நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 21, 2016

புது வீடு தேடி..

அன்புக்குரிய கில்லர்ஜி அவர்கள் சில தினங்களுக்கு முன்பாக
தமது தளத்தில் சிறுகதை ஒன்றினைப் பதிவிட்டிருந்தார்...

அதனை இந்த இணைப்பில் காணலாம்..

அந்த சிறுகதை வெகுவாக மனதைப் பாதித்தது...

அப்போதே சொல்லியிருந்தபடி, அதன் தொடர்ச்சி இதோ!..


தாத்தா.. தாத்தா.. எங்கேயும் போகாதீங்க.. இங்கே நிழலுக்கு வாங்க!.. இங்கேயே நில்லுங்க!..

யாரும்மா.. நீ!.. ஏன் எங்களை நிக்கச் சொல்றே?..

எங்க அப்பா தான் நிக்கச் சொன்னாங்க!..

என்னது அப்பாவா?.. யாரு பெத்த புள்ளையோ தெரியலையே!.. இம்புட்டுப் பிரியமா பேசுது.. யாரடி தங்கம் நீ?.. உம் பேரு என்னா?.. எந்த ஊரு நீ!..

எம் பேரு.. ரத்ன காமாட்சி...

என்னது?..

ரத்ன காமாட்சி!.. நானு.. எங்க அப்பா அம்மா.. எல்லாரும் கோயிலுக்குப் போய்ட்டு வர்றோம்.. இதோ எங்க அப்பாவே வந்துட்டாங்க!....

அம்மா.. காமாட்சியம்மா... வணக்கம்.. நல்லாயிருக்கீங்களா... ஐயா.. நீங்க எப்படியிருக்கீங்க?.. என்னது.. வெயில் நேரத்தில பஸ்டாண்டு மத்தியில தடுமாறிக்கிட்டு நிக்கிறீங்க?...

யாரப்பா.. நீ?.. நினைப்புல வரலையே!.. கோவிச்சுக்காதேப்பா!..

நாந்தாம்மா.. செந்தில்!.. செந்தில் குமார்.. உங்க வீட்டுல ரெண்டு வருஷம் இருந்தேனே.. ஞாபகம் வருதா!.. என் கல்யாணத்துக் கூட வந்தீங்களே!..

ஆ.. செந்திலா.. என் ராசா!.. எப்படிய்யா.. இருக்கே!.. பாவி மனசுல மறந்து போச்சேய்யா.. வயசாயிடிச்சு.. அதான்.. என்னங்க.. யாரு தெரியுதா?.. நம்ம செந்திலு!..

காதருகே - கையைக் குவித்து வைத்த சொல்லவும் - பெரியவர் ரத்தினத்தின் முகத்தில் மலர்ச்சி..

தட்டுத் தடுமாறி இந்தக் கையில இருந்த கழியை அந்தக் கைக்கு மாற்றிக் கொண்டு புருவத்தின் மேல் நிழல் கூட்டியபடி உற்றுப் பார்த்தார்..

காமாட்சியைப் பார்த்தார்.. கண்கள் கலங்கின..

அவருக்குப் புரிந்து விட்டது போலும்...

மெதுவாக கையை செந்தில் குமரனை நோக்கி நீட்டினார்...

பெரியவரின் கையைப் பற்றிக் கொண்டான் செந்தில்..



வெயில் நேரத்தில இங்க என்ன பண்றீங்க?.. அவன் .. கூட வரலையா?..

பெயரைக் கேட்டதும் சுளுக் .. என்று காமாட்சியம்மாவிடம் இருந்து விம்மல் வெளிப்பட்டது...

பதறிப் போனான் - செந்தில்..

என்னம்மா.. என்ன நடந்தது?..

அதெல்லாம் எதுக்கு ராசா.. நீ எப்படி இருக்கே.. உன் பொஞ்சாதி எங்கே?.. இவ உம்மகளா?..

ஆமா.. பேரு ரத்ன காமாட்சி!..

கேட்டதுக்கு சொன்னாளே!.. ராசாத்தி!..

ஐயா பேரையும் உங்க பேரையும் சேர்த்து வெச்சிருக்கேன்...

அப்போது தான் விளங்கியது காமாட்சியம்மாளுக்கு!..

விழிக்கடையில் நீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன...

சரி.. வாங்க போவோம்... அதோ.. நிக்கிது நம்ம கார்!.. கார்ல.. தான் உங்க மருமக சுந்தரி இருக்கா!..

செந்திலு.. நாங்க ரெண்டு பேரும் வெளியூருக்குப் போறோம்!...

அம்மா.. உங்களுக்குத் தான் பொய் பேசத் தெரியாதே!.. அப்புறம் எதுக்கு வீண் பேச்சு?.. எனக்கு எல்லாம் தெரியும்!...

ஆருமில்லாமப் போனோம்!.. - காமாட்சியம்மாளின் கண்கள் கலங்கின..

இருந்தாலும் ..

ஏன்.. நான் இல்லையா!... உரிமையா அங்கே வந்து இருக்க வேண்டியது தானே.. உங்களை நான் காப்பாத்த மாட்டேனா?.. என்னைய எப்படி அந்நியமா நெனைக்கலாம்?...


உனக்கு எதுக்கு செந்திலு கஷ்டம்?..

கஷ்டமா?.. அன்னைக்கு ஆஸ்ரமத்தில இருந்து வெளியே வந்து மறுபடியும் அனாதையா நின்னப்போ சோறு போட்டு வளர்த்தீங்களே!.. அதுக்குப் பேரு என்ன?.. 



முழுசா ரெண்டு வருஷம் உங்க ஆதரவுல வாழ்ந்திருக்கேன்.. இன்னைக்கு நான் நல்ல இருக்கேன்..அப்படின்னா.. அதுக்கு நீங்க காரணம் இல்லையா!.. என்னையும் அவனையும் தனித்தனியாகவா வளர்த்தீங்க?...

ஆனாலும்.. பாவி.. மகன் .. இந்த மாதிரி சொல்லுவான்..னு நெனைக்கலையே!.. 

அவனை படிக்க வெச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனை.... அன்னைக்கே சுண்ணாம்புக் காளவாய்.. ல வேலைக்கு சேர்த்து விட்டுருக்கலாம்...

பாசம்.. நேசம்..ன்னு பார்த்ததுக்கு இப்படிப் பாதகஞ் செஞ்சிட்டானே!..

உஸ்..உஸ்.. - என்று ரத்தினம் தடுத்தார்.. ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று அர்த்தம்...

யாருப்பா.. தாத்தாவும் ஆத்தாவுமா!.. - ரத்ன காமாட்சி வினவினாள்...

ஆமாண்டா.. செல்லம்.. இனிமே நம்ம வீட்டுல.. தான் இருக்கப் போறாங்க!..

இது வரைக்கும் எங்கே இருந்தாங்க?..

இங்கே ஒரு சித்தப்பா வீடு.. அங்கே இருந்தாங்க!..

அப்படிச் சொல்லாதே.. உன் வாயால இன்னொருக்க அவனை தம்பி..ன்னு சொல்லாதே...

இருக்கட்டும்... இந்நேரம் கோப தாபம் தீர்ந்திருக்கும்..ன்னா அவன் வீட்டுக்கே போவோம்.. நான் கொண்டு போய் விடுறேன்... கண்டிச்சு வைக்கிறேன்...

இல்ல செந்திலு... உங்க ஐயாவே மனசு வெறுத்துட்டாரு... அப்பன் ஆத்தாளையே பாரமா நெனைக்கிற காலமா போச்சு.. எங்காவது சத்திரம் சாவடி..ன்னு பார்த்து எங்கள அங்கே கொண்டு போய் சேர்த்து விடு..  ஒனக்குப் புண்ணியமாப் போகும்!..

மறுபடியும் அந்த பேச்சு எதுக்கு..ங்கறேன்... இதோட உங்க கஷ்டம் எல்லாம் தீர்ந்தது.. ன்னு நெனைச்சுக்குங்க... உங்க ஆயுசுக்கும் நான் காப்பாத்தறேன்..  சரி.. முதல்ல.. வயித்துக்கு ஏதாவது சாப்பிட்டுட்டு.. கிளம்புவோம்..

செந்திலும் ரத்ன காமாட்சியும் ஆளுக்கு ஒரு பக்கமாக கையைப் பிடித்துக் கொள்ள - அருகிருந்த உணவகத்தை நோக்கி நடந்தார்கள்..

***

எங்கிட்டு வெச்சிடா.. பேசிக்கிட்டு இருந்தாங்க?..

இங்ஙன.. தாண்டா!.. அந்த ஆளு நல்லா டிப் டாப்பா இருந்தான்!..

வா.. அந்த பழக்கடையில கேப்போம்... அண்ணாச்சி... இங்கால எங்க ஐயாவும் ஆத்தாவும் ஒரு ஆளுகூட பேசிக்கிட்டு இருந்தாங்களாமே.. நீங்க கண்டிங்களா?...

உங்க அப்பனும் ஆத்தாளுமா.. அப்படின்னு தெரியாது!.. ஆனா அவங்க ஒரு இன்னோவா... ல ஏறிப் போயி அரை மணிக் கூறாவுதே!..

எந்தப் பக்கம் போனாங்கன்னு... கோவிச்சுக்கிடாதீங்க.. வண்டி நம்பரு என்ன..னு பார்த்தீங்களா?..

இல்லையே.. தம்பீ!..

சரிங்க.. அண்ணாச்சி.. நாங்க.. வாறோம்!..

கார்ல கூட்டிட்டுப் போற அளவுக்கு யாராயிருக்கும்?.. ஒருவேளை கிட்னி திருடங்களா இருப்பானுங்களோ?.. டேய்.. போலீஸ்.. ல சொல்லுவோமாடா?...

வேண்டாம்... இருக்குற பிரச்னையே போதும்!.. என்ன.. வீட்டு வேலைக்கு ஒரு நல்ல ஆளாப் பார்க்கணும்!..

என்னடா.. இப்படி சொல்றே?.. பெத்தவங்க இல்லையா?.. இப்படியே விட்டுடுறதா?..

வா.. போகலாம்!.. எங்கேயாவது பிழைச்சிருந்தா நல்லா இருக்கட்டும்!.. நிம்மதியா இருக்கட்டும்!..

கண்களைத் துடைத்துக் கொண்டான்..

கடும் வெயில் மாறி - சட்டென.. மழை இறங்கியதில் புழுதி வாசம் கிளம்பியது..

***

மழையினூடாக விரைந்து கொண்டிருந்தது கார்..

பையினுள்ளிருந்து ஒரு சால்வையை எடுத்துக் கொடுத்தாள் சுந்தரி...

ஆதரவாக அதைப் போர்த்திக் கொண்டார் ரத்தினம்..

அப்போ.. இது வரைக்கும் அவனுக்கு உண்மை தெரியாது!.. இல்லையா?..

ஆமாம்!.. அவனுக்குத் தெரியாது!.. 

காமாட்சியம்மாளின் மடியில் செந்திலின் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள்..


என்னங்க.. தெரியாது!.. என்ன.. அது?.. - சுந்தரி ஆவலுடன் செந்திலைக் கேட்டாள்..

சாலையிலிருந்து கண்களை அகற்றாமலேயே - செந்தில் சொன்னான்..

அவன்.. இவங்களோட பிள்ளை இல்லை..ங்கறது!..

மழைத்துளிகள் - கண்ணாடியின் மீது விழுந்து -
அங்குமிங்குமாகத் தெறித்துக் கொண்டிருந்தன..

*** 

18 கருத்துகள்:

  1. ஒன்றிலிருந்து இன்னொன்று அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. அழகான , அன்பான கதை.
    பிழைச்சிருந்தா, நல்லா இருக்கட்டும், நிம்மதியாக இருக்கட்டும் என்று கண்களை துடைத்துக் கொண்டால் அவருக்கு விருப்பம் இல்லாமல்தான் , இந்த காரியத்தை செய்து இருக்கார் போலும்.
    சொந்த மகன் இல்லையா? வளர்ப்பு மகனா? கதை கதைகுள் கதை என்று கொண்டு போய் இருக்கிறீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உண்மையில் கில்லர் ஜி அவர்களின் கதைக்குத் தொடர்ச்சியாக மூன்று கதைகளை எழுதினேன்.. உள் நடப்பு சற்று மாறுதலாக இருக்கும் ஆனால் சோகமாக முடிப்பதில்லை..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் ஜி..

      ஏன் அப்படி விழியில் நீரோட்டம்?..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அன்பின் ஜி..
      தங்கள் மீள்வருகைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. அருமையான கதை! மனதைத் தொட்டு உலுக்கிவிட்டது ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமை. நல்லதோர் முடிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..