நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 13, 2015

சிவ தரிசனம் - 01

துயர் தீர மருந்து... 

ஒரு காலத்தில் சாதாரண மானுடர்களைப் போலவே தேவர்களும் - பிணி, மூப்பு, சாக்காடு - இவற்றால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

அது மட்டுமல்லாமல், அசுரர்களுடன் அடிக்கடி ஏற்படும்  அடிதடி, சண்டை சச்சரவுகளில் பெருத்த சேதாரம் வேறு.


இவற்றைத் தாங்க இயலாத வானவர்கள் - நொந்து நூலாகிப் போனார்கள்.

தேவேந்திரனுக்கு ஒரு நிம்மதி - என்ன என்றால், அசுரர்களும் - பிணி, மூப்பு, சாக்காடு - இவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தான்!.. ஆனாலும்,

அசுர குருவான சுக்ராச்சாரியார் ஒரு மந்திரத்தைக் கற்று வைத்திருந்தார். அது ம்ருத்யு சஞ்சீவினி மந்திரம். செத்தவர்களைப் பிழைக்க வைப்பது.

அசுரர்கள் கூட்டங்கூட்டமாக மடிந்து விழுந்தாலும் - சஞ்சீவினி மந்திரப் பிரயோகத்தின் மூலம் அவர்களை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார்.

அதைக் கற்றுக் கொண்டு வருவதற்கென தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மகனை சீடனாக அனுப்பி வைத்தனர். அவன் பெயர் கசன்.

மந்திரம் கற்றுக் கொள்ள வந்த அவனை - சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி ஒரு தலையாகக் காதலித்து தோற்றுப் போனாள்.

குருவுக்கும் சீடனுக்கும் உறவு தகப்பன் - மகனைப் போன்றது. எனவே நீ என் தங்கை!.. - என்று கசன் சொல்லிவிட்டான்.

இந்தக் கதையை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!..

இப்படியாக, கசன் கற்றுக் கொண்டு வந்த மந்திரத்தினாலும் பெரிய அளவில் நன்மை ஏற்படவில்லை தேவேந்திரனுக்கு!..

எனவே, பிணி, மூப்பு, சாக்காடு எனும் - இவை நீங்குவதற்கு ஒரு வழியைத் தேடி, தேவேந்திரனும் மற்ற வானவரும் - நேராக நான்முகனிடம் சென்றனர்.


சத்யலோகத்தில் - சகலகலாவல்லியின் வீணையில் லயித்திருந்த நான்முகப் பிரம்மன் - தேவர்களைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

திடீரென்று எதற்காக இந்த வருகை!?..  - திசைமுகன் திகைத்தார்.

தேவேந்திரன் விவரித்தான் - விஷயத்தை!..

நான்முகன் - சற்றும் தயவு தாட்சண்யம் இன்றி சொல்லி விட்டார்.

''இதையெல்லாம் சேர்த்து வைத்துத்தான் உங்களை படைத்திருக்கின்றேன்!.. தனியாகப் பிரிப்பது சாத்தியமே இல்லை!....''.

அன்னை கலைவாணியின் வீணையிலிருந்து -
''..இசையிருந்தால் மரணமில்லை!..'' - என்று அமுதம் வழிந்து கொண்டிருந்தது.
  
தலைகுனிந்தபடி திரும்பிய இந்திரனுக்கு இசையின் மொழி புரியவில்லை.

இதற்கிடையில் -

துர்வாச முனிவர் ஆகாய வழியில் வந்து கொண்டிருந்தார். இன்றைக்கு இதுவரை ஒன்றும் நடைபெறவில்லையே!... என்று.

ஏனென்றால் துர்வாச முனிவர் யாருக்காவது சாபம் கொடுக்காவிட்டால் அவருடைய தவ வலிமை குன்றிவிடும். அவருக்கு அப்படி ஒரு சாபம்!...

அப்போது - எதிரில் தேவகன்னி ஒருத்தி வந்து வணங்கி நின்றாள். 

கனிவுடன் நோக்கிய முனிவர் - '' மகளே!. மங்களம் உண்டாகட்டும்!.'' என்றார்.

அந்த தேவகன்னி சொன்னாள்-

''ஸ்வாமி... நான் இந்திர சபையின் ஆடல் மங்கை. அன்னை ஆதிபராசக்தியின் கொலு மண்டபத்தில் அன்னையை சேவித்து விட்டு வருகின்றேன். அன்னை மனம் உவந்து எனக்களித்த பரிசு இந்தப் பூமாலை. இது என்னிடம் இருப்பதை விட சர்வலோக சஞ்சாரியாகிய தங்களிடம் இருப்பதே பெருமை. எனவே இதனைத் தாங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்!..''

துர்வாசருக்கு மிக்க மகிழ்ச்சி.

''..ஏதடா.. இன்று பொழுது நல்லபடியாக விடிந்திருக்கின்றதே!..'' என்று.

அந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் மாலையும் கையுமாக தேவலோகம் நோக்கிச் சென்றார்.

ஆனால், விதி வகுத்த வழியாக - ஏவலர் புடை சூழ வெள்ளை யானையின் மேல் ஆரோகணித்து - இந்திரனே எதிரில் வந்து கொண்டிருந்தான்.


அவனை நிறுத்தி விவரம் கூறி, கையில் இருந்த மாலையைக் கொடுத்தார்.

தேவேந்திரனுக்கோ அன்று போதாத காலம்!..

ஆணவத்துடன் வெள்ளை யானையின் மேலிருந்தபடியே அங்குசத்தை நீட்டி துர்வாசர் கொடுத்த மாலையை வாங்கி யானையின் மத்தகத்தின் மீது வைத்தான்.

அவ்வளவுதான்!.. யானைக்கு வந்ததே எரிச்சல். காரணம் -

அன்னை ஆதிபராசக்தி சூடியிருந்த மாலை தேன் ததும்பும் மலர்களால் ஆனது. அந்த மாலையினுள் சின்னச் சின்ன தேனீக்கள் மயங்கிக் கிடந்தன.

முனிவர் பூமாலையை அலுங்காமல் ஏந்தி வந்து கொடுத்ததை,
இந்திரன் வாங்கி -  ''தளுக்'' என்று யானையின் தலையில் வைத்தானே -

அதனால்  தேனீக்கள் திடுக்கிட்டு விழித்தெழுந்து மாலையைச் சுற்றி ரீங்கரிக்க - ஐராவதம் மண்டை காய்ந்து போய் - பெரிதாகப் பிளிறியது.

தன் - தலை மேலிருந்த மாலையை இழுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது.

அப்பாடா!.. துர்வாசரின் தவம் குறையாதிருக்க வழி பிறந்து விட்டது.

கோபம் கொதித்துத் தலைக்கேற - சாபமிட்டார்.

'' நான் கொடுத்த மாலையின் அருமை தெரியாமல் அதை அலட்சியப்படுத்தி அழித்த உன் கர்வம் அழியக் கடவது. உன் ஐஸ்வர்யம் தொலையக் கடவது. அடாததைச் செய்த ஐராவதம் காட்டு யானையாய் அலையக் கடவது!..''

கமண்டல தீர்த்தத்தை வாரித் தெளித்து விட்டு துர்வாசர் போய் விட்டார்.

வெள்ளி மலை மாதிரி இருந்த ஐராவதம் - கன்னங்கரேலென்று ஆனது.

தனக்கு நேர்ந்த கதியைக் கண்டு கலங்கி -  கதறிக் கண்ணீர் வடித்தபடியே காட்டுக்குள் ஓடிப்போனது - தேவலோகத்து யானை.


யானைக்கு நேர்ந்ததைக் கண்டு அதிர்ந்த பட்டத்துக் குதிரை உச்சைசிரவஸ் - தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் - என்று ஊரை விட்டே ஓடிப்போனது.

பொங்கும் இளமை பொலிந்து ததும்பிய தேவலோகம் புகை மண்டலமாகிப் போனது.

தாங்க முடியாத துயரம் - சோகத்திலும் பெரிய சோகம் -  அரம்பையரும் மற்ற தேவகன்னியரும் கடுங்கிழவிகளாகிப் போனது தான்!..

தேவேந்திரனின் துக்கமும் துயரமும் எப்போது தீரும் என்று - 

பிரசன்னம், மாந்திரீகம், ஜோதிடம், கைரேகை, எண்கணிதம், உன்கணிதம் - என எல்லாவற்றையும் தோண்டிப் பார்த்தாகி விட்டது.

முன்னடியார், பதினெட்டாம்படி கருப்பு, பாண்டி ஜடாமுனி - என அலைந்து திரிந்து - வேப்பிலை அடி வாங்கி காப்பு கயிறு எல்லாம் கட்டியாகி விட்டது.

வெற்றிலையில் மை தடவி, உடுக்கை அடித்து ராத்திரி முழுவதும் முழித்திருந்து குட்டிச்சாத்தானைக் கூப்பிட்டு குறியும் கேட்டாகி விட்டது.

துர்வாசர் சாபத்தைத் தொலைப்பதற்கு துணை ஒன்றும் கிடைத்தபாடில்லை!..

''.. பிரச்னை தீர்வதற்குப் பிள்ளையாரைப் பிடியுங்கள்!..'' - என்று யாரோ சொன்னதைக் கேட்டு, அங்கே ஓடினால் -


விநாயகர் வியாசருடன் இருந்து ஒற்றைக் கொம்பை ஒடித்து ஊருக்காக கதை எழுதிக் கொண்டிருக்கின்றார். அவரைப் பார்க்க இப்போது யாருக்கும் அனுமதி இல்லை!.. - என்று கூறி விரட்டியடித்து விட்டார்கள்.

விக்கித்துப் போனான் தேவேந்திரன்.

''எல்லாம் இந்த யானையால் வந்த வினை!..'' - என்று கடுப்பாகி,

ஒரு சாத்து சாத்தலாம் - என்று பக்கத்தில் பார்த்தால் - யானை ஓடிப்போய் எத்தனையோ நாளாகியிருந்தது.

இந்த நேரத்தில்தான் - போகிற போக்கில் நாரதர்,

''..தேவேந்திரா!.. பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுப்பாயாக!.. அமுதம் ஒன்றே உன் துயர் தீர்வதற்கு மருந்து!..'' 

- என்று, தன் ஆராய்ச்சியின் முடிவைச் சொல்லி விட்டுப் போனார்.

உப்பில்லா பத்தியக்காரனுக்கு ஊறுகாய் கிடைத்தது போலிருந்தது!..

சந்தோஷத்தால் திணறிப் போனான் - தேவேந்திரன்.

அந்த சந்தோஷம் நிலைத்ததா!?..

-: நாளைக்குத் தெரியும் :-

திருச்சிற்றம்பலம்
* * *

11 கருத்துகள்:

  1. சுவாரஸ்யம்... எந்தப்பக்கமும் ஆதரவு இல்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. துயர்தீரும் மருந்து பதிவு அருமை.
    கதை நல்லகட்டத்தில் தொடரும் போட்டது அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. மகிழ்ச்சி நிலைத்ததா என்பதை அறிய காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  5. சரியான இடத்தில் தொடரும் ஸூப்பர் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. சுவாரஸ்யமான பகிர்வு. அடுத்த பகுதிக்கு விரைவில் வருகிறேன்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..