நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 26, 2016

மார்கழிப் பூக்கள் 11

தமிழமுதம்

அல்லவைதேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.. (096)
***

ஔவையார் அருளிய
மூதுரை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானும்தன்
பொல்லாச்சிறகை விரித்து ஆடினாற்போலுமே
கல்லாதான் கற்ற கவி..  
* * *

அருளமுதம்

ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

திருப்பாடல் - 11


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ திருமழிசையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஸ்ரீ நம்பெருமாள் - கமலவல்லி., உறையூர்
இரந்துரைப்ப துண்டுவாழி ஏமநீர் திறத்தமா
வரர்தரும்தி ருக்குறிப்பினில் வைத்ததாகில் மன்னுசீர்
பரந்த சிந்தை யொன்றிநின்று நின்னபாத பங்கயம்
நிரந்தரம்நீ னைப்பதாக நீநினைக்க வேண்டுமே..(852)

ஓம் ஹரி ஓம்  
* * *

சிவ தரிசனம்
வீரட்டத் திருத்தலங்கள்

எதற்கும் அடங்காத மூர்க்கர்களையும் மூடர்களையும்
ஈசன் எம்பெருமான் - வீழ்த்தியருளிய நிகழ்வுகள் எட்டு..  

இந்த அருட்செயல் நிகழ்ந்த தலங்களே
வீரட்டானத் திருத்தலங்கள்..

இத்திருத்தலங்களை - 

காவிரியின் கரைக்கண்டி வீரட்டானங்
கடவூர் வீ ரட்டானங் காமருசீர் அதிகை
மேவிய வீ ரட்டானம் வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாம்
கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்
கோத்திட்டைக் குடிவீரட்டானம் இவைகூறி
நாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமந்தமருஞ் சிவன்தமரென்று அகல்வர் நன்கே..(6/71)

- என்று, அப்பர் ஸ்வாமிகள் குறித்தருள்கின்றனர்..

திருக்கண்டியூர், திருக்கடவூர், திருஅதிகை,திருவழுவூர், 
திருப்பறியலூர், திருக்கோவலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி -
எனும் இத்திருத்தலங்களை தொடரும் பதிவுகளில் தரிசிக்கலாம்..

முதலாவது திருத்தலம்
திருக்கண்டியூர்



இறைவன் - ஸ்ரீ பிரம்மசிரக்கண்டேசர்
அம்பிகை - ஸ்ரீ மங்களநாயகி
தீர்த்தம் - நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்

பிரம்மதேவனின் அகந்தை அழிந்த தலம்..

தம்முள் யார் பெரியவர் என்று 
பிரம்மதேவனுக்கும் ஹரிபரந்தாமனுக்கும்
பிரச்னை மூண்டது..



ஈசன் எம்பெருமான் அக்னி வடிவாகத் தோன்றி
தம்மை உணர்த்தியும் பிரம்மதேவன்
செருக்குற்று நின்றதால் -
ஸ்ரீ வயிரவர் தோன்றியருளினார்..

அவ்வேளையில் 
பிரம்மதேவன் தகாத சொல்லுரைத்ததால்
ஐந்தாக விளங்கிய தலைகளில்
ஒன்று குறைந்து போனது..

ஸ்ரீ வயிரவர் திருத்தோற்றமுற்ற திருத்தலம்..



ஆணவம் அழிந்த நிலையில்
நான்முகன் கலைவாணியுடன் ஈசனை வழிபட்டு
உய்ந்ததாக ஆன்றோர் திருவாக்கு..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..

மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில்
மாலை 5.30 மணியளவில் சூரியனின் கதிர்கள்
கருவறைக்குள் படர்கின்றது..

தஞ்சையிலிருந்து திருவையாற்றுக்குச் செல்லும்
வழியில் இத்தலம் உள்ளது..

- பாடிப் பரவியோர் -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்..
***
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்லா நம்மைச் செற்றநங்கை
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கமாறினையும்
ஆய்ந்த பிரானல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே!.. (4/93)
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த 
கோயிற்பத்து


ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரர் - ஊற்றத்தூர்
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யானிதற் கிலன்ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெருமானே
சீருடைச் சிவபுரத்தரசே..
* * *

தேவி தரிசனம்

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி
மைசூரு 


வாள்நுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும்அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே!.. (040) 
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
* * *

8 கருத்துகள்:

  1. நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் வலைத்தளத்திற்கு வருகிறேன். மார்கழி மணக்கிறது! - இராய செல்லப்பா (நியு ஜெர்சியிலிருந்து)

    பதிலளிநீக்கு
  2. திருக்கண்டியூர் பல முறை சென்றுள்ளேன். தற்போது உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் சென்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு நாளும் மார்கழிப் பூவின் மணம் கூடிக்கொண்டே போகிறது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள்.
    அருமையான பதிவு.
    இன்று கோவில்தரிசனம் அருமையாக ஆனது.

    பதிலளிநீக்கு
  5. திருக்கண்டியூர்,, மார்கழியில்,, தங்கள் பதிவில்,, அருமை அருமை,, படங்கள் மிக அருமை,, தொடர்கிறேன்,,

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பகிர்வு. திருக்கடவூர் சென்றதுண்டு.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..