!... - என்றார்..

வயதான அம்மா ஒருவர் என்னை அழைத்துச் சென்று அமர வைத்து
தலைவாழை இலையை இட்டு - வயிறார சாப்பிடுப்பா!... - என்று அன்னத்தைப் பரிமாறிய போது கண்களில் நீர் வந்தது...

இது தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பந்தம் என்பதும் புரிந்தது...

அதன் பிறகு - இப்போது தான் இரண்டாவது தடவையாக மகமாயியைத் தரிசிக்கச் செல்கிறேன்...

வீரமாங்குடி சாலையில் ஓரத்திலேயே திருக்கோயில்..
கோயிலுக்கு வடபுறமாக குடமுருட்டி ஆறு...

கோயிலுக்கு முன்பாக கருப்பசாமி சந்நிதி...
மண்டபத்தில் அலங்காரக் குதிரைகள்...




கோயிலின் மூலஸ்தானத்தில் அலங்கார ரூபிணியாய் ஸ்ரீ மாரியம்மன்..

சந்நிதிகளில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காத்தவராயன், ஸ்ரீ வீரனார்..

இந்த வட்டாரத்தின் மக்களுக்கு மிக நெருக்கமானவள் வீரமாங்குடி மாரியம்மன்...

பிள்ளை வரம் கேட்பதும் - பெற்ற பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வந்து தொட்டிலில் இடுவதும், முடி இறக்கி காது குத்துவதும் - 

வருடம் முழுதும் கோலாகலமாகவே இருக்கும்...

இப்போது சப்த ஸ்தானமும் சேர்ந்து கொண்டதால் கோயிலுக்குள் சரியான கூட்டம்...

மனங்குளிர மாரியம்மனைத் தரிசித்து விட்டு பிரகாரத்திற்கு வந்தால்

ஆங்காங்கே விருந்து உபசரிப்புகள்...

சடாரென ஒரு இளைஞன் - இங்கே வந்து உட்காருங்க!.... - என்று கையைப் பிடித்து அழைத்து அமரவைத்தான்..

சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், துவையல், ஊறுகாய் - என,  மனசும் வயிறும் ஒருசேரக் குளிர்ந்தன..

அங்கே திருச்சோற்றுத்துறையில் சாப்பிடாத குறை இங்கே தீர்ந்தது...

அம்பாளை மனங்குளிர வணங்கிவிட்டுப் புறப்பட்டோம்...

திருச்சோற்றுத்துறையிலிருந்து திருவேதிகுடிக்கு சிற்றுந்துகள் செல்லும்படியான ஒற்றைத் தார்ச்சாலை..

சப்த ஸ்தானத்தின் நான்காவது திருத்தலம்...




கல்யாணத் தடை நீக்கும் திருத்தலம் இது.. ஞானசம்பந்தப் பெருமான் ஆணையிட்டு அருளிய திருப்பதிகம் இத்தலத்துக்குரியது... 

நந்தியம்பெருமான் திருக்கல்யாணத்தின் போது வேத மந்த்ர விசேஷங்களை திருவேதிகுடியினர் கவனித்துக் கொண்டதாக ஐதீகம்...

ஐயன் வேதபுரீஸ்வரும் - மங்கையர்க்கரசி அம்பிகையும் ஆரோகணிக்கும் பல்லக்கு தயாராகிக் கொண்டிருந்தது...




மூலஸ்தானத்திற்குள் சரியான நெரிசல்.. மூங்கில் அடைப்புகள் இருந்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம்...


வலப்புறம் செவி சாய்த்தவராக
ஸ்ரீவேத விநாயகப்பெருமான்  

ஐயனைக் கண்ணாரக் கண்டு வணங்கிவிட்டு
திருச்சுற்றில் வலம் வந்தோம்..



சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருக்குடமுழுக்கு நடைபெற்றது..
ஆனாலும் கருவறை விமானம் முழுதும் செடிகள் முளைத்துக் கிடக்கின்றன...


திருச்சுற்றில் 108 சிவலிங்க பிரதிஷ்டை.. 






மூலஸ்தானத்தின் மேற்குப் புறமாக திருச்சுற்றில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்.. அருகில் பால ஆஞ்சநேய மூர்த்தி..


மேற்குத் திருக்கோட்டத்தில் 
இடம் வலம் மாறியிருக்கும் மாதொரு பாகனைத் தரிசிக்கலாம்..
கலைநயம் மிக்க படைப்பினை மூடர்கள் சிதைத்திருக்கின்றனர்...


ஸ்ரீ மங்கையர்க்கரசி
அம்பிகையின் சந்நிதி கோயிலுக்கு வெளியே தனியாக உள்ளது...

நிறைவாக தரிசனம் செய்து விட்டு
திருக்கண்டியூர் வீரட்டத்தை நோக்கிப் புறப்பட்டோம்...


ஸ்ரீ வேதபுரீஸ்வரர் 
மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த
மெய்யணி நீறன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங் கமழுந் திருவேதிகுடி 
ஐயனை ஆரா அமுதினை நாம் அடைந்தாடுதுமே..(4/90)
-: திருநாவுக்கரசர் :-


ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

19 கருத்துகள்:

  1. இந்தக் கோயில் போன நினைவு. ஏனெனில் அர்த்தநாரீசுவரர் மாறிக் காட்சி அளிப்பதைப் பார்த்த நினைவு! என்றாலும் பல வருஷங்கள் ஆகிவிட்டன. மறுபடி போக ஆவல் இருந்தாலும் அலைச்சலை நினைத்தால் பயம்மாக இருக்கிறது. அவன் அழைத்தால் கிடைக்கும். வீரமாங்குடி சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு....
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை எல்லாம் உள்ளடங்கிய கிராமங்கள்...

      மூத்த குடிமக்கள் வருகை என்பது சற்று சிரமம் தான்...

      எல்லாவற்றுக்கும் ஈசன் மனம் வைக்க வேண்டும்....
      வாழ்க நலம்..

      நீக்கு
  2. குட்மார்னிங்.

    அன்னை எப்போதுமே கருணை மயமானவள் என்பது மீண்டும் நிரூபணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      வணக்கம்....

      அன்பு மயமான அன்னையின் நல்லருளால் வாழ்க நலம்..

      நீக்கு
  3. கருவறையின் மேல் வளர்ந்துள்ள செடிகள் இறைவனுக்கு முடியாகினவோ... இல்லை இறைவனுக்கு வெப்பம் தாக்கக் கூடாது என்று நிழல் தருகின்றனவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      தாங்கள் சொல்வது சரியே....
      ஆனாலும் திருக்கோயிலைப் பராமரிக்கத் தவறும் அரசை என்ன செய்வது?...

      இறைவன் அவன் கவனித்துக் கொள்வான்....

      நீக்கு
  4. நிறைவான படங்கள். நிறைவான தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. சிறப்பான தரிசனம். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  7. இன்றைய தரிசனம் நன்று வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வயிறு பசித்திருக்க விடுவாளா அன்னை, மகனை சாப்பிட வைத்து விட்டாள்.
    அன்னையின் கருணையால் வயிறும் மனமும் குளிர்ந்து விட்டது தானே!

    அன்னையின் கருணையே கருணை.

    படங்கள் எல்லாம் அழகு.

    மாரியை போல கருணை மிகுந்தவள் மாரியம்மா, அங்கும் சாப்பாடு கிடைத்தது அவள் அருள்.

    திரு வேதிக்குடியை மறுபடியும் தரிசனம் செய்தேன்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      அன்னையின் கருணையே கருணை..

      அவளது அன்புக்கு நிகர் ஏது?..

      வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. படங்கள் எல்லாமே வெகு அழகு.

    கூப்பிட்டு அழைத்து அன்னதானம் கொடுத்தது ஆஹா! இந்தத் தடவையும் ! அந்த பிரசாத மெனு நாவில் நீர் ஊற வைத்தது. ச பொ, பு, த சா, துவையல்...என்று

    நல்ல தரிசனம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஆகா....

    அந்தத் தயிர் சாதமும் அதற்கு பருப்புத் துவையலும் ஊறுகாயும் இன்னும் நாவில் இருக்கின்றன.....

    வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....

    பதிலளிநீக்கு
  11. வயிராரச் சாப்பிடு - மனம் நெகிழ்ந்தது. நாங்கள் சத்தியாகாலம்/பெங்களூர் சென்றிருந்தபோது 2.30 மணிக்கு, அவங்க வற்புறுத்தி கோவில்ல சாப்பிடச் சொன்னாங்க. சாதம், சாம்பார், ரசம், மோர். தொட்டுக்க ஒன்றுமே கிடையாது. என் பெண் நல்ல காலத்திலேயே தமிழக மதிய உணவு அவ்வளவாக விருப்பப்படமாட்டா. அவளே நல்லா இருந்ததுன்னு சொன்னா.

    பசிக்குச் சோறிட வேண்டும். அது மட்டும்தான் மிகுந்த திருப்தி தரும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..