நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018

வளனே வாழி..

இன்று ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை..
அதிலும் மங்கலகரமான பதினெட்டாம் நாள்...

ஸ்ரீ காவேரியன்னை - அம்மாமண்டபம், திருஅரங்கம் 
கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்குப் பின்
தமிழகத்தின் நெற்களஞ்சியம் புதுப் பொலிவு பூண்டுள்ளது...

காவிரியில் புது வெள்ளம்..
அதன் கரை நெடுகிலும் மகிழ்ச்சி வெள்ளம்...

காவிரி பொங்கி வரும்போது - அதன் வழி நெடுக
மகிழ்ச்சியும் உற்சாகமும் ததும்புவது
இன்று நேற்றல்ல..

ஈராயிரம் வருடங்களுக்கு முன்னரே
காவிரியின் புதுப் புனல் கண்டு
அதன் இருகரைகளும் ஆனந்தக் கூத்துடன்
விழாக் கொண்டாடியதை
இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்...



உழவர் ஓதை மதகோதை
உடை நீரோதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி..
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி...

கல்லணை 
பூம்புனலைக் கண்டு மகிழ்ந்து 
ஆரவாரிக்கும் உழவர்களின் ஓசையும்
கரைகளில் அமைக்கப்பட்டிருக்கும் 
மதகுகளின் வழியே நீர் புகுந்து
சலசலப்புடன் வெளியேறும் ஓசையும்

அத்துடன் -

சோம்பிக் கிடந்த ஊரார் கவனிப்பின்றி 
போட்டு வைத்திருந்த கரைகளை 
பொல... பொல... என, உடைத்துப் போட்டுவிட்டு
கலகலப்புடன் துள்ளிக் குதித்தோடும் ஓசையும்

வந்ததே புதுப்புனல்!.. - என்று, ஆர்ப்பரித்து -
மக்கள் கொண்டாடி எடுக்கும் விழாக்களின் ஓசையும்!...

ஆகா... அற்புதம்!...

இத்தனையும் உன்னாலன்றோ!...

காவேரி... நீ வாழி!...
உன்னால் நாங்கள் வாழ்கின்றோம்!..

ஆதலின், இத்தனை ஓசைகளையும் கேட்டவாறு நடந்து செல்..
எங்களையும் நல்வாழ்வில் நடத்திச் செல்!..

இப்படி நீ இத்தனை வளங்களுடன் சிறந்து நடப்பதற்கு
பேரொலியுடன் உன்னைக் காத்து நிற்கும்
வீரர்களையுடைய வளவனே காரணம்!..

வளவன் என்றென்றும் உனைக் காக்க -
வளந்தந்து அவனை நீ காத்து நிற்பாயாக!..


காவிரியே!.. நீ - மெல்லென ஊர்ந்து தான் வருகின்றாய்...

ஆனால்,
சிறுபொழுதுக்கெல்லாம்
சல்லென வேகம் கொண்டு
வெல்லெனப் பாய்கின்றாய்!...

இப்படிப் பாய்ந்தால் காவிரியே...
இத்தனை அழகினையும் கண்டு களிக்க ஏலுமோ!..

எனவே,
சில்லென நடந்து செல்.. காவிரி!..

இவ்வண்ணமே -
நடந்து செல் காவிரி...


மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயல் கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி..

பூவர் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி!..
-: இளங்கோவடிகள் :-
***
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயாகக் காவிரி..
 கல்லணை.. ஜூலை 2018..
இந்த வருடம் காவிரியாள்
பொங்கிப் பெருகி வந்திருக்கின்றாள்..

மங்கல தீபங்களுடன் வரவேற்பதோடு
நின்று விடாமல்
மங்கையவளைக் காத்து நிற்போம்..

நாம் காவிரியைக் காத்து நின்றால்
அவள் நம்மைக் காத்து நிற்பாள்!...

நடந்தாய் வாழி.. காவேரி!..
ஃஃஃ 

17 கருத்துகள்:

  1. அனைவருக்கும்
    ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. ஆடிப்பெருக்கு அனைவர் இல்லங்களிலும் மகிழ்ச்சியும், நலனும் பெருக ஒரு வாய்ப்பாக அமையட்டும். இந்த வருடம் காவிரி நிறைந்து ஓடினாலும் கடந்த ஒரு வாரத்தில் கொஞ்சம் நீர் அளவு குறைந்திருப்பதால் காவிரியில் நீரும் குறைந்துள்ளது. என்றென்றும் நிறைந்து இப்படி ஓட வருண பகவானும் அருள்புரிய வேண்டும். அம்மாமண்டபத்தின் கோலாகலக் குதூகல ஆடல், பாடல்களின் ஒலி இங்கு வரை கேட்கிறது. சுமார் பத்து மணி அளவில் நம்பெருமாள் வரப் போகிறார். அதற்கான முன்னேற்பாடுகள் நேற்றிலிருந்து துவங்கி விட்டன. பத்து மணி போல் வாசலில் போய்ப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  3. காவிரி வணக்கம் துரை ஸார்... (புதுசா ஒரு வார்த்தை கத்துக்கிட்டேனாம்... எல்லா இடத்திலும் பீத்திக்கறேன் இல்லை?!!!)

    பதிலளிநீக்கு
  4. இன்று எங்கள் உறவுக்குழு ஒன்று காவிரியைத் தரிசிக்க கல்லணை உட்பட்ட இடங்களுக்குப் புறப்படுகிறது. நானும் இணைய இருந்தேன். முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. பொங்கி வரும் காவிரியின் இந்த வருட இந்த சந்தோஷம் இனி எல்லா வருடங்களிலும் வருவதற்கு காவிரி அன்னையையே பிரார்த்திப்போம். ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அருமை
    ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  7. அழகான பாடல்கள், அழகான அம்மன் படம் பதிவு அருமை.
    //நாம் காவிரியை காத்து நின்றால்
    அவள் நம்மை காத்து நிற்பாள்.//

    உண்மை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவிரி பொங்கிப் பெருகும் இன்னாள் என்றும் நிலைக்கட்டும்.
      அருமையான பாடல்களோடு அன்னை இங்கே வருகிறாள். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். நன்றியும் வணக்கமும் துரை செல்வராஜு.

      நீக்கு
  8. அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. பொங்கும் காவேரி அருமை ஐயா...!

    பதிலளிநீக்கு
  10. வாழி காவேரி என்றும் புகழோடு...


    பதிலளிநீக்கு
  11. ஆடிபெருக்கை வரவேற்ற நீங்கள் சித்திரான்னங்களையும், ஆற்றின் கரைகளில் மாலை எல்லோரும் மகிழ்ச்சியோடு குழுமியிருக்கும் படங்களையும் சேர்த்திருக்கலாம்.

    எல்லோரும் 'ஏன் நடந்தாய் வாழி காவேரி' என்று எழுதியிருக்கிறார் என நினைப்பார்கள். காவேரி என்பது நம் பாரம்பர்யத்தைப் பொருத்து, பெண். அவள் (பெண்) எப்போதும் ஓடுவதில்லை. மெல்லிய மணிகள் குலுங்க பிறர் மனதைக் கவரும் வண்ணம் அன்ன நடை நடந்துதான் வழக்கம். அதனால்தான் என்னவோ இளங்கோ அடிகள் 'நடந்தாய் வாழி காவேரி' என்று பாடியிருக்கிறாரோ?

    குவைத்தில் 'ஆடிப் பெருக்கு' எப்படி இருக்கு துரை செல்வராஜு சார்? 'ஆடித்தான் தங்கியிருக்கும் அறையைப் பெருக்க வேண்டியிருக்கோ"? ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  12. காவேரி, அதைச் சுற்றியிருக்கும், இருபுறமும், கிராமங்கள்/ஊர்களைப் பார்க்கும்போது, அங்கேயே ஒரு வீடு எடுத்து இருந்துவிடுவோமா, அதன் அருகில் ஓரிரு தென்னைகளும், இரு மாமரங்களும், முடிந்தால் கொய்யா மரங்களும் வளர்த்து அழகாக இயற்கையோடு வாழலாமே என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  13. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  14. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அன்னையின் படங்களும், காவிரியின் அழகும், அழகு சொல்லில் தங்கள் தமிழும் மனதை மிகவும் கவர்ந்தது. பதிவு மிக அருமை. ஆடிப் பெருக்கில் மக்கள் மனமும் ஆனந்தமடையட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. காவிரி என்ன அழகாக ஓடுகிறாள். படங்கள் செம அழகு. காவிரி அன்னை படம் கண்கொள்ளா அழகு...எப்போதும் இப்படி இருக்காதா என்ற ஆதங்கமும் வருகிறது..
    காவிரிமட்டுமல்ல எல்லா நதிகளும்..

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..